இருபாலீர்ப்பு என்றால் என்ன?

இருபாலீர்ப்பு என்பது ஆண் , பெண் என்ற இரு பாலாரின் மீதும் ஏற்படும் ஈர்ப்பு

இருபாலீர்ப்பாளர் (Bisexual) யார்?

இருபாலீர்ப்பாளர் என்றால் ஆண் , பெண் இருவரின் மீதும் பாலீர்ப்பு ஏறபடக்கூடிய ஒருவர் (ஒரே சமயத்தில் அல்ல). ஆயினும் பலருக்கு சூழ்நிலை காரணமாகவோ அல்லது வேறு பல காரணங்களாலோ அவர்களின் பாலீர்ப்பிற்கேற்ப பாலியல் நடத்தை (Sexual Behaviour) மேற்கொள்ள முடிவதில்லை. அதனால் இருபாலீர்ப்பாளர் என்றால் ஆண் , பெண் என்ற பாகுபாடின்று ஈர்ப்பு ஏற்படும் தன்மை உடையவர் எனலாம். இது நடவடிக்கையைக் குறித்த சொல் என்று சிலர் கூறுவர். சிலர் இதை ஒருவர் தம்மை அடையாளம் காட்ட பயன்படுத்தக் கூடிய சொல் என்றும் சொல்லலாம். இவர்களில் சிலருக்கு ஒரு பாலரின் மீது அதிக ஈர்ப்பு இருக்கலாம். சிலருக்கு ஒரே அளவாக இருக்கலாம். இது காலத்திற்கேற்ப மாறவும் கூடும்.

சரி நான் தற்பாலாரிடமோ (Same sex) அல்லது எதிர்பாலாரிடமோ (Opposite sex) பாலியல் ரீதியாக உறவு கொண்டதே இல்லை.ஆனால் ஈர்ப்பு உள்ளது. நான் இருபாலீர்ப்பாளரா?

இருக்க கூடுமா? நிச்சயமாக இருப்பீர்களா?

அது உங்களைப் பொறுத்தது.
உங்களுக்காக யாரும் அந்த முடிவை செய்ய முடியாது. நீங்கள் செய்யும் முடிவு தவறு என்றும் யாரும் சொல்ல முடியாது. இருபாலீர்ப்பு என்பது உங்கள் படுக்கை அறையில் யார் இருக்கிறார்கள் என்பது குறித்த விஷயம் அல்ல உங்கள் உணர்வுகளைக் குறித்தது.
நீங்கள் யார் என்பதை நிர்ணயிப்பது நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதல்ல.,நீங்கள் என்ன செய்ய விழைகிறீர்கள் என்பது.

இருபாலீர்ப்பாளர்கள் தங்கள் பாலியல் குறித்து குழப்பத்தில் இருப்பவர்கள் இல்லையா? இது தற்காலிகமான நிலை தானே? எப்படியும் அவர்கள் ஒருபாலீர்ப்பாளராகவோ அல்லது எதிர்பாலீர்ப்பாளராகவோ மாறிவிடுவார்கள் தானே?

இல்லை.எல்லோரும் எப்போதும் அப்படிபட்ட தற்காலிக நிலையில் இருப்பதில்லை. 
எங்களில் பலருக்கு குழப்பம் இல்லை. இரு பாலாரின் மீதும் ஈர்ப்பு என்பது தெளிவான எங்கள் வாழ்க்கையின் உண்மை. பலர் வாழ்நாள் முழுதும் இருபாலீர்பாளராக இருக்கிறார்கள். இதிலிருந்து இது தற்காலிகமான ஈர்ப்பு அல்ல என்பதை அறியலாம்.

சிலர் தங்கள் பாலியலைக் குறித்து ஒரு முடிவுக்கு வரும் போது குழப்பம் அடையகூடும். அப்படிப்பட்ட சிலருக்கு இது தற்காலிகமான அடையாளமாக இருக்கலாம். ஆனால் பலருக்கு இருபாலீர்ப்பு என்பது வாழ்நாள் முழுவதும் நிலைபெற்று இருக்கும் ஈர்ப்பு. ஒரு சிலருக்கு இருபாலீர்ப்பு தற்காலிக ஈர்ப்பாக இருப்பதால், “இருபாலீர்ப்பு” என்பது உண்மையற்றதாக ஆகிவிடாது. பலர் தங்கள் பாலீர்ப்பு காலத்துடன் வேறுப்டுவதாகக் கூறுகிறர்கள். சிலருக்கு சிறு மாற்றமாக இருக்கலாம், சிலருக்கு பெரிய வாழ்க்கை முறை மாற்றமாக இருக்கும். எப்படி இருப்பினும் இதை தவறு என்றோ இத்தகைய மாற்றங்களை குழப்பம் என்றோ கூறுவதற்கில்லை. வாழ்க்கை என்பது மாற்றம் நிறைந்த நீண்ட ஒன்று. நாம் எப்போதும் ஒரே போல் இருப்பதில்லை. தற்பாலாருடன் உறவு கொள்ளும் எங்களில் சிலர் தங்களை ஒருபாலீர்பாளர் (நங்கை(Lesbian),நம்பி(Gay)) என்று அடையாளம் கூறிக்கொள்வார்கள். இது அவர்களுக்கு அதிகம் ஏற்படும் பாலீர்ப்பின் காரணமாகச் சொல்லப்படும் அடையாளம் – அவ்வளவே.

இருபாலீர்பாளர்கள் தாங்கள் “ஒருபாலீர்ப்பாளர்கள்” என்று சொல்லிக் கொள்ள விரும்பாதவர்கள் / அல்லது மறுப்பவர்கள் தானே?

சில ஒருபாலீர்பாளர்களுக்கு (நங்கை (Lesbian) ,நம்பி (Gay)) ஆரம்ப காலத்தில் தம் பாலீர்பை ஏற்றுக்கொள்ள முடியாததால் இருபாலீர்ப்பு ஒரு வகை “இயற்கை” தன்மையை அளிப்பதாகக் கருதுவது உண்மை,இதனால் சிலர் தங்களை இருபாலீர்ப்பாளர்கள் என்று கூறிக்கொள்ளலாம். இதை வைத்து எல்லாரும் கையாளும் ஒரு தற்காலிக வழி என்று இருபாலீர்பை கருதக்கூடாது. ஒருபாலீர்ப்பாளராக தம்மை சமூகத்தில் அடையாளப்படுத்திக் கொள்வது எளிதல்ல என்றாலும், ஒருவர் தம்மை இருபாலீர்ப்பாளராக அடையாளப் படுத்துவதும் எளிதல்ல என்பதையும் மனதில் கொள்ளவேண்டும். ஒரு பக்கம் எதிர்பாலீர்ப்புள்ள நண்பர்களின் எதிர்பார்ப்புகள், மறுபக்கம் ஒருபாலீர்ப்பு சமூகத்தின் உள்ளுணர்வை மறைத்து, ஒருபாலீர்ப்பை மறுப்பதாக குற்றச்சாட்டுகள். அதனால் இருபாலீர்ப்பாளராக வெளியே வருவது எளிதல்ல, அடையாளப்படுத்திக் கொள்வதும் எளிதல்ல, அது ஒரு தற்காலிகமான தப்பித்துக் கொள்ளும் வழியும் அல்ல.

இருபாலீர்பாளர்கள் இருபாலாருடன் ஒரே அளவு ஈர்ப்பு உள்ளவர்களா?

சில இருபாலீர்பாளர்கள் ஒரு பாலாரிடம் அதிக ஈர்ப்பு இருப்பவர்களாக இருப்பார்கள். சிலருக்கு அப்படி இல்லாமலும் இருக்கக் கூடும். பலருக்கு பால் என்ற பாகுபாட்டைக் கடந்து அவர்களிடம் உள்ள தன்மைகள், குணங்கள், போன்ற பலவற்றால் ஈர்ப்பு ஏற்படுவதும் உண்டு.

இருபாலீர்ப்பாளர்களாக இருக்க வேண்டும் என்றால் கண்டிப்பாக இரண்டு பாலிலிருந்தும் காதலர்கள் இருக்க வேண்டுமா?

கிடையாது. ஈர்ப்பு இருக்கிறது என்பதால் அதை வெளிக்காட்ட வேண்டும் என்ற அவசியம் இல்லை. எப்படி எதிர்பாலீர்ப்பாளர்களும் , தன்பாலீர்ப்பாளர்களும் தங்களுக்கு பலர் மேல் ஈர்ப்பு இருந்தாலும் அவை எல்லாவற்றையும் வெளிகாட்டுவதில்லயோ அதை போலதான்.

இருபாலீர்ப்பாளர்களால் ஒருவருடன் மட்டுமே நிலைத்து உறவு கொள்ள முடியுமா?

