எங்கள் குரல் ஓரினம் வலைப்பதிவு

ஒரு தாயின் அனுபவம்

அந்த நாள்…. என்னை மிகவும் பாதித்த நாள். என் வாழ்க்கை துணைவரின் பிரிந்த துக்கத்திலிருந்து கொண்டிருக்கும் என்னை மிகவும் கலங்கடித்த நாள். எத்தனையோ துன்பங்கள் வந்த பொழுதும் கலந்காதவள் இந்த விஷயத்தை கேட்டவுடன் கலங்கி துடித்தேன். அந்த நாளை இப்பொழுது நினைத்தாலும் என் கண்களில் கண்ணீரை ஆறாக பெருக்கெடுத்து ஓட விடுகிறது.

ஒரு நாள் என் மகன் என்னிடம், “நாம் எங்காவது  வெளியே சென்று வருவோம்” என்று கூறினான். நான் உடனே என் மகளையும் அழைத்து கிளம்ப சொன்னேன். அவன் உடனே  “இல்லை அம்மா… நாம் மட்டும் போய் வருவோம். அவளை இன்னொரு முறை அழைத்து செல்வோம் ” என்றான்.

அவன் என்னிடம் தனியே எதோ பேச விரும்புகிறான் என்று புரிந்து கொண்டு இருவர் மட்டும் கிளம்பினோம். ஆட்டோவில் செல்லும்போது என் மனதில் பல எண்ணங்கள். நம்மிடம் என்ன பேச போகிறான்? எதாவது காதல் விவகாரமாக இருக்குமோ? அப்படி என்றால் அவன் முதலில் திருமணம் செய்ய வேண்டுமே! வருபவள் எங்கள் வீட்டு பிரச்சனைகளை கடன்களை தீர்க்க ஒத்துகொள்ளவிடில் என்ன செய்வது? அவனை தனியாக அழைத்து சென்றுவிட்டால் என் மகளுக்கு எப்படி திருமணம் செய்வது? இவ்வாறு எண்ணிலா கேள்விகள் என் மனதில் உருவாகி கொண்ட்டிருந்தது. காதலிப்பதாக அவன் சொன்னால் தங்கையின் கல்யாணத்தை முடித்துவிட்டு கடனையும் அடைத்துவிட்டு நீ திருமணம் செய்துகொள். அதன் பிறகு நாங்கள் எப்படியாவது இருந்து கொள்கிறோம் என்று கூற வேண்டும் என்ற நானே மனதிற்குள் முடிவும் செய்து விட்டேன்.

கடற்கரை வந்துவிட்டது. ஆட்டோவிலிருந்து  இறங்கி மணலில் நடந்தவாறே பேச ஆரம்பித்தான். அவன் சொன்ன விஷயத்தை கேட்டவுடன் ஒரு நிமிடம் என் உயிரே என்னிடம் இல்லை. பின் சுதாரித்து கொண்டு, “எத்தனையோ வைத்திய முறைகள் இருக்கின்றன எதாவது ஒன்றில் இதற்கு தீர்வு இருக்கும். நாம் அவர்களிடம் கேட்போம். நீயாக எதாவது முடிவு செய்து விடாதே!” என்று கூறினேன். அவன், “அம்மா நான் இதை பற்றி நிறைய விசாரித்து விட்டேன்.இது என் பிறவிகுறை , இதை நிவர்த்தி செய்ய முடியாது, எனக்கு நல்லது செய்வதாக நிணைத்து கொண்டு திருமணம் செய்து வைத்து, வரும் பெண்ணை தண்டித்து விடாதீர்கள். நீங்கள் திருமணத்தை பற்றி என்னிடம் பேசும் போது சொன்னால் நீங்கள் மிகவும் வறுத்த படுவீர்கள், அதனால் நான் முன்னதாகவே உங்களிடம் சொல்லி விட்டேன். என் திருமணத்தை பற்றி நினைக்க வேண்டாம்” என்று கூறினான். என்னால் ஒன்றுமே பேச முடியவில்லை. அவன் முகத்தையே கண் இமைக்காமல் பார்த்து கொண்டிருந்தேன்.

