Our Voices The Orinam Blog

நாடாளுமன்றத்தை நோக்கி …

தமிழ்நாடு வானவில் கூட்டணி, சங்கமா மற்றும் பல்வேறு தமிழ் முற்போக்கு அமைப்புகளின் ஆதரவுடன்  சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் செப்.13, 2014 அன்று நிறங்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், எங்களின் கோரிக்கையை ஆதரித்து தீக்கதிர் ஆசிரியர் குமரேசன்  அவர்கள்  பேசியதின் சுருக்கம். குமரேசன் அவர்கள் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்க உறுப்பினர், மற்றும் பொருப்பாசிரியர் தீக்கதிர் (சென்னை இதழ்) – இந்தியா கம்யூனிஸ்ட் கட்சியின்-மார்க்சிஸ்ட் ( சிபிஐ: CPI-M) அதிகாரபூர்வ செய்தித்தாள்.


theekkathir_kumaresan

ஓர் பாலின உறவைக் குற்றச்செயலாக அறிவிக்கும் 377வது சட்டம் செல்லாது என்று தில்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பு செல்லாது என்று உச்சநீதிமன்றம் கூறியது. அதே நேரத்தில், நாடாளுமன்றம் இந்தச் சட்டத்தை விலக்கிக்கொள்ளலாம் என்றும் உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது. ஆகவே, அந்தச் சட்டத்தை நீக்க வேண்டும் என்ற உங்கள் முழக்கம் இப்போது நாடாளுமன்றத்தை நோக்கியே எழ வேண்டும்.

ஆனால் இன்றைய நாடாளுமன்றம் அவ்வளவு எளிதில் உங்கள் கோரிக்கையை ஏற்று சட்டத்திருத்தம் கொண்டுவந்துவிடும் என்று எதிர்பார்க்க வேண்டாம். உங்கள் போராட்டம் அத்தனை எளிதாக வெற்றிபெற்றுவிடாது. மக்களின் பெருந்திரள் போராட்டங்களையே கூட அரசு பொருட்படுத்துவதில்லை.

நாட்டின் அரசமைப்பு சாசனத்தை உருவாக்கிய குழுவின் தலைவரான டாக்டர் அம்பேத்கர், சட்ட அமைச்சராக இருந்தபோது, பெண்களுக்கு சொத்துரிமை அளிக்கும் சட்டத்தைக் கொண்டுவந்தார். அதனால் நாட்டின் பாரம்பரியமும் கலாச்சாரமும் கெட்டுவிடும் என்று கூறி அந்தச் சட்டத்தைப் பலரும் எதிர்த்தபோது அவர் தன் அமைச்சர் பதவியிலிருந்து விலகத் தயாரானார். உங்கள் பிரச்சனையில், அத்தகைய லட்சியத்தையும் உறுதியையும் இன்றைய ஆட்சியாளர்களிடமும் அவர்களது கூட்டாளிகளிடமும் எதிர்பார்க்க முடியாது.

ஆகவே, இன்னும் பல மடங்கு வலுவான, ஒன்றுபட்ட போராட்டங்களை நடத்துகிற உறுதியை நீங்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும். உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து வழக்குத் தொடுத்தவர் ஒரு பாஜக எம்.பி. அவருக்கு ஆதரவாக வந்தது ஒரு இந்து அமைப்பு. இந்த வழக்கில் தங்களையும் இணைத்துக்கொண்டவை ஒரு இஸ்லாமிய அமைப்பு, ஒரு கிறுஸ்துவ அமைப்பு… ஆக, கடவுளை உருண்டுகொண்டே கும்பிடுகிற, மண்டிக்கால் போட்டு வணங்குகிற என எந்த மதமானாலும் அடிப்படை மனித உரிமைகளுக்கு எதிரிதான் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

இயற்கைக்கு மாறாக உறவுகொள்கிறவர்களை ஏன் ஆதரிக்கிறீர்கள் என்று கேட்கிறார்கள். ஆனால், ஆணும் பெண்ணுமாக வாழ்கிறவர்களில் ஆணிடம், இனி நீ இன்னொரு ஆணோடு வாழ்க்கை நடத்து என்று சொன்னால் அவனால் ஏற்க முடியாது. ஏனென்றால் பெண்ணோடு வாழ்வதே அவர்களது இயற்கை. அதே போல், ஆணோடு வாழ்கிற பெண்ணிடம், இனி நீ இன்னொரு பெண்ணோடு வாழவேண்டும் என்று சொன்னால் அவளால் சகித்துக்கொள்ள முடியாது. அவர்களுடைய இயற்கை அது.

அப்படித்தான் தன் பாலினத்தைச் சேர்ந்தவர்களோடு இணைந்து வாழ்வதும் ஒரு இயற்கைதான். அதைப் புரிந்துகொள்ள மறுப்பதில்தான் சிக்கல் இருக்கிறது. பொதுச் சமுதாயத்தில் அந்தப் புரிதலை ஏற்படுத்துவதற்காகவும் தொடர்ந்து இந்தக் கருத்துகளைச் சொல்லிக்கொண்டிருப்போம்.

Comments

1 Comment. Add your own »

Comment Guidelines: Your email address will not displayed. Your comment may be held up for moderation. Language that is deemed unsuitable for decent discussion will be expunged. Avoid pasting raw URLs or large quotations from elsewhere. The opinions expressed here are those of the respective individuals. We reserve the right to take down irrelevant and improper comments without any notice.

  1. Hmm….a considerable recognition from communist wing….I agree with him…v have to increase d understanding about LGBT people among public..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *