Our Voices The Orinam Blog

பொது மக்களுக்கும், பத்திரிகை நண்பர்களுக்கும்..

Thirunangai_MediaStory

விபச்சாரம், பிச்சை எடுப்பது, வன்முறை போன்றவற்றை நான் ஆதரித்து பேசவில்லை. இத்தகைய செயலை ஆமோதிக்கவும் இல்லை. மக்களுக்கு இடையூறு செய்யும் எந்த செயலும் கண்டிக்கப்பட வேண்டும். அது ஆணாக, பெண்ணாக இல்லை திருநங்கையாக இருந்தாலும் தவறு என்பது தவறு தான்.

வீட்டை விட்டு சிறுவயதில் துரத்தப்பட்டு, கல்வியை பாதி வயதிலே விட்டு விட்டு, வெளியேறும் திருநங்கைகள், சரியான வாழ்வாதாரம் அமையாது சமூகத்தில் சமஉரிமைகள் மறுக்கப்பட்ட மற்ற திருநங்கைகளிடமே அடைக்கலம் புகுகின்றனர். தங்களின் வயிற்று பிழைப்பிற்காக தங்களின் மூதாதை திருநங்கைகள் தங்களுக்கு பயிற்றுவித்த கடை கேட்டல், பாலியல் தொழில் போன்றவையே தங்களை நம்பி அடைக்கலம் வரும் திருநங்கைகளுக்கு கற்றுகொடுக்கின்றனர். இதன் காரணமாக இந்த வாழ்வியலே வாழையடி வாழையாக வளர்கிறது.

இந்தியாவில், அதுவும் குறிப்பாக தமிழ்நாட்டில் திருநங்கைகளுக்கு ஓரளவிற்கு சாதகமான சூழல் இருந்தாலும் இன்னும் சமுதாயத்தில் சம உரிமைக்கான வாய்ப்பை பெறுவதற்கு பெரும் போராட்டம் தொடுக்க வேண்டி உள்ளது. இத்தகையான இக்கட்டான தருணத்திலும் சில திருநங்கைகள் இன்று தங்களின் வாழ்வாதார சூழ்நிலையை மேன்படுத்திக்கொள்ள சுயமரியாதை கொண்ட மனிதர்கள் போல வாழ முற்படுகின்றனர். பல திருநங்கைகள் இன்னும் பழமையிலே ஊறி உள்ளனர். ஒரே இரவில் இந்த மாற்றத்தை ஏற்படுத்திவிட முடியாது, கால அவகாசம் எடுக்கும். ஆனாலும் நாங்கள் மாறி வர முற்படுவது மறுக்கமுடியாத உண்மையும் கூட. இதை மக்கள் அனைவரும் உணர வேண்டும்.

இந்த மாறி வரும் சூழலில், சிலர் செய்யும் இத்தகைய செயலுக்காக ஒட்டுமொத்த இனத்தை அடையாளப்படுத்தி, மக்களிடம் இருக்கும் சில நன்மதிப்பையும் கெடுக்கும் வகையில் செய்தி வெளியிடுவது, மிகவும் கவலைக்குரியது. இத்தகைய போக்கை சில பத்திரிகை நண்பர்கள் கடைபிடிக்க வேண்டாம். சான் ஏறினால் முழம் சறுக்கும் வாழ்க்கை எங்களுடையது, இது போன்று நாங்கள் சிலர் முன்னேற்றம் கொண்டு வழிநடக்கும் தருவாயில், மக்களிடம் நன்மதிப்பை பெற்றுத் தாருங்கள்.

ஒரு ஆண் அல்லது பெண் சமுதாயத்தில் தவறு நிகழ்த்தினால் ஒட்டுமொத்த இனத்தின் அடையாளத்தை வெளிப்படுத்தி செய்தி வருவது இல்லை, அவரின் பெயரில் மட்டுமே வெளிவரும். தவறான செய்திகள் இருப்பின் இன்னார் இதை செய்தார் என்கிற அடையாளத்தோடு வெளியுடுங்கள், அதை விட்டு விட்டு திருநங்கைகள் என்று ஒரு இனத்தையே முழுமையாக அடையாளபடுத்தி எங்களை மேலும் சீர்குலைய செய்யாதீர்கள். நல்ல வாழ்வாதார சூழ்நிலை இருந்தும் நேர்மையாக பயணிக்காமல் பலர் வாழும் சமுகத்தில் அடுத்த வேலை சோற்றுக்காக போராடும் திருநங்கைகளை குறை கூறுவதை விட்டு விட்டு, எங்களின் சம உரிமைக்காக எழுதுங்கள்.

Comments

6 Comments. Add your own »

Comment Guidelines: Your email address will not displayed. Your comment may be held up for moderation. Language that is deemed unsuitable for decent discussion will be expunged. Avoid pasting raw URLs or large quotations from elsewhere. The opinions expressed here are those of the respective individuals. We reserve the right to take down irrelevant and improper comments without any notice.

  1. வணக்கம் சகோதரி. நான் சிறுகடை வைத்துள்ளேன்.தினசரி வருகிறார்கள்.பணம் கொடுக்கவில்லையென்றால் ஏசுகிறார்கள்.சாபம் விடுகிறார்கள்.இவர்களுக்கு கொடுப்பது கடைக்காரரிகளின் கடமை என்பதுபோல் பேசுகிறார்கள்.சமயத்தில் திருநங்கைகள்தானா ஆண்கள்தான் வேடமிட்டுவருகிறார்களா என்று தெரியவில்லை.என்னால் முடிந்தவரை பரிவுடன்தான் நடந்துவருகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *