Resources for பணியிடம்

உங்கள் பணியிடம் எல்லோரையும் வரவேற்கும் ஒரு ஆரோகியமான இடமா?

உங்கள் நண்பரோ நண்பியோ அல்லது சகபணியாளரோ தாங்கள் மாறுபட்ட பாலீர்ப்பு அல்லது பாலடையாளம் கொண்டவர்கள் (LGBT) என்கிற விஷயத்தை உங்களிடம் பகிர்ந்துகொண்டால் நீங்கள் அவர்களிடம் சொல்லக்கூடாத சில விஷயங்கள்

#1 ”ஹ்ம்ம். எனக்கு எப்பவும் ஒரு சந்தேகம், நீ அப்படி தானோன்னு”

பெரும்பாலும் எல்லோரும் சொல்லும் ஒரு பதிலானாலும், இது மிகவும் கடுமையான ஒரு பதில். மேலும் மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்களை (LGBT) வகைமாதிரிப்படுத்தும் (Stereotyping) ஒரு பதில்.

#2 ”அப்படியா.. பாவம், எனக்கு கேக்கவே கஷ்டமா இருக்கு”

இதில் நீங்கள் கஷ்டப்படவோ ,வருத்தப்படவோ, அனுதாபப்படவோ எதுவுமில்லை. இப்படி சொல்வதன் மூலம் நீங்கள் அவர்களின் பாலீர்ப்பு அல்லது பாலடையாளத்தை ஒரு குறையாக கருதுகிறீர்கள் என்று அர்த்தமாகிறது. உங்கள் நண்பர் இடது கை பழக்கம் உள்ளவராக இருந்தால் அதை நீங்கள் ஒரு குறையாக பார்த்து அனுதாபப்படுவீர்களா? அதை போலத்தான் இதுவும்.

#3 ”என்கிட்ட ஏன் இதை சொல்ற?”

பாலீர்ப்பு அல்லது பாலடையாளம் என்பது உங்கள் நண்பரின் ஒரு பகுதி. அதை அலுவலகத்திலும் நண்பர்களிடமும் மறைப்பதும், ஒளிப்பதும் எளிதான காரியமில்லை. அப்படி பட்ட இரட்டை வாழ்வு தேவையும் இல்லை. உங்களிடம் அவர் மனம்திறந்து பேசும்பொழுது இப்படி கேள்வி கேட்டபது சரியல்ல.

#4 ”இதெல்லாம் பேசற அளவுக்கு நாம நெருக்கமான பிரெண்ட்ஸ் இல்லையே..”

உங்களுக்கு உங்கள் நண்பரின் அந்தரங்க விஷயங்களை தெரிந்துகொள்ள விருப்பமில்லை என்றால் சுலபமாக “என்னிடம் இந்த விஷயத்தை பகிர்ந்துகொண்டதற்கு நன்றி” என்று முடித்துவிடலாம்.

#5 “ஆமாம், உங்க ரெண்டு பேர்ல யாரு ஆம்பளை, யாரு பொம்பளை?”

உங்களுக்கு தெரிந்ததெல்லாம் ஆண்-பெண் உறவு என்பதற்காக, எல்லா உறவுகளும் அப்படி இருக்கவேண்டும் என்பது அவசியமல்ல. ஒரே பால் தம்பதிகளில், இருவரும் ஆண்-ஆண், அல்லது பெண்-பெண் என்பதால் ஒருவர் ஆணாகவும், மற்றொருவர் பெண்ணாகவும் நடக்கவேண்டியது தேவையல்ல. இது போன்ற கேள்விகள் அநாகரீகமானவை.

#6 ”நீ படுக்கைல என்ன பண்ணுவ?”

உங்கள் நண்பரின் பாலீர்ப்பு அல்லது பாலடையாளம் – இதை பற்றி புரிந்துகொள்கிறோம் என்ற எண்ணத்தில் நீங்கள் கேட்டாலும், ஒருவரின் படுக்கையறை விஷயங்களை பற்றி கேட்பது மிகவும் அநாகரியமான செயல். அலுவலகத்தில் இப்படி பேசினால் உங்கள் மேல் உங்கள் நண்பர் புகார் கூட செய்யலாம்.

#7 ”நீ எந்த பாத்ரூம் யூஸ் பண்ணுவ?”

#8 சரி, நீ இப்போ ஆணா? பெண்ணா?

#9 “நீ அலியா ?”

முக்கியமாக திருனரிடம் (திருநங்கை மற்றும் திருநம்பிகளிடம் ) இந்த கேள்வியை கேட்பது மிகவும் அநாகரீகமான செயல். தேவையற்றதும் கூட. “அலி”,”அஜக்கு” ,”ஒன்போது” போன்ற சொற்களை உபயோகப்படுத்துவது மிகவும் ரசனைக்குறைவான, மரியாதைக்குறைவான செயல். இவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும். “திருநங்கை” (Male To Female Transgender) , “திருநம்பி” (Female to Male Transgender) அல்லது “திருனர்” (Transgender) என்று அழைக்கலாம்.


மூலம்: “கே லெஸ்பியன் அண்ட் ஸ்ட்ரைட் எடுகேஷன் நெட்வொர்க்”, “அவுட் அண்ட் ஈகுவல் வொர்க்பலேஸ் ப்ராஜெக்ட்” மற்றும் “பிரைஸ்வாட்டர் கூபர்ஸ்” கம்பனியை சேர்ந்த ஸ்டபனி பீல், ஆகியோர் குறிப்புகளை தர, டரில் ஹன்னா அவற்றை தொகுத்து வழங்கியது. மூலம் : டைவர்சிடிஇன்க் இணையத்தளம்
(c) ஓரினம். எங்கள் காப்புரிமை கொள்கையை படிக்கவும்

This post is also available in: English