1.ஒருவரின் பாலீர்ப்பு எப்படி நிர்ணயிக்கபடுகிறது? (அல்லது)
எனது மகனோ/மகளோ மாறுபட்ட பாலீர்ப்புடன் இருப்பதற்கு நான் காரணமா? எனது வளர்ப்பில் குறையா? (அல்லது) நான் ஒரு நல்ல தாயாய்/தந்தையாய் இருக்க தவறிவிட்டேனோ?
தன்பாலீர்ப்போ(Homosexuality) அல்லது பால் மாறுதலோ (Trans gender behavior) ஒருவரின் வளர்ப்புமுறையாலோ அல்லது ஒரு சில அனுபவங்களாலோ நிர்ணயிக்கபடுவதில்லை என்பது ஆய்வுகளால் கண்டறியப்பட்ட உண்மை. உங்களின் அன்புக்குரியவர் மாறுபட்ட பாலீர்ப்பு(Lesbian,Gay,Bisexual) அல்லது பால் அடையாளம்(Transgender) கொண்டவராக இருப்பது யாருடைய தவறும் இல்லை. இது போன்ற குற்றவுணர்ச்சி உங்களுக்கு சிறிதும் தேவையில்லை.
பாலீர்ப்பு எப்படி நிர்ணயிக்கப்படுகிறது? – இதற்கான முடிவான பதில் யாருக்கும் தெரியாது. மனம், உடல், மரபணு, சுற்றுப்புற சூழ்நிலை என்று பல விஷயங்களின் கலவையால் ஒருவரின் பாலீர்ப்பு நிர்ணயிக்கப்படுகிறது என்கிறார்கள் வல்லுனர்கள். பாலீர்ப்பும் பால் அடையாளமும் முக்கால்வாசி பேருக்கு சிறிய வயதிலேயே வடிவுபெறுகிறது. பல ஆய்வுகள் இது பற்றி நடந்துகொண்டிருகின்றன, ஆனால் இதுதான் காரணம் என்கிற முடிவு இன்னமும் எட்டப்படவில்லை.
2.இப்படி மாறுபட்ட பாலீர்ப்பு கொண்டவராக (தன்பாலீர்பாளர்,இருபாலீர்ப்பாளர்) இருப்பது தவறா?
இல்லை.
உலகில் எல்லா கலாச்சாரங்களிலும் ,எல்லா காலங்களிலும் இதுபோன்ற மாறுபட்ட பாலீர்ப்பு கொண்டவர்கள் இருந்திருக்கிறார்கள். தன்பாலீர்ப்பு ஒரு நோயோ அல்லது மனநல குறைவோ இல்லை என்பது நிதர்சனமான உண்மை. American Psychological Association(APA) 1973ஆம் ஆண்டே தன்பாலீர்ப்பு ஒரு மனநோய் அல்ல என்று அறிவித்துவிட்டது. World Health Organization(WHO) 1981ஆம் ஆண்டு தன்பாலீர்ப்பு ஒரு நோயல்ல என்று அறிவித்தது. ஆகையால் மாறுபட்ட பாலீர்ப்பு கொண்டிருப்பதில் எந்த தவறும் இல்லை.
உலகில் முக்கால்வாசி பேர் வலது கை பழக்கம் உள்ளவர்களாக இருந்தாலும் சிலர் இடது கை பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். அதை நாம் தவறு என்று சொல்வோமா? அதைப் போலததான் இதுவும், மிகவும் இயற்கையான விஷயம். பாலீர்ப்பு/பாலுணர்வு பன்மைபட்டது என்ற உண்மையை நாம் ஏற்றுகொள்ளவேண்டும்
3.தன்பாலீர்பாளர்கள் தங்கள் பாலீர்ப்பை மாற்றிக்கொள்ள முடியுமா?
முடியாது. இதற்காக மேற்கொள்ளப்படும் மருத்துவ முறைகள் மிகவும் ஆபத்தானவை, அங்கீகரிக்க படாதவை மற்றும் அறிவியல் பூர்வமற்றவை. பாலீர்ப்பை மாற்ற முடியும் என்று கூறுபவர்கள் எந்த அறிவியல் மற்றும் அனுபவ ஆதாரமும் இல்லாமல் இப்படி கூறுகிறார்கள். இதற்கு முக்கிய காரணம், அவர்களுக்கு அறியாமையாலோ அல்லது வேறு காரணங்களாலோ ஏற்படும் பயம் அல்லது இதன் மேல் இருக்கும் தனிப்பட்ட வெறுப்பும், கசப்புமே காரணம். மாறுபட்ட பாலீர்ப்பு கொண்டவர்கள் மாற தேவை இல்லை, அவர்கள் மேல் நாம் காட்டும் வெறுப்பும், வேற்றுமையும் தான் மாற வேண்டும்.
American Psychological Association(APA) நடத்திய ஆய்வுகளில் இது போன்ற பாலீர்ப்பை மாற்றும் முறைகள் ஆதாரமற்றவை என்பது தெரியவந்துள்ளது. மேலும் இது போன்ற முறைகள் நன்மையை விட அதீதமான தீமைகளையே விளைவிக்கும் என்கிறது American Psychological Association(APA).
4.தாங்கள் தன்பாலீர்ப்பாளர்கள் என்பது ஒருவருக்கு எப்படி தெரியும்?
பலருக்கு சிறிய வயதிலிருந்தே தாங்கள் வித்தியாசமானவர்கள் என்றோ அல்லது தங்களுக்கு தன் பாலினர் மீதே ஈர்ப்பு ஏற்படுகிறது என்பதோ தெரிகிறது. திரு நங்கை/திரு நம்பிகளுக்கு தங்கள் பாலின வெளிப்பாடு மற்றவர்களின் எதிர்பார்ப்பு போல் இல்லை என்பதும் சிறிய வயதிலேயே தெரிகிறது. சிலருக்கு வயது வரும் பருவத்தில் இதை பற்றி தெரிகிறது.
ஒருவரின் பாலீர்ப்பை புரிந்துகொள்வது என்பது அவ்வளவு எளிதான காரியமில்லை அதற்குரிய கால அவகாசம் தேவைப்படுகிறது. பால் உறவு கொண்டால்தான் ஒருவருக்கு அவர்களது பாலீர்பை பற்றி தெரிய வரும் என்று அர்த்தமில்லை. பாலீர்ப்பு என்பது ஒருவரின் உணர்வுகளை பொறுத்த விஷயம்.
ஒரே வரியில் பதில் சொல்ல வேண்டுமானால் – “எப்பொழுது தெரியவேண்டுமோ அப்போது தெரிய வரும்!”
5.சிறு வயதிலேயே தெரியும் என்றால் ஏன் இதைப்பற்றி என்னிடம் சொல்லவில்லை?
பல காரணங்கள் இருக்கலாம். உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும் இருக்கும் உறவு எப்படி பட்டது என்பது ஒரு முக்கிய காரணம். பொதுவாக நம் கலாச்சாரத்தில் பால் சம்பந்தப்பட்ட எந்த விஷயமும் பேசக்கூடாத ஒரு விஷயமாக கருதப்படுகிறது. பெரியவர்கள் கூட இதை பற்றி பேசுவதில்லை குழந்தைகள் எப்படி பேசுவார்கள்?.
உங்கள் மகனுக்கு ஒரு பெண் மீதோ அல்லது உங்கள் மகளுக்கு ஒரு ஆண் மீதோ சிறியவயதில் பாலீர்ப்பு ஏற்படுகிறது என்று வைத்துகொள்வோம்… உங்களிடம் அதை அவர்கள் சொல்வார்களா? அப்படி இருக்க தன் பாலினர் மீதுள்ள ஈர்ப்பை மட்டும் எப்படி சொல்லுவார்கள் என்று எதிர்பார்க்க முடியும்?
6.எனது அன்புக்குரியவர் மாறுபட்ட பாலீர்ப்பு உள்ளவரோ என்று எனக்கு சந்தேகமாக உள்ளது. இது பற்றி நானாக அவரிடம் பேசலாமா அல்லது அவராக சொல்லும் வரை காத்திருப்பதா?
நல்ல கேள்வி. நீங்களாக இதை பற்றி பேசுவது என்பது எல்லா நேரத்திலும் சரியான வழி அல்ல. உங்கள் சந்தேகம் தவறானதாக கூட இருக்கலாம். அந்த நபரை தவிர வேறு யாருக்கும் அவரது பாலீர்ப்பை பற்றி தெரிய சாத்தியம் இல்லை.
