கவிதை: ஆசை
ஸ்ரீ தனது ‘சின்ன சின்ன ஆசை’ கவிதையில் மிக்க அழகாக வீட்டாருடனும், சுற்றத்தாருடனும், இப்படியெல்லாம் இருந்தால் இனிமையாக இருக்கும் என்று, தனது ஆசைகளை, கனவுகளை முன்வைத்தான். படித்துப் பூரித்தேன். உடனே எனக்கு தோன்றியது நாம் எத்தனை முறை நினைத்திருப்போம், சமூகத்தில் இப்படிப்பட்ட ஏற்பு, அங்கீகரிப்பு இருந்தால் நன்றாக இருக்கும் என்று. அவற்றை கொண்டு இந்த ஆசை பாடலை மேலும் வளர்க்கலாம் என்று தோன்றியது. இதோ என் கவிதை.
ஆணும் ஆணும் காதல் பண்ணா அந்தப் படம் ஆறு மாசம் ஓட ஆசை
அப்பா ரெண்டு இருக்கும் பிள்ளையைச் சமுகம் தப்பாய்த் தூற்றாதிருக்க ஆசை
எப்போ உனக்குக் கல்யாணம் என எவர எவரோ கேட்கதிருக்க ஆசை
அக்கம் பக்கம் வீட்டு திருமணத்திற்குச் சென்றால் பெற்றோரை அவர்கள் நச்சரிக்காதிருக்க ஆசை
நாட்டமை புருசனை நாலு பேரு நல்லா பேசி மதிக்க ஆசை
நாட்டுப்புறத்துல குப்பனும் சுப்பனும் கைப்புடிக்க நெனச்சா அதுல சாதி பாக்காம சேர்த்து வைக்க ஆசை
ஊரு சாமி பூசாரி உறவு எல்லாம் வந்து நின்னு பேரு சொல்லி மாலை மாத்த ஆசை
நேரு இது மாறு இதுன்னு வேருபடுத்தாம கூடி வாழ ஆசை
பெண்ணும் பெண்ணும் புது வாழ்வு தொடங்க நினைத்தால் அதை அரசு அங்கீகரிக்க ஆசை
மலிவு விலை மாதச் சரக்கும் அவர்க்குக் குடும்பமென முறையாய்க் கிடைக்க ஆசை
எண்ணும் எழுத்தும் ஏகபோகமும் இல்லை எனினும் ஏக்கம் காதல் ஒன்றுதான், அதனால்
வண்ணம் பல வண்ணமாய் வாழ எந்தத் தகுதியும் தடையாய்த் தலையிடாதிருக்க ஆசை
எந்த அரவானரும் இங்கு அஞ்சாமல் கேஞ்சாமல் நெஞ்சம் நிமிர்ந்து வாழ ஆசை
அந்தப் பள்ளியும் கல்லூரியும் கொஞ்சம் மனம் திறந்து தன்பான்மை மாணவரை ஏற்க ஆசை
நங்கை நம்பி ஈரர் திருனறெல்லாம் வண்ணக் கொடியேந்தி ஊர்வலமாய்ச் செல்லுகையில்
எதுவும் மாறவில்லை எல்லோரும் ஓரினம் என அங்குள்ள மனிதரெல்லாம் வந்து அணைத்துக் கொள்ள ஆசை
Very nicely written Bala. Loved your social take. Naatamai purushan, Kuppan-suppan, Malivu vila madha charakku are my favorites!