அறிமுகம்: திருனர்கள்
1. திருனர் (திருநங்கை,திருநம்பி) என்பவர் யார்?
ஒருவர் தன் பாலை (Sex) பற்றி எப்படி உணர்கிறார், அடையாளம் காண்கிறார் என்பது அவரது பாலுணர்வு அடையாளம் (Sexual Identity).
ஒருவர் தன் பாலை எப்படி வெளிபடுத்துகிறார் என்பது அவரது பாலுணர்வு நடத்தை (Sexual Behavior).
பெரும்பாலும் ஒருவரது உடல்ரீதியான பாலை (Biological or Physical sex) பொறுத்துதான் அவரது பாலுணர்வு நடத்தை அல்லது பாலுணர்வு அடையாளம் காணப்படும். இது போன்ற எதிர்பார்ப்பிற்குள் சேராமல், தங்களது உடல்ரீதியான பாலும், பாலுணர்வு நடத்தை / பாலுணர்வு அடையாளமும் வேறுபட்டு காணப்படுபவர்களை தான் திருனர் (திருநங்கை, திருநம்பி) (Transgender) அல்லது மாறுபட்ட பால் அடையாளம் கொண்டவர்கள் என்று அழைக்கிறோம்.
மருத்துவ வல்லுனர்கள், இது போன்ற மாறுபட்ட பால் அடையாளம் பல உயிரியல் ரீதியான காரணங்களால் ஒருவரின் பிறப்பில் நிர்ணயிக்கபடுகிறது என்று இப்பொழுது நம்புகிறார்கள். மாறுபட்ட பால் அடையாளம் கொண்டவர்கள் (திருநர்கள்) நம்மிடையே நூற்றாண்டு காலமாக வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். சமூகத்தில் அவர்கள் மேல் காட்டப்படும் வெறுப்பும், வேறுபாடும் இவர்களது வாழ்க்கையை கடினமான, கவலைகளும் காயங்களும் நிறைந்த ஒரு போராட்டமாக ஆக்கிவிடுகிறது.
மாறுபட்ட பால் அடையாளம் கொண்டவர்களில் பல வகையறாக்களை சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள்.
- பிறப்பால் ஒரு பாலும், மன அளவில் வேறு பாலாகவும் அடையாளம் காண்பவர்கள்
- சில சமயங்களில் எதிர் பாலினரின் உடைகளை அணித்து தங்களது பாலுணர்வை வெளிபடுதுபவர்கள் (மாற்றுடை அணிபவர்கள்/ Cross-dressers)
- பால் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் (Post-Operative)
- பால் மாற்று அறுவை சிகிச்சைக்கு முன் நிலையில் உள்ளவர்கள் (Pre-Operative)
இது போன்ற வழக்கதிற்குள் அடங்காத பல அடையாளங்களை கொண்டவர்களை கூட்டாக அழைக்கும் சொல்தான் “திருனர்கள்” (அல்லது) “மாறுபட்ட பால் அடையாளம் கொண்டவர்கள்”.
இவர்களை பொதுவாக இரண்டு வகைக்குள் அடக்கலாம் –
- பிறப்பால் பெண்பாலும், மன அளவில் ஆண்பாலாகவும் அடையாளம் காண்பவர்கள் (அல்லது) திருநம்பி (Female To Male)
- பிறப்பால் ஆண்பாலும், மன அளவில் பெண்பாலாகவும் அடையாளம் காண்பவர்கள் (அல்லது) திருநங்கை(Male To Female)
2. மாற்றுடை அணிபவர்கள் (Cross-dressers) என்பவர் யார்?
எதிர் பாலினரின் உடைகளை அணிந்து தங்களது பாலுணர்வை வெளிபடுதுபவர்களை ‘மாற்றுடை அணிபவர்கள்’ என்று அழைக்கிறோம்.
எதிர் பாலீர்ப்புடைய ஆண்கள் மற்றும் பெண்கள் (Heterosexual Men and Women) , ஈரர் (Bisexual Men and Women), நங்கைகள் (Lesbians), நம்பிகள் (Gays) என்று எல்லா வகையினரிடையே இதுபோன்ற மாற்றுடை அணிபவர்கள் இருக்கிறார்கள். இதில் பல ஆண்கள் திருமணம் , குழந்தைகள் என்று சராசரி வாழ்க்கையை மேற்கொண்டு , தங்களது இந்த மாறுபட்ட நடத்தையை ரகசியமாக வைத்துகொள்வதுண்டு. இவர்கள் திருனரை போன்று தங்களின் பாலை மாற்றவேண்டும் என்று எண்ணுவதில்லை.
3. மாறுபட்ட பால் அடையாளம் எதனால் ஏற்படுகிறது?
இதற்கான உறுதியான காரணம் யாருக்கும் தெரியாது. குழந்தை கருப்பையில் இருக்கும் பொழுது எதிர்பால் ஹார்மோன் கருவுடன் கலப்பதால் ஏற்படலாம் அல்லது ஒருவகையான மரபணு மாற்றம் மூலமாக மூலம் ஏற்படலாம் என்று வல்லுனர்கள் கருதுகிறார்கள். இதுபோன்ற மாறுபட்ட பால் அடையாளம் கொண்டவர்கள் தங்கள் பால் சம்மந்தப்பட்ட மன போராட்டத்தின் காரணமாக , ஒரு கட்டத்திற்கு பிறகு தங்களின் பிறப்பு/உடல் ரீதியான பாலுடன் வாழமுடியாது என்று உணர்கிறார்கள்.
4. பால் சம்மந்தப்பட்ட மன போராட்டம் (Gender Dysphoria) என்றால் என்ன?
‘பால் சம்பந்தப்பட்ட மன போராட்டம்’ என்பது ஒரு மனோதத்துவ விஞ்ஞான சொல் (Psychological term). ஒருவரின் பிறப்பு/உடல் ரீதியான பாலும் மன ரீதியான பாலும் மாறுபடும் பொழுது அதனால் அவருக்கு ஏற்படும் மன வேதனை, சஞ்சலம், தவிப்பு, மற்றவர்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்றாற்போல் நடக்கவேண்டும் என்ற கட்டாயத்தால் ஏற்படும் கவலை – இவை அனைத்தையும் கூட்டாக குறிக்கும் சொல் இது. திருனர்கள் அனைவருக்கும் இந்த பால் சம்மந்தப்பட்ட மனப்போராட்டம் ஏற்படுகிறது.
பல குழந்தைகள் தங்களின் சிறிய வயதிலிருந்தே இந்த மன போராட்டத்தை உணர்கிறார்கள். ஒரு சிலருக்கே இதை எதிர்கொள்ள பெற்றோர்களின் ஆதரவு கிடைக்கிறது. முக்கால்வாசி குழந்தைகள் இதைபற்றி மனம் திறந்து பேசகூட முடியாமல் மனபுழுக்கமும், மனப்போராட்டமும் அடைகிறார்கள். இதை எளிதாக வார்த்தைகளால் விவரிக்க முடியாது, எல்லோராலும் இதை புரிந்துகொள்ளவும் முடியாது. தங்களின் உள் தோற்றத்தையும், வெளி தோற்றத்தையும் பொருத்த வேண்டிய இந்த தவிப்பு, சுயவேட்கையாக துவங்கி மெல்ல மெல்ல இவர்களின் வாழ்க்கையின் ஒரே குறியாக மாறிவிடுகிறது. தங்கள் உடலே தங்களை அழுத்தும், சிறை படுத்தும் இந்த வேதனை தாங்கிக்கொள்ள முடியாத ஒன்று. உலகில் எல்லோரையும் போல உள் மற்றும் வெளி தோற்ற்றம்/பால் பொருந்தும் ஒரு சாதாரண வாழ்க்கை கூட இவர்களுக்கு எட்டா கனியாக ஆகிவிடுகிறது. உடல், பொருள் , ஆவி என்று எதிலும் அமைதியில்லாமல் இவர்கள் தவிக்கிறார்கள்.
திருனர்களில் பலர், ஒரு கட்டத்திற்கு மேல், இந்த மனப்போரட்டத்தை தாங்க முடியாமல, இந்த தவிப்பிற்கு ஒரு முடிவை காண, தங்களின் மன ரீதியான பாலை அடைய, தாங்கள் யார் என்ற உண்மையான நிலையை காண, அவர்களது பால் மாற்று பயணத்தை தொடங்குகிறார்கள்.
5. பால் மாறுதல் (Gender Transition) என்றால் என்ன?
பால் மாறுதல் என்பது எல்லா திருனரும் தங்கள் வாழ்வில் எதிர்கொள்ளும் ஒரு கட்டம். இதில் அவர்கள் தங்களது உடல் மற்றும் தோற்றத்தை தங்கள் மன ரீதியான பாலிற்கு ஏற்றாற்போல் மாற்றி அமைக்கிறார்கள். இதை ரகசியமாக மேற்கொள்ள முடியாது என்பதால், இவர்கள் தங்களை பற்றிய இந்த உண்மையை அவர்கள் வாழ்க்கையில் உள்ள அனைவரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டியது ஒரு கட்டாயம்.
குடும்பத்தினர், உற்றார் உறவினர், நண்பர்கள், உடன் வேலை செய்பவர்கள் என்று எல்லாரிடமும் இதை அவர்கள் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்பது ஒரு அவசியமாகிறது. இந்த மாற்றத்தின் பொழுது அவர்கள் பலரால் கேலி, கிண்டல், மன வேதனை , வேற்றுமைப்படுத்துதல் போன்ற கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள். இந்த கட்டத்தில் அவர்களுக்கு அனைவரின் அன்பும் ஆதரவும் மிகவும் அவசியம்.
பால் மாறுதலில் முதல் படி, மன ஆலோசனை மற்றும் மன பயிற்சி, இது அவர்களுக்கு ஏற்படும் மன மற்றும் மனோதத்துவ பிரச்சனைகளை எதிர்கொள்ள உதவுகிறது. அடுத்த படி, பல வருடங்கள் நீடிக்கும் ஹார்மோன் சிகிச்சை. கடைசியாக அவர்கள் விரும்பினால் பால் மாற்று அறுவை சிகிச்சை.
6. ஹார்மோன் சிகிச்சை (Hormonal Therapy) என்றால் என்ன?
திருநங்கைகளுக்கு “எஸ்ட்ரோஜென்” (Estrogen) எனப்படும் பெண் ஹார்மோன் செலுத்தப்படுவதும் , திருநம்பிகளுக்கு “டெஸ்டோஸ்ட்ரோன்” (Testosterone) எனப்படும் ஆண் ஹார்மோன் செலுத்தப்படுவத்தையும் தான் ஹார்மோன் சிகிச்சை என்று அழைக்கிறோம். இதனால் இவர்கள் தாங்கள் விரும்பும் மன ரீதியான பாலிற்கு ஏற்ப உடல் மற்றும் தோற்றத்தை அடைய முடிகிறது. இவர்களின் வயது, உடல் உட்பட பல காரணங்களை பொறுத்து சில வாரங்கள் முதல் பல ஆண்டுகள் வரை இந்த சிகிச்சை நீடிக்கும். இந்த சமயத்தில் பலர் தங்கள் பால் சம்மந்தப்பட்ட மன போராட்டத்திலிருந்து விடுதலை அடைந்ததை போல் உணர்கிறார்கள். சிலருக்கு இந்த சமயத்தில் மன அழுத்தம், மன குழப்பம், தேவையற்ற கோபம் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். தகுந்த மருத்துவ ஆலோசனைக்கு பிறகு, ஒரு அனுபவமுள்ள மருத்துவரின் மேற்பார்வையுடன் மட்டுமே இந்த ஹார்மோன் சிகிச்சை மேற்கொள்ள பட வேண்டும், இல்லையெனில் மிகவும் ஆபத்தான விளைவுகளை இது உண்டாக்கும். ஆனால் போதிய பண வசதி, உதவி இல்லாததால் பல திருனர்கள் மருத்துவ மேற்பார்வை இல்லாமல் தாங்களாகவே இந்த சிகிச்சையை மேற்கொள்கிறார்கள் – இது வருத்தப்படவேண்டிய ஒரு நிதர்சனம்.
திருநம்பிகள் சற்று எளிதாக தாங்கள் எதிர்பார்க்கும் ஆண் தோற்றத்தை அடைய முடிகிறது. “டெஸ்டோஸ்ட்ரோன்” ஹார்மோன் இவர்களது குரலை கட்டை படுத்தி, தாடி மீசை போன்ற ஆண் அடையாளங்களை அளிக்கிறது. அதேசமயம் உயரம் பெரிதாக மாறுவதில்லை.
திருநங்கைகளுக்கு ஹார்மோன் சிகிச்சை மெதுவாகவே பலன் அளிக்கிறது. “எஸ்ட்ரோஜென்” ஹார்மோன் இவர்களது குரலை மாற்றுவதில்லை.
தாடி மீசை இவற்ற்றை நீக்குவதில்லை. இதற்கு தனியாக லேசர் (LASER) அல்லது எலெக்ட்ரோலிசிஸ் (Electrolysis) சிகிச்சை முறைகளை மேற்கொள்ள வேண்டும்.
7. பால் மாற்று அறுவை சிகிச்சை (Sex Reassignment Surgery) என்றால் என்ன?
பால் மாற்று அறுவை சிகிச்சை என்பது ஒருவரது உடலை அவரது மன ரீதியான பாலிற்கு ஏற்ப நிரந்தரமாக மாற்றி அமைக்கும் ஒரு அறுவை சிகிச்சை. திருநங்கைகளுக்கு அவர்களது ஆண் உறுப்பு (Penis) மற்றும் scrotal தசையை (Scrotal Tissue)அகற்றுவதும், திருநம்பிகளுக்கு மார்பகங்களை அகற்றி தட்டையான மார்பை ஏற்படுத்துவதும் மற்றும் கருப்பைகளை (Uterus and Ovaries) அகற்றுவதும் இந்த அறுவை சிகிச்சையின் முறைகள்.
திருநம்பிகள் பலர் ஒரு அறுவை சிகிச்சை அவர்களுக்கு திருப்தி அளிக்காததாலும், மற்றும் தங்கள் பண வசதியை பொருத்தும் பல அறுவை சிகிச்சைகளை மேற் கொள்கிறார்கள்.
திருநங்கைகள் தாடி மீசை இவற்றை அகற்றும் லேசர்/எலெக்ட்ரோலிசிஸ் சிகிச்சை, மார்பகங்களை ஏற்படுத்தும் சிகிச்சை (Breast Augmentation) , Adams apple குறைக்கும் சிகிச்சை(Adams Apple reduction) , முக அழகு சிகிச்சை, செயற்கை கூந்தல் சிகிச்சை (Hair transplantation) என்று பல சிகிச்சை முறைகளை மேற்கொள்கிறார்கள்.
இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால், எல்லா திருனர்களும் இந்த சிகிச்சை முறைகளை மேற்கொள்ள வேண்டும் என்று எண்ணுவதில்லை. மேலும் அப்படி எண்ணினாலும் பலர் அவர்களது பண, மருத்துவ வசதி காரணமாக சிகிச்சை முறைகளை மேற்கொள்ளுவதில்லை.
8. பால் மாற்று அறுவை சிகிச்சை தர நிர்ணயங்கள் (Standards of Care) என்றால் என்ன?
“வேர்ல்ட் ப்ரொப்பசனால் அசோசியேசன் ஆப் ட்ரான்ஸ்ஜெண்டர் ஹெல்த்” ( World Professional Association for Transgender Health – WPATH, formerly known as the Harry Benjamin International Gender Dysphoria Association, or HBIGDA) எனப்படும் சர்வதேச அளவிலான திருனர் ஆராய்ச்சி மையம், பால் மாற்று அறுவை சிகிச்சைக்காக மருத்துவ மற்றும் மனநல தர நிர்ணயங்களை வழிமுறை படுத்தியிருக்கிறது. இத தர நிர்ணயங்கள் மூலம் ஒருவர் எப்பொழுது பால் மாற்று அறுவை சிகிச்சை மற்றும் ஹார்மோன் சிகிச்சைக்கு தயார் ஆகிறார் என்பது நிர்ணயிக்க படுகிறது. இந்த தர நிர்ணயங்களின் படி , ஒருவர் பால் மாற்று அறுவை சிகிச்சைக்கு முன்பு குறைந்தபட்சம் ஒரு வருடம் தாங்கள் மன ரீதியாக உணரும் பாலில் சராசரி வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டியது அவசியம். இந்த காலத்தில் அவர்கள் தகுதிபெற்ற மருத்துவரின் கண்காணிப்பில் தங்களது புதிய பாலில் மன மற்றும் உடல் ரீதியாக வாழ்ந்து , அந்த வாழ்க்கையை விரும்பி ஏற்றுக்கொள்ள வேண்டும், இதன் பிறகே அவர்கள் பால் மாற்று சிகிச்சைக்கு தயார் என்று அவர்கள் கருதப்படுவார்கள். இதில் மேலும் பல தர நிர்ணயங்கள் அடங்கும், மேலும் விவரங்களுக்கு ஒரு அனுபவமுள்ள மருத்துவரை சந்தித்து பேசலாம்.
மூலம்: pflag.org
(c) ஓரினம். எங்கள் காப்புரிமை கொள்கையை படிக்கவும்