( ஸ்ரீ இந்த கதையில் ஆண்கள் மேல் அவனுக்கு இருக்கும் ஈர்ப்பை பற்றி பேசுகிறான் )
——————————————————————–
அன்புள்ள அப்பா அம்மா,
ஒரு தொலைபேசி அழைப்பு தூரத்தில் நீங்கள் இருந்தாலும், கடிதத்தின் மூலம் உங்களிடம் பேசுவது சற்று வித்தியாசமாக உள்ளது.என் கல்யாணத்தைப் பற்றிய கவலையும், எனக்கு அதில் ஏன் நாட்டம் இல்லை என்ற குழப்பமும் உங்களுக்கு இருப்பது எனக்கு தெரியும். அதைப் பற்றி சொல்லத்தான் இந்த கடிதத்தை எழுதுகிறேன். நான் சொல்லப்போகும் விஷயம் உங்களுக்கு அதிர்ச்சியாகவும் நெருடலாகவும் இருக்கலாம், அதற்கு முன் சிலவற்றை உங்களுக்கு தெளிவு படுத்த விரும்புகிறேன்
1) எனக்கு எந்த நோயும் இல்லை. நான் நல்ல தேக ஆரோக்கியத்துடன் இருக்கிறேன். கவலைப் பட வேண்டாம்.
2) எனக்கு காதல் தோல்வி இல்லை. பிறருக்காக ஏன் வாழ்க்கையை நான் வீண் அடிக்கமாட்டேன்
3) நான் சொல்வதை உங்களால் புரிந்துக் கொள்ள முடியாமல் போகலாம், புரிந்தாலும் ஏற்று கொள்ள முடியாமல் போகலாம். என்னவானாலும் நான் உங்கள் மகன், உங்கள் மனம் நோகுமாறு நான் எதையும் செய்ய மாட்டேன்.
உங்களிடம் இதை பற்றி சொல்லலாமா, வேண்டாமா என்று எனக்குள் பெரிய போராட்டம். உங்களிடம் உண்மையாகவும் நேர்மையாகவும் இருக்க வேண்டும் என்பது என் விருப்பம். பெற்றவர்களிடமே ஒரு பெரிய உண்மையையை மறைத்து, இரட்டை வாழ்க்கை வாழ்வதில் எந்த அர்த்தமும் இல்லை. அதனால் தான் இன்று உங்களிடம் இதை பற்றி பேசுகிறேன்.
சரியான வார்த்தைகளை தேர்ந்தெடுத்து, இந்த விஷயத்தை தெளிவாக விளக்குவது எளிதல்ல. இருந்தாலும் முயற்சிக்கிறேன்.
எனக்கு பெண்கள் மேல் எந்த ஈர்ப்பும் இல்லை. காதல், காமம், ஈர்ப்பு எல்லாம் எனக்கு ஆண்கள் மேல் தான். ஆமாம், இது மருத்துவரீதியாக சாத்தியமான ஒரு விஷயம். என்னைப் போல் உள்ளவர்களை ஆங்கிலத்தில் ஹொமொஸெஷுஅல்ஸ் என்றும் தமிழில் தன்பால் ஈர்ப்பு உள்ளவர்கள் என்றும் அழைப்பார்கள்.உலகில் பத்து சதவிகிதத்தினர் என்னை போன்ற தன்பால் ஈர்ப்பு உள்ளவர்கள். இது என்னுடன் பிறந்த ஒரு விஷயம். குணப்படுத்த வேண்டிய நோயோ அல்லது கைவிடவேண்டிய பழக்கமோ அல்ல. இது முற்றிலும் இயற்கையான ஒரு விஷயம், என்னை மாற்ற வேண்டும் என்று நினைப்பது தான் இயற்கைக்கு எதிரானது. என்னால் கண்டிப்பாக ஒரு பெண்ணை திருமணம் செய்ய முடியாது.
சிறிய வயதில் இதை பற்றி எனக்கு தெரிந்த பொழுது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. யாரிடமும் இதை பற்றி மனம் விட்டு என்னால் பேச முடியவில்லை. இது போன்ற விஷயங்களை நண்பர்களிடம் கூட பேசமுடியாது. நான் வளர வளர, இந்த ஈர்ப்பு மறைந்து விடும், நானும் மற்றவர்களை போல இருப்பேன் என்று நினைத்தேன்…. அனால் அது நடக்கவில்லை. வெட்கமும், பயமும் ஒரு புறம்,குழப்பமும், குற்றவுணர்ச்சியும இன்னொரு புறம். எதாவது செய்து என்னை மாற்றிவிடு என்று தினமும் கடவுளிடம் மன்றாடிஇருக்கிறேன்.
நான் வளர்ந்து மனப்பக்குவம் அடைதபிறகுதான், என்னை போல பலர் இந்த உலகில் இருகிறார்கள், தன் பால் ஈர்ப்பு என்பது இயற்கையான, சாதரணமான விஷயம் என்பது எனக்கு புரிந்தது. இது ஒரு குற்றமோ பாவமோ அல்ல என்பதயும் என்னால் ஏற்றுக்கொள்ள முடிந்தது.
நான் என்றும் உங்கள் மகன். உங்கள் இருவரின் மேல் உள்ள பாசமும், மரியாதையும் என்றும் என்னை விட்டு போகாது. நான் சொன்னவுடன் நீங்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும், ஏற்று கொள்ள வேண்டும் என்று நான் கட்டாயப் படுத்தவில்லை. உங்களை என்றும் சந்தோஷமாக வைத்து கொள்ளவேண்டும் என்பது தான் என் ஆசை. இந்த விஷயம் உங்கள் சந்தோசத்தை பாதித்தால் அதற்காக என்னை மன்னிக்கவும். உங்களிடம் இந்த உண்மையை சொல்வதை தவிர, எனக்கு வேறு வழி தெரியவில்லை.
நண்பர்கள், உறவினர்கள் பற்றி எனக்கு தெரியாது, அனால் என் குடும்பமே என்னை நிராகரித்துவிட்டால் என்னால் அதை தாங்க முடியாது. உங்கள் எல்லோர் மனதிலும் ஒரு இடம் தான் எனக்கு வேண்டும், அது இல்லாமல் என்னால் வாழ முடியாது.
இதை பற்றி தங்கையிடம் நான் சொல்லி இருக்கிறேன். அவளும் எனக்கு ஆதரவாக இருக்கிறாள். தன்பால் ஈர்ப்புடையவர்களின் வாழ்கை எளிதல்ல என்று எனக்கு தெரியும், அதை எதிர்கொள்ளும் தைரியத்தை எனக்கு தருமாறு கடவுளிடம் வேண்டுகிறேன்.
அதைவிட உங்கள் இருவரின் அன்பும் ஆசிர்வாதமும் தான் எனக்கு முக்கியம்.
கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன்,
ஸ்ரீ
—————————————————————————–
பதில்:
உன் கடிதத்தை வாசித்து நீ சொன்ன விஷயத்தை புரிந்துகொண்டோம். உனக்கு ஏன் கல்யாணத்தில் நாட்டம் இல்லை என்பது இப்பொழுது எங்களுக்கு புரிகிறது. எங்களிடம் இதை பற்றி பேச முடியாமல் இத்தனை நாளும் நீ தனியாக தவித்துஇருக்கிறாய் என்பதை நினைக்கும்பொழுது மிகவும் வேதனையாக உள்ளது. உன் வாழ்க்கையை பற்றி நீ எந்த முடிவெடுத்தாலும், பெற்றோர்களாகிய நாங்கள் என்றும் உனக்கு ஆதரவாக இருப்போம்.
எல்லோருக்கும் இந்த விஷயம் புரியும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. அதனால் எல்லோரிடமும் இதை பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. யோசித்து பார்த்தால் நமது உறவினர்களின் குடும்பங்களிலும் பலர் திருமணம் செய்யாமல் இருகிறார்கள், நமக்கு அதை பற்றிய காரணம் தெரியாது. அதை போல் தனியாக இருக்கும் நண்பர்களும் நமக்கு நிறைய பேரை தெரியும் (ஆண் / பெண் ). அது மட்டுமல்ல, எல்லா திருமணமும் வெற்றியில் முடிவதில்லை. அதனால் இதை பற்றி யோசித்து வேதனை படாதே. அது தான் எங்களை கவலை படுத்தும், நீ தன்பால் ஈர்ப்புடன் இருபது அல்ல.
எப்பொழுதும் இதை நினைவில் வை – நீ சந்தோஷமாக இருந்தால் நாங்களும் சந்தோஷமாக இருப்போம். நீ கவலை பட்டால், அது எங்களையும் கவலை படுத்தும்.
என்றும் சந்தோஷமாகவும், சிரித்து கொண்டும் இரு – அது தான் நீ.
எங்களுடைய கடைசி மூச்சு வரை, உன்னை ஆதரிப்போம் , ஊக்கப்படுத்துவோம், உன்னுடன் இருப்போம். இது சத்தியம்.
அன்புடன்,
அப்பா & அம்மா.