This piece Muzhu Nilavum, Mutru Peraadha Kaadhalum (Full moon, incomplete love) was featured at Nirangal, Chennai Rainbow Pride’s cultural performance festival on June 19, 2011. Thanks Gireesh for consent to include it on orinam.net! Full text is below:
உறக்கம் இல்லாத ஒரு பின்னிரவில் உனக்காய் என் மனதைத் திறக்கிறேன்…
எப்படி உன்னை அழைத்துத் துவங்குவது என்று யோசிக்கும் போது தான் புரிகிறது எப்படி அழைத்தாலும் நீ வரப்போவதில்லை என்பது …
முழுநிலவு காய்ந்த ஒரு பின்மாலைப் பொழுதில்,நாம் இருவரும் கைகளைக் கோர்த்துக்கொண்டு நடந்த நமது முதல் சந்திப்பு நினைவு இருக்கிறதா உனக்கு??
எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி சாதாரணமாக நடந்த நம் முதல் சந்திப்பு, அசாதரணமான பல நிகழ்வுகளுக்கான வாசலைத் திறந்து விடுமென்று நீ எப்படி எதிர்பார்க்கவில்லையோ, அப்படித் தான் நானும் எதிர்பார்க்கவில்லை …
ஒருவரின் அழைப்புகாகவும் , குறுஞ்செய்திகளுக்காகவும் என் அலைபேசியை மணிக்கணக்காக பார்த்துக் கொண்டிருந்ததும், ஒருவரின் பெயரைப் புத்தகங்களில் எழுதி நேரம் போவதே தெரியாமல் ரசித்து கொண்டிருந்ததுமான எந்த முட்டாள் தனமான காரியங்களையும் உன்னைப் பார்க்கும் வரை செய்ததாக நினைவு இல்லை எனக்கு …
தேடிப் பிடித்து வாங்கிய பேனாவால், பல முறை எழுதி கிழித்து போட்ட காகிதங்களுக்கு நடுவே வார்த்தைகளை பிரசவித்து எழுதிய கடிதமது … உனக்கு என்னை பிடித்திருக்கிறதா ? என் காதல் ஏற்றுகொள்ளப்படுமா? என்ற எந்த எதிர்பார்ப்புமில்லாத ஒரு கடிதம்…
கடற்கரையில் உன்னை இரண்டாம் முறை சந்திக்கிறேன் … உனக்குப் பிடித்த கவிதைகள் , நமக்குப் பிடித்த பாடல்களென நீ பேசிய போதும் , என் பெயரை மணலில் எழுதி நீ சிரித்தபோதும், எதிர்பார்க்காத ஒரு சமயத்தில் என்னை நீ முத்தமிட்ட போதும் என் கைகள் நான் எழுதி வைத்திருந்த கடிதத்தைத் தொட்டுப் பார்த்துக் கொண்டிருந்தது .. அப்போது ஏற்பட்ட பதட்டத்தை இப்போதும் உணர முடிகிறது என்னால் ….
இரண்டு நாட்கள் காத்திருப்புக்குப் பின், கோவிலின் முன்னே வைத்து தேவதைகளால் ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு தருணத்தில் நீ உன் காதலை சொன்னதும் , எதுவும் செய்யமுடியாமல் உன் கைகளை இறுகப்பற்றி கொண்டு என் கண்ணீரை கட்டுப்படுத்திய போது தொடங்கியது நமக்கான வாழ்கை….
உன் குறுஞ்செய்தியுடன் ஆரம்பிக்கும் என் காலை, உன் உரையாடலுடன் முடியும்.
அடுத்த குறுஞ்செய்தியை எதிர்பார்த்து இரவின் வினாடி முட்கள் ஒவ்வொன்றாய் நகரும்….
எப்பொழுதும் உன் நினைவுகள் மட்டும்….உனக்குப் பிடித்த உணவு, உனக்குப் பிடித்த பாடல்கள்,உனக்குப் பிடித்த மனிதர்களென நானும் மற்றுமொரு நீயாய் மாறிப் போன சமயத்தில் தான் உனக்கு என்னைப் பிடிக்காமல் போனது…..
பொய்யாய் காதலிப்பதைவிட,நீ என்னை காதலிக்க வேண்டுமென்பதற்காக நான் சொன்ன ஒரு பொய் உனக்குமெனக்குமானப் பிரிவை உறுதி செய்தது…
எனக்கு ஒரு பிரார்த்தனை இருக்கிறது ….நிச்சயமாக அது நீயும் நானும் சேர வேண்டுமென்று அல்ல….உன்னை நேசிக்கும் ஒருவருடன் நீ உன் எதிர்பார்ப்புகளின்படி வாழ வேண்டுமென்று ….
என் அளவிற்கு உன்னை யாரும் காதலிக்க முடியாது என்பதில் எனக்கு இருக்கும் கர்வம் தான் என்னை இன்னும் என் பாதையில் பயணிக்க வைக்கிறது …..
கடைசியாக ஒன்று ..
உனக்கும் எனக்கும் நடந்த கடைசி வாக்குவாதத்தில் நான் வீசி எறிந்து செயலிழந்த என் அலைபேசியை இன்னும் சரி செய்யாமல் வைதிருக்கிறேன் …
ஏன் தெரியுமா ?
சரி செய்யும்போது அதில் உள்ள குறுஞ்செய்திகள் அழிந்து விடுமாம்….
அழிந்தால் என்ன என்று கேட்கிறாயா ?
அதில் நீ என் மீது காதல் வயப்பட்டிருந்தபோது அனுப்பிய குறுஞ்செய்தி ஒன்று அழிக்கப் படாமல் உள்ளது ..
“உன் கைகளை பிடித்துகொண்டு, உன்னை என் தோள்களில் சாய்த்தபடியே இனி என் வாழ்நாள் முழுவதையும் கழிக்கவேண்டும் ”
நாம் காதலித்ததற்கு சாட்சியாக செயலிழந்து போன ஒரு அலைபேசியும், அதில் பார்க்கவே முடியாத ஒரு குறுஞ்செய்தியும் மட்டுமாவது இருந்துவிட்டு போகட்டுமே …



விமர்சனம்
இதுவரை யாரும் விமர்சிக்கவில்லை. உங்களுடைய விமர்சனத்தை சேர்க்கவும் »