முடியும். சிலர் அப்படி இருப்பது உண்டு. இப்படி கேட்பது “எதிர் பால் ஈர்பாளர்கள் ஒருவருடன் மட்டுமே உறவு கொள்ள முடியுமா?” என்று கேட்பதற்கு சமம். “ஒருவனுக்கு ஒருத்தி” என்பது சமுதாயத்தால் அங்கீகரிக்கபட்ட விஷயம், அப்படி பார்த்தல் எதிர் பால் ஈர்ப்பு கூட சமுதாயத்தால் அங்கீகரிக்கபட்டது தான். எப்படி வாழ வேண்டும் என்பது பாலீர்பையும் தாண்டி ஒரு தனி மனிதனின் முடிவு. இதற்கும் பாலீர்புக்கும் சம்மந்தம் இல்லை

ஒருவருடன் மட்டுமே வாழ்ந்தால் அவர்களை இருபாலீர்ப்பாளர்கள் என்று அழைப்பது எப்படி சரியாகும்?

இருபாலீர்ப்பாளர்கள் ஒருவருடன் வாழ முடிவுசெய்வது எந்த பாலை தேர்ந்தெடுக்கிறார்கள் அல்லது எந்த பால் ஈர்ப்பை ( தன், எதிர் ) தேர்ந்தெடுக்கிறார்கள் என்று முடிவு செய்யும் விஷயம் அல்ல.
 அவர்கள் எந்த நபருடன் வாழ்வது என்பது பற்றிய முடிவை எடுக்கிறார்கள். இருந்தாலும் அவர்கள் இருபாலீர்ப்பாளர்கள் என்று அங்கீகரிப்பது மிகவும் முக்கியம்.

அப்படிப் பார்த்தால் நாம் எல்லோருமே இருபாலீர்ப்பாளர்கள் தானே?

அப்படி சொல்ல முடியாது. 
இருபாலீர்ப்பாளர் என்றால் ஆண் , பெண் இருவரின் மீதும் பாலீர்ப்பு ஏறபடக்கூடிய ஒருவர் (ஒரே சமயத்தில் அல்ல). சிலர் அதை வெளி காட்டி இரண்டு பாலினர் உடன் உறவுகொள்வதுண்டு, சிலர் இதை தம்மை அடையாளம் காட்ட மட்டும் பயன்படுத்துவது உண்டு. நம் எல்லோருக்கும் இரண்டு பால் மீதும் ஈர்ப்பு ஏற்பட சாத்தியம் உண்டு அதனால் எல்லாரும் இருபாலீர்ப்பாளர்கள் என்று சொல்வது ஏற்க முடியாத வாதம். சிலர் தம்மை தன்/எதிர் பாலீர்ப்பாளர்கள் என்று அறிவித்து கொண்டால், நீங்கள் “இல்லை.. நாம் அனைவரும் இருபாலீர்ப்பாளர்கள்” என்று வாதிடுவது, அவர்களின் சுய அடையாளத்தை நிராகரிபதருக்கு சமம். மேலும் இருபாலீர்ப்பு என்பது தன்/எதிர் பாலீர்ப்பை விட சிறந்தது என்பதும், இருபாலீர்ப்பாளர்கள் மனமுதிர்ச்சி பெற்றவர்கள், தங்கள் உணர்வுகளை நன்கு அறிந்து ஏற்றுகொள்பவர்கள் என்பதும் சரியல்ல. தனி மனிதன் தான் யார், தனக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அதை செய்ய வேண்டும். பாலீர்ப்பு பன்மைபட்டது என்ற உண்மையை நாம் எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இருபாலீர்ப்பாளர்களின் பிரச்சனைகள் தன்பாலீர்ப்பாளர்களின் பிரச்சினைகளில் இருந்து எப்படி வித்தியாசபடும்? நாம் எல்லோரின் பிரச்சினைகளும் சமுகத்திற்கு இருக்கும் “மாறு பட்ட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளம் கொண்டவர்களின் மீதான வெறுப்பு” (LGBT Phobia or Homophobia) தானே காரணம்? இதில் என்ன வித்தியாசம்?

