Our Voices The Orinam Blog

“ஐ”(ய்யே): இயக்குநர் ஷங்கர் அவர்களுக்கு

தமிழ் சினிமா கண்ட மாபெரும் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் அவர்களுக்கு,

தங்களின் “ஐ”(ய்யே) காவியம் கண்டேன். விக்ரம் போன்ற வித்தியாச நடிப்பு வெறி கொண்டவர்களும், ஆஸ்கர் ரவிச்சந்திரன் போன்ற தயாரிப்பாளர்களின் பணவெறிக்கும், கோடிக்கணக்கான ரசிகர்களின், ரசிக மனோபாவத்திற்கு பின்னுள்ள பெண்களின் மீதான பாலியல் வெறிகளுக்கும், ஹீரோயிசம் எனும் பொறிக்கித்தனங்களுக்கும், நாயகவழிபாட்டிற்கெல்லாம் தஞ்சம் தரும் ஆலயம, “a Shankar film” தான் என்பதை அறியாதார் யார்?!

நியாயமான ஒரு படைப்பை புரிதலின்றி மததுவேசமாக சித்தரித்து அப்படைப்பையும், படைப்பாளியையும் பின்வாங்க செய்யும் அதேவேளையில் தான் உங்களின் படைப்புச் சுதந்திரத்தின் வெற்றியையும் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். இதே மத துவேசத்தை காரணம் காட்டி “’டாவின்சி கோட்’’ தடை செய்யப்பட்ட நாட்டில், இதே மத துவேசத்தை காரணம் காட்டி தற்காலிக தடை செய்யப்பட்டு, அதுவே பெரும் விளம்பரமுமாகி வணிக வெற்றியும் அடைந்த ‘’விஸ்வரூபம்’’ படம் வெளியானதும் இங்கேதானே…

ஆனால், தாய்நாட்டு அகதிகளான, பாலியல் வெறியர்களான, அருவெருப்பான சமூக விரோதிகளான எங்களை எப்படியும் சித்தரிக்ககூடிய அருகதை கொண்ட தங்களைப் போன்ற மகா கலைஞர்களை மட்டும் யாரும் எதுவும் கூறப்போவதில்லை.

சமீபகாலமாக வலைதளங்களில் திரைப்படங்களை துவைத்து, கிழித்து தொங்கபோடும் வலைதள விமர்சகர்களில் ஒரு சிலரைத் தவிர பெரும்பாலானவர்களுக்குகூட இந்த ‘ஐ’ படம் அவர்களின் எதிர்ப்பார்ப்பை நிறைவேற்றவில்லை என்ற ஆதங்கம் தான். இம்மொக்கை கதை, திரைக்கதையை கலாய்த்த அளவிற்கு ஒன்பதுகளை காயப்படுத்தியதைப் பற்றி கண்டுகொள்ளவில்லை. இன்னும் கூடுதலாக ஒரு விமர்சகர் ‘’ இதில் ஒரு ‘நயன்’தாரா வேறு வில்லன்..!!’’ என்று எழுதியிருக்கிறார். குறைந்தபட்சம் இந்த ஆபத்தான ரசனையை வளப்படுத்திய விதத்தில் நீங்கள் உள்ளம் குளிர்ந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

பிரம்மாண்டம், பிரம்மாண்டமான செட், பிரம்மாண்டமான கலைஞர்கள், அதிபிரம்மாண்டமான பட்ஜெட் தாண்டி ’’அதற்கும் மேல’’யும் சில விசயங்கள் இருப்பதை தங்களின் பிரம்மாண்ட மூளைக்கு முன் பகிர்ந்து கொள்ள இச்சிறுமதியாள் விரும்புகிறேன்.
”சிவாஜி” படத்தில் போகிற போக்கில் திருநங்கைகள் மீது காறி உமிழ்ந்ததை நினைத்துப் பார்க்கிறேன். சின்ன கலைவாணர் அவர்கள் ‘’இப்பத்தான் ஆப்பரேசன் பண்ணிட்டு வந்திருக்கு’’ என்று ஏளனமாக கூறியதும் ‘’சீ..சீ…’’ என்று அருவெறுப்புடன் எங்கள் சூப்பர் ஸ்டார் விலகிச் சென்றதை தூசி தட்டி தற்போது ’’அதற்கும் மேல’’ ப்ரம்மாண்டமாய் காறி துப்பியதைத் தான் பேச விரும்புகிறேன்.

வழக்கமான நாயகன் போலவே இதிலும் விக்ரம் அவர்கள் மிக ஆண்மையுடன் வில்லனை பார்த்து, முதல் பத்து நிமிடங்களிலேயே ‘’டே… பொட்ட..’” என்கிறார். நான் அதிர்ச்சியடையவில்லை, நானும் என்னை போன்ற பொட்டை பிறவிகளும் தமிழ் சினிமாவின இத்தகைய தொடர் பதிவுகளால் இவற்றிக்கு நன்கு பழகியிருக்கிறோம். விக்ரம் அவர்களுக்கும் கூட இந்த வசனம் ஒன்றும் புதிதல்ல, தனக்கு மிகப்பெரிய ப்ரேக் கொடுத்த பாலா அவர்களின் ’’சேது’’ படத்தில் கூட “டே.. இப்பிடி பண்ணி பண்ணியே ஒருநாள் நீ அஜக்காவே மாறப்போற…” என்று சொன்னவர்தான். அதற்கு பிறகு இச்சொல்லாடலை அவர் பயன்படுத்தாத படங்களின் எண்ணிக்கைதான் குறைவாக இருகக்கூடும்.

‘’சதுரங்க வேட்டை’’ என்னும் சமூக அக்கறை கொண்ட படமியக்கிய திரு.வினோத் அவர்களே ‘’பொட்ட’’ என்று சொல்லாடலை எளிதாக பயன்படுத்துகையில்,, அதனை பிரபல திரைவிமர்சகர்களான கேபிள்சங்கர்களும் சப்பைக்கட்டு கட்டும் போது, உங்களிடம் மட்டும் அந்த கரிசனத்தை நாங்கள் எதிர்பார்க்கவா முடியும்.

அதுசரி உங்களால் ’’பொட்டை’’ என்று அறியப்படும் நாங்கள் உங்கள் ஆண்மை பராக்கிரமத்திற்கு முன் அப்படி என்னதான் குறைந்து விட்டோம்?! உள்ளம் முழுதும் பெண்மை குடியிருப்பதை அறிந்து எம்பாலினத்திற்கு நேர்மையாக இருக்கிறோமே ‘’அதற்கும் மேல’’வா உங்கள் பராக்கிரமம் சிறந்தது? திருநங்கையாக குடும்பத்தையும், அது தரும் அரவணைப்பையும், பாதுகாப்பையும் விட்டு வெளிவர துணிச்சல் இருக்கிறதே ‘’அதற்கும் மேல’’வா உங்கள் பராக்கிரமம் சிறந்தது? இந்திய பிரஜைக்குரிய சகல உரிமைகளும் மறுக்கப்பட்டு தாய்நாட்டு அகதிகளாவோம் என்பதை அறிந்தும் திருநங்கையாக குடும்பத்தை விட்டு வெளியேறுகிறோமே ’’அதற்கும் மேல’’வா உங்கள் பராக்கிரமம் சிறந்தது? பெற்றோர்களின் சொத்துசுகம் எதுவிமில்லாமல் சூன்யத்திலிருந்து எங்கள் வாழ்க்கையை நிர்கதியாக துவங்கி அடுத்தவர்களை சாராமல் வாழ்கிறோமே ‘’அதற்கும் மேல’’வா உங்கள் பராக்கிரம்ம் சிறந்த்து? தெருவிலும், வெள்ளித்திரையிலும் உங்கள் ஆண்பராக்கரசாளிகள் சொல்லாலும், செயலாலும் எங்கள் மீது நிகழ்த்தும் வன்முறைகளை துணிவோடு எதிர்கொண்டு தொடர்ந்து செல்கிறொமே ’’அதற்கும் மேல’’வா உங்கள் ஆண்மை பராக்கிரமம் வாய்ந்தது? அல்லது ‘பொட்டைகள்’ சோத்தில் உப்பு போட்டு தின்பதில்லை என்பது உங்களின் திண்ணமான எண்ணமா??

”ஐ” என்ற தலைப்பிற்கேற்ப ஐந்து வில்லன்கள் வேண்டுமென்று யோசித்தது சரி. அதற்கும் மேலே, கதைக்களத்திற்கேற்ப அதே துறைசார்ந்த வில்லன்களாக வைத்த உங்களின் மெனக்கெடலை பாராட்டுகிறேன்.. அதற்கும் மேல, பிரம்மாண்டமாக, ரிச் லுக்குடன், அதேசமயத்தில் வித்தியாசமான, காமடியான, வில்லன் வேண்டுமென, ஒரு ஸ்டைலிஸ்டாக திருநங்கையை வைத்த்தையும், அதுவும் ஆதண்டிக்காக இருக்க வேண்டுமென்பதற்காக உலக அழகியையே, அழகாக காட்டிய நிஜ ஸ்டைலிஸ்ட் ஓஜாஸ் ரஜினியையே ( எந்திரன் படத்தில் ஐஸ்வர்யா ராயை அழகாய் காட்டியவர் இவர்தான்.. மொழி தெரியாத அவருக்கு என்ன கதை சொல்லி நடிக்க வைத்தீர்கள் என்பது தங்களுக்கே வெளிச்சம்.) நடிக்கவைத்ததில் நிஜமாகவே நான் மெரசலாகிட்டேன். ஆனால், அந்த கீழ்த்தரமான பாத்திரத்திற்கும் அவரது நிஜபேரான ஓஜாஸ்’யையே வைத்ததன் மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள் இயக்குநரே?

தான் வியக்கும், விரும்பும் அழகியாலயே இந்தியாவின் நம்பர் ஒன் ஸ்டைலிஸ்ட் என்று அறிமுகப்படுத்தப்பட்ட போதும், ஓஜஸ் மீது நாயகனுக்கும், நண்பனுக்கும் அவ்வளவு கீழ்த்தரமான பார்வையேன் வருகிறது. எல்லா இன்னல்களையும் கடந்து பல திருநங்கைகள் பல துறைகளில் சாதித்து வருகிறார்கள் தான். ஆனாலும், அவர்கள் ஏளனத்திற்குரியவர்கள், என்பதை பார்க்கும் ரசிகர்கள் மனதில் உறுதியாக விதைக்கத்தானே?!. தமிழ் ரசிகர்களே திருநங்கைகளை கலாய்க்க, ‘’காஞ்சனா’’ (திருநங்கைகளை சற்று கண்ணியமாகிய படம் என்றாலும், இறுதியில் அதையும் கலாய்க்க பயன்படுத்தும் ரசிகர்களை எண்ணி வியக்கேன்..!!) என்று அழைக்க அப்டேட் ஆகியிருக்கும் நிலையில் ‘’ஊரோரம் புளியமரம்..” என்று பாடுவது எதனால்? நீங்கள் எதிர்பார்த்ததை போலவே அந்த காட்சியில் ரசிகசிகாமனிகள் அரங்கம் அதிர சிரித்தார்கள்தான். என்ன அந்த அருவெறுப்பான சிரிப்பை மீறி, முதல்வன் படத்தில் வரும் புகழின் அம்மாவைப்போல என்னைப் போன்ற ‘பொட்டை’களை பெற்ற அம்மாக்களின் கேவல்கள் உங்கள் காதை எட்டியிருக்காது.

அதெப்படி, வெறும் திரையிலும், பொஸ்டர்களிலும் மட்டுமே கண்ட ஒரு அழகியை, அவள் அழகி என்பதால் மட்டுமே ஒரு ஆணழகன் காதலித்துவிடமுடியும், அதுவும் உண்மையான, நியாயமான, கல்மிஷம் இல்லாத காதலாகிறது., குற்றவுணர்வாலும், பரிதாபத்தாலும் ஒரு அழகியால், ஆணழகனை பரிசுத்தமாக காதலிக்கு முடிகிறது. ஆனால், ஒரு திருநங்கையின் காதல் உணர்வு மட்டும் எப்படி தங்களுக்கு அவ்வளவு நாராசமானதாகிறது. அவள் காதல், நாயகனால் மட்டுமல்ல, நண்பனாலும், நாயகியாலும், படத்தில் வரும் விளம்பர பட இயக்குநராலும் அருவெறுப்பாகவே பார்க்கப்படுகிறது. அதாவது இப்படத்தின் இயக்குநராகிய நீங்கள் வெறுப்பதைதான் சூசகமாக கூறுகிறீர்கள் இல்லையா?

அவரை ரிச்-திருநங்கையாக, காட்ட ஆரம்பத்தில் அழகான கேமரா ஆங்கிளை பயன்படுத்திய நீங்கள். அவரது காதல் புறக்கணிக்கப்படும் கணம் முதல் அவரை அசிங்கமாக மட்டுமே காட்ட பயன்படுத்திய காமிரா ஆங்கிளில் அசிங்கமாக தெரிந்தது ஓஜஸ் மட்டும் இல்லை நீங்களும்தான் என்பதை உணர்ந்தீர்களா?

