கிண்டல், கேலி மற்றும் மிரட்டல்
மாறுபட்ட பாலீர்ப்பு மட்டும் பாலடையாளம் கொண்ட குழந்தைகள், சிறுவர் சிறுமியர் மற்றும் இளம் வயதினர், அவர்கள் வயதை ஒற்றிய பிறரை வீட, கல்வி நிலையங்களில் மற்ற மாணவ மாணவிகளால் அதீதமாக கிண்டல், கேலி, மற்றும் மிரட்டலுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். இவர்களிடம் மனச்சோர்வும், தற்கொலை எண்ணமும் அதிகமாக காணப்படுகிறது.
அமெரிக்காவில் பத்து வருட காலகட்டத்தில் நடத்தப்பெற்ற ஒரு ஆய்வு கீழ்கண்ட விஷயங்களை கண்டுபிடித்தது.
- பத்துக்கு எட்டு மாறுபட்ட பாலீர்ப்பு மட்டும் பாலடையாளம் கொண்ட குழந்தைகள் பள்ளிகளில் கிண்டல், கேலி, மற்றும் மிரட்டலுக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.
- பத்துக்கு நான்கு மாறுபட்ட பாலீர்ப்பு மட்டும் பாலடையாளம் கொண்ட குழந்தைகள் மற்ற குழந்தைகளால் அடி, உதை போன்ற கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.
- பத்துக்கு ஆறு மாறுபட்ட பாலீர்ப்பு மட்டும் பாலடையாளம் கொண்ட குழந்தைகள் பள்ளிகளில் பாதுகாப்பற்று உணருகிறார்கள்.
இந்தியாவில் குழந்தைகள் பள்ளிகளில் இது போன்ற விஷயங்களுக்கு ஆளாக்க படுவதில்லை என்று நீங்கள் எண்ணினால், அது தவறு.
இதோ, நீங்களே நேரடியாக கேளுங்கள் :
இந்த கதையில் ஸ்ரீதர் சதாசிவன், தனது இளம் வயதில் மதுரையில் உள்ள ஒரு பள்ளியில் படிக்கும் பொழுது, மற்ற மாணவர்களால் கிண்டல், கேலி, மற்றும் மிரட்டலுக்கு ஆளாக்கப்பட்டதை உணர்ச்சிபூர்வமாக விவரிக்கிறார்.
இதுபோன்ற பல கதைகள் உள்ளன. “குழந்தைங்கன்னா அப்படி தான் இருப்பாங்க” என்று இந்த பிரச்சனையை தயவுசெய்து ஒதுக்காதீர்கள். பள்ளிகள் இளம்வயதில் நடைபெறும் இந்த கொடுமைகள், காலம் முழுவதும் இந்த குழந்தைகளை பின் தொடர்கின்றன. அவர்களுது உடலும் உள்ளமும் சில சமயங்களில் நிரந்தரமாக காயப்படுத்தப்படுகின்றது.
ஜூலை 2009 தில்லி உயர்நீதி மன்ற தீர்ப்பிற்கு பிறகு, இந்தியாவில் மாறுபட்ட பாலீர்ப்பு மட்டும் பாலடையாளம் கொண்டவர்கள் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. சிறுவர் சிறுமியர், மற்றும் இள வயதினரும் மாறுபட்ட பாலீர்ப்பு மட்டும் பாலடையாளம் கொண்டவர்களை பற்றி அறியத் துவங்குகிரார்கள். இதனால் கல்வி நிலையங்களின் பொறுப்புகள் அதிகமாகிறது. எல்லோரும் பயமின்றி, சந்தோஷமாக கல்வி பயிலும் இடமாக உங்கள் கல்வி நிலையம் விளங்கவேண்டியது உங்கள் பொறுப்பு. எந்த காரணம் கொண்டும், மாணவ மாணவிகள் ஒருவரை ஒருவர் கிண்டல், கேலி செய்வதோ, மிரட்டுவதோ, அடிப்பதோ கூடாது என்பதை தெளிவாக உங்கள் பள்ளியில் எல்லோருக்கும் தெரியும் விதமாக அறிவியுங்கள். இந்த விஷயத்தில் கண்டிப்பு மிகவும் முக்கியம்.
