கழிப்பறை வசதி
திருனர்கள் (Transgenders) குழந்தைகள் சந்திக்கும் பிரச்சனைகளில் முக்கியமான ஒன்று, பள்ளி மற்றும் கல்லூரிகளில் கழிப்பறை வசதி. திருனர்கள் பலர் தங்களது பிறப்பு பாலுக்கான கழிப்பறையை உபயோகிக்க விரும்புவதில்லை. உதாரணமாக, ஆணாக பிறந்தாலும், தன்னை பெண்ணாக அடையாளம் காணும் (MTF) ஒரு திருநங்கை, ஆண்களுடன் கழிப்பறையை உபயோகிக்க விரும்ப மாட்டார். திருனர் குழந்தைகள் “கழிப்பறை பிரச்சனையாலையே” தங்கள் படிப்பை கைவிடுகிறார்கள் என்பகிறது ஒரு கணக்கீடு. திருநங்கை மற்றும் திருநம்பிகள், அவர்கள் விரும்பும் கழிப்பறையை உபயோகிப்பதில், நியாயமாக பார்த்தால் எந்த பிரச்னையும் இருக்கக் கூடாது. அனால் சில சமயங்களில், மற்ற திருனர் அல்லாத மற்ற மாணவ மாணவிகள், இதை எதிர்க்கக்கூடும். பல வழியில் இந்த பிரச்சனையை அணுகலாம்.
- உங்கள் வளாகங்களில் ஆண்-பெண் இருவருக்கும் பொதுவான (Unisex), ஒரு சமயத்தில் ஒருவர் மட்டுமே பயன்படுத்தக் கூடிய (Single occupancy) ஒரு கழிப்பறையை நிர்மானியுங்கள். குறைந்தபட்சம் ஒன்று, நடந்து போகக்கூடிய தொலைவில்.
- உங்கள் வளாகத்தில் அப்படிப்பட்ட கழிப்பறை தற்போது இல்லையெனில், பலபேர் பயன்படுத்தக் கூடிய கழிப்பறைகளில் ஒன்றை, ஆண்-பெண் இருவருக்கும் பொதுவான, ஒரு சமயத்தில் ஒருவர் மட்டுமே பயன்படுத்தக் கூடிய கழிப்பறையாக மாற்றுங்கள். எப்படி? ரொம்ப சுலபம். உள்ளே ஒரு தாழ்பாள். வெளிய “உபயோகத்தில் உள்ளது” என்ற ஒரு அடையாளம்.
- ஆசிரியர்களுக்கான கழிப்பறைகளில், ஒருவர் மட்டுமே பயன்படுத்தக்கூடிய கழிப்பறைகள் இருந்தால் அதை மாணவ, மாணவிகள் பயன்படுத்த அனுமதியுங்கள். யாருக்கு பிறருடன் பொதுவான கழிப்பறையை உபயோகிக்க விருப்பமில்லையோ, அவர்கள் ஆசரியர் கழிப்பறைகளை பயன்படுத்தலாம் என்று அறிவியுங்கள்.
- உங்களது வருங்கால கட்டிட திட்டங்களில் மறக்காமல் ஆண்-பெண் இருவருக்கும் பொதுவான, ஒரு சமயத்தில் ஒருவர் மட்டுமே பயன்படுத்தக் கூடிய கழிப்பறைகளை, எல்லா வளாகங்களிலும், சேருங்கள்.
கழிப்பறை உபயோகம் மனித உடல் தேவைகளில் அடிப்படையான ஒன்று. போதிய தனிமையில், சௌகரியமான கழிப்பறையை உபயோகிக்கும் கௌரவமும் திருனர்களான எங்களுக்கும் தேவை. இது நீங்கள் எங்களுக்காக ஸ்பெஷலாக செய்யும் பெரிய வசதி இல்லை, எங்களின் அடிப்படை உரிமை.
(c) ஓரினம். எங்கள் காப்புரிமை கொள்கையை படிக்கவும்