அவன் இதை பற்றி சொல்வதற்கு முன்பே இவ்வாறு உள்ளவர்களை பற்றி பத்திரிகைகளில், புத்தகங்களில் படித்திருக்கிறேன். ” அவரவர்கள் விரும்பி தங்கள் மீது தோழமையாகவும் உரிமையோடும் பாசத்துடன் பழகுபவர்களை , அவர்கள் இல்லாமல் தங்களால் இருக்க முடியாது. இவர்கள் தான் தங்கள் துணையாக இருக்க முடியும். வேறு துணையை தன்னால் ஏற்க்க முடியாது” என அவர்களே முடிவு செய்து கொள்கிறார்கள். இதையும் நாளேடுகளில் ஒரு செய்தியாக வெளியிடுகிறார்களே” என்று ஆத்திரம் கொள்வேன்.என் மகன் இவ்விஷயத்தை என்னிடம் சொன்னதும் நான் நினைதிருந்ததை அவனிடம் சொன்னேன். அவன் ” இது நீங்கள் நினைப்பது போல் இல்லை அம்மா. இது அவர்கள் உடலில் ஏற்பட்ட சிறு ஹார்மோன் (Hormone) மாறுபாடு. இவர்களுக்கு ஆணிற்கு பெண்ணிடமும், பெண்ணிற்கு ஆணிடமும் ஈர்ப்பு இருக்காது, இதனால் திருமணம் செய்து கொள்ள முடியாது. வேறு குறை எதுவும் இருக்காது, நார்மலாக தான் இருப்பார்கள் . நீங்கள் என்னை பற்றி கவலை படாதீர்கள், நான் குடும்பத்தை நன்றாக கவனித்து கொள்வேன்” என்று விளக்கி கூறி என்னை தேற்றினான். நான் கண்ணீர் வழிய அவனையே பார்த்து கொண்டிருந்தேன். அவன் சொன்ன வார்த்தைகள் என்னை சுடுவதை போல் உணர்ந்தேன். சிறிது நேரத்திற்கு முன் என்ன நினைத்தேன்? என் மகன் என்னை விட்டு பிரிந்து விடுவானோ? எவ்ளோ என் மகனை என்னிடம் இருந்து கொண்டு சென்றுவிடுவாளோ? என்று தன்னலமாக நினைத்தேன். ஆனால் கடவுள் ” இப்படி தன்னலமாக நினைத்தாய் அல்லவா?. உன் மகனை நீயே தனியாக வைத்து கொள்” என்று என்னை தண்டித்தது போல் உணர்ந்தேன்.

எது எப்படி இருந்தாலும் அவன் என் மகன். அவன் என்னவாக, யாராக, எதுவாக இருந்தாலும் என் மகன்.இது மட்டும் தான் உண்மை. மற்றவைகள் எல்லாம் கணநேர நினைவுகள். இந்த சிறு விஷயத்திற்காக அவனை என்னால் வெறுக்கவோ புறக்கணிக்கவோ முடியாது.எந்த நிலையிலும் அவன் எனக்கு வேண்டும்.எவ்வளவோ துன்பங்கள் வந்த போதும் எனக்கு ஆதரவாக இருந்தது என் குழந்தைகள் தான். அந்த குழந்தையில் ஒன்று திருடனாக, போக்கிரியாக இருந்தாலும் அது என் குழந்தை. என் மகன் திருடனாக போக்கிரியாக இருந்தால் அவனிடம் அன்பு காட்டி கண்டித்து அவனை திருதியிருப்பேன்.என் மகன் அப்படி இல்லை. அவனுக்கு தேவை அன்பு பாசம் மட்டுமே.என்னெனில் அவன் என் ரத்தம் என் உயிர்.

அந்த நாள் அவன் இந்த விஷயத்தை சொல்லாமல் இருந்திருந்தால் நினவுகளிலாவது அவன் திருமணத்தை கண்டு களித்து பேரன் பேத்திகளுடன் கொஞ்சி மகிழ்ந்திருப்பேன். என் மனம் எனக்கு மட்டுமே அவன் சொந்தம் என்று பொல்லாத சந்தோஷத்துடன் கும்மாளமிட்டது. ஆனால் என் மனதின் ஓரத்தில் சிறிய வலி. எனக்கு பின் அவனை யார் கவனித்து கொள்வார்கள்? தலை வலி உடல் வலி என்று ஒரு நாள் படுத்தால் அவனை யார் தாங்குவார்கள்?.இந்த கேள்விக்கு தான் எனக்கு விடை தெரியவில்லை.ஆனால் ஒரு நம்பிக்கை. என் மகன் எந்த சூழ்நிலையிலும் எதிர் நீச்சல் போட்டு மீண்டு விடுவான்.. அவனை கடவுள் கட்டாயம் கை விட மாட்டார்.அவனுக்கு ஒரு நல்ல வழி காட்டுவார் என்று நம்புகிறேன். என் மகன் இப்படி இருப்பதில் அவன் தவறு ஒன்றுமில்லை. இந்த விஷயத்தை பற்றி அறிந்தவுடன் இது பற்றிய செய்திகளை ஆர்வமுடன் படிக்க ஆரம்பித்தேன்.சிலரிடம் இதை பற்றி மறைமுகமாக விசாரித்து அவர்களுடைய எண்ணங்களை தெரிந்து கொண்டேன்.தவறான எண்ணம் கொண்டவர்களிடம் ” இதில் அவர்கள் தவறு ஒன்றுமில்லை..உடற்கூறில் ஏற்படும் சிறு மாறுபாடு தான்” என்று நான் படித்ததையும் கேள்வி பட்டத்தையும் எடுத்து சொல்லி விளக்குவேன். என்னெனில் என் மகனை போன்று எத்தனையோ மகன்கள் இருக்கலாம்.அவர்களுக்கு குடும்பத்தினரின் அன்பும் பாசமும் அங்கீகாரமும் கிடைக்க வேண்டும்.இச்செயலை பற்றி தவறான எண்ணம் கொண்டவர்களை கண்டறிந்தால் அவர்களுக்கு நான் படித்ததையும் கேட்டரிந்தத்தையும், இவ்வாறு உள்ளவர்களின் மன நினலையை பற்றியும் என்னால் முடிந்த வரை எடுத்து சொல்லி விளக்குவேன்.இவ்வாறு செய்வதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்”

என் மகன் அவனை நினைத்தால் இப்பொழுதும் என் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.என்னெனில் இன்று அவன் என் அருகில் இல்லை.என் கண்களுக்கு எட்டாத தூரத்தில் இருக்கிறான்.இன்றே இப்பொழுதே அவனை பார்த்து விட மாட்டோமோ.. என் பக்கத்தில் வைத்து கொள்ள மாட்டோமா என்று என் மனம் ஏங்குகிறது.எனக்கு வேறு சில கடமைகள் இருப்பதால் அவற்றை முடித்து விட்டு அவனுடனே என் கடைசி காலத்தை கழிக்க விரும்புகிறேன். என் உயிர் என்னில் இருக்கும் வரை அவனை என் உயிரினும் மேலாக கவனித்து கொள்வேன். எனக்கு பின்..? இது ஒன்று தான் என் மனதை விட்டு நீங்காத கேள்விக்குறி!

This post is also available in: English

விமர்சனம்

2 விமர்சனங்கள். உங்களுடைய விமர்சனத்தை சேர்க்கவும் »

விமர்சன கோட்பாடுகள்: உங்கள் விமர்சனம் பரிசீலனைக்கு பிறகு பிரசூரிக்கப்படும். தகாத வார்த்தைகள் இருந்தால் விமர்சனம் நிராகரிக்கப்படும். இணைய சங்கிலிகளை இணைப்பதோ, அடுத்தவர் கருத்துக்களை வெட்டி ஓட்டுவதோ வேண்டாம். விமர்சனங்கள் வாசகர்களுடையது, ஓரினம் பொறுப்பேற்க்க முடியாது. எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் விமர்சனத்தை நீக்கும் உரிமை எங்களுக்கு உண்டு.

    1. ‎:'( எனக்கு பின்..?

      இது ஒன்று தான் என் மனதை விட்டு நீங்காத கேள்விக்குறி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *