[கவிதை] என் வார்த்தைகள்
என் வார்த்தைகள்
வலுவிழந்த வார்த்தைகள் கொண்டு கோர்த்த கவிதை
காய்ந்த பூமாலை.
செத்த சொற்கள் மண்டி கிடக்கின்றன
புத்தகக் கல்லறையில்.
சொல்லி பயனில்லை
யார் அறிவார் என் நெஞ்சம்?
பிறந்து சாகும் பிஞ்சு குழந்தைகள் போல்
கேட்டும் கேட்கா என் ஒலியிலா வாக்குகள்
பிறர் கேளாச் செவிகள்.
“நான் இது தான், நான் இது தான்.”
என்று பல முறை கூறியும்
வார்த்தைகள் ஏனோ என்னை தான் தாக்கின
உங்களை அடையவில்லை.
உங்கள் முகச்சுழிவில் அருவருப்பு கண்டு
அவமானம் கொண்டு என் வார்த்தைகள்
திசை மாறி போயின.
வலி சுமந்து
கீழே விழுந்த என் வார்த்தைகள்
எப்படி அடையும் உங்களை?
வாக்கு போரில்
என் சொல் அம்புகளை
வீழ்த்தின உங்கள் சொல் அஸ்திரங்கள்.
அங்கீகாரம் வேண்டி வந்த என் சொற்களை
விரட்டி மிரள செய்து
பின்பும் கூண்டிலே அடைத்தீர்கள்
நியாயமா?
Image submitted by author, courtesy OpenAI.