Our Voices The Orinam Blog

[கதை] ஒரு முடிவுரையும், ஒரு முன்னுரையும்

சில சமயங்களில் அளவுக்கதிகமான தனிமை நம்மை ஒரு சுய தேடலுக்கு இட்டுச் செல்லும். தேடலின் முடிவில் நாம் எதிர்பாராத திருப்பங்களையும் உண்மைகளையும் உணரத் தொடங்குவோம்.


சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முதுகலை அரசியல் அறிவியல் பயிலும் இருவர் தான் நம் கதை நாயகர்கள். பொதுவாக முதுகலை இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு மார்ச்சு மாதம் என்பது பெரும் தலைவலி பிடித்த மாதம். கடைசி வருட ஆய்வு அறிக்கையை சமர்பிக்க வேண்டும், தேர்வுக்கு தயார் செய்ய வேண்டும், எல்லாவற்றையும் விட கல்லூரி வாழ்வில் கடைசி நாள்களின் வலியை சுமக்க வேண்டும். அப்படி பட்ட மாதத்தில் தான் இவ்வருடம் இந்தியாவில் கொரோனா என்ற நோய்த் தொற்று மக்களை அச்சுறுத்த ஆரம்பித்தது.

தமிழகத்தில் மார்ச் மாதம் 17 முதல் 31 வரை பள்ளி, கல்லூரிகள் செயல் படாது என அறிவிக்கப் பட்டப்போதும் டேனியலும், பரக்கத்தும் ஆய்வு அறிக்கை தொடர்பான வேலையால் தாங்கள் வாடகைக்கு எடுத்திருந்த வீட்டிலே தங்கி இருந்தனர். மார்ச் 22 அன்று ஒரு நாள் அடையாள பொது முடக்கத்தின் போது கைத்தட்டி கொரோனாவை விரட்டி அடித்த மகிழ்ச்சியில் திளைத்திருந்த போது, போக்கு வரத்துத் துறையில் பணி புரியும் நண்பனின் அப்பா கொடுத்த அறிவுரைப் படி ஊருக்குக் கிளம்ப ஆயத்தமாயினர். வரும் நாள்களில் பேருந்து பயணம் தடைச் செய்ய வாய்ப்புள்ளதாக நண்பனின் தந்தை தெரிவித்திருந்தார். ஆய்வு வேலையும் இறுதிக் கட்டத்தை நெருங்கியதால் மீதமுள்ளவற்றை ஊருக்குச் சென்று பார்க்கலாம் என்றும் அடுத்த நாள் காலை முதல் பேருந்தில் ஊருக்கு புறப்பட்டு செல்வதாகவும் முடிவெடுத்துக் கொண்டனர். டேனியல் கோவில்பட்டிக்கும், பரக்கத் திருப்பத்தூருக்கும் செல்வதற்காக சிதம்பரம் பேருந்து நிலையம் வந்தனர். டேனியலை திருச்சி பேருந்தில் வழியனுப்பி வைத்து விட்டு, பரக்கத் திருவண்ணாமலை பேருந்தைப் பிடித்தான்.

ஊருக்கு கிளம்பும் முதல் நாள் இரவு, டேனியல் மனதை இனம் புரியாத பயம் ஆட்கொண்டது. பள்ளிப்படிப்பை முடித்தப் பின் அவன் வீட்டிலும், அவனது சொந்த ஊரிலும் இருந்த நாள்கள் மிகக் குறைவு. கோடை விடுமுறையில் கூட ஏதாவது களப்பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வெளியிடங்களுக்குச் சென்று விடுவான். இப்போது இந்த பொதுமுடக்கத்தால் வீட்டில் எவ்வளவு நாட்கள் இருக்கப் போகிறோமோ என்று பயங்கொள்ள ஆரம்பித்தான். இங்கு வாடகைக்கு இருக்கும் வீட்டிலே தங்கி விடலாம் என்றால் அதுவும் சிரமம். என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே, டேனியலின் முகத்தைப் பார்த்து என்னவென்று அனுமானித்துக் கொண்ட பரக்கத் அவனின் தன் மடியில் கிடத்தினான். ” மச்சான் நீ என்ன யோசிக்கிறனு புரியுது. யூஜி பர்ஸ்ட் இயர்ல இருந்து நான் உங்கூட படிக்கிறேன்; அந்த மூணு வருசம் உன்னோட மன நிலை எப்படி இருந்துச்சுனு நல்லாவே தெரியும். நீ யார் அப்படிங்கிற கேள்விக்கு பதில் தேட நம்ம காலேஜ் கவுன்சிலர்( மன நல ஆலோசகர்) மூலமாக முயற்சி செஞ்சப்ப நீ எவ்ளோ கஷ்டப் பட்டனு தெரியும். ஆறு மாசத்துக்கு ஒரு முறை உன்னோட நிலைப்பாடு மாறிட்டு இருக்கும்; ஒரு முறை வந்து நான் ஒரு சமபால் ஈர்ப்பாளன்னு சொல்லுவ; ஒரு ஆறு மாசம் கழிச்சி அப்படி இல்லனு சொல்லுவ. பட் ஒரு வழியா பைனல் இயர் படிக்கும் போது நீ தெளிவா சொன்ன, நீ ஒரு சமபால் ஈர்ப்பாளன்னு. அதுக்கு அப்பறம் நீ உன் முகமூடி மேல அவ்ளோ கவனமா இருந்த. யாருக்கும் உன்ன பத்தி தெரிஞ்சிட கூடாதுனு உன்னோட நடத்தையில, பேச்சுல ரொம்ப கவனமா இருப்ப. எங்கிட்ட மட்டும் உன்னோட முகமூடியை கழட்டி வச்சுருவ. ஊருல, வீட்ல இதுவரை யாருக்கும் உன்னப் பத்தி தெரியல. பட் இனிமே தெரிஞ்சு போயிடுமோனு பயப்புடுற, சரியா? கவலப் படாத மச்சான், அப்படி எதுவும் ஆகாது. நீ எப்ப வேணாலும் எனக்கு கால் பண்ணு. ஆனா மறுபடியும் ஒரு விசயத்த மட்டும் சொல்றேன். கேட்டுக்க. இந்த சமபால் ஈர்ப்புனு நீ சொல்றது எல்லாம் just a part of sex. அன்னைக்கு சரக்கடிச்ச போதைல நீயும் நானும் ஒரு முறை செக்ஸ் வச்சுகிட்டோம், அதுக்காக நான் என்ன சமபால் ஈர்ப்பாளனா? இது ஒரு வகையான செக்ஸ் மச்சான் அவ்ளோ தான். உனக்கு தான் ஊருல அத்தைப் பொண்ணுங்க நிறைய இருக்காங்கனு சொல்லுவியே, யாரையாச்சும் உசார் பண்ணு” பரக்கத் சொன்ன இந்த கடைசி விசயத்த கேட்ட டேனியல் சடாரென்று எழுந்து பரக்கத்தை கோபத்தோடு பார்த்தான். “உனக்கெல்லாம் எவ்ளோ சொன்னாலும் புரியாதுல, இவ்ளோ கஷ்டப் பட்டு எங்கூட நீ பழக வேண்டாம். உன் வேலைய பாத்துட்டுப் போ” என்று கோபத்தோடு கூறிய டேனியல் தன் துணிமணிகளை பெட்டியில் அடுக்க ஆரம்பித்தான்.

அவர்கள் ஊருக்குச் சென்ற அதே நாளில் 21 நாட்கள் பொதுமுடக்கம் பற்றிய அறிவிப்பு வெளியானது. ஏப்ரல் ஒன்றாம் தேதியே கல்லூரிக்கு சென்று விடலாம் என நினைத்த டேனியலுக்கு இது சற்றே ஏமாற்றத்தை அளித்தது. பொது முடக்கத்தின் முதல் பத்து நாள்கள் வாட்சப்பில் பகிரப் பட்ட கேளிக்கை விளையாட்டுகளால் சந்தோசமாகச் சென்றது. அடுத்த பத்து நாள்கள் லூடோ போன்ற விளையாட்டுகளால் கடத்தப் பட்டது. அதற்குப் பின் அனைத்து சலித்து விட்டது. தினமும் டேனியலுடன் வீடியோ அழைப்பு மூலம் பேசிக்கொண்டிருந்த பரக்கத் அதை குறைத்துக் கொள்ள ஆரம்பித்தான். டேனியல் வீட்டில் தலைக்கட்டுகள் அதிகம். டேனியலுக்கு 2 அண்ணன்கள் மற்றும் 1 தங்கை. அண்ணன்கள் அதே தெருவில் புது வீடு கட்டி தனித்தனியாக இருந்தனர். தங்கை கல்லூரியில் இளங்கலை முதலாமாண்டு மாணவி. டேனியல் பெரும்பாலும் பகல் பொழுதில் வீட்டில் இருப்பதை தவிர்த்தான். காலையில் சாப்பிட்டு முடித்தவுடன் தோட்டத்திற்கு சென்று விடுவான். மாலையில் சூரியன் அடங்கியப் பின் தான் வீட்டிற்கு வருவான். முதல் கட்ட பொது முடக்கத்தில் இவனை யாரும் பெரிதாக கண்டு கொள்ள வில்லை. இவனும் யாரிடம் பெரிதாக பேசிக் கொண்டதில்லை. நீட்டிக்கப் பட்ட பொது முடக்கக் காலத்தில் தோட்டத்திற்கு செல்வதும் இவனுக்கு சலிப்பாக்கி விட்டது. எனவே வீட்டில் அவன் அறைக்குள்ளே அடங்கிக் கொண்டான். 

இதே காலத்தில், கேளிக்கை விளையாட்டுகளிலும் லூடோவிலும் ஆர்வம் இல்லாத பரக்கத் பப்ஜி போன்ற விளையாட்டுகளில் தீவிரமாக விளையாடிக் கொண்டிருந்தான். ஒருகட்டத்தில் அவை அவனுக்கு சலீப்பூட்டின. அந்த நேரத்தில் தான் லாரி உரிமையாளரான அவன் தந்தை சென்னை சென்று திரும்பினார். 14 நாள்கள் கழித்து அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப் பட்டதுடன், வீட்டில் அவன் அம்மா, அத்தை மற்றும் தங்கைக்கும் கொரோனா தொற்று உறுதியானது. அதிர்ஷ்டவசமாக இவனுக்கு தொற்று ஏற்பட வில்லை. மருத்துவ அதிகாரிகள் பாதிக்கப் பட்டோர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற அதே வேளையில் இவனை வீட்டிலே தனிமைப் படுத்தினர். பக்கத்து ஊரில் இருந்த அக்கா இவனை பார்த்துக் கொள்ள அழைத்து வரப்பட்டார். இவனை அவன் அறையை விட்டு 15 நாள்களுக்கு வெளியேறக் கூடாது என சுகாதாரத் துறை அதிகாரிகள் கண்டிப்புடன் அறிவுறுத்தி விட்டு சென்றனர். இரமலான் மாதமும் தொடங்கியது. இவனுக்கு தேவையான உணவை மட்டும் அவனது அறைக்கு தகுந்த பாதுகாப்புடன் அவனது அக்கா எடுத்துச் செல்வார். அந்த அறைக்குள்ளே அடைப்பட்டுக் கிடந்த பரக்கத்துக்கு செல்போன் மட்டுமே ஒரே துணையாக இருந்தது. ஒருகட்டத்தில் அதுவும் அவனுக்கு சலித்து விட்டது. நோன்பு இருப்பதால் பெரும்பாலான நேரங்களில் அமைதியாக அல்லாவைப் பற்றி நினைப்பதும், தன் வாழ்வைப் பற்றி நினைப்பதுவுமாக நேரத்தைக் கடத்த ஆரம்பித்தான்.

