கவிதை: உண்மையை காட்டினேன் நூறு பேருக்கு
Transcreation by Isaiswasan based on ‘One hundred people hear the truth’ by Guhan M.
உண்மையை காட்டினேன் நூறு பேருக்கு
நெஞ்சின் பாரம் தீர
நுறு பேருக்கு உண்மைதனை
உரைத்தல் தவிர வழியில்லை வேற
இருபத்தேழு ஆண்டு
முகமூடி அணிந்து கொண்டு
பொய்யில் மட்டுமே தோய்ந்து
பிறர்க் கெனவே வாழ்ந்தேன்
சொல்வதா? வேண்டாமா?
சொன்ன நண்பனிடம் யோசனை கேட்டேன்
அய்யய்யோ வேண்டாம் அது மிகக் கொடுமை என்றான்
பொய்யை சுமப்பதை விட, பழி வரினும் ஏற்கத் துணிந்தேன்
–
முதலாம் நபர் ஒரு நெடுங்கால நண்பன்
என்னை முழுதாய் அறிந்ததாய் நினைப்பு
அவனை திக்குமுக்காடச் செய்தது, சொன்ன உண்மையின் வியப்பு
“நெளிவில்லை, சுளிவில்லை, உன் ஆண்மைக்கொரு பங்கமில்லை
ஒளிந்தேன்னை ஏமாற்ற இதுவும் ஒரு விளையட்டா?” என்றான்
என்னை முழுதாய் அறிந்தவன்
இரண்டாம் நபரும் அவனேதான்
நம்ப மறுத்த காரணத்தால் மறுபடியும் முனைந்தேன்
மீண்டும் நம்ப மறுத்தான்
நம்பினானோ அன்றோ அறியேன்
நண்பன் பழைய நண்பனாகவே இருந்தான்
முதல் படி ஏறி விட்டதாச்சு
சற்றே சுமை இறக்கிய சிறு மூச்சு
நூற்றில் ஒன்று போச்சு
மிச்சம் சொல்லி விட்டால் சுதந்திரப் பேரு மூச்சு
–
உற்றோரை விடப் பெற்றோரிடம் சொல்வதே மிகக் கடினம்
சற்றே உரைக்க வாய் திறந்தால் வெற்றிடம் ஆகிடும் உள்ளம்
மற்றோர் மொழி நாடி மடல் எழுத முடிவெடுத்தேன்
செல்லத் தாய் தந்தை சொல்லும் மொழி தமிழ், அதில்
தெள்ள எழுதுகையில் மென்னியை கனத்தது பேனா
மெல்ல துளிர் விட்டு, பின்னால் மேனி கருத்து உதிரும் இலையை
நல்ல விவரிக்கும் சொற்கள் பதினெட்டு, அப்படி
வெள்ள அருவியாய் பொழியும் தமிழுக்கு
எந்தன் நிலை உரைக்க ஒரு வார்த்தை இல்லை அதற்கு
முடித்த கடிதத்தைக் கொடுத்து விட்டு மாய்ந்தேன்
அடுத்த பத்து நாட்கள் எங்கோ பொய் விட்டுத் திரும்பினேன்
படுத்த பாட்டிலெல்லாம் பெற்றோர் பக்கம் நின்று, பாடம்
கொடுத்துப் புரிய வைத்திருந்தான் கூடப் பிறந்தத் தோழன்
சொற்கள் தேடிச் சோர்ந்து போன எனக்கு
சொல்ல விரும்பிய செய்தியேல்லாம் தேவையற்றுப் போனது
“ஒன்றும் விளக்க வேண்டாம் எங்களுக்கு
என்றும் உன்னால் பெருமை குடும்பத்திற்கு
நன்றாய்ச் செய்து வைக்க இளையவனின் மணமிருக்கு” – இது பெற்றோர் வாக்கு
சொல்லாமலே புரிந்து கொண்டார், இதை விடச் சுலபமென்ன
கருமேகம் முழுதாய்க் கலைந்திடவே
தொண்ணூறு விண்மீன் தேடிப் புறப்பட்டேன்
என்னை பற்றிய உண்மை சொல்ல
–
வாரம் ஒருவரிடம் கூறினேன், பின்
நாளுக்கு ஒருவரிடம் கூறினேன், பின்
மணிக்கு ஒருவரிடம் கூறினேன்
அறிந்தவரிட மெல்லாம் கூறினேன்
சிலர் மணமார வாழ்த்தினார்
சிலர் புரியாது விழித்தார்
சிலர் நோயென நொந்தார்
சிலர் ஓடியே போனார்
ஓடியவரைக் கண்டு வாடாமல்
நாடிச் சென்று மேலும் சொன்னேன்
ஓடியதில் சிலர் மீண்டும் வந்தார்
இருபத்தேழு ஆண்டு அணிந்த முகமூடியைக்
கிழித்தேரிந்துக் காட்டினேன் நூறு பேருக்கு, உண்மைச்
சிரிதேழுந்துத் தந்ததெனக்குச் சுதந்திரச் சிறகு