உங்களிடம் உங்கள் அன்புக்குரியவர் மனம் திறந்து தங்கள் பாலீர்ப்பு போன்ற அந்தரங்கமான அதே சமயம் கடினமான விஷயங்களை பேசக்கூடிய சூழலை உருவாக்குங்கள். மாறுபட்ட பாலீர்ப்பு கொண்டவர்களின் பிரச்சனைகள், போராட்டங்கள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள். இது போன்ற விஷயங்களில் நாட்டம் காட்டி, உங்கள் அன்புக்குரியவரிடம் பேசுங்கள். இப்படி செய்வதன் மூலம் நீங்கள் ஒரு நண்பராக, நல்ல ஆதரவாளராக தென்படுவீர்கள், அதனால் உங்கள் அன்புக்குரியவர் உங்களிடம் மனம் திறப்பது எளிதாகும்.
7.என் மகன்/மகள் அமெரிக்கா அல்லது வெளிநாடு சென்றதால் “தன் பாலீர்ப்பு” உள்ளவனா(ளா)க மாறிவிட்டானா(ளா)?
பாலீர்ப்புக்கும் வெளிநாடுகளுக்கு செல்வதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. பாலீர்ப்பு என்பது முக்கால்வாசி பேருக்கு சிறுவயதிலேயே வடிவு பெறுகிறது. மனம், உடல், மரபணு, சுற்றுப்புற சூழ்நிலை என்று பல விஷயங்களின் கலவையால் ஒருவரின் பாலீர்ப்பு நிர்ணயிக்கபடுகிறது என்கிறார்கள் வல்லுனர்கள்.
உங்கள் மகனோ அல்லது மகளோ வெளிநாட்டிற்கு சென்ற பிறகு உங்களிடம் இந்த விஷயத்தை பற்றி பேசினால் அதன் மூலம் நீங்கள் “வெளிநாட்டிற்கு போய் கெட்டுபோய்விட்டான்(ள்)” என்ற முடிவிற்கு வரக்கூடாது. இதற்கு பல காரணங்கள் இருக்கலாம்
1)உங்கள் மகனோ அல்லது மகளோ அப்பொழுதுதான் உங்களிடம் இதைப்பற்றி பேசக்கூடிய மன பக்குவத்தை அடைந்திருக்கலாம்
2)வேலை, படிப்பு இவற்றிற்காக வெளிநாடு சென்றபிறகு அவர்களுக்கு தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரித்திருக்கலாம்.
3)அமெரிக்கா உள்பட பல மேலை நாடுகளில் மாறு பட்ட பாலீர்ப்பு உடையவர்களையும் சமமாக நடத்த வேண்டும் என்ற போராட்டங்கள் வலிமை பெற்றிருக்கின்றன. இதனால் உங்கள் மகன் அல்லது மகள் தங்களைப் பற்றிய தாழ்வுமனப்பான்மையை உதறித்தள்ளி ஊக்கம் பெற்றிருக்கலாம்.
இப்படி பல. இவையெல்லாம் நல்ல விஷயங்கள்…நீங்கள் சந்தோஷப்படவேண்டிய விஷயங்கள்.
இன்னொன்றையும் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் … “கெட்டுத் தான் போக வேண்டும்” என்றால் உங்கள் மகனோ/மகளோ ஏன் எதிர்பாலில் உள்ள ஒருவருடன் உறவு கொள்ளக்கூடாது? அதுதானே உலகில் பலர் செய்யும் விஷயம், பிரச்சனையற்றதும் கூட. இவற்றை மனதில் கொண்டு பார்த்தால் வெளிநாடு சென்றதால் கெட்டுப்போனார்கள் என்பது உண்மை அல்ல என்பதை அறியலாம்.
8.ஒரு ஆணும்-ஆணும் அல்லது பெண்ணும் பெண்ணும் எப்படி உறவுகொள்கிறார்கள்? இது எப்படி சாத்தியம்? நினைத்தாலே அருவெறுப்பாக இருக்கிறதே?
ஆணும்-ஆணும் அல்லது பெண்ணும்-பெண்ணும் பாலுணர்வு கொள்வதில் பல விதங்கள் உள்ளன. இணையத்தில் தேடினால் இதை பற்றிய விவரங்கள் கிடைக்கும் அல்லது ஒரு Counsellor அல்லது பால் மருத்துவரை சந்தித்து பேசலாம்.
சில குறிப்புகள்:
* இதில் அருவெறுப்புப்பட எதுவும் இல்லை.பல சமயம் அருவெறுப்பு என்பது சரியான புரிதல் இல்லாததால் தோன்றலாம்.
* எதிர்பாலீர்ப்பு உள்ள திருமணமான உங்களது மகன் அல்லது மகள் அவர்களது வாழ்க்கைதுணையுடன் எப்படி உறவு கொள்கிறார்கள் என்பது பற்றி நீங்கள் யோசிப்பீர்களா? அவர்களை போல் தான் தன்பாலீர்ப்புடைய உங்களது மகன் அல்லது மகள். பால் உறவு என்பது மிகவும் அந்தரங்கமான விஷயம், உங்களால் முடிந்தால் பாதுகாப்பான முறையில் பால் உறவு மேற்கொள்ளுவது மற்றும் ஆணுறைகளை பயன்படுத்துவது இது போன்ற விஷயங்களை பற்றி பேசலாம்.
*தன்பாலீர்ப்பு உடைய உங்கள் மகன் அல்லது மகளோ – தன் பாலினர் மீது அவர்களுக்கு காதல் என்றால்,அது வெறும் காமம் மட்டும் இல்லை.அது காதல், பாசம், அன்பு, பகிர்ந்து கொள்ளுதல், புரிந்து கொள்ளுதல், விட்டுக்கொடுத்தல் என்று பல உணர்வுகளின் கலவை.
*தன்பாலீர்ப்பு உடைய உங்கள் மகனையோ அல்லது மகளையோ வெறும் உடல் இச்சை கொண்டவர்களாக மட்டும் பார்க்காதீர்கள். உங்களுக்கும் உங்கள் வாழ்க்கை துணைக்கும் இருக்கும் உறவு வெறும் பாலுணர்வு சம்பந்தப்பட்டதா? அது போலதான் தன்பாலீர்ப்பாளர்களும்.
9.திருமணம் செய்து கொண்டால் இது மாறக்கூடுமோ?
திருமணம் என்பது எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு அல்ல.
தன்பால் ஈர்ப்புள்ளவர்கள் குடும்பத்தினருக்காக எதிர்பாலாரை திருமணம் செய்து் கொள்வதால் அது மற்றோருவர் வாழ்வை வீணடிக்கிறது. குறிப்பாக தமது பாலீர்ப்பை உணர்ந்தவர்கள் பலர் பெற்றோர்களுக்காகவோ, அல்லது சமூக நிர்பந்தத்திற்காகவோ திருமணம் செய்துக்கொண்டு வாழ்க்கை முழுவதும் அவதிப்படுகிறார்கள்.
மேலும் நமது கலாச்சாரத்தில் திருமணம் என்பது இரண்டு நபர்களை மட்டுமல்லாது இரண்டு குடும்பங்களை பாதிக்கிற விஷயம். தேவையில்லாமல் உங்கள் மகன்/மகள், அவரது துணை, இரண்டு குடும்பங்கள் என்று எல்லோருடைய வாழ்கையையும் குழப்பத்திலும் கவலையிலும் ஆழ்த்த வேண்டாமே!
கட்டாயத் திருமணத்தாலோ அல்லது உங்களுக்குத் தெரிந்த மந்திரவாதியிடம் கொண்டு செல்வதாலோ அல்லது ஜோசியரிடம் கூட்டிப் போவதாலோ அவர் மாறப்போவதில்லை. மாறவும் தேவையில்லை.
10.என்னால் இதை ஏற்றுகொள்ளமுடிகிறது, ஆனால் ஊர் உலகம் என்ன சொல்லும்? சொந்தபந்தத்திடம் என்ன சொல்வது?
உங்கள் மகனோ மகளோ உங்களிடம் வெளியே வந்தார்கள் என்பதற்காக ஊர் உலகத்திடமும் தங்களது பால் ஈர்ப்பை பற்றி சொல்லபோகிறார்கள் என்று அர்த்தம் இல்லை. உங்கள் மகன்/மகளிடம் இதை பற்றி மனம் விட்டு பேசுங்கள். அவர் என்ன நினைக்கிறார் , நீங்கள் என்ன நினைகிறீர்கள் என்று தெரிந்துகொள்ளுங்கள். யாரிடம் என்ன சொல்வது என்பது நீங்கள் இருவரும் எடுக்க வேண்டிய முடிவு. தேவைபட்டால் ஒரு Counsellorஐ சந்தித்து பேசுங்கள் , பல சமயம் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
உங்கள் உறவினர்கள் திருமணத்தை பற்றி கேட்டால்.. என் மகன்/மகளுக்கு திருமணத்தில் நாட்டம் இல்லை என்று சொல்லிவிடலாம்.