“மாறு பட்ட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளம் கொண்டவர்களின் மீதான வெறுப்பு” ஒரு பொதுவான பிரச்சனையாக இருந்தாலும், எங்களுக்கு மேலும் சில பிரச்சனைகளையும் இருக்கிறது. குறிப்பாக சொல்லவேண்டும் என்றால், ஒருபாலீர்ப்பாளர்கள் எங்கள் மேல் காட்டும் வெறுப்பு. 
நாங்கள் மிகவும் நேசிக்கும் எங்கள் காதலர்கள் எங்களுக்கு இருக்கும் இந்த இருபாலீர்பை புரிந்துகொள்ள முடியாமல் போவதும், ஒருவருடன் வாழ்வதால் “இருபாலீர்ப்பாளர்கள்” என்று அங்கீகாரம் நிராகரிக்கபடுவதும், மற்றும் இருபாலீர்பை சுற்றி இருக்கும் கட்டுகதைகளை சந்திப்பதும் எங்களுக்கே உரிய பிரச்சனைகள்.

ஒருபாலீர்புள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் ஏன் இருபாலீர்ப்பாளர்களை வேற்றுமைப்படுத்தி ஒதுக்குகிறார்கள்?

ஒருபாலீர்ப்பாளர்கள் சமூகத்தால் ஒதுக்கப்படுவதால், அதன் அனுபவத்தால் மற்றவர்களை அவர்கள் ஒதுக்க மாட்டார்கள் என்று நாம் எதிர்பார்க்கிறோம், ஆனால் உண்மை அதுவல்ல. அவர்கள் எங்களை வேற்றுமை படுத்துவதற்கு பல காரணங்கள் உண்டு.
நாங்கள் எங்களை “மறைக்கிறோம்” என்று அவர்கள் கருதுவது இதற்கு ஒரு காரணம். எங்களில் சிலர் சில சமயம் “எதிர்பாலீர்ப்பாளாக” அலுவலகத்திலோ, சமூகத்திலோ தங்களை காட்டிக்கொள்வதும் அதனால் பயனடைவதும், பிரச்சனைகளை தவிர்ப்பதும் ஒருபாலீர்ப்பாளர்களை கோபப்படுத்துகிறது. மேலும் இதனால் நாங்கள் ஒருபாலீர்ப்பாளர்களின் போராட்டங்களை வலிமை இழக்க செய்கிறோம் என்றும் நாங்கள் “நம்பிக்கை துரோகிகள்” என்றும் கருதப்படுகிறோம். ஆனால் உண்மை அதுவல்ல, எல்லோருக்கும் பால் சுதந்திரம் வேண்டும் என்பது தான் எங்கள் வாதமும். ஒருபாலீர்ப்பாளர்களில் சிலர் சமயம் எதிர் பாலினரிடம் உறவு கொள்வது உண்டு. அப்படி நடந்தால் அவர்களால் இதை பற்றி மற்ற ஒருபாலீர்ப்பாளர்களிடம் சொல்ல முடிவதில்லை. இதனால் தங்களின் மேல் ஏற்படும் அழுத்தத்தாலும் அவர்கள் இருபாலீர்பை கண்டு அஞ்சுவதுண்டு. மேலும் அறியாமையால் ஏற்படும் பயமும், மீடியா சித்தரிப்பும் ஒரு காரணம். சமீபகாலமாக இருபாலீர்ப்பாளர்கள் மேல் இவர்கள் காட்டும் வேற்றுமை குறைந்துகொண்டு வருகிறது என்பது ஒரு சந்தோஷமான விஷயம்.

இரண்டு பாலிற்கும் இடையே தாவிக்கொண்டிருக்காமல் ஒரு பாலை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டியதுதானே?

எங்களில் சிலர் முயற்சி செய்திருக்கிறோம். ஆனால் ஏன் நாங்கள் அப்படி செய்ய வேண்டும்? ஒரு பாலிர்க்காக மறுபால் மேல் இருக்கும் ஈர்ப்பை நிராகரிப்பது எங்களை வேதனை படுத்துகிறது. நீங்கள் அப்பாவித்தனமாக இந்த கேள்வியை கேட்டால் “நீங்கள் எங்களை எங்களாக இருக்க விடாமல், எங்களால் ஒதுக்க முடியாத உணர்ச்சிகளை ஒதுக்க வேண்டும் என்று எதிர்பார்கிறீர்கள்” என்று அர்த்தம். எல்லாம் புரிந்தே நீங்கள் இந்த கேள்வியை கேட்டால் அது கண்டிக்கத்தக்கது. ஒரு மேல் ஜாதிக்காரன் , இரண்டு ஜாதிகளில் ஒன்றை தேர்ந்தெடுக்க சொல்வதற்கு சமம்.

நான் இருபாலீர்ப்புடயவன்/வள் என்று தெரிந்துகொண்டேன் – என் குடும்பத்தாரிடம் இதை சொல்லவா?

உங்கள் சூழ்நிலை என்ன என்று பாருங்கள். சொன்னால் என்ன பிரச்னை, சொல்ல விட்டால் என்ன பிரச்னை என்று யோசியுங்கள். இரண்டிலும் பிரச்சனைகள் இருக்கலாம். அவர்கள் உங்களை ஏற்று கொள்ளலாம் அல்லது நிராகரிக்கலாம். சொன்னால் உங்கள் மனபாரம் குறையலாம் சொல்லாவிடில் நீங்கள் பிரச்சனை இல்லாமல் இருக்கலாம்.

நம்மில் பலர் தாங்கள் இந்த குழப்பத்தை எப்படி கையாண்டார்கள் என்றும், தாங்கள் வெளியே வந்த கதைகளையும் (Coming out stories) பகிர்ந்து கொள்வதுண்டு. அது உங்களுக்கு பயன்படலாம். இது போன்ற கதைகள் நம் சந்திப்புகளில் அடிக்கடி பேசப்படும் விஷயம், நம்மை ஒருவருக்கொருவர் அருகில் கொண்டுவரும் விஷயமும் கூட. ஆனால் கடைசியில் இது உங்கள் முடிவு. நீங்கள் எடுக்கவேண்டிய முடிவு. உங்களுக்கு வேண்டிய துணிவும், ஆதரவும், ஊக்கமும் மற்ற நண்பர்களிடமிருந்து கிடைக்கலாம், முடிவு உங்கள் கையில். வாழ்த்துக்கள்.

இருபாலீர்பாளர்களுக்கு என்று ஏதேனும் சமூக அமைப்புக்கள் உள்ளதா?
இதோ நீங்கள் அது போன்ற ஒரு சமூக அமைப்பிடம் தான் பேசி கொண்டிருகிறீர்கள் (MP/Orinam.net).இது போன்ற பல அமைப்புக்கள் உள்ளன. அதன் அங்கத்தினர்கள் உங்களின் நண்பர்களாய் தங்கள் வாழ்கை, கடந்த காலம், நிகழ் காலம், கதைகள் இவை எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்வதுண்டு. மேலும் விவரங்களுக்கு இந்த தளத்தின் “Groups and Lists” பக்கத்தை பார்க்கவும்

இது போன்ற அமைப்புகளில் நாம் பல விஷயங்களை பற்றி பேசுவதுண்டு. இரு பால் மீதும் நமக்கிருக்கும் ஈர்ப்பை கேவலப்படுத்தகூடாது என்றும் , அதை குறைத்து மதிப்பிட கூடாது என்றும் நாம் போராடிகொண்டிருகிறோம். தன் மற்றும் எதிர்பாலீர்பாளர்கள் நம்மையும் மதிக்க வேண்டும், அங்கீகரிக்க வேண்டும் என்று வலியுறுதிகிறோம். பிள்ளை பேரு போன்ற குடும்ப விஷயங்கள் முதல் எய்டஸ் போன்ற உலக விஷயம் வரை பேசுகிறோம். உலகத்திலிருந்து நாம் எப்படி வித்தியாசபடுகிறோம் என்றும் அதனால் நாம் எதிர்கொள்ளும் அனுபவங்களையும் பகிர்ந்துகொள்கிறோம்.

இருபாலீர்ப்பாளர்கள் பற்றி ஏதேனும் புத்தகங்கள்/கதாபாத்திரங்கள் பற்றி தெரியுமா?

கீழே பார்க்கவும். இது தவிர உங்களுக்கு ஏதேனும் புத்தகங்கள் தெரிந்தால் எங்களுக்கு தெரிவிக்கவும்.

கின்சி அளவுகோல் என்றால் என்ன?

கின்சி அளவுகோல் பற்றி அறிய இங்கே அழுத்தவும்

இணையத்தில் வேறேதேனும் தகவல் தளங்கள் உள்ளனவா?

இணையத்தில் தகவல்தளங்கள் பல உள்ளன. சில தளங்கள்

BiResource.org: http://www.biresource.org/resources.html
Queer
Resource Directory:http://www.qrd.org/
bi.org
Links Central:http://bi.org/db/
bisexual.org
resources:http://www.bisexual.org/pages/3aresources-page.asp
soc.bi homepage at http://serf.org/~jon/soc.bi/


மூலம்:  Soc.bi
(c) ஓரினம். எங்கள் காப்புரிமை கொள்கையை படிக்கவும்

This post is also available in: English