டேனியலின் ஊரிலோ, வீட்டிலோ பொது முடக்கம் எவ்வித மாற்றத்தையும் பெரியளவில் ஏற்படுத்த வில்லை. தேவையான பொருட்கள் வண்டிகளில் விற்பனைச் செய்யப் பட்டது. பகல் நேரங்களில் பெரும்பாலான நேரங்கள் அவன் வீடு அண்ணிகளாலும், அண்ணன் குழந்தைகளாலும் நிரம்பியிருக்கும். எப்போதும் அரட்டைச் சத்தம் கேட்டுக் கொண்டிருக்கும். முதல் பொதுமுடக்கத்தில் இவையனைத்திலும் நழுவிக் கொண்ட டேனியல் நீட்டிக்கப் பட்ட பொதுமுடக்கத்தில் மாட்டிக் கொண்டான். இவன் நழுவிச் சென்றதற்கான காரணம், எங்கே தன் முகமூடி அவர்கள் முன்னிலையில் கழன்று விடுமோ என்ற பயம் தான். பின் இவன் விரும்பா விட்டாலும் அண்ணியார்கள் அரட்டைப் பேச்சுக்கு அழைத்த சமயங்களில் தன் பேசும் முறையிலும் உடல் மொழியிலும் அதிக கவனம் செலுத்தி தன் முகமூடியை கவனமாக பார்த்துக் கொண்டான். சமயங்களில் அவனையும் மீறி அவனது முகமூடி கழன்று விடும். ஆனால் அதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. பெரும்பாலும் அவனது கைபேசியை பிறர் தொடக் கூட அனுமதிக்க மாட்டான். ஆனால் ஒருநாள் அவனது கைப்பேசியின் கடவுச் சொல்லை தெரிந்து கொண்ட 5ஆம் வகுப்பு படிக்கும் அண்ணன் மகன், டேனியல் குளிக்கச் சென்ற நேரம் பார்த்து, அவனது கைபேசியில் விளையாட ஆரம்பித்தான்.  எதேச்சையாக அலைபேசியின் இணையத் தொடர்பு கிடைத்தவுடன், அவனது முகநூல் போலிக்கணக்கிலிருந்து குறுஞ்செய்திகளும், டேட்டிங் செயலிகளில் இருந்து அறிவிப்புகளும் வர ஆரம்பித்தன. இதை அந்த நேரம் பார்த்து அவனது அறைக்குள் நுழைந்த அவனது தங்கை கவனித்ததால் அலைபேசியை அச்சிறுவனிடமிருந்து கைப்பற்றி அந்த செய்திகளை படிக்க ஆரம்பித்தாள். தன் அண்ணன் ஒரு சமபால் ஈர்ப்பாளன் என்பதை அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. வருத்தத்தை விட கோபமும் அருவருப்புமே அவளுக்கு அதிகமாக வந்தது. அதே கோபத்துடன் தன் அப்பா, அம்மாவிடம் இந்த செய்தியை சொன்னாள். குளியலறையை விட்டு வெளியே வந்த டேனியலுக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

அளவுக்கதிகமான தனிமை பரக்கத்தை ஒரு சுயத்தேடலுக்கு இட்டுச் சென்றது. சரக்கடித்த போதையில் டேனியலுடன் கழிந்த அந்த இரவு அடிக்கடி அவன் நினைவில் வந்து சென்றது. அது அவனுக்கு மிகவும் பிடித்தும் இருந்தது. அது வெறும் களவியலில் ஒரு பகுதியே என நினைத்திருந்த பரக்கத் அவ்வாறு இல்லையென தோன்றுவது போல இருந்தது. அதே சமயம் அவன் பல வருடங்களாக தொலை தூர காதலில் இருக்கும் தன் காதலியுடன் கழித்த நேரங்களும் அவன் நினைவில் வந்து சென்றது. டேனியலுடன் பழகிய இந்த 5 வருடங்களும் அவனுக்கு மிகவும் புதுமையாக இருந்தது. டேனியல் பற்றி நினைத்த போதெல்லாம் ஒருவித கிளர்ச்சி அவன் மனதில் உண்டானதை, அவன் அப்படியெல்லாம் இருக்காது என தவிர்த்து வந்த தருணங்களும் அவன் நினைவில் வந்து சென்றன. தன் காதலியின் முகத்தில் டேனியலின் முகமும், டேனியலின் முகத்தில் தன் காதலியின் முகமும் மாறிமாறி தோன்றியது போல இருந்தது அவனுக்கு. இதைப் பற்றி டேனியலிடம் பேச முயற்சித்த போது ஒரு வாரமாக டேனியலின் எண் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதாக கணிணிக்குரல் தெரிவித்தது. அந்த இடைப்பட்ட காலத்தில் பலவாறு மனதை சுயபரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்ட பரக்கத், தான் ஓர் இருபால் ஈர்ப்பாளன் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டதுடன் தன்னை அவ்வாறாக ஏற்றுக் கொள்ள ஆரம்பித்தான் டேனியல் பகிர்ந்திருந்த மன நல ஆலோசகரின் உளவியல் ஆலோசனைகள் பரக்கத்துக்கு இந்த முடிவை எடுக்க உதவி புரிந்தன. அதே உறுதியுடன் தன் காதலனான டேனியலை அலைபேசியில் தொடர்பு கொண்டான்.

பாரம்பரியமிக்க கிறித்தவ குடும்பமான  டேனியலின் குடும்பத்தில் டேனியலால் பெரிய பிரளயமே உண்டானது. எந்த முகமூடியை தாண்டி தன் அடையாளம் தன் வீட்டில் இருப்பவர்களுக்கு தெரியக் கூடாது என நினைத்தானோ அந்த முகமூடி இன்று கிழிந்து விட்டது. அதே நாளில் அவனது கைபேசி உடைக்கப்பட்டது அவனது மூத்த அண்ணனால். வீட்டிலிருந்த எல்லோரும் அவனுக்கு அறிவுரை வழங்குகிறேன் என்ற பெயரில் அவனை மனதளவில் துன்புறுத்தினர். போதாதக் குறைக்கு அச்சமயம் பார்த்து மருத்துவர் ஷாலினியின் conversion therapy ஐ ஆதரிக்கும் வீடியோ ஒன்று வெளியானது. அந்த வீடியோவைக் காட்டி அவனை மாறி விடுமாறு எல்லோரும் மிரட்டினர். சரியான உணவு மறுக்கப் பட்டது. அவனது அம்மா முதற்கொண்டு அவனை யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. மாறாக எல்லோரும் அவனை புறக்கணித்தனர்; வெறுத்தனர்; தங்கள் குடும்பத்திற்கு வந்த களங்கம் என நினைத்தனர். அண்ணன் குழந்தைகளை அவன் பக்கத்தில் விடவே இல்லை. ஒரு வேலையும், பொருளாதார பிடிப்பும் கிடைத்தப் பின் தன் முகமூடியை கிழித்துவிட்டு இந்த குடும்பத்தை விட்டே வெளியேறி விடலாம் என்று தான் டேனியல் நினைத்திருந்தான். அவனுக்குத் தெரியும் மதத்திலும், குடும்ப பெருமையிலும்  ஊறிப்போன தன் குடும்பத்தினருக்கு தன்னை புரிந்து கொள்ளும் பொறுமையும் அவசியமும் இல்லை என்று. ஆனால் இந்த கொடூரமான பொதுமுடக்கம் அவன் எதிர்பாரா நேரத்தில் அவனது முகமூடியை கிழித்து விட்டது. கிட்டத்தட்ட பதினைந்து நாள்களுக்கும் மேலாக தன் மேல் நிகழ்த்தப்பட்ட உளவியல் வன்முறைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க முடிவெடுத்தான். எதிர்காலம் சூனியமாய் தெரியும் போது நிகழ்காலத்தை கொலை செய்வதே அவனுக்கு சரியான தீர்வாக தெரிந்தது. ஓர் இரவில் யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறியவன் தோட்டத்து கிணற்று நீரோடு தன் உயிரை கலந்து கொண்டான். அடுத்த நாள் காலை கிணற்றில் மிதந்த அவனது உடலை கண்ட குடும்பத்தினர் கவலை அடைந்ததை விட தங்கள் குடும்பத்திற்கு ஏற்பட்ட களங்கம் தீர்ந்து விட்டதென எண்ணி நிம்மதி அடைந்தனர். இருட்டில் தோட்டத்திற்குள் தனியாக கௌதாரி தட்டு வைக்க வந்த இடத்தில் கால் தவறி கிணற்றில் விழுந்து இறந்ததாக அவனது இறப்புக்கு ஒரு பொய்யான முடிவுரை எழுதப்பட்டது. பொதுமுடக்க காலம் என்பதால் டேனியலின் நண்பர்கள் யாருக்கு இறப்பைப் பற்றிய தகவல் பகிரப் பட வில்லை.

பெண்கள் பேசவே கூடாது என்று கற்பிக்கப் பட்ட அந்த கிறித்தவ குடும்பத்தில் டேனியலின் அம்மா மட்டும் மனதிற்குள் ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தார். 

இங்கே திருப்பத்தூரில் பலமுறை முயற்சித்தும் டேனியலை தொடர்பு கொள்ள முடியாத பரக்கத் எப்போது பொதுமுடக்கம் தளர்த்தப்படும்? எப்போது டேனியலை சந்தித்து அவனை பெருமகிழ்ச்சி கொள்ளச் செய்யும் இந்த செய்தியை சொல்வது என்று ஆவலோடு காத்திருந்தான்.


Image credits: Adapted from Arunshariharan’s image on Wikimedia Commons, licensed under the Creative Commons Attribution-Share Alike 3.0 Unported license.

Comments

1 Comment. Add your own »

Comment Guidelines: Your email address will not displayed. Your comment may be held up for moderation. Language that is deemed unsuitable for decent discussion will be expunged. Avoid pasting raw URLs or large quotations from elsewhere. The opinions expressed here are those of the respective individuals. We reserve the right to take down irrelevant and improper comments without any notice.

  1. மிகவும் ஆழமான கதை. பாலீர்ப்பு பற்றிய புரிதல் இல்லாததால் குடும்பத்தினரிடம் உண்டாகும் குழப்பங்களையும், ஏற்பின்மையால் உண்டாகும் வேதனைகளையும் தெளிவாகக் காட்டியிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *