எங்கள் குரல்ஓரினம் வலைப்பதிவு

வலைப்பதிவு சுவடுகள்

விஜய் வெளியே வந்த கதை

பகுதி [1] – சகோதரியிடம் வெளியே வந்த கதை:

என் சகோதரியிடம் நான் இணையத்தில் யாஹூ மெசஞ்சர் மூலமாக வெளியே வந்தேன்.

முதலில் ஸ்ரீயின் வெளியே வந்த கதையையும், பிரவீனின் அம்மாவின் கடிதத்தையும் என் சகோதரிக்கு கணினி வழியாக அனுப்பினேன். என்ன நடக்கிறது பாப்போம் என்பது என் எண்ணம். நான் உறக்க படித்து காட்ட , நீ தொடர்ந்து கொண்டே வா என்றேன் அவளிடம். மெதுவாக இரண்டு கடிதங்களையும் படிக்க ஆரம்பித்தேன். ” தன் மகன் தன் பால் ஈர்ப்புள்ளவன் என்று அறிந்த ஒரு தாயின் கதை..” என்று நான் படிக்க அவள் மிரண்டு போவாள் என்று நினைத்தேன் , நல்லவேளையாக அப்படி எதுவும் நடக்கவில்லை. பொறுமையாக கேட்டாள், நான் படித்து முடித்தேன்.

நான்: இந்த இரண்டு கடிதங்களிலும் பொதுவான விஷயம் என்ன ?
அவள்: இரண்டு பெற்றோர்களும் பிள்ளகளை நன்றாக புரிந்துகொண்டிருகிறார்கள், அன்பு செலுத்துகிறார்கள்
நான்: அப்புறம் ?
அவள்: இரண்டு மகன்களும் தன் பால் ஈர்ப்பு உள்ளவர்கள் ….
நான்: சரி. நான் ஏன் இதை உன்னிடம் பகிர்ந்துகொள்கிறேன் தெரியுமா ?

அவள்: தெரியலை.. சொல்லு
நான்: தீபு, நானும் தன் பால் ஈர்ப்பு உள்ளவன்.
அவள்: விளையாடாதே…
நான்: இது விளையாடக்கூடிய விஷயமா? நான் நிஜமாகத்தான் சொல்கிறேன்

இதை தொடர்ந்து அவள் பல கேள்விகள் கேட்டாள். “உனக்கு எப்பொழுது இது தெரியும்”, ” அது எப்படி ஒரு ஆணுக்கும் ஆணுக்கும் இடையே ஈர்ப்பு சாத்தியம்” என்று பல. நான் அவளுக்கு www.orinam.net தளம் மற்றும் இணையத்தில் இருக்கும் மற்ற தகவல்தளங்கள் போன்றவற்றை பயன்படுத்தி என்னால் முடிந்தவரை விளக்கினேன், அவளுக்கும் ஒரளவிற்கு புரிந்தது. கிட்டத்தட்ட ஒரு மணிநேர கேள்வி-பதிலுக்கு பிறகு கேட்டேன்
“இப்பொழுது நீ என்னை பற்றி என்ன நினைக்கிறாய்?”

அவளது பதில் – ” எனக்கு இந்த விஷயத்தை பற்றி நிறைய தெரியாது. எனக்கு தெரிந்த வரைக்கும் இந்த ‘தன் பால் ஈர்ப்பு’ என்பது இயற்கையில் ஏற்படுகிற ஒரு விஷயம், அதற்கு எதிராக நாம் எதுவும் செய்யமுடியாது. நான் என்றும் உனக்கு ஆதரவாக இருப்பேன். அம்மா அப்பா இதை எப்படி எடுத்துகொள்வார்கள் என்று எனக்கு தெரியாது. எனக்கே இது அதிர்ச்சியாகதான் இருக்கிறது ஆனாலும் நான் இதை ஏற்றுகொள்வேன் , என்றும் உன்பக்கம் இருப்பேன், கவலைப்படாதே”

நான் ஆச்சரியப்பட்டு போனேன். இவ்வளவு பக்குவத்தோடும் கருணையோடும் என் தங்கை இதை கையாளுவாள் என்று நான் எதிர்பார்த்திருக்கவே இல்லை. இவ்வளவு நல்ல சகோதரி கிடைத்தது என் பாக்கியம்.

என் அப்பா அப்பொழுது வெளியூரில் இருந்ததால்.. என் அம்மாவிடம் அன்றே சொல்லியாக வேண்டும் என்று என் சகோதரியிடம் சொன்னேன். அம்மா ஒரு கல்யாண வரவேற்பு நிகழ்ச்சிக்காக வெளியே சென்றிருப்பதாகவும், அம்மா வந்தவுடன் என்னை இணையம் மூலமாக அழைக்கிறேன் என்றும் சொன்னாள் அவள்.

பகுதி [2] – அம்மாவிடம் வெளியே வந்த கதை:

என் அம்மா வீடு திரும்பிய பொழுது மணி இரவு 10:30 இருக்கும். இணையம் மூலமாக என்னுடன் பேசினாள் அம்மா. கல்யாண வீட்டில் நேரம் ஆகிவிட்டாது என்றவள், நான் எதோ பேசவேண்டும் என்று சொன்னேனாமே என்ன அது என்று கேட்டாள். நான் என் சகோதரியை அந்த இரண்டு கடிதங்களையும் அம்மாவிடம் காண்பிக்க சொன்னேன். அம்மாவும் அதை படித்தாள்.

பின்பு கேட்டாள் ” எதற்காக என்னை இதை படிக்க சொன்னாய்?”
நான் – ” அம்மா… இது எதை பற்றியது என்று உனக்கு புரிகிறதா?”
“புரிகிறது. நான் இதை பற்றி “வாழ்க வளமுடன்” குழுவில் கேள்விபட்டிருக்கிறேன் (என் அம்மா அதில் உறுப்பினர்) . இப்படி இருப்பவர்களின் வாழ்கை எவ்வளவு கடினம் என்று எனக்கு தெரியும். எங்கள் குழுவில் இருக்கும் குருமார்கள் கூட அவர்களுக்கு இருக்கும் பயத்தை போக்க தியான முறைகளை சொல்லித்தருவார்கள். சமூகம் இதை
ஏற்றுகொள்கிறதோ இல்லையோ, அவர்கள் தாங்களாகவே வாழ உதவுவார்கள். இதில் எந்த தப்பும் இல்லை”

என் மனம் குதூகலித்தது. அம்மாவிற்கு இதை பற்றி ஒன்றுமே தெரிந்திருக்காது என்று நான் நினைத்தேன். அம்மா தொடர்ந்தாள்.
“எதற்காக என்னை இதை படிக்க சொன்னாய்.. உனக்கு தெரிந்து யாரவது இப்படி இருக்கிறார்களா … எங்கள் குழு மூலம் அவர்களுக்கு நான் உதவவா”
“அம்மா…அது வேறுயாருமல்ல… நான் தான் ”
அம்மாவுக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது அது.
“நீ இப்பொழுதுதான் இப்படி உணர்கிறாயா ?”
“இல்லை… நான் சின்ன வயதிலிருந்தே இப்படி தான். ஆனால் எனக்கு யாரோடும் இதை பற்றி பேச தைரியம் வரவில்லை… சமீபமாக தான் இணையத்தில் இருக்கும் மூவன்பிக் (எம்.பி) குழுவை பற்றி தெரியவந்தது… அது எங்களை போன்றவர்களுக்கான ஆதரவு குழு… அதில் சேர்ந்த பிறகுதான் எனக்கு என்னை ஏற்றுகொள்ளும் அளவிற்கு விழிப்புணர்வும், தைரியமும் வந்தது.. என்னை மன்னித்து விடு அம்மா ” என்றேன்.

“விஜய்… என்னவானாலும் நீ என் மகன் …என் கண்ணே… நான் எப்பொழுதும் உனக்கு ஆதரவாக இருப்பேன். நீ என்ன முடிவெடுத்தாலும் உனக்கு துணையாக இருப்பேன். இருந்தாலும் என் மன நிம்மதிக்காக, நான் இங்கு சில மருத்துவர்களை தொடர்பு கொள்கிறேன் , இதை மாற்ற முடியுமா என்று கேட்கிறேன். அப்படி முடியாது என்றாலும் நீ என் மகன்.. அதில் எந்த மாற்றமும் இல்லை…” என்றவள் “நீ ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்ள முடியுமா” என்று கேட்டாள்.

“இல்லை அம்மா… அது கண்டிப்பாக முடியாது…நியாயமும் இல்லை” என்றேன்

” சரி… என்னால் உடனடியாக இதை ஜீரணிக்க முடியவில்லை. நாம் வாழும் பிற்போக்கான இந்த சமுதாயம் என்ன சொல்லும்… உனக்கு ஏன் கல்யாணம் செய்யவில்லை என்று ஊர் கேள்வி கேட்குமே..அதை சமாளிக்க வேண்டும். இதை எல்லாம் விட , உன் அப்பா எப்படி இதை ஏற்றுகொள்ளபோகிறார்?” அம்மாவின் குரலில் கவலை.

“அமாம் அம்மா… அப்பாவிடம் இதை பற்றி சொல்ல நீ தான் உதவி செய்ய வேண்டும்”

“என்னால் முடிந்தவரை  நான் முயற்சி செய்கிறேன். உடனடியாக சொல்ல வேண்டாம். முதலில் நான் இதை பற்றி கோடிட்டு பேசி பார்க்கிறேன் .. உன் அப்பா இதை பற்றி என்ன நினைக்கிறார் என்று பாப்போம். அதை பற்றி எல்லாம் நீ இப்பொழுது கவலைபடாதே.

நீ என்னிடம் சொன்னதினால் உன் மனபாரம் இறங்கி இருக்கும் என்று நம்புகிறேன். என்னிடம் உனக்கு எந்த பயமும் வேண்டாம் கண்ணா… நீ இங்கு இருந்திருந்தால் உன்னை கட்டி அணைத்து முத்தமிட்டிருப்பேன். இந்த தன் பால் ஈர்ப்பை பற்றி எனக்கு ஒன்றும் தெரியாததால் உனக்கு என்ன புத்திமதி சொல்வது என்று தெரியவில்லை…
உனக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அதை செய். நான் உனக்கு என்றும் துணையாக இருப்பேன். உனக்கு எல்லா சுதந்திரமும் உண்டு.நீ முன்னமே சென்னையில் இருக்கும் பொழுதே இதை என்னிடம் சொல்லி இருக்கலாமே… ஏன் சொல்லவில்லை? ”

“அம்மா…. நான் நிராகரிக்கபடுவேனோ என்ற பயம் அம்மா…உனக்கும் அப்பாவிற்கும் இதை கையாளதெரியாமல் என் மேல் கோபப்படுவீர்கள் என்ற பயம் …அதனால் தான் ”
என்று தழுதழுத்தேன் நான்.

“என்ன கண்ணா இது… நாங்கள் என்ன அவ்வளவு மோசமானவர்களா , உன் மேல் கோபப்படுவோமா, நீ எப்படி அப்படி நினைக்கலாம்? சரி விடு..உன் மனதிற்குள்ளே இதை வைத்து பூட்டி புழுங்காமல் இபோழுதாவது என்னிடம் சொன்னாயே. இந்த தன் பால் ஈர்ப்பு உன் தவறல்ல… இது இயற்கையான விஷயம். நீ இப்படிதான் இருக்க வேண்டும் என்று விதி என்றால் யாரால் அதை மாற்றமுடியும்? நாங்கள் எப்பொழுதும் உன்னை நிராகரிக்க மாடோம்… நீ எங்கள் மகன் என்பது எங்களுக்கு பெருமை”

“…….”

“உனது எதிர்காலத்தை நினைத்தால்தான் எனக்கு கவலையாக இருக்கிறது. இப்பொழுது உனக்கு சின்ன வயது, தனியாக வாழமுடியும். பிற்காலத்தில் ஒரு ஆணுடன் உன்னால் சேர்ந்து கடைசி வரை வாழ முடியுமா?.. அவன் உன் மேல் அன்போடும் ஆதரவோடும் இருப்பானா?”

“தெரியாது அம்மா. இப்போதைக்கு என்னால் வாழ்கையை தனியாக சந்திக்கமுடியும்.
என்னால் கண்டிப்பாக ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்ள முடியாது, அதை நீ புரிந்து கொள்ளவேண்டும், நீ எனக்கு பெண் தேட வேண்டாம். எனது இப்போதைய இலக்கு என் வேலை…அதில் தான் என் முழு கவனம்..”

“சரி விஜய்.. நீ ஒரு ஆணோடு வாழவிரும்பினாலும் நான் அதை ஆதரிப்பேன்..
போக போக எனக்கு இன்னமும் தெளிவு வரும். இப்பொழுதுதானே சொல்லி இருக்கிறாய்.. எனக்கு சிறிது காலஅவகாசம் வேண்டும்…இதை ஏற்றுகொள்வதற்கு.
சரி ..நேரம் ஆகிவிட்டாது நீ போய் தூங்கு… உன் மனபாரம் இறங்கியிருக்கும். உன் வாழ்கை நல்ல படியாக அமையும்…கலங்காதே..”

அம்மாவின் வார்த்தைகள் என்னை மெய்சிலிர்க்க செய்தன. புதிய தெம்பும் புத்துணர்ச்சியும் பெற்றது போல் உணர்ந்தேன்… இன்று தான் புதிதாய் பிறந்தவன் போல் உணர்ந்தேன். அம்மா என்னை ஏற்றுகொண்டாள் என்பதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி, வார்த்தைகளால் விவரிக்க முடியாத மனநிறைவு.

This post is also available in: English

விமர்சனம்

3 விமர்சனங்கள். உங்களுடைய விமர்சனத்தை சேர்க்கவும் »

  1. nalam virumbi

    ithai padikkum pothu en kangal kalangukirathu…. ennathan tanpaal irpu ullavarage irunthalum, avar koduthu vaitavar.. valtukkal…. naanum oruvanai migavum nesitten. avan mel naan vaitha anbu pol veru yaarum vaitu iruppargal endru solla mudiyathu. aanal avan ennai verum kattil sugam tarum boga porulaage than paarthane tavira, ennai oru uyirulla jeevanaage matikkevillai…. ennai pol aagamal irukka ivar oru nalla tunaiyai tertedukkattum… en manamaarnthe vaaltukkal……..

  2. இன்ப தமிழ்

    nice.but vijaykku amma&sister amainthathu pola engalukku irunthirunthal,en orina nanbargalidam thayangamal palaguven oru nalla natpudan

  3. alagan

    ethu nadakkuma

இணைப்புக்கள் மற்றும் பின்தொடரல்கள்

பின்தொடரும் முகவரி »

உங்களுடைய விமர்சனத்தை சேர்க்கவும்

விமர்சன கோட்பாடுகள்: உங்கள் விமர்சனம் பரிசீலனைக்கு பிறகு பிரசூரிக்கப்படும். தகாத வார்த்தைகள் இருந்தால் விமர்சனம் நிராகரிக்கப்படும். இணைய சங்கிலிகளை இணைப்பதோ, அடுத்தவர் கருத்துக்களை வெட்டி ஓட்டுவதோ வேண்டாம். விமர்சனங்கள் வாசகர்களுடையது, ஓரினம் பொறுப்பேற்க்க முடியாது. எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் விமர்சனத்தை நீக்கும் உரிமை எங்களுக்கு உண்டு.

தளத்தை பற்றி

ஓரினம்.நெட் தமிழ் மற்றும் ஆங்கில இணையத்தளம். இத்தளம் மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளம் பற்றிய தகவல்தளம். “எங்கள் குரல்”-’ஓரினம்.நெட்’ டின் வலைப்பதிவு. இதில் நீங்கள் உரையாடல்கள், செய்திகள், கருத்துக்கள், கதை, கவிதை, கட்டுரை மற்றும் பல படைப்புகளை காணலாம்.