நீங்கள் இதில் புரிந்துகொள்ள வேண்டிய ஒரு விஷயம்…. தன் பாலீர்ப்பு உடைய உங்கள் மகன்/மகள் பல வருடங்களாக இந்த விஷயத்தை பற்றி யாரிடமும் பேசமுடியாமல் தவித்திருபார்கள். தான் யார் என்ற உண்மையை மறைத்து வைப்பது என்பது ஒரு சாதாரணமான காரியம் இல்லை.அது அவர்களுக்கு பெரிய மனஅழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இந்த போராட்டத்தால் தளர்ந்து ஓய்ந்து போகும் சிலர் இனிமேல் யாரிடமும் பொய் சொல்ல போவதில்லை , மறைக்க போவதில்லை என்ற முடிவை எடுக்கலாம். உங்கள் மகன் அல்லது மகள் அப்படி ஒரு முடிவை எடுத்தால் அதை ஆதரிக்கவேண்டியது உங்கள் கடமையாகிறது.
மேலும் இந்தியாவிலும் மற்றும் உலகில் பல நாடுகளிலும் மாறு பட்ட பாலீர்ப்பு உடையவர்களையும் சமமாக நடத்தவேண்டும் என்ற போராட்டங்கள் வலிவு பெற்று இருகின்றன. இந்தியாவில் 2009 ஜூலை வரை தன்பாலீர்ப்பாளராக இருப்பது ஒரு குற்றமாக இருந்தது, இனிமேல் அது இல்லை. மாறு பட்ட பாலீர்ப்பு உடையவர்களை பற்றிய வெகுஜனங்களின் பார்வையும் எண்ணமும் மாறி வருகிறது.
11.சரி, திருமணம், குழந்தைகள்,குடும்பம் இதெல்லாம் வேண்டாமா? கடைசி காலத்தில் அவர்களை யார் கவனித்து கொள்வார்கள்?
உங்களுக்கு ஏற்படும் இந்த கவலை நியாயமானது , எல்லா பெற்றோர்களுக்கும் ஏற்ப்படகூடியது.
திருமணம் செய்து வைக்கவேண்டும் என்று ஏன் நினைகிறீர்கள்? உங்கள் மகன் அல்லது மகள் சந்தோஷமாகவும் நிறைவுடனும் வாழ வேண்டும் என்பது உங்கள் விருப்பம், எண்ணம். சரி….உங்கள் மகன் அல்லது மகள் அப்படி நினைகிறார்களா? அவர்களுக்கு திருமணம் சந்தோஷத்தையும் நிம்மதியையும் தருமா? இது அவர்கள் வாழ்கை,அவர்கள் என்ன நினைகிறார்கள் என்பது தானே முக்கியம்?
எல்லோரும் திருமணம் செய்துகொள்வதில்லை. திருமணம் செய்துகொள்ளும் அனைவரும் குழந்தைகள் பெற்றுக்கொள்வதில்லை. குழ்ந்தை பெற்றுக்கொள்ளும் அனைவரும் கடைசிகாலத்தில் குழந்தைகளின் ஆதரவோடு இருப்பதில்லை….இதெல்லாம் வாழ்கையின் உண்மைகள்.
தன்பாலீர்பாளர்கள் / இருபாலீர்பாளர்கள் பலர் தங்களுக்கு என்று ஒரு துணையை தேர்ந்தெடுத்து சந்தோஷமாகவும் மனநிறைவுடனும் வாழத்தான் செய்கிறார்கள். குடும்பத்திலோ, சமூகத்திலோ இதற்கு அங்கீகாரம் கிடைப்பதில்லை என்பது வருத்தமான விஷயம் தான்.
உலகில் சில நாடுகளில் இவர்களுக்கு திருமணம், குழந்தைகளை தத்தெடுப்பது போன்ற உரிமைகளை வழங்கும் சட்டங்கள் உள்ளன. மேலும் பல நாடுகளில் இந்த உரிமைகளை வழங்க வேண்டும் என்ற குரல் ஓங்கிகொண்டிருக்கிறது. இந்தியாவிலும் காலப்போக்கில் இது போன்ற மாற்றங்கள் வரலாம்.
அதனால் எதிர் பாலினருடன் திருமணத்திருக்கு உங்கள் மகன் அல்லது மகளை கட்டாயப்படுத்தாதீர்கள். உங்களால் முடிந்தவரை அவர்களை புரிந்துகொள்ளவும், ஆதரிக்கவும் முயற்சி செய்யுங்கள்.
———————————————————————-
References :
Frequently Asked Questions from PFLAG Website
URL : http://community.pflag.org/Page.aspx?pid=290
———————————————————————-