எங்கள் குரல் ஓரினம் வலைப்பதிவு

கவிதை: சின்ன சின்ன ஆசை

ஒலி (Audio) வடிவில் கேட்க:

2012 சென்னை வானவில் விழாவின் கலை நிகழ்ச்சியான “நிறங்கள்”லில் வாசிக்கப்பட்ட வடிவம்.


கவிஞர்களின் குறும்புக்கு அளவே இல்லை. வெண்ணிலவை தொடுவதும், பூமி அவர்களை சுற்றி வருவதும், தென்றலுக்கு மாலை இடுவதும், சின்ன சின்ன ஆசைகளாம்! சிறிய சந்தோஷங்கள் கூட அரிதாகிப் போன எங்களுக்கு, ஆசைகள் நிஜமாகவே சின்னது தான். கேளுங்கள்.

'வேட்டை' படத்திலிருந்து ஒரு காட்சி. நடிகர்களுக்கும் கவிதைக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை.

சின்ன சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை
முத்து முத்து ஆசை முடிந்து வைத்த ஆசை
வெண்ணிலவு தொடும் அளவுக்கு பெரியதல்ல ஆசை
என் இயல்புடன் இந்த பூமியில் சுற்றி வரவே ஆசை

ஊருக்கு போகும் போது அவனையும் கூட்டிப் போக ஆசை
உலகுக்கு எல்லாம் எங்கள் இருவரையும் பற்றிச் சொல்ல ஆசை
தெருவில் அவனுடன் சேர்ந்து திமுரு நடை போட ஆசை
பொருமும் கண்களை ஒழிக்க அம்மா திருஷ்டிக் கழிக்க ஆசை

‘மாப்பிள்ளை, என் மாப்பிள்ளை’ என்று அப்பா அவனை பார்த்துப் பெருமைபேச ஆசை
‘என் பிள்ளை கிடைக்க அவன் அதிர்ஷ்டசாலி’ என்று அம்மா என்னையும் அருமைபேச ஆசை
மச்சான் என் தம்பி, அவனை வேண்டி வரவேற்க ஆசை
‘அத்தான்’ என்று என் தங்கை அவனை சீண்டிச் சிரிக்க வைக்க ஆசை

பல கதைகள் பேசி பாட்டி அவனை ‘போர்’ அடிக்க ஆசை
பட்டு வேட்டி இரண்டு தாத்தா பரிசளிக்க ஆசை
குல தெய்வம் கோவிலுக்கு குடும்பமாக போக ஆசை
அர்ச்சனை பட்டியலில் அவன் பெயரையும் சேர்த்துக் கேட்க ஆசை

ஊர் முழுக்க உறவு, எங்களை விருந்துக்கு கூப்பிட ஆசை
சீர் வாங்கி வாங்கி எங்கள் கரங்கள் களைத்துப் போக ஆசை
தெருவோரத்தில் தோழி என்னை அணைத்துக் கொள்ள ஆசை
‘ஸ்ரீ மாப்பிள்ளை’ என்று அவனை அழைத்துக் கேட்க ஆசை

தோப்பு துரவெல்லாம் அவனை சுற்றிக் காட்ட ஆசை
வாய்ப்பு வரும்போதெல்லாம் ரகசியாமாய் விரல் பின்ன ஆசை
மனமின்றி கிளம்ப, உடன்பிறப்புக்கள் எங்களை ஒட்டிக் கொள்ள ஆசை
‘மருமகன் நீ மற்றொரு மகன்’ என்று பெற்றோர் அவனைக் கட்டிக் கொள்ள ஆசை

சின்ன சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை
முத்து முத்து ஆசை முடிந்து வைத்த ஆசை
வெண்ணிலவு தொடும் அளவுக்கு பெரியதல்ல ஆசை
என் இயல்புடன் இந்த பூமியில் சுற்றி வரவே ஆசை

விமர்சனம்

10 விமர்சனங்கள். உங்களுடைய விமர்சனத்தை சேர்க்கவும் »

விமர்சன கோட்பாடுகள்: உங்கள் விமர்சனம் பரிசீலனைக்கு பிறகு பிரசூரிக்கப்படும். தகாத வார்த்தைகள் இருந்தால் விமர்சனம் நிராகரிக்கப்படும். இணைய சங்கிலிகளை இணைப்பதோ, அடுத்தவர் கருத்துக்களை வெட்டி ஓட்டுவதோ வேண்டாம். விமர்சனங்கள் வாசகர்களுடையது, ஓரினம் பொறுப்பேற்க்க முடியாது. எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் விமர்சனத்தை நீக்கும் உரிமை எங்களுக்கு உண்டு.

  1. ரோஜாவை போல உங்கள் கவிதையும் தூள் கிளப்புது வாசனையில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *