[கவிதை] பால் புதுமையினர்?
ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் என்ற ஓரினக் கனிமங்களின் ஓரினச்சேர்க்கையே நம் வானில் ஞாயிறாக ஒளிரக் காண்கிறோம்;
புவி மற்றும் நிலவு என்ற ஓரினக் கோள்களின் தற்பாலீர்ப்பே நம் கடல்களின் ஓதங்களாக ஆர்ப்பரிக்கக் காண்கிறோம்;
ஓரினம் சார் ‘நிம்பஸ்’ முகில்களின் தன்பால் காதற் கூடல்களே மாமழையாக இப்பூவுலகை நனைக்கக் காண்கிறோம்;
இக்காதற் கூடல்களே ஊடல்களாக மாறுமிடத்து மின்னல்களாகவும் இடிகளாகவும் அம்பரத்தில் கர்ஜிக்கக் காண்கிறோம்;
இங்ஙனம், ஞாயிறு, முகில், மழை என ஓரினர்களின் சங்கமமே நம் நீள்நெடுவானின் மாயா ‘வானவில்‘ ஓவியமாக மிளிரக் காண்கிறோம்.
ஓரினராகிய யாம்,
மெசொப்பொத்தேமியாவின் கில்கமெஷ் என்க்கீடு ஆக இருந்திட்டோம்;
இசுரயேலின் தாவீது யோனத்தான் ஆக இருந்திட்டோம்;
யவனத்தின் அலெக்ஸாண்டர் ஹெஃபேஸ்ட்டியன் ஆக இருந்திட்டோம்;
தமிழகத்தின் பிசிராந்தையார் கோப்பெருஞ்சோழன் ஆக இருந்திட்டோம்;
சேரளத்தின் ஐயப்பன் வாவர் ஆக இருந்திட்டோம்;
ஹிந்துஸ்தானத்தின் மாலிக் கஃபூர் அலாவுதீன் கில்ஜி ஆக இருந்திட்டோம்;
இவ்வாறாக வரலாற்றின் முழுமையிலும் வாழ்ந்திட்ட யாம் பால் புதுமையினர் ஆவது எங்ஙனம்
காதல் தோன்றிட்ட காலம் முதல் இருந்திட்ட எம் காதல் பழைமையே அன்றி புதுமையன்று;
யாம் பால் பழைமையினரே அன்றி பால் புதுமையினர் அல்லோம்.
‘பரிசுத்த தேவாகமம்’ அங்கீகரிக்கும் உம் எதிரினக் காதலோ –
சாதி-மத-இனம் பார்க்கும்,
சொத்து சம்பத்து கடத்தும்.
‘பரிசுத்த தேவகாமம்’ ஆகிய எம் ஓரினக் காதலோ –
மாட்சிமை மனிதத்தில் மீநிறுத்தும்.
மனிதனை மெய்யுள்ளத்தோடு மனிதனாக மட்டும் நேசிக்கும் எம் ஓரினச் சேர்க்கை இயற்கையே;
சாதி-சொத்து-சந்ததி வேண்டி சமூகத்திற்காக உடன்படிக்கை செய்யும் உம் எதிரினச் சேர்க்கை செயற்கையே.
– மொழிக்கிறுக்கன்.
Acknowledgents:
Image source: https://newstm.in/