[கதை] என் தற்காலிக வானவில் அவள்
அது ஒரு ஜுன் மாத கடைசி சனிக்கிழமை. வழக்கம் போல அன்றும் முகநூலில் எனது உண்மை உருவத்தை மறைத்து போலி கணக்கில் உலாவிக் கொண்டிருந்தேன். மதியழகி எனும் நான் நிலவழகி எனும் பெயரில். அரசாங்கப் பணியில் இருந்து கொண்டே அரசிற்கு எதிராகக், அரசின் நிலைபாடுகளுக்கு எதிராகக் கருத்துத் தெரிவிப்பது என்பது தன் தலையில் தானே மண்ணை வாரிக்கொண்டதற்குச் சமம் தானே. சமத்துவம், சமூக நீதி சார்பாக எனக்குள் எழும் கருத்துகளை சுதந்திரமாக பகிர்ந்து கொள்ளவே இந்த போலிக் கணக்கு.
ஜூன் மாதம் என்றாலே அது மாற்று பாலீர்ப்பாளர்கள், மாற்று பாலினத்தவர்களுக்கான சுயமரியாதை மாதம். மெசெஞ்சரில் ஒரு குறுஞ்செய்தி வினிதா என்ற பெயரில். பார்த்தவுடனே தெரிந்தது அதுவும் ஒரு போலிக் கணக்கு என்று. அன்று நான் வெட்டியாக இருந்ததால் பேச ஆரம்பித்தேன். பரஸ்பர வணக்கங்கள் மற்றும் விசாரிப்புகளுக்குப் பின்,
‘நிலா! நான் ஒரு சமபால் ஈர்ப்பாளள், உனது பதிவுகள் எனக்கு மிகவும் பிடிக்கும்.’ என வினிதா கூறினாள்.
‘மிக்க மகிழ்ச்சி வினிதா, வாழ்த்துகள்’ – இது நான்.
‘நீங்க இருபால் ஈர்ப்பாளரா?’
‘இல்ல வினிதா, நானும் ஒரு சமபால் ஈர்ப்பாளள் தான்’
(இப்போது உங்களுக்குத் தெரிந்திருக்கும், நிஜமாகவே நான் ஏன் இந்த போலிக்கணக்கில் உலாவுகிறேன் என்று).
இவ்வாறாக ஆரம்பித்த உரையாடல் சில நாட்கள் தொடர்ந்தது.
பொதுவாகவே மெசெஞ்சரில் கடலை போட வருபவர்களை நான் மதிப்பதே இல்லை. ஆனால் வினிதா கூட மட்டும் எனது உரையாடலை நாட்கணக்கில் தொடர்ந்தேன். சில காரணங்கள் இருந்தாலும், முதல் காரணம் இருவருமே ஆண்டி இந்தியன், ஷமுக விரோதி, அர்பன் நக்ஸல் என்ற பட்டங்களை அறிவு ஜீவிகளான சங்கிகளிடமிருந்து பெற்றிருப்பது தான். சமூகவியலில் முதுகலைப் பட்டம் பெற்றிருந்த வினிதாவுக்கு இந்தியாவின் பன்முகக் கலாச்சாரம் மேல் அளவிலா ஈர்ப்பு; தேடித்தேடி புதுப்புதுக் கலாச்சாரங்களை பற்றித் தெரிந்து கொள்வதும், இந்தியாவின் பன்முகத் தன்மையை சிலாகிப்பதும் மிகவும் பிடித்த ஒன்று. அவளது பால்நோக்குப் பற்றி முதல்நாள் பேசியதுடன் சரி, அடுத்த இரண்டு வாரங்களில் அவள் பேசியது எல்லாம் இந்தியாவின் பன்முகத் தன்மைப் பற்றியும், அதற்கு மாற்றாக ஒருமுகத் தன்மை புகுத்த நினைக்கும் சங்கிகளின் செயல்த் திட்டத்திற்கு எதிரான நிலைப்பாடுகளைப் பற்றியும் தான். சமபால் ஈர்ப்பாளள் என்றாலே நான் கண்டிப்பாக இடதுசாரியாகத் தானே இருக்க முடியும், என்னை என் பாலியல் நோக்கின் அடிப்படையில் ஒடுக்கும் போது, நான் பிற ஒடுக்குமுறைகளுக்கும் எதிரானவளாகத் தானே இருக்க முடியும்! எனவே வினிதா பேசிய விதமும், பேச்சும் என்னை வெகுவாகவேக் கவர்ந்தது.
இரண்டு வாரங்களுக்கு பின், நிலவழகியாக பேசிக் கொண்டிருந்த நான் மதியழகியாகவும், வினிதாவாக பேசிக்கொண்டிருந்த அவள் நான்சியாகவும் எங்களது உண்மையான முகநூல் கணக்குகளில் பேச ஆரம்பித்தோம்.
எண்களை பரிமாறிக் கொண்டு அலைபேசியிலும் பேச ஆரம்பித்தோம், ஊர், உலகம், சமூகம் என சுற்றிய எங்கள் பேச்சு, ஒருக்கட்டத்தில் எங்களை நோக்கித் திரும்பியது. நான்சி அவ்வபோது காமத்துபால் கலந்து பட்டும்படாமல் பேச ஆரம்பித்தாள். சில சமயம் உரையாடல் முழுக்க கலவி மட்டுமே நிரம்பியிருக்கும். எனக்கும் அது பிடித்திருந்தது. புதிதாக தோன்றிய இந்த உறவு நட்பா, காதலா அல்லது வெறும் காமமா என்ற குழப்பம் மெல்ல என்னுள் தோன்ற ஆரம்பித்தது.
காதல் – எந்தவொரு வரைமுறைக்குள்ளும், விளக்கங்களுக்குள்ளும் சிக்கிக் கொள்ளாத விசித்திரம். 25 வயதை எட்டியிருக்கும் எனக்கும் அந்த விசித்திரம் எப்படி இருக்கும் எனத் தெரியாது. மறுதலித்த பல ஆண்களின் காதல் கோரிக்கைகளையும், நிறைவேற்றப்பட்ட சில பெண்களின் காமக் கோரிக்கைகளையும் கொண்டதுதான் இந்த 25 வருட வாழ்க்கை. சிறுவயதிலே அரசாங்க வேலை கிடைத்ததால், எனது வாழ்க்கையை முடிவு செய்யும் உரிமையை எனது பெற்றோர்களிடமிருந்து பறித்துக் கொண்டேன். எல்லாம் சரி தான், ஆனால் காதல் என்ற உணர்வு மட்டும் எப்படி இருக்கும் என இதுவரை உணர்ந்ததில்லை. வினிதா, இல்லை இல்லை நான்சி காமத்துப்பால் கலந்து பேச ஆரம்பித்த மூன்றாவது வாரத்திலிருந்து, வார்த்தையால் விவரிக்க முடியா ஓர் உணர்வால் ஆட்பட்டிருந்தேன். உடலியல் இன்பத்தை தேவையான அளவு அனுபவித்திருந்த போதும், உணர்வியல் ரீதியான இன்பத்திற்கு உள்ளம் ஏங்கிய சமயத்தில் தான் நான்சியுடனான இப்புது உறவு ஏற்பட்டிருந்தது. விளக்கமுடியா இந்த உணர்வுதான் காதலா? இந்த போதைதான் காதலா?, இப்போதையை நான்சி எப்போதும் எனக்கு தருவாளா, இல்லை இதுவும் மற்றுமொரு உடல்த்தேவைக்கான உறவா? என பல குழப்பங்கள் மனதில் ஓர் அமைதியின்மையை ஏற்படுத்த தொடங்கியது. இதைத் தொடரும் விருப்பம் எனக்கு இல்லை. ஒரு தெளிவான முடிவை எடுக்க வேண்டுமானால் நான்சியை நேரில் சந்தித்துப் பேச வேண்டும் என நினைத்தேன். அதற்கு முன் நான்சியிடம் அலைபேசியிலேயே கேட்டேன், நமக்குள் ஏற்பட்டிருக்கும் இந்த உறவு எத்தகையது, இவ்வுறவின் நோக்கம் என்ன என்று?!. என் நட்பு தான் அவளுக்கு வேண்டுமாம், தேவைப்படின் அவ்வபோது கலவியும். எனக்கு குழப்பம் இன்னும் அதிகரித்தது. எனவே நாம் நேரில் சந்திப்போம் என கூறியபோது முதலில் மறுத்தவள், என் வற்புறுத்தலில் பேரில் ஒத்துக் கொண்டாள்.
ஜூலை மாத கடைசி சனிக்கிழமை அது. அலுவலக வேலையாக மதுரை வரை செல்கிறேன் என வீட்டில் கூறிவிட்டு சிவகங்கையிலிருந்து கிளம்பினேன், மேலூரிலிருக்கும் நான்சியைப் பார்க்க. தொ. பரமசிவன் அவர்களின் அழகர்கோவிலை படித்தப்பின் மீண்டும் ஒருமுறை அழகர் கோவில் செல்ல விரும்பினேன். எனவே நான்சியும் நானும் அழகர்கோவில் சந்திக்கலாம் என முடிவெடுத்துக் கொண்டோம்.
பேசிக்கொண்டது போல 11 மணி அளவில் நான் அழகர்கோயில் சென்று விட்டேன். நான்சி வர 30 நிமிடங்கள் தாமதமாகும் என தெரிவித்ததால், நேரம் போக்குவதற்காக அவளது வினிதா என்ற போலிக்கணக்கிலிருந்த பதிவுகளை படிக்க ஆரம்பித்தேன். நிறைய பன்முகத் கலாச்சாரம் பற்றிய பதிவுகள், சில காதல் பதிவுகள் இருந்தது. அதில் சில பதிவுகளில் ரோஷிணி என்ற பெயரை டேக் செய்து காதல் பதிவுகளை மே மாதம் வரை வினிதா இட்டிருந்தாள். யார் அந்த ரோஷிணி என்று தெரிந்துகொள்ளும் ஆவலில் அந்த கணக்கை ஆராய்ந்தால் அதுவும் ஒரு போலிக் கணக்கு. சில குழப்பங்கள் இது தொடர்பாக எழுந்தாலும், நான்சி வருவதை பார்த்ததும் தற்காலிகமாக மறைந்தது. முதல் நேரடிச் சந்திப்பு. அழகர் கோவிலை தொ.பரமசிவன் அவர்களின் எழுத்துகளின்கண் கொண்டு பார்த்து இரசித்த விட்டு, கோவில் வளாகத்தில் தனியாக இருந்த ஒரு மர நிழலில் அமர்ந்தோம். வினிதாவே ஆரம்பித்தாள். இருவரைப் பற்றிய அடிப்படைத் தகவல்களையும் அலைபேசியிலேயே பகிர்ந்திருந்தோம். தான் தயார் செய்து கொண்டிருக்கும் அரசாங்க வேலைக்கான தேர்வில் தான் தனது கவனம் முழுக்க இருப்பதாக மீண்டும் ஒருமுறை கூறினாள். அவளைப் பற்றிய எந்த முடிவையும் எடுக்காத, அவளது முடிவைப் பொறுத்து எனது முடிவை அமைத்துக் கொள்ளலாம் என நினைத்த நான் இன்று அந்த முடிவை எடுத்துவிட வேண்டும் என தீர்க்கமாக நினைத்தேன். எனவே நானே ஆரம்பித்தேன்.“நான்சி, நமது உறவை எவ்வாறு அமைத்துக் கொள்ள விரும்புகிறாய்? இந்த உறவு வெறும் நட்பா, இல்லை காமம் கலந்த நட்பா, காதலா, காதலுக்கான படிநிலைகளா? உனது நிலைப்பாடு எதுவென தெளிவாகச் சொல், குழப்பமான மனநிலையோடு நாட்களை கடத்த எனக்கு விருப்பம் இல்லை. இன்றே முடிவெடுப்போம். என்னச் சொல்கிறாய்?”
ஒருமணி நேரத்திற்கும் மேல் பேசியிருப்போம். நான்சியால் ஒரு தெளிவான நிலைப்பாட்டைச் சொல்ல முடியவில்லை. மாற்றி மாற்றி பேசினாள். நான் அவளுக்கு நல்ல தோழியாக வேண்டுமாம்,சில சமயம் கலவியும் வேண்டுமாம், என்னைக் காதலிக்கிறேன் எனச் சொல்கிறாள், உடனே இல்லை என மறுக்கிறாள். அவள் பேசியதன் மூலம் எனது குழப்பம் மேலும் அதிகரிக்கத் தான் செய்தது. மெதுவாக பேச்சை ரோஷிணி பக்கம் திருப்பினேன். யார் அந்த ரோஷிணி எனக் கேட்டேன். ரோஷிணி பெயரைக் கேட்டதும் தடுமாறியவள், அதை மறைக்க முயற்சித்தை நான் கவனிக்காமல் இல்லை. ரோஷிணி எனது நல்ல தோழி எனக் கூறியவள், தோழியோடு தான் காதல் பதிவுகள் இடுவாயா எனக் கேட்டதும் தனது முன்னாள் காதலி எனக் கூறினாள். சரி விடு எனக் கூறிக் கொண்டு, நமது உறவுநிலையை காதலுக்கான படிநிலைகளில் ஒன்றில் வைப்போம், நட்பு என்றால் அதில் கண்டிப்பாக காமம் கலக்கக் கூடாது; எனவே நமது உறவுநிலைக்கு அது சரிவராது என நானே ஒரு நிலைப்பாட்டை அவளிடம் தெரிவித்துக் கொண்டு, எடுத்துக் கொண்டேன்; எனது குழப்பங்களுக்கு ஒரு தற்காலிகத் தீர்வைக் கொடுத்தேன். மதியம் 2 மணியைக் கடந்ததால் இருவரும் ஒரு உணவகத்தில் சாப்பிட்டப் பின் விடைப் பெற்றுக் கொண்டோம்.
அதற்கு அடுத்து வந்த நாட்கள் எனக்கு மிகவும் வித்தியாசமாக இருந்தது. ஒரு புது உணர்வால் ஆட்கொள்ளப் பட்டிருந்தேன். காதல் படங்களில் வருவது போலவே எனக்கும் நடப்பது போலத் தோன்றியது. நான்சியுடன் அலைபேசியில் பேசும் போதெல்லாம் இன்பக் கடலில் மிதக்க ஆரம்பித்தேன். நான்சியும் காதல் ஒழுக பேசிய பேச்சுகளும் வார்த்தைகளும் எனக்குள் ஒரு மனக் கிளர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. ஒரு சமபால் ஈர்ப்பாளராக வாழ்வது அத்துணை சுலபமானது அல்ல, அது உங்களுக்கும் தெரியும். பெற்றோர்களின் எதிர்ப்பு, சீக்கிரம் திருமணம் செய்து கொள் என்ற உறவினர்களின் நச்சரிப்பு என்ற புற அழுத்தங்கள் ஒருபுறம் இருந்தாலும், நிச்சயமில்லா எதிர்காலம் பற்றிய பயம், தனிமையிலே வாழ்க்கை முடிந்துவிடுமோ என்ற பயம் என்ற அகச்சிக்கல்கள் பெறும் அழுத்தத்தைக் கொடுக்கும். நீடித்த ஓர் உறவிற்கு மனம் எப்போது ஏங்கும். எனக்கும் மனம் அப்படி ஏங்கிய நேரத்தில் தான் நான்சியுடனான அறிமுகம் கிடைத்தது. இருந்தாலும், அவசரப் பட வேண்டாம், பொறுமையாக முடிவெடுப்போம் என என் மனதை பக்குவப் படுத்தியிருந்தேன். அதே நேரத்தில் இப்போது நிகழ்ந்து கொண்டிருக்கும் வானவில் நிமிடங்களை கொஞ்சம் கூட தாமதிக்காமல், விட்டுவிடாமல் முழுவதும் அனுபவிப்போம் என நினைத்து வானவில் நாட்களை அனுபவித்துக் கொண்டிருந்தேன்.
சரியாக நாங்கள் பேச ஆரம்பித்த 45 ஆவது நாள். ஒரு ஏகாந்த மாலைப் பொழுது. நான்சி என்னை அலைபேசியில் அழைத்தாள்.
” மதி, நீ எனக்கு ஒரு நல்ல தோழி; நட்பைத் தவிர நம்மிடையே வேறொன்றும் இல்லை, நேரடியாகவே சொல்கிறேன்; ரோஷிணி என் காதலி, எனக்கு அவள்தான் வேண்டும். எனக்கும் அவளுக்கும் சில வாரங்களாக கருத்து வேறுபாடு நிலவியது. அவள் என்னை ஊதாசினப் படுத்துகிறாள், என்னை வெறுக்கிறாள் என நானே தேவையில்லாமல் கற்பனைச் செய்து கொண்டு அவளிடமிருந்து விலக முயற்சித்துக் கொண்டிருந்த சமயத்தில் தான் நான் உன்னுடன் பேச ஆரம்பித்தேன். உன்னை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது; ஆனாலும் எனக்கு ரோஷிணி தான் வேண்டும். நேற்று, பல வாரங்களுக்குப் பின் நேரில் சந்தித்தோம். அவள் என் மேல் எவ்வளவு காதல் வைத்திருக்கிறாள் என புரிந்து கொண்டேன். எனவே நம் உறவு காதலாக பரிணமிக்காது, நாம் நண்பர்களாவே இருந்து விடுவோமே. என்னச் சொல்கிறாய்?”
என நான்சி கூறியவுடன் ஒரு நிமிடம் நிலைத்தடுமாறி விட்டேன். பின் ஒருவழியாக சுதாரித்துக் கொண்டு நான் பேச ஆரம்பித்தேன்.
” நல்லது ரோஷிணி, குறைந்தபட்சம் இப்போதாவது இதை சொல்கிறாயே, நல்லது. ஆனால் ஒன்று மட்டும் சத்தியம். நீ என்னை உன் தேவைக்கு பயன்படுத்திக் கொண்டாய் என்று தான் நான் நினைக்கிறேன், உன் உறவில் ஒரு பிரச்சனை என்று நாம் பேச ஆரம்பித்த முதல் நாளே அல்லது நாம் நேரில் சந்தித்த அன்றாவது சொல்லியிருந்தால், நான் தேவையில்லாத கற்பனை உலகை உருவாக்கி இருக்க மாட்டேன். பரவாயில்லை விடு. நன்றாக இரு உன் காதலியுடன். ஆனால் நான் இந்த உறவைத் தொடர விரும்பவில்லை, என்ன சொன்னாய், நான் வெறும் தோழி, இந்த உறவு வெறும் நட்பு,.. ம்ம்ம்ம், தோழியுடன் தான் நீ கலவி உரையாடல்(செக்ஸ்டிங்), வீடியோ செக்ஸ் செய்வாயா? இதைச் சொல்ல உனக்கு வெட்கமாக இல்லை; ஓர் உறவில் சிக்கல் இருக்கும் போதே இன்னொருவருடன் உன்னால் எப்படி இவ்வாறு பேச முடிந்தது, இது கேவலமாக தெரியவில்லையா? உனது உறவிற்கு நீ செய்யும் துரோகமாக தெரியவில்லையா?. ஒன்றை மட்டும் உறுதியாக சொல்லுகிறேன். நமக்குள் ஏற்பட்ட இந்த உறவு என்றாவது ஒரு நாள் காதலாக பரிணமிக்கும் என நம்பியிருந்தேன், ஆனால் அதற்கு இப்போது வாய்பில்லை என்று தெரிந்தபின் இதைத் தொடர எனக்கு விருப்பம் இல்லை. கண்டிப்பாக நீ என் தோழி இல்லை, என் வாழ்வில் எனக்கு தற்காலிக இன்பத்தை கொடுத்த ஒரு தற்காலிக வானவில் நீ, அவ்வளவு தான். நீ என்னைப் பயன்படுத்திக் கொண்டாய், என்னை இரண்டாவது தெரிவாக நினைத்துக் கொண்டாய் என்று என் மனம் உறுதியாக நம்புகிறது. மனம் வலிக்கிறது, இந்த வலி நீங்க வேண்டுமானால் நீ என் வாழ்க்கையில் மீண்டும் வர க் கூடாது, இத்தோடு இந்த வானவில் நிமிடங்கள் முடிகிறது” என்று படபடவென பேசிய நான் அவள் பதிலளிக்கக் கூட வாய்ப்புக் கொடுக்காமல் அழைப்பைத் துண்டித்தேன். அவள் என்னை மீண்டும் தொடர்பு கொள்ள முடியா வண்ணம் இருக்க வேண்டிய எல்லாவற்றையும் உடனே செய்து முடித்தேன்.
இதுவரை நான் அனுபவித்திராத காதல் உணர்வை, நான் அனுபவிக்க உதவியவள் அவள். நிச்சயமற்ற நிரந்த வானவில்லை நோக்கிய வெறுமையான பயணத்தில், அயர்ச்சி ஏற்பட்ட தருணத்தில் எனக்கு புத்துணர்ச்சி அளித்த என் தற்காலிக வானவில் அவள். அவள் மேல் எவ்வித கோபமும் எனக்கு இல்லை, நானும் என் தற்காலிக வானவில் நிமிடங்களை நினைத்து மகிழ்ச்சியாகவே உள்ளேன். அவள் கூட மறுபடியும் பேசி நல்ல தோழியாக இருக்க முடியும்தான். இருந்தபோதிலும் அவள் என் தற்காலிக வானவில்லாக மட்டுமே இருந்து விட்டு போகட்டுமே! என்ன சொல்கிறீர்கள்!
– பிரான்சிஸ் திவாகர்.