[புதுக்கவிதை] அவனும் இவனும் (கோவிடும் என்னவனும்)
அவனும் இவனும் (கோவிடும் என்னவனும்)
அவன் ஊஹானின் ஆய்வகத்தில் தோன்றினான்… இவனோ தமிழ்நாடு என்னும் தாயகத்தில் வேரூன்றினான்;
அவன் என் முகத்தின் துளைகளில் காமம் கொண்டு உட்புகுந்தான்… இவனோ என் அகத்தின் துளைகளில் காதல் கொண்டு உள்நிறைந்தான்;
அவன் என் உடம்பெனும் சிறையுனுள் அகப்பட்ட போது மட்டுமே மூச்சு முட்டுகிறது… இவனோ என் உடம்பெனும் கூட்டினுள் கூடாமல் தனித்திடும் போது சுவாசம் விம்முகிறது;
அவன் என்னுள் பிரவேசித்த பிறகே என்னூன் வெப்பம் கொள்கிறது… இவன் என்னை விட்டு நீங்கினால் என்னூனுயிரெலாம் வெந்து வெந்து ஊதுகனல் ஆகிறது;
அவனால் நான் கொண்ட மயக்கம் மருந்து உண்ணத் தெளியும்… இவனால் நான் கொண்ட மயக்க நோயும் இவனே மருந்தும் இவனே;
அவனால் என் புலன்கள் சில ஆற்றல் இழந்தன… இவனால் என் ஐம்புலனும் செயல் மறந்து நிற்கின்றன;
அவன் என்னை அண்டாமல் அகல அறிவியல் கண்ட தடுப்பூசிகள் உண்டு… இவன் என்னை விட்டு அகல அறவியல் மாண்ட திருமணம் என்ற தடுப்பூசி உண்டு;
அவன் என்னை ஆட்கொண்டால் தற்காலிக உடல் நோயாளி என உலகம் என் மேல் பரிதாபம் கொள்கிறது… இவன் என்னை ஆட்கொண்டால் நிரந்தர உள நோயாளி உலகம் என் மேல் வெறுப்பைக் கக்குகிறது;
அவன் இயல்பாக என்னைத் தீண்டினால் சில வாரங்களுக்கு மட்டுமே வனவாசம்… இவன் இயல்பாக என்னைத் தீண்டினால் பல நாடுகளில் வாணாள் சிறைவாசம்;
அடிக்கடி உருமாறும் அவனுக்கு ஏற்றவாறு உலகம் அவனைச் சமாளிக்கிறது… உருவும் திருவும் அறவே மாறா இவனுள் இருக்கும் என்னை உலகம் ஏனோ ஏற்க மறுக்கிறது;
அவனால் பிறர்க்கு ஏற்படும் நெடுந்துயர் கொடிதினும் கொடிது…என்னுள் இருக்கும் இவனால் எனக்கு ஏற்படும் அருந்துயர் இம்மையிலும் இனிது.
குறிப்பு:
– இந்தக் கவிதை சனவரி 29 2023 அன்று நடந்த 64வது quilt இலக்கிய அமர்வின் போது ஆசிரியரால் எழுதப்பட்டு வாசிக்கப்பட்டது.
– படம்: திறந்தவெளி செயற்கை நுண்ணறிவு இயங்குதளம் (OpenAI) மூலம் உருவாக்கப்பட்டது.