கல்வி நிலையங்கள் மாணவ மாணவிகளுக்கிடையே நடக்கும் கிண்டல், கேலி, மிரட்டல் இவற்றை கையாளுவது எப்படி?
1. குழந்தைகள் எதிர்பார்க்காத நேரத்தில் வகுப்பறைகளுக்கு ஆசிர்யர்களை அனுப்பி கண்காணியுங்கள் (விளையாட்டு மைதானம், உணவு இடைவேளை)
2. பொதுவாக கிண்டல், கேலி மற்றும் மிரட்டல்கள் நடைபெறும் இடங்கள்
- விளையாட்டு மைதானம்
- ஸ்கூல் பஸ்
- கேண்டீன்
- கழிப்பறை
3. வகுப்பறைகளில் மாணவர்கள் நடத்தையை கவனியுங்கள். தள்ளுவது, அடிப்பது, உதைப்பது போன்ற விஷயங்கள் நடக்கிறதா என்று கவனியுங்கள். பட்டப்பெயர் வைத்து கிண்டல் செய்வது, மிரட்டுவது இதுபோன்ற விஷயங்களையும் கவனியுங்கள்.
4. இதுபோன்ற விஷயங்களை உடனடியாக தடுத்து நிறுத்துங்கள். இதில் ஈடுபடும் மாணவன் அல்லது மாணவியை, தனியாக அழைத்து, கண்டியுங்கள். இப்படி பிறரை கிண்டல், கேலி செய்வதோ, மிரட்டுவதோ, அடிப்போதோ தவறு, இது போன்ற நடத்தை பள்ளியில் அனுமதிக்கப்படாது என்று தெளிவாக சொல்லுங்கள். எந்த குழந்தை மிரட்டப்பட்டதோ அதனிடம் மன்னிப்பு கேட்கச் சொல்லுங்கள்.
5. இது போன்ற நடவடிக்கை எப்பொழுதோ ஒரு முறை நடுக்கிறது, அதோடு நின்றுவிடுகிறது என்று எண்ண வேண்டாம். தொடர்ச்சியாக கண்காணிப்பது அவசியம்.
6. பொதுவாக கிண்டல், கேலி, மிரட்டலுக்கு ஆளாக்கப்படும் குழந்தைகளிடம் கீழ்கண்ட மாற்றங்கள் தெரியும்
- சோர்வு, தனிமை, வருத்தம்
- பாடத்திலும், பிற பள்ளி நடவடிக்கைகளிலும் நாட்டம் இல்லாமை
- நண்பர்கள் இல்லாமால் தனியாக இருப்பது
- குழு நடவடிக்கைகளில் நாட்டம் இல்லாமல் தனித்து இருப்பது
- ஒரு குறிப்பிட்ட வகுப்பையோ, நடவடிக்கையோ தவிர்ப்பது ( பீ.டீ பீரியட்)
- குறிப்பிட்ட நாட்களில் உடல்நிலை காரணம் சொல்லி விடுமுறை எடுப்பது
7. இது போன்று துவண்டு காணப்படும் குழந்தைகளுக்கு நீங்கள் கிண்ட, கேலி, மிரட்டலை சமாளிக்க சில ஆலோசனைகள் தரலாம்
- கிண்டல், கேலி நடந்தால் அதை சட்டைசெய்யாமல் இருப்பது
- அப்படியும் தொடர்ந்தால் அந்த இடத்தை விட்டு உடனடியாக விலகுவது
- மிரட்டும் மாணவன் அல்லது மாணவியிடம், இதை பற்றி ஆசிரியரிடம் புகார் செய்யப்படும் என்று சொல்லுவது
- உடனடியாக புகாரும் செய்வது
8. உங்கள் பள்ளியில் “பாதுகாப்பான அறை” ஒன்றை உருவாக்குங்கள். வகுப்பறையில் பாதுகாப்பின்றி உணரும் குழந்தைகள் எப்பொழுது வேண்டுமானாலும் அங்கே வரலாம் என்று அறிவியுங்கள்.
9. தேவையான சமயங்களில் பெற்றோர்களை சந்தித்து பேசுங்கள்
(c) ஓரினம். எங்கள் காப்புரிமை கொள்கையை படிக்கவும்