முனைவர் பாப்பையாவின் மூர்கத்தனம்
Video: https://www.youtube.com/watch?v=etQ4yViPuyc&feature=youtu.be&t=41m50s
“மூர்க்கம்” – பொருள், மொழிபெயர்ப்புகள் மற்றும் பயன்பாடு
காலை பத்து மணிக்கு, முனைவர். பாப்பையா தலைமையில் மூர்க்கமன்றம்! தவறியும் பார்க்காதீர்!
அன்புள்ள முனைவர். சாலமன் பாப்பையா அவர்களுக்கு,
“டில்லி மாநகரத்திலே ஒரு பாலர் ஊர்வலங்களைப் பார்த்தீர்களா?” எனப் புலம்பி, என்னைப்போன்ற தன்பால் ஈர்ப்பு கொண்டோரை “ஒரு பாலர்” என்று அடையாளம் கொண்டதற்கு நன்றி. திருநங்கை, நங்கை, நம்பி, ஈரர் என்கிற எங்கள் அனைவரையும் ஒரு பாலர் எனும் சொல்லால் உலகத்தமிழர்கட்கு அறிமுகப்படுத்தியதற்கும் நன்றி!
உங்களின் அந்த முதல் வரியைக் கேட்டதும் என் மனதில் ஓடிய கருத்துக்களை இங்கு பதிவுசெய்கின்றேன்.
1. சமுதாய மறுமலர்ச்சிக்காக பாடுபட்ட அறிஞர் அண்ணாவின் ‘ஒன்றே குலம், ஒருவனே தேவன்!’ எனும் உயர்ந்த கருத்தைத் தன்பால் ஈர்ப்பு கொண்டோரின் அடிப்படை உரிமை போராட்டத்திற்கு ஏற்றார் போல் மாற்றி, ‘ஒன்றே பால்! நாம் அனைவரும் ஓரினம்!’ எனும் தாரகமந்திரத்தைச் செதுக்க உதவியாய் இருந்தவர் என்று நாளைய சமுதாயம் உங்களைப் பற்றிப் பெருமையாய்ச் சொல்லக்கூடும்!
2. ஆண்மை, பெண்மை என்கிற பாலின இருமத்தை (gender binary) மட்டும் அல்லாமல், பால் இருமத்தையே (the notion that there are only two sexes) உடைத்து சாதனை புரிந்தமைக்கு நாளைய சமுதாயம் உங்களை என்றென்றும் போற்றும்!
உங்களுக்கான தனி ஒரு அரியாசனத்தை நான் கட்டிக்கொண்டிருக்கும் வேளையில், உங்களின் இரண்டாம் வரி, அங்கவையையும் சங்கவையையும் ‘பொங்கவைத்து’ கேலிப் பொருளாய் பயன்படுத்த (’பொங்கவை’க்க) உதவிப் புரிந்த தமிழ் அறிஞர் என்கிற பதக்கத்திற்கு அருகில் மற்றொரு பதக்கத்தைத் தைக்கிறது!
பால், பாலினம், பாலீர்ப்பு ஆகியவற்றின் நுணுக்கங்களை உணராமல் நீங்கள் பதிவு செய்த கருத்து, புரட்சியின் விளிம்பினைத் தொடுவது போல் தெரிந்தாலும், வக்கிரத்தின் ஆழத்திலே தான் சிக்கித்தவிக்கிறது. தமிழ் அறிஞராய் இருந்தும் “ஒரு பாலர்” என்ற பொருந்தா சொல்லாடலை நீங்கள் பயன்படுத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனக்குத் தெரிந்து ஓர் பாலர் மட்டுமே பங்கு கொள்ளும் ஊர்வலங்களுள் ஒன்று இயற்கை எய்தியவரின் இறுதி ஊர்வலம்! டில்லியில் நடந்த அந்த “ஒரு பாலர்” ஊர்வலம், மனித உரிமைகளின் இறுதி ஊர்வலமென பலர் கருதினாலும் அதனை நான், பாலீர்ப்பு மாறுபாடு (diversity of sexual orientation) பற்றிய அறியாமை, வெறுப்பு (homophobia) ஆகியவற்றின் இறுதி ஊர்வலமாய்க் காண்கிறேன்! உங்களின் ஆருயிர் தோழர்களாய் இருந்த அவை இரண்டும் (அவர்கள் இருவரும்) இறந்துப்பட்டது உங்களுக்கு வருத்தத்தை அளிக்கத்தான் செய்யும். நாங்கள் வருடாவருடம் அவற்றிக்கு திதி செய்வோம் என சூளுரைத்து உங்களுக்கு ‘ஆறுதலை’ அளிக்க விரும்புகிறோம்! டில்லியில் உலா வருவதாய் நீங்கள் எண்ணும் பாலியல் சிறுபான்மையினர் தமிழகம் எங்கும் கிராமங்கள் முதல் நகரங்கள் வரை இருப்பதை உங்களுக்கு உணர்த்த விரும்புகிறேன்!
மொழி, ஆடை, பழக்கங்கள் ஆகியவற்றில் மேற்கத்திய ஊடுருவல்கள் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்துவது உங்கள் தனி கருத்து. ‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’ என்ற முதுமொழியில் எனது நம்பிக்கை இருந்தாலும், உங்களின் கருத்தினை நான் மதிக்கிறேன். மேற்கத்திய மொழிகளின் ஊடுருவலைக் கண்டு நீங்கள் அஞ்சும் அதே வேளையில், இந்தியாவில் பல மொழிகள் இருப்பினும் தமிழ் இதுநாள் வரையில் வாழ்ந்து, வளர்ந்து வருவதை நினைவில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இது வரையில் உங்களின் பேச்சினைப் பொறுமையுடன் கேட்டு வந்திருப்பினும் நீங்கள் தன்பாலீர்ப்பை வெளிநாட்டு இறக்குமதி என்றும் நகரமயமாக்கலின் விளைவு என்றும் தட்டிக் கழிக்க விழைவதை வன்மையாக கண்டிக்கிறேன். ‘அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்’ என்பதற்கிணங்க உங்கள் சொல்லிலடங்கா அச்சம் கொஞ்சம் வரம்பு மீறிச் செல்வதை இங்கு நான் காண்கிறேன்! மொழி, கலாச்சாரம் ஆகியவற்றில் ஆராய்ச்சி மேற்கொண்ட உங்களுக்கு இந்த மண்ணின் தன்பாலீர்ப்பு வாசத்தைப் பற்றிய அறிமுகம் கூட இல்லாதது வேடிக்கையாய் இருக்கிறது. உங்களுக்கு போதனை சொல்லவோ, பாவ மன்னிப்பு கொடுக்கவோ எனக்கு நேரமில்லை!
நிகழ் காலத்து நிதர்சனம் பற்றிய தகவல்களை அறியாதவராய் நீங்கள் இருப்பதை நான் உணர்கிறேன்! எடுத்துக்காட்டிற்கு, தர்மபுரியிலும், தமிழக அரசியலிலும் குடும்பங்களும் உறவுகளும் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளை மனதில் கொள்ளாமல் காதலையும், தனி மனித சுதந்திரத்தையும் இகழ்ந்து பேசும் நீங்கள், ஒரு படி மேலே சென்று இருவருக்கு இடையே மலரும் காதல், குடும்பத்தையும், திருமணத்தையும், உறவுகளையும் சிதறச்செய்யும் என குரலை உயர்த்தி கைத்தட்டல் பெறும் அதே வேளையில், ஆணாதிக்க சமுதாயத்தின் பிடியில் சிக்கித் தவிக்கிறீர்கள்! பெரியாரும் பாரதியும் அரும்பாடு பட்டு மாற்றிய சமுதாயச் சிந்தனைகளை, ஏற்படுத்திய ஆண் பெண் சமத்துவத்தை வேரறுக்கும் வண்ணமாய் நீங்கள் செயல்பட்டாலும், உங்கள் எண்ணங்கள் நிறைவேறாமல் இருப்பதற்கு அமைதியான வழியில் எல்லா முயற்சிகளையும் முற்போக்கு வாதிகள் மேற்கொள்வார்கள் என ஆழமாக நம்புகிறேன்!
படித்த குடும்பத்து பெண்களை ‘எங்கெங்கோ எங்கெங்கோ போகுது’ என்று கூறி எள்ளி நகையாடுவதையும், பெண்கள் விவாகரத்து கேட்காமல் வீட்டோடு அடங்கி இருக்க வேண்டும் என்று நாகூசாமல் பேசுவதையும் ஒரு போதும் ஏற்க முடியாது!
தமிழ் நாட்டின் பெண்களையும். தன்பாலீர்ப்பு கொண்டோரையும் இந்த பட்டிமன்றம் மிகவும் காயப்படுத்தி உள்ளது! இது போன்ற கருத்துக்களை இனி பதிவு செய்வதைத் தவிர்ப்பதே நல்லது! உங்களோடு மேடையில் அமர்ந்திருந்த அறுவரும் தங்கள் எதிர்ப்பினைப் பதிவு செய்யாததால் அவர்களும் உங்களின் கருத்துக்களோடு உடன்பாடு இருப்பதாகவே நான் காண்கிறேன்! சமுதாய சமநிலையைக் குலைக்கும் வகையில், ஆணாதிக்க தோரணையிலும், சிறுபான்மையினருக்கு எதிராகவும் கருத்துக்களை வெளியிட்டதற்காக நீங்கள் அனைவரும் உங்கள் மனசாட்சியின் கேள்விகட்கு பதில் சொல்லுங்கள். கருத்து நிலையில் மாற்றமோ/ மன்னிப்பு கோரும் பக்குவமோ வராத வரை உங்கள் எழுவரின் பொதுவுரைகளைப் புறக்கணிப்பேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன்! இது என் தனிப்பட்ட நிலைபாடாய் இருப்பினும் என் எண்ணங்கள் தமிழகத்தில் வாழும் பலரின் கருத்தினைப் பிரதிபலிக்கிறது என்று நான் நினைக்கிறேன்! பாரதியின் வேடிக்கை மனிதர்கள் இன்றும் உலா வருவதை எண்ணி வருத்தமடையும், சிறுபான்மை!
“தேடிச் சோறுநிதந் தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையானபின் மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?”
– பாரதி
நன்றி: பூங்கோதை அம்மா (சரிபார்த்தல்/ பிழை திருத்தல்)
அங்கவை சங்கவையை ‘பொங்கவைத்த’ போதே இவர் மேலிருந்த மதிப்பு போய்விட்டது. இப்பொழுது பாலியல் சிறுபான்மையினரை கேலி செய்து இப்படி பேச்சு வேறு! வெட்கக்கேடு!
அருமையான, துணிவான கட்டுரை. நன்றி அரவிந்த்.