இவ்வளவு வரைக்குமே உங்களிடம் நாகரீமாகத்தான் கோவம் கொள்ள நினைத்திருந்தேன். ஆனால், “9’” என்ற அறையெண்ணை காட்டி பின் ஓஜாஸை காட்டிய உங்கள் அரதபழசான, அருவெறுப்பான விளையாட்டை எண்ணி என்னால் கெட்டவார்த்தைகளால் வசைபாடாமல் இருக்கமுடியல்லை. ஏனெனில், இதே ‘’9’’ என்ற சொல்தான், என் பள்ளிகாலம் முழுதும் முள்ளாக குத்தி, கண்ணீர் சூழ சக மாணவர்களிடமிருந்து என்னை தனிமைப்படுத்தியது. இதே ‘’9’’ என்ற சொல்தான், இப்போதுவரையிலும் எந்த அற்பனும் என்னை சிறுமைபடுத்த பேராயுதமாக பயன்படுத்துகிறான். அவற்றோடு கூடுதலாக சமூகம் கற்றுக்கொடுத்த கெட்டவார்த்தைகள்தான் இப்போது என் கைவசம் இருப்பவை.

இருந்தாலும், கேபிள்சங்கர் போன்ற விமர்சனசிகாமனிகள் எனக்கு ‘நாகரீக வகுப்பு’ எடுப்பார்களே என்று அஞ்சி நானாகவே நாகரீகமாகவே தொடர்கிறேன்.

’’இப்படத்தில் எந்த மிருகங்களும் துன்புறுத்தப்படவில்லை’’ என்ற டிஸ்க்லைமருடன் துவங்கும் இப்படத்தில் தான், கிடைக்கும் ஒரு வாய்ப்பை கூட விடாமல் பாலியல் சிறுபான்மையினர் முதல், மாற்றுத்திறனாளிகள் வரை காயப்படுத்த தங்களுக்கு கட்டற்ற சுதந்திரம் அளித்திருக்கிறது நமது சென்சார் போர்ட். அதன் தாராள மனதை கண்டிக்காமல் உங்களை மட்டும் கேள்வி கேட்டு என்ன பயன்?

ஒரேயொரு படத்திற்காக இத்தனை மெனக்கெடலையும், கடின உழைப்பையும், தனது நேரத்தையும் கொடுத்து மகாகலைஞனாக உயர்ந்து நிற்கும் விக்ரமிடம் இதுபோன்ற அற்பகாட்சிகளின் நடிக்க வேண்டாமென என்னால் வேண்டுகோள் கூட வைக்கமுடியவில்லை. ஏனெனில், அடுத்த உலகநாயகனாக வேண்டுமென துடிக்கும் அவரது ஆதர்ச நாயகனான கமலும் கூட, வாசிப்பும், பகுத்தறிவும் கொண்ட நடிகரென நவீன இலக்கியவாதிகள் ஈசிக்கொள்ளும் அதே கமல்ஹாசன் அவர்களும்தான் ‘பொட்டை’என்னும் சொல்லாடலை தொடர்ந்து தமது படங்களிலும், “அதற்கும் மேல” ‘’வேட்டையாடு, விளையாடு’’ படத்தில் திருநங்கைகளையும், சமபால் ஈர்ப்பினரையும் தனது பங்கிற்கு சிறப்பாக மலினப்படுத்தியிருக்கிறாரே…

உங்கள் இருவருக்கும் மட்டுமன்றி, அனைத்து நடிகர்கள், காமடியன்கள், இயக்குநர்களுக்கும், ஒரேயொரு தகவல்.. நீங்கள் கொண்டாடும் ஆண்பராக்கிரமசாளிகள் மட்டுமே உங்கள் ரசிகர்கள் அல்ல. உங்களால் ஏலியனாக கருதப்பட்டு, மலினப்படுத்தப்படும் நாங்களும் உங்களின் ரசிகர்கள்தான். எங்கள் வீட்டிலும் டிவி பெட்டி உண்டு. நாங்களும் படங்கள் பார்க்கிறோம். ரசிக்கிறோம், சிரிக்கிறோம், அதுமட்டுமல்ல தவறாமல் சோற்றிலும் உப்பு போட்டுதான் சாப்பிடுகிறோம் என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள்.


* English translation is here
** Image source: HosurOnline.com

Comments

10 Comments. Add your own »

Comment Guidelines: Your email address will not displayed. Your comment may be held up for moderation. Language that is deemed unsuitable for decent discussion will be expunged. Avoid pasting raw URLs or large quotations from elsewhere. The opinions expressed here are those of the respective individuals. We reserve the right to take down irrelevant and improper comments without any notice.

 1. சமூகத்தால் ஓரங்கட்டப்பட்டுள்ள பாலினம் இவ்வாறு திரைபடங்களில் காட்சிப் பொருளாவதும், கேலி/ கிண்டலுக்கு உள்ளாவதும் கண்டிக்கப்பட வேண்டியது. திரைப்படத்துறையினர் இனிமேலாவது சமுதாயப் பொறுப்புடன் படங்களை எடுக்கப் பணிக்கப்பட வேண்டும்.

 2. நல்ல பதிவு. தமிழ் திரையுலகம் திருநங்கைளை கேவலமா சித்தரிப்பதை
  நிறுத்த வேண்டும்.

 3. Transgender protest is not about this I movie only. It is about historic portrayal of them as unwanted elements by Kollywood in the society.

  Usually entertainment industry will be the champion of civil rights and opposing discrimination. In Tamil Nadu, it is the entertainment industry which encourages the discrimination. Shankar showed his lack of emphathy in a important social issue by this movie.

  The scene were Vikram, Santham mocks Osma in the intro scene was really pathetic. Imagine some south Indian mocked as Idli, Sambhar in a Bollywood movie or Indian mocked as Tandoori chicken in Hollywood movie ? Hell would have broke loose right ? Then why this marginalization against transgenders ?

 4. மிகவும் துயரத்தை தரும் எழுத்து. இவர்கள் எல்லோரும் ஆண்குறிபெருமித மையவாதத்தை தாண்டாத கேடுகெட்டவர்கள். இத்தகைய படங்கள் மிகவும் கண்டணத்திற்கு உரியது. இதற்கு எதிரா எந்த தமிழ் எழுத்தாள இலக்கியவாதிகளும் வெகுண்டெழ மாட்டார்கள். குறைந்தபட்சம் மக்களிடம்கூட கொண்டு செல்ல மாட்டார்கள்.

 5. Transgenders can be portrayed as a villain , negative character or with wrong shades in a movie.. after al its just a movie. But the respect that has to be given to them. Has to be given. Should not used those terms which indicates trangenders in future.

 6. What a powerful letter! I have to say i agree with every single point. Even I was appalled at such an offensive portrayal of transwomen in the movie, I was even more ashamed when some of my own acquaintances laughed for the supposed jokes. Shankar was one of my favorite directors, until he decided to so unabashedly portray such offensive scenes. I also wonder how Vikram and AR Rahman and such big names did not raise any objection to this. After all there was no story value attached to such a track. Whether we agree or not, such a magnum opus movie does influence people and these scenes may actually provide a mental justification to those men who shamelessly tease women and transwomen alike. – See more at: http://orinam.net/open-letter-to-director-shankar-eng/#comment-16796

 7. Kasukaka villai pogum unarvara ivarkaluku … Ammavin vali theriyadhavargal ungalin vali theriya pogudha Anna?

 8. திருநங்கை வித்யா,
  உங்கள் எழுத்தின் பின் இருக்கும் வேதனையை முழுதும் உணர்கிறேன். என்னால் உங்களுக்கு பெரிதாக உதவ முடியாமல் போனாலும், என் மகள்களுக்கு உங்கள் கடிதத்தை படிக்க சொல்லி உங்கள் உணர்வுகளை அறிய செய்ய முடியும். உங்கள் போராட்டத்திற்கு என் ஆதரவு எப்போதும் உண்டு.
  அன்புடன்
  சுதாகர்.

 9. தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால்தானே தெரியும்… ஆண்மையுடன் பிறந்த திமிர் கொண்ட சங்கரைப் போன்றவர்களுக்கு ஆண்மை சில காலமாவது இல்லாமல் இருந்தால் நிச்சயம் சமூகம் திருநங்கைகளை மட்டுமே முதலில் போற்றும்… பள்ளி, கல்லூரி, விடுதி, உடன் பிறந்தவர்கள், உறவினர்கள், தெருக்களில் இருப்போரின் அந்தவொரு கேவலமான பார்வையை, புடை சூழும் கிண்டலை தாங்கிக்கொள்ள முடியாமல் உள்ளுக்குள்ளே அழுது அழுது நரகத்தின் நடுவே வாழ்பவர்களும் சரி, தனித்து தமது சமூகத்துடன் திருநங்கை, நம்பிகளானாலும் சரி மனிதர்கள்தான்… ம்னதளவில் உண்மையான ஆண்கள்தான்… பெண்கள்தான் என்பதை எப்போது இந்த சமூகம் உணரப் போகிறது எங்களை படைத்த ஆண்டவரே…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *