ஊடக வெளியீடு: சென்னை வானவில் சுயமரியாதை பேரணி 2024
தமிழ்நாட்டில் LGBTIQA+ சமூகத்திற்கு பாகுபாடு இல்லாத ஆதரவு வேண்டும்
வானவில் சுயமரியாதை பேரணி ஞாயிற்றுக்கிழமை 30, 2024, பிற்பகல் 3:30 மணிக்கு, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து தொடங்குகிறது.
Click here to download PDF
2009 இல் தொடங்கிய சென்னை வானவில் சுயமரியாதை இயக்கம் இந்த ஆண்டு, 2024-ல், 16-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. ‘நாங்கள் யார்’ அல்லது ‘யாரை விரும்புகிறோம்’ என்பதற்காக, எங்களது உரிமைகளை மறுக்கும் சமூக விதிமுறைகளை மாற்றுவதற்கான எங்கள் பொறுப்பை இந்த மாதம் உறுதிப்படுத்துகிறோம்.. நம் வீடுகளில் தொடங்கும் இரு பாலினம், ஆணாதிக்கம் மற்றும் எதிர்பாலீர்ப்புத்தன்மை ஆகியவற்றில் வேரூன்றிய அடக்குமுறை, கல்வி மற்றும் சுகாதார அமைப்புகள், வேலைவாய்ப்பு மற்றும் பொது இடங்கள் உட்பட பல்வேறு இடங்களில் தொடர்கிறது. வானவில் சுயமரியாதை மாதம் என்பது எங்கள் இருப்பு, கண்ணியம் மற்றும் சுயமரியாதையை பிரதான சமூகத்தில் நிலைநிறுத்துவதற்கும், முழுமையான குடிமக்களாக இருப்பதற்கான எங்கள் உரிமைகளை உணர்ந்து கொள்வதற்கும் ஒரு வழியாகும்.
நாங்கள் (தமிழ்நாட்டிலுள்ள LGBTIQA+ சமூகங்கள் மற்றும் தோழமையர்கள்), இது தொடர்பான சமீபத்திய முற்போக்கான தீர்ப்புகளுக்காக மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றத்தைப் பாராட்ட விரும்புகிறோம்::
(அ) பாலின உறுதிப்படுத்தல் அறுவை சிகிச்சைக்கான ஆதாரம் பெறாமல், தேசிய திருநர் அடையாள அட்டையின் அடிப்படையில் (மாநில அடையாள அட்டையுடன் கூடுதலாக) கஜெட் வெளியீட்டில் பாலின மாற்றம் செய்வது
(ஆ) பாலின உறுதிப்படுத்தல் அறுவை சிகிச்சைக்கான ஆதாரம் கேட்காமல், தேசிய திருநங்கை அடையாள அட்டையின் அடிப்படையில் மட்டுமே பாஸ்போர்ட்டில் பெயர் மற்றும் பாலினத்தை மாற்ற வெளியுறவு அமைச்சகம் ஒப்புக்கொண்ட உத்தரவு.
சமீபத்திய காவல்துறை பொது விழிப்புணர்வு பிரச்சாரத்தில் LGBTIQA+ நபர்கள் மற்றும் உரிமைகளைச் சேர்த்ததற்காகவும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினருக்கான பயிற்சியில் LGBTIQA+ சிக்கல்களைச் சேர்த்ததற்காகவும் அரசுக்கு நன்றி தெரிவிக்கிறோம்.
மேலும் கீழ்க்கண்டவற்றை மாநிலத்தில் அமல்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம
- LGBTIQA+ உறுப்பினர்களால் மாநில பாலினம், பாலியல்பு மற்றும் பால்பண்பு சிறுபான்மையினர் கொள்கை வரைவு (State Sexual and Gender Minorities Policy) அங்கீகரிக்கப்பட்டு முழுமையாக செயல்படுத்தப்பட வேண்டும்.
- திருநங்கைகள், திருநம்பிகள் மற்றும் இடைப்பாலினத்தவர்களுக்கான கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் (தனியார் மற்றும் பொதுத்துறை) கிடைமட்ட இடஒதுக்கீடுகளை அறிமுகப்படுத்தி செயல்படுத்துதல்.
- திருநங்கைகள் நல வாரியத்தின் தமிழ்ப் பெயரை திருநங்கை-திருநம்பி நல வாரியம் அல்லது திருநர் நல வாரியம் என மாற்ற வேண்டும். தற்போதைய பெயர் “திருநங்கை” என்பது திருநங்கைகளை மட்டுமே குறிக்கிறது திருநம்பிகளை இல்லை.
- தமிழ்நாடு மாநிலத்தில் இருந்து கிடைக்கும் திருநங்கைகளுக்கான சமூக நல நடவடிக்கைகள் திருநம்பிகள் மற்றும் இடைப்பாலின நபர்களுக்கும் கிடைக்கச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். “திருநங்கை” என்பது திருநங்கைகள் மற்றும் பெண்மை கொண்ட திருநர் மக்களை மட்டுமே குறிப்பதால், அனைத்து திருநர் மக்களையும் உள்ளடக்கிய சொல் அல்ல என்பதை அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களுக்கு மேலும் நினைவூட்டுகிறோம்.
- உச்ச நீதிமன்ற சுப்ரியோ தீர்ப்பின்படி (2023) இதை சட்டமாக்க மாநிலங்களுக்கு சுதந்திரம் இருப்பதால், மாநிலத்தில் தன்பாலீர்ப்பு உறவுகள் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்
- தமிழ்நாட்டில் உள்ள திருநர் கிளினிக்குகள், திருநர் மக்களின் கண்ணியத்தை மதிக்கும் தரப்படுத்தப்பட்ட வாடிக்கையாளர்-மைய நெறிமுறைகளைப் பின்பற்றுவதை உறுதிசெய்யவும், சுயமாக அடையாளபடுத்தப்பட்ட பாலினத்தின் உளவியல் நிர்ணயத்தின் ஒரு பகுதியாக உடல் பரிசோதனை தேவையில்லை, வயது வந்த திருநர் மக்களிடம் பாலினத்தை உறுதிப்படுத்தும் சிகிச்சைக்கு பெற்றோரின் ஒப்புதல் கேட்க கூடாது. மருத்துவமனைகளில் இரு விரல் சோதனைகள் போன்ற நெறிமுறையற்ற மற்றும் அறிவியலுக்கு மாறான நடைமுறைகள் தொடர்கின்றன, அவை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
- மேலும், பெயர்/பாலின மாற்றம் மற்றும் திட்டங்கள் போன்றவற்றை அணுகுவதற்கு மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பிற நிறுவனங்கள் மற்றும் துறைகள் மாநில திருநர் அடையாள அட்டையுடன் கூடுதலாக தேசிய திருநர் அடையாள அட்டையை அங்கீகரