ஒரே பாலினத்தவர் இடையேயான திருமணங்கள்
ஒரு சட்ட ரீதியான பார்வை
சித்தார்த் நாராயண் மற்றும் ப்ரிஷா ஓதேதர்
(அர்விந்த் நாராயண் மற்றும் ஆர்த்தி முண்ட்குர் ஆகியோரின் கலந்தாலோசனையுடன் எழுதப்பட்டது)
தமிழாக்கம்: அனிருத்தன் வாசுதேவன்
(1) இந்தியாவில் தற்பொழுது திருமணம் குறித்து உள்ள சட்டங்கள் (மதம் மற்றும் குழு சார்ந்த சட்டங்களும், மத சார்பற்ற பொதுவான திருமணச் சட்டமும்) திருமணத்தை ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்ணுக்கு இடையேயான உறவாக மட்டுமே திட்டவட்டமாக வரையறுக்கின்றனவா?
இந்தியாவில் தற்பொழுது நடைமுறையில் உள்ள குடும்ப நலச் சட்டத்தின் (Family Law) படி இந்தியக் குடிமக்களுக்கு இரு விதமான திருமணச் சட்டங்களுக்குள் ஒன்றைத் தேர்வு செய்யும் வாய்ப்பு உள்ளது. அவை
(1) அவர்களது மதம் அல்லது குறிப்பிட்ட சமூகத்திற்கென உள்ள திருமணச் சட்டங்கள்; அல்லது
(2) பொதுவாக நடைமுறையில் உள்ள உரிமையியம் (சிவில்) திருமணச் சட்டங்கள்.
திருமணம் குறித்து உள்ள எந்தச் சட்டங்களும் அதனை ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்ணுக்கு இடையிலேயான உறவாக மட்டும் திட்டவட்டமாகவும் வெளிப்படையாகவும் வரையறுக்கவில்லை. எனினும், சட்டத்தின் மொழியில் “மணமகள்,” “மணமகன்,” “கணவன்,” “மனைவி” போன்ற சொற்கள் ஆணையும் பெண்ணையும் குறிப்பதாக புரிந்துகொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள் மற்றும் பௌத்தர்களுக்கான் திருமணங்கள் இந்துத் திருமணச் சட்டம் 1955-இன் கீழ் கருதப்படுகின்றன. இந்தச் சட்டத்தில் திருமணம் என்பது ஒரு ஆண் மற்றும் பெண்ணுக்கும் இடையிலான ஒன்றாக மட்டுமே வெளிப்படையாகக் குறிப்பிடப்படவில்லை. இருப்பினும், அத்தகைய புரிதலே இதனை அடியூன்றி இருப்பதைக் காண முடிகிறது. உதாரணத்திற்கு, இந்துத் திருமணச் சட்டத்தின் பிரிவு 5-ஐப் பார்க்கலாம். இப்பிரிவு “எந்த இரு இந்துக்களுக்கும்” திருமணம் செய்து வைக்கலாம் என்று கூறும் பொழுதும், “திருமணம் நடைபெறும் சமயத்தில் மணமகன் 21 வயதையும், மணமகள் 18 வயதையும் கடந்திருக்க வேண்டும்” என்றும் விதிக்கிறது. “மணமகன்,” “மணமகள்” என்ற சொற்களைத் தனிப்பட்ட முறையில் விளக்காத பொழுதும், இது ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்ணுக்கு இடையிலேயான உறவை மனதிற்கொண்டு இயற்றப்பட்ட சட்டம் என்பது தெளிவாகிறது.
கிறுத்துவ மதத் திருமணங்கள் இந்தியக் கிறுத்துவ மதத் திருமணச் சட்டம் 1872-இன் கீழ் கருத்தப்படுகின்றன. இந்துத் திருமணச் சட்டத்தைப் போலவே இந்தச் சட்டத்திலும் திருமணம் என்பது ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் இணையும் உறவாக மட்டுமே வெளிப்படையாக நிர்ணயிக்கப்படவில்லை. எனினும், இங்கும் அத்தகையப் புரிதலே வேரூன்றி இருப்பதைப் பார்க்க முடிகிறது. உதாரணத்திற்கு, இச்சட்டத்தின் பிரிவு 60 இவ்வாறு கூறுகிறது: “திருமணம் செய்துகொள்ளவிருக்கும் ஆணின் வயது 21ற்குக் கீழ் இல்லாமலும், திருமணம் செய்துகொள்ளவிருக்கும் பெண்ணின் வயது 18ற்குக் கீழ் இல்லாமலும் இருக்க வேண்டும்.”
முஸ்லிம்களுக்கு இடையிலான திருமணங்களை இஸ்லாமியச் சட்டமே நிர்ணயிக்கிறது. சட்டமன்றத்தால் வகுக்கப்பட்ட எந்தச் சட்டத்தின் கீழும் இவை வருவதில்லை. திருமணம் ஆண்-பெண் இணையும் உறவாக வெளிப்படையாக வகுக்கப்படவில்லை. இஸ்லாமிய மதத்தின் பார்வையில் திருமணம் என்பது ஒரு சிவில் ஒப்பந்தத்தின் தன்மை கொண்டது. குரானின் புனித வரிகளை ஓதி செய்து வைக்கப்பட்ட ஒன்றாக இருப்பினும் திருமணம் என்பது இனப்பெருக்கத்தைக் குறிக்கோளாகக் கொண்டு ஈடுபடும் பாலுறவுக்கு சட்ட ரீதியான அனுமதி வழங்கும் ஒரு சிவில் ஒப்பந்தமாகவே கருதப்படுகிறது. இனப்பெருக்கமே திருமணத்தின் குறிக்கோளாகக் கருதப்படுவதால் இங்கும் ஆண்-பெண் உறவே ஏற்றுக்கொள்ளாப்படுவதை அறிய முடிகிறது.
எனினும் இந்தக் கண்ணோட்டம் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஒருபாலீர்ப்பு குறித்து இஸ்லாமியர்களுக்கு இடையில் மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன.
சிறப்புத் திருமணச் சட்டம் 1954-இன் கீழ், திருமணம் என்பதற்கு வரையறுக்கப்பட்ட விளக்கம் கொடுக்கப்படவில்லை. எனினும், இங்கும் ஆண்-பெண் உறவே கருதப்படுவதையும் அத்தகையப் புரிதல் சட்டத்தில் இழையோடி இருப்பதையும் காணமுடிகிறது. உதாரணத்திற்கு, “தடைசெய்யப்பட்ட உறவுகள்” என்ற கருத்தாக்கத்தின் கீழ் குடும்ப உறவுகளுக்கு மத்தியில் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்ணுக்கு இடையில் ஒரு சில உறவு முறைகளே இந்தச் சட்டத்தால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.
(2) இந்தியாவில் திருமணச் சட்டங்கள் தேசிய அளவில் நடைமுறைப்படுத்தப் படுகின்றனவா, அல்லது மாநில அளவிலா?
இந்தியாவில் திருமணச் சட்டங்களின் நடைமுறை தேசிய அளவில். திருமணத்தின் சில அம்சங்களை நிர்ணயிக்கும் உரிமை சில மாநிலச் சட்டங்களுக்கு உண்டு. உதாரணத்திற்கு, திருமணத்தைப் பதிவு செய்வது குறித்த விதிகளை மாநில அளவிலான சட்டங்கள் வரையறுக்கலாம்.
(3) இந்தியாவில் சட்ட ரீதியாகத் திருமணம் செய்துகொள்வதல் கிடைக்கக் கூடிய நன்மைகள் என்ன?
திருமணங்கள் குறித்த ஒரு சீரான சட்டம் இல்லாததால், அதனால் வரும் நன்மைகளும் அந்தந்த மதத் திருமணச் சட்டங்களையும் பழக்க வழக்கங்களையும் பொறுத்து அமைகின்றன. இவை பெருமளவில் மாறுபடுகின்றன. உதாரணத்திற்கு, இஸ்லாமியச் சட்டத்தில் மட்டுமே அவை இடத்திற்கு இடமும் குழுவிற்கு குழுவும் வேறுபட்டு இருக்கின்றன. இருப்பினும், பொதுவாகத் திருமணத்தினால் கிடைக்கக் கூடிய நன்மைகள் பின்வருமாறு:
- சொத்துரிமை: பொது அல்லது சிவில் திருமணங்களுக்கு இந்திய சொத்துரிமைச் சட்டம் 1925-இன் கீழும், இந்துத் திருமணங்களுக்கு இந்து சொத்துரிமைச் சட்டம் 1956-இன் கீழும்.
- பிரிமனைப் பணம் (ஜீவனாம்சம்): மனைவிக்கு அவர் வாழ்க்கைக்குத் தேவையான பணத்தை வழங்குவது பல திருமணச் சட்டங்களில் கணவர்களுக்குக் கட்டாயப்படுத்தப் பட்டிருக்கிறது.
- காப்புப் பொறுப்பு: திருமண மற்றும் மதச் சட்டங்களைப் பொறுத்து காப்புப் பொறுப்பு மாறுபடுகிறது. உதாரணத்திற்கு, இந்து சிறுபான்மையினர் மற்றும் காப்புப் பொறுப்புச் சட்டத்தின் கீழ், 18 வயதிற்கான சிறுவன்/ சிறுமி அல்லது திருமணம் ஆகாத பெண் ஆகியோரது காப்புரிமை இயற்கையாக அவர்களை தந்தையைச் சேர்கிறது. மேலும், சட்டரீதியான திருமணத்திற்கு வெளியில் பிறந்த குழந்தைக்கான காப்புரிமை முதலில் தாயுடையது என்றும் அதன் பின் தந்தையுடையது என்றும் கூறுகிறது.
- ஓய்வூதியம்: உதாரணம்: இந்திய அரசின் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், அரசு அதிகாரி ஒருவர் தீவிரவாதத் தாக்குதலின் பொழுதோ எல்லைப் பகுதிகளில் எதிரிகளின் தாக்குதலினாலோ இறக்க நேர்ந்தால், அவர்களுடைய மனைவிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும்.
- தத்தெடுத்தல்: மத்திய தத்தெடுப்புக் கண்காணிப்பு நிறுவனத்தின் (CARA) புதிய விதிமுறைகளின்படி திருமணமான தம்பதிகளுக்கு முன்னுரிமை வழங்குகின்றன. திருமணமாகாத தனி நபர்கள் குழந்தையைத் தத்தெடுப்பது இந்த விதிமுறைகளின் கீழ் மிகக் கடினமாகிறது. மேலும், திருமணம் செய்துகொள்ளாது சேர்ந்து வாழும் இருவர் தத்தெடுப்பது இந்தப் புதிய விதிமுறைகளின் கீழ் முற்றிலும் சாத்தியமற்றது.
- மாநிலப் பணியாளர் காப்பீட்டுச் சட்டம், மாநில பணியாளர் பிராவிடண்ட் ஃபண்ட் திட்டம், பணிக் கொடை வழங்கும் திட்டம் ஆகியவற்றின் கீழ் தனக்கும் பின் அவற்றை பெறக்கூடியவர் என்று ஒருவரைத் தேர்ந்தெடுக்கும் பொழுது, அதற்குத் தகுதி பெறுபவராக குறிப்பிட்ட நபருடைய மனைவி அல்லது கணவரோ, அல்லது மற்ற தாய், தந்தை அல்லது உடன் பிறந்தவர்களோ மட்டுமே கருதப்படுகின்றனர். பணியாளர் இழப்பீட்டுச் சட்டம் மற்றும் பணியாளர் உரிமையை உறுதிசெய்யும் சட்டங்களின் கீழ் வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகைகளைப் பெறுவதற்கும் ஒருவர் குறிப்பிட்ட நபருடைய மனைவி அல்லது கணவரோ, அல்லது மற்ற தாய், தந்தை அல்லது உடன் பிறந்தவர்களோ இருக்க வேண்டும்.
(4) இந்தியாவில் திருமணங்கள் சட்ட ரீதியான அங்கீகாரம் பெறுவது எந்த அளவிற்கு முக்கியமானது. பல ஆண்-பெண் தம்பதியினர் தங்களாது திருமணங்களைப் பதிவு செய்யாமலே இருப்பதைப் பார்க்கிறோம். இவர்கள் தங்களது திருமண அழைப்பிதழ், புகைப்படங்கள் ஆகியவற்றைச் சான்றாகப் பயன்படுத்துவதையும் பார்க்கிறோம்.
சிறப்புத் திருமணச் சட்டத்தின் கீழ் மட்டுமே திருமணங்கள் கட்டாயமாகப் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற விதி உள்ளது. மற்ற திருமணச் சட்டங்களுக்கு இது கட்டாயம் அல்ல. எனினும், பிப்ரவரி 2006-லிருந்து, சீமா மற்றும் அஷ்வனி குமார் இவர்களுக்கு இடையிலான வழக்கில் தொடங்கி, உச்ச நீதிமன்றம் எல்லா திருமணங்களும் பதிவு செய்யபடுவதை உறுதிசெய்வதற்கான விதிமுறைகளை ஏற்படுத்துமாறு மாநில அரசுகளை மூன்று முறை கேட்டுக்கொண்டுள்ளது. இது எந்த மத அல்லது குழு/ சமூகம் சார்ந்த திருமணங்களுக்கும் பொறுந்துமாறு இருக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
சில மாநிலங்களில் இந்த விதி ஏற்கனவே அமலில் உள்ளது. உதாரணத்திற்கு, கர்னாடகா திருமணச் சட்டம் 1976-இன் பிரிவு 3 வரையறுப்பதைக் காணலாம்: “இந்தச் சட்டம் அமலுக்கு வரும் அன்றோ அதற்குப் பின்னரோ நிகழும் திருமணங்கள் இந்தச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள முறையில் பதிவு செய்யப்படவேண்டும்.” இது போலவே பம்பாய் திருமணப் பதிவுச் சட்டம் 1953, இமாசல் பிரதேசம் திருமணப் பதிவுச் சட்டம் 1997, ஆந்திர பிரதேசம் திருமணப் பதிவுச் சட்டம் 2002 அகியவையும் அந்தந்த மாநிலகளுக்கான திருமணப் பதிவு விதிமுறைகளை நிர்ணயிக்கின்றன.
குறிப்பிட்ட மாநில அளவிலான சட்டங்கள் இருப்பினும், ஒரு குறிப்பிட்ட திருமணத்தைப் பதிவு செய்வதற்கான வழிமுறைகளும் தேவையான ஆவணங்களும் அது எந்த வகையான திருமணம் என்பதைப் பொறுத்து அமையும். சிறப்புத் திருமணச் சட்டம் 1954-இன் கீழ் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு அதற்கென உள்ள திருமணப் பதிவாளர்களால் திருமணம் பதிவு செய்யப்படும். இந்தியக் கிறுத்துவ மதத் திருமணச் சட்டம் 1872 மற்றும் பார்சி திருமணம் மற்றும் விவாகரத்துச் சட்டம் 1936 ஆகியவையும் திருமணங்கள் பதிவு செய்யப்படுவதைக் கட்டாயமாகக் கருதுகின்றன.
கிறுத்துவர்கள் தங்களது திருமணம் நடைபெற்ற திருக்கோயிலிலிருந்து அதற்கான சான்றிதழை வழங்க வேண்டும். இஸ்லாமியத் திருமணங்கள் சிவில் ஒப்பந்தங்களாகக் கருதப்படுவதால் சட்டபூர்வமான திருமணச் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றது. ஆனால் இந்துத் திருமணங்களுக்கு இது வரையில் கட்டாயப் பதிவு தேவைப்படவில்லை. பல சமயங்களில் திருமண அழைப்பிதழ், புகைப்படங்கள் மற்றும் சேர்ந்து வாழ்வதற்கான சான்றுகள் ஆகியவையே திருமணத்திற்கானச் சான்றுகளாக ஏற்றுக்கொள்ளப் படுகின்றன.
திருமணங்கள் பதிவு செய்யப்பட வேண்டியது தேசிய அளவில் கட்டாயமாக்கப்பட்டாலும் பல திருமணங்கள் பதிவு செய்யப்படாத நிலையிலேயே இருக்கும் என்பதே உணமை. இதற்கு இது ஒரு காரணம் பல திருமணங்கள் இந்தக் கட்டாய விதி அமலுக்கு வருவதற்கு முன்னரே நடைபெற்றவை என்பது. அது தவிர, மதம் மற்றும் குறிப்பிட்ட குழு அல்லது சமூக பழக்க வழக்கம் சார்ந்த வேற்றுமைகள், படிப்பறிவு ஆகியவை காரணமாகவும் எல்லா திருமணங்களையும் பதிவு செய்யப்படுவதை உறுதி செய்வது கடினமாக இருக்கும்.
சமீபத்தில், பெண்கள் மீதான எல்லா வித வன்முறைகளையும் நீக்குவதற்கான ஐக்கிய நாடுகள் சபையின் ஒப்பந்தத்தின் கீழ் திருமணங்கள் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற விதிமுறைக்குக் கொள்கை அளவில் ஒப்புதல் அளித்த இந்திய அரசு, படிப்பறிவில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் இதனை நடைமுறைப்படுத்துவதைக் கடினமாக்கும் என்று கூறியது.
(5) ஒரே பாலினத்தவரிடையேயான திருமணங்களை இந்தியத் திருமணச் சட்டங்கள் அங்கீகரிப்பதற்கான வழிகள் என்ன?
இது இரு வழிகளில் நிகழலாம்:
(1) இது குறித்த ஒரு புதிய சட்டத்தையோ, ஏற்கனவே உள்ள சட்டத்தில் திருத்தத்தையோ இந்திய நாடாளுமன்றம் கொண்டு வருவதன் மூலம் இது சாத்தியமாகும். இதற்கு முதலில் ஒரு வரைவு மசோதா எழுதப்பட்டு அது நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரால் சட்டமன்றத்தில் விவாதத்திற்குக் கொண்டுவரப்பட வேண்டும். இது ஒரு சட்டமாக நடைமுறைப்படுத்தப் படுவதற்கு முன் மூன்று வாசிப்புகளுக்கு உட்படுத்தப்படும். அது தவிர குடிமக்களின் கருத்துகளும் வரவேற்கப்பட்டு, பின் குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெற வேண்டும்.
(2) இரண்டாவது முறையில், உச்ச நீதிமன்றத்தின் கட்டளையாக வெளியாகும் ஒன்று பின் சட்டமாக நிறைவேற்றப்படும். உதாரணத்திற்கு, இந்திய அரசியலமைப்பு குறித்த (ஷரத்து 14-இன் கீழ் சம உரிமைக்கான அங்கீகாரம் குறித்த ஒன்றாகவோ, அல்லது சிறப்புத் திருமணச் சட்டம் குறித்த ஒன்றாகவோ இருக்கலாம்) பொது நலனைக் கருதி வழக்கு (Public Interest Litigation) ஒன்று தொடரப்பட்டு, அந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் சிறப்புத் திருமணச் சட்டம் 1954-ஐ மறுவாசிப்பு செய்து, ஒரே பாலினத்தைச் சேர்ந்த இருவருக்கு இடையில் திருமண உறவு சாத்தியம் என்று கட்டளைப் பிரப்பித்தால், அது நாடெங்கும் அமலுக்கு வரும் சட்டமாகும்.
நாம் கருதக்கூடிய மற்றொரு முறையும் உண்டு. Civil Partnership என்று கூறப்படும் உரிமையியல் சார்ந்த பங்காளர்கள் என்ற ஒரு கட்டமைப்பை நிறுவுவது. ஒரே பாலினத்தைச் சேர்ந்த இருவருக்கு (ஆண்-ஆண்/ பெண்-பெண்) இடையிலான உறவிற்கோ, திருமணம் செய்துகொள்ளாத எதிர் பாலின தம்பதியினருக்கு இடையிலான உறவிற்கோ, திருமணம் செய்து கொள்வதனால் வரும் சட்ட ரீதியான நன்மைகள் கிடைக்கபெற இது வழிவகுக்கும். இதற்கு சொத்துரிமை மற்றும் தத்தெடுத்தல் குறித்து ஏற்கனவே உள்ள சட்டங்கள் திருத்தங்கள் கொண்டுவர வேண்டியிருக்கும்.
(6) சமீபத்தில் ஹர்யானா மாநிலத்தில் லெஸ்பியன் (நங்கை) தம்பதியனர் குறித்த ஒரு சம்பவம் ஊடகங்களில் அதிகம் பேசப்பட்டது. இவற்றில் லெஸ்பியன் தம்பதியினருக்கு இடையிலான திருமணங்களை நீதிமன்றம் அங்கீகரித்துவிட்டதாகக் கூறப்பட்டது. இது உண்மையா?
(http://socyberty.com/work/lesbian–marriage–legalized–in–indian–state/ ).
இது குறித்து நாம் இதுவரை ஊடகங்களில் வெளியான செய்திகளை மட்டுமே கண்டுள்ளோம். நீதிமன்றத் தீர்ப்பின் நகலை நாம் முறையாக வாசிக்கும் வரை இது குறித்து கருத்து கூற இயலாது. எனினும், நீதிமன்றம் சட்டபூர்வமாக அந்தத் திருமணத்தை அங்கீகரிப்பது சாத்தியமல்ல என்று எமக்கு சட்டத்திடம் எமக்குள்ள பரிச்சயத்தைக் கொண்டு கூறமுடிகிறது.
(7) வீட்டை விட்டு வேளியேறிய இளம் தம்பதியினர் குறித்த உயர் நீதிமன்ற ஆணை ஒன்றைப் பின்பற்றி மேற்கண்ட சம்பவத்தில் குறிப்பிட்ட நீதிபதி இந்த லெஸ்பியன் தம்பதியினருக்கு பாதுகாப்பு அளித்து உத்தரவிட்டார். ஒரு பாலினத்தவருக்கு இடையேயான திருமணங்கள் சட்டப்பூர்வமானவை அல்ல எனின், இது எப்படி சாத்தியமாகும்?
இருவரது வயதும் 18ஐக் கடந்ததாக இருக்கும் வரை எந்த தம்பதியினரும் சட்டத்தின் கீழ் பாதுகாப்புக் கோரலாம். பெங்களூரைச் சேர்ந்த லெஸ்பிட் (LesBiT) குழுவிற்கு லெஸ்பியன் தம்பதியனருகான பாதுகாப்பு குறித்த பணிசார்ந்த அனுபவங்கள் பல இருக்கின்றன. வீட்டை விட்டு வெளியேறி பாதுகாப்பு வேண்டும் தம்பதியினருக்கென, பெங்களூரைச் சேர்ந்த Alternative Law Forum ஒரு கைப்புத்தகத்தை வெளியிட்டுள்ளது. எனினும் இவை திருமணத்துடன் நேரடி தொடர்பு கொண்டவை அல்ல. இவை அனைத்தும் தங்களது பெற்றோர், உறவினர் மற்றும் தங்கள் உறவை எதிர்க்கும் மற்ற எவரிடமிருந்தும் பாதுகாப்பு வழங்குவது பற்றியன.
(8) ஆண் பாலடையாளத்திலிருந்து பெண் பாலடையாளத்திற்கு மாறும் ஒரு திருநங்கை உயிரியல் ரீதியாக ஆணாக இருக்கும் ஒருவரை சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொள்வதற்கான வழிமுறைகள் என்ன? அதே போல, பெண் பாலடையாளத்திலிருந்து ஆண் பாலடையாளம் ஏற்கம் திருநம்பி ஒருவர் உயிரியல் ரீதியாகப் பெண்ணாக இருக்கும் ஒருவரைச் சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொள்வதற்கான வழிமுறைகள் என்ன?
இரண்டு கேள்விகளுக்குமான விடை: திருமணம் செய்துகொள்ள விரும்பும் இரு நபர்களுக்கும் தேவையான ஆவணங்கள் (வயதுச் சான்றிதழ், அவர்கள் வசிக்கும் இடத்திற்கான சான்றிதழ் ஆகியன) இருப்பின், அவர்கள் பார்ப்பதற்கு ஒருவர் ஆணாகவும், பெண்ணாகவும் இருக்கும் வரை தங்கள் திருமணத்தைப் பதிவு செய்வதில் பிரச்சனை இருப்பதற்கான சாத்தியங்கள் குறைவு.
தம்பதிகளுள் ஒருவர் மற்றவரது ஆண்/ பெண் பால் நிலை குறித்தும், அதனால் அந்தத் திருமணம் இனி சட்ட ரீதியாக செல்லுபடியாகாது என்று கேள்வி எழுப்பினால், அந்தத் திருமணம் தொடக்கத்தில்ருந்தே செல்லுபடியாகாத ஒன்றாக (void ab initio) அறிவிக்கப்படும்.
அது போலவே, பெண் பாலடையாளத்திலிருந்து ஆண் பாலடையாளம் ஏற்கம் திருநம்பி ஒருவர் உயிரியல் ரீதியாகப் பெண்ணாக இருக்கும் ஒருவரைப் புரிந்துகொள்ளும் திருமணமும் தொடக்கத்தில்ருந்தே செல்லுபடியாகாத ஒன்றாகக் (void ab initio) கருதப்படும். அந்தத் திருமணம் சிறப்புத் திருமணச் சட்டத்தின் கீழ் நடைபெற்ற ஒன்றாக இருந்தாலும், இந்துத் திருமணச் சட்டத்தின்படி நடைபெற்ற ஒன்றானாலும் அது சட்டதின் அங்கீகாரம் அற்றதாகக் கருதப்படும். ஏனெனின், சட்டத்தில் கூறப்படும் “மணமகள்” மற்றும் “மணமகன்” என்ற சொற்கள் முறையே பிறப்பில் பெண்ணாகவும் ஆணாகவும் உள்ளவர்களையே குறிக்கின்றன. அது தவிர, திருமணத்திற்கு மத மற்றும் பண்பாட்டு அங்கீகாரம் வழங்கப்படுவதற்கான முதற்காரணம் அது குழந்தைப் பேற்றிற்கு/ இனவிருத்திக்கு வழிவகுக்கிறது என்பதே. இதுவே மணமகள்/ மணமகன் என்ற சொற்களை வேறு விதமாக வாசிப்பதற்குத் தடையாக அமைகிறது.
இந்த இரண்டு நிலைகளிலுமே, பால் மாற்று அடையாளம் ஏற்கும் நபர் மருத்துவ சிகிச்சை மூலமாக அந்தப் பால் மாற்றத்தை அடைந்திருந்தால் சட்டதின் பார்வை மாற்படுமா? இந்த நிலையில் தம்பதியருள் ஒருவர் திருமணத்தின் சட்டப்பூர்வமான நிலை குறித்து கேள்வி எழுப்பினால், இது உண்மையாக “மணமகள்” மற்றும் “மணமகனுக்கு” இடையில் நடைபெற்ற திருமணமே என்றும் அது சட்டப்படி செல்லுபடியாகும் என்றும் வாதிட முடியுமா? ஆனால் இந்தியச் சட்ட வரலாற்றில் நீதிமன்றங்களில் இது போன்ற வழக்கிற்கான முன்மாதிரிகள் இதுவரை இல்லை. ஆனால் வேறு சில நாடுகளில் எழுந்த இது போன்ற வழக்குகளில் திருமணத்தை சட்டப்பூர்வமானதாக அறிவித்துத் தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
உதாரணத்திற்கு, கிரிஸ்டீன் கூட்வின் மற்றும் ஐக்கிய இராச்சிய (United Kingdom) அரசிற்கு இடையிலான வழக்கை (விண்ணப்பம் எண் 28957/95 (ஜூலை 11, 2002) எடுத்துக் கொள்ளலாம். ஐக்கிய இராச்சியம் பால் மாற்றம் மேற்கொள்பவர்களுக்குப் புதிய பிறப்புச் சான்றிதழ் வழங்க மறுப்பதும், அவர்கள் தங்களது புதிய பாலடையாளத்தில் இருந்து கொண்டு திருமணம் செய்து கொள்வதை அனுமதிக்காததும் ஐரோப்பிய மனித உரிமைகள் ஒப்பந்தத்தை மீறுவதாக ஐக்கிய ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றம் அறிவித்தது. இது தவிர, ஒருவரது சட்டப்பூர்வமான பால் தேர்வை நிராகரிக்க உடற்கூறு மற்றும் உயிரியல் சார்ந்த பரிசோதனைகளைப் பயன்படுத்தக் கூடாது என்றும் இந்த நீதிமன்றம் கூறியது.
பால் விழைவு மற்றும் பாலின அடையாளம் குறித்த மனித உரிமைகளை வரையறுக்கும் ஜோக்ஜகார்தா (Yogyakarta) கோட்பாடுகள் இவ்வாறு கூறுகின்றன:
கோட்பாடு 3: சட்டத்தின் முன் தான் ஒரு நபராக அங்கீகரிக்கப் படுவதற்குமான உரிமை யாவருக்கும் உண்டு. பல விதமான பாலியல் வெளிப்பாடுகளும் பாலின அடையாளங்களும் கொண்ட நபர்களுக்கு சட்ட ரீதியான அங்கீகாரம் என்றும் உண்டு. ஒருவருடைய சுயதீர்மானம், மதிப்பு மற்றும் சுதந்திரம் போன்ற அடிப்படை அம்சங்களில் அவருடைய பாலியல் வெளிப்பாடுகளும் பாலின அடையாளமும் அடங்கும். தன்னுடைய மாற்றுப் பாலின தேர்விற்கு சட்டப்பூர்வமான அங்கீகாரத்தைப் பெறுவதற்காக எவரும் எந்த மருத்துவ சிகிச்சையும் மேற்கொள்ள வற்புறுத்தப்படக் கூடாது. இவற்றுள் பால் மாற்று அறுவை சிகிச்சை, கர்ப்பத்தடை சிகிச்சை மற்றும் ஹார்மோன் சிகிச்சை ஆகியனவும் அடங்கும். திருமணம், மற்றும் குழந்தை பராமரிப்பு ஆகியவற்றைக் காரணங்களாகக் கொண்டு எவருடைய பாலின அடையாளத்திற்கும் சட்ட அங்கீகாரம் மறுக்கப்படக் கூடாது. தன்னுடைய பாலியல் விழைவை மறைத்து வைப்பதற்கோ, மறுப்பதற்கோ, வெளிப்படுத்தாமல் கட்டுப்படுத்தி வைக்கவோ எவரும் வற்புறுத்தப்படக் கூடாது.”
(9) உயிரியல் ரீதியாக ஆணாக இருக்கும் ஒருவர் உயிரியல் ரீதியாகப் பெண்ணாக இருக்கும் ஒருவரை மணந்து கொண்டு, பின்னர் தன்னைத் திருநங்கையாக அடையாளப்படுத்திக் கொண்டு பால் மாற்று சிகிச்சைக்கு உள்ளாக விரும்பினால் அச்சிகிச்சைக்குப் பின் அந்தத் திருமணம் ரத்து செய்யப்படுமா?
தம்பதியினருள் ஒருவர் இந்தப் பால் மாற்றத்தைக் குறித்தும் அந்தத் திருமணத்தின் சட்ட அங்கீகாரம் குறித்தும் கேள்வி எழுப்பினால் இந்தப் பிரச்சனை ஏற்படலாம். அந்த நிலையில் இது தொடக்கத்திலிருந்தே செல்லுபடியாகாத திருமணமாகக் கருதப்படும்.
குறிப்பு: இந்துத் திருமணச் சட்டத்திற்கும் சிறப்புத் திருமணச் சட்டத்திற்கும் இடையே வித்தியாசங்கள் மிகக் குறைவு. விதிமுறைகள் பெருமளவிற்கு ஒத்தவையாகவே இருக்கின்றன. எனினும், திருமணம் செய்துகொள்ள விரும்பும் இருவர் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவராக இருப்பின் அங்கு கட்டாயமாகச் சிறப்புத் திருமணச் சட்டமே ஏற்றுக்கொள்ளப்படும். அது தவிர, சிறப்புத் திருமணச் சட்டத்தில் திருமணத்திற்கு 30 நாட்களுக்கு முன்னர் சம்பந்தப்பட்ட பதிவு அலுவலகத்திற்கு அத்திருமணம் குறித்துத் தெரிவிக்க வேண்டும். மேலும், சிறப்புத் திருமணச் சட்டம் மத சார்பற்ற ஒன்றாக இருப்பதால் தனி நபர் சார்ந்த மற்ற எந்த சட்டத்தையும் இதனுடன் இணைத்து வாசிப்பது சுலபமாகிறது.
Questions? Comments? Suggestions? Contact us!