Our Voices The Orinam Blog

பாலியல் வன்முறையை எதிர்த்து டிசம்பர் 29 ஆம் தேதி, மாலை 4 மணிக்கு பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் மனித சங்கிலி

Image source: msn.co.in

அன்புடையீர்,

வணக்கம்.

தில்லியில் சமீபத்தில் நடைபெற்ற கொடூரமான பாலியல் வன்கொடுமை, இதுபோன்ற வன்முறைகளை கண்டித்து நாடெங்கிலும் கண்டன ஆர்ப்பாட்டங்களையும், பேரணிகளையும் தூண்டிவிட்டுள்ளது என்பது நீங்கள் அறிந்ததே. இது குறித்து, டிசம்பர் 29 ஆம் தேதி, மாலை 4 மணிக்கு பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் நடைபெறவுள்ள கண்டன போராட்டத்திற்கு வருமாறு உங்களை அழைக்கிறோம்.

தில்லியில் நடைபெற்ற சம்பவம் தனித்துவம் வாய்ந்தது அல்ல. அருவெருக்கத்தக்க செய்கைகள், கேவலமான வார்த்தைகள், உரசல்கள், தீண்டுதல்கள் ஆகியவற்றில் தொடங்கி, மிகவும் கேடுவிளைவிக்க கூடிய மற்றும் பாதகமான பல வகையான பாலியல் வன்முறைகளை குழந்தைகள், பெண்கள், மற்றும் பாலியல் ‘பிறழ்வு கொண்டோர்’ [“Sexually deviant”]என்று கருதப்படுபவர்கள் அன்றாடம் அனுபவிக்கிறார்கள். கண்டிக்கத்தக்க இந்த நடத்தைகள் தினசரி வழக்கமாகிவிட்டன. குடும்பத்தினர், அண்டை வீட்டார், சமூகத் தலைவர்கள், நீதி காக்கவேண்டிய அமைப்புகளான காவல்துறை மற்றும் இராணுவம் அனைவரும் பாலியல் வன்முறைகளை மேற்கொண்டதற்கு மறுக்க இயலாத ஆதாரங்கள் இருக்கின்றன.

பாலியல் வன்கொடுமை அதிகாரத்தின் அடையாளமாகத் திகழ்கிறது. கீழ்சாதியின் மேல் மேல்சாதி; சிறுபான்மையினர் மீது வலதுசாரி பெருபான்மையினர்; தங்களது அதிகாரத்துக்கு அடங்காத, பயம்விளைவிக்க கூடிய குடியினர் மீது அதிகாரத்தில் உள்ள அரசாங்கத்தினர் – என்று பல நேரங்களில் இது அதிகாரத்தின் அடையாளமாகத் திகழ்கிறது. பாலியல் ரீதியாக வலு குறைந்த எந்தப் பிரிவினர் மீதும் நடத்தப்படலாம் என்றாலும், பெண்கள் மீது ஆண்கள் நடத்தும் பாலியல் வன்முறை பரவலாகக் காணப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு பாலியல் வன்முறையை பற்றி கீழ்கண்ட கேள்விகளை கேட்கவேண்டியுள்ளது.

  • ஆண்கள் இந்த அளவிற்கு வன்முறையுடனும், இழிவான நோக்கங்களுடனும் நடந்துகொள்ள நமது சுழலில் எந்த விஷயங்கள் காரணமாகின்றன? வளர்ச்சி, முன்னேற்றம் என்று நாம் கருதுபவை இயலாமையையும், வறுமையையும், குற்றங்கள் செய்வதையும் உருவாக்கிவிடுகிறதா?
  • பாலியல் வன்முறை இழைப்பவர்கள் மனப் பிறழ்வு கொண்ட ஒரு குறிப்பிட்ட குழுவைச் சேர்ந்தவர்களா? அல்லது அவர்களின் செய்கைகளுக்கு பின்னால் நாம் சிந்திக்க வேண்டிய மேலும் பல விஷயங்கள் உள்ளனவா? அவற்றிக்கு பின்னால் பெண்கள் மீதான வெறுப்பு, வெறி, அலட்சியம், மரியாதையின்மை இவற்றை வளர்க்கும் ஒரு பண்பாடு இருக்கிறதா?
  • காவல்துறையும் நீதித்துறையும் தங்கள் பணியை சீராக செய்ய வேண்டும் என்று கோரும் நாம் இந்த விஷயத்தில் அதே அளவிலான பொறுப்புடைய மற்ற அமைப்புகளை கவனிக்காது விட்டுவிடுகிறோமா? மக்களுக்கு பதிலளிக்கத் தேவையில்லை என்ற ஒரு பண்பாடு நம் நாட்டில் நிலவுகிறது. உதாரணத்திற்கு, ஊடகங்களை எடுத்துக்கொள்ளலாம். விளம்பரங்கள், பரபரப்பான செய்திகள் ஆகியவற்றின் மூலம் எல்லா விதமான பாலியல் தூண்டுதல்களையும் ஊடகங்கள் ‘விற்பனை’ செய்கின்றன. இது தவிர, பண்பாடு என்னும் பெயரில் பெண்களை இழிவுபடுத்தும் நிகழ்ச்சிகளையும் வெளியிடுகின்றன. இவற்றை நாம் கவனிக்காது விட்டுவிடுகின்றோமா?

இப்படிக்கு,

மனித சங்கிலி ஒருங்கிணைப்புக் குழு

மேலும் தகவலுக்கு: சிவகுமார் – 9840699776 | அனிருத்தன் – 8939609670

RSVP on Facebook: HumanChainDec29Chennai

Thanks: Sneha Krishnan, V Geetha and Shri Sadasivan for draft and Tamil translation

This post is also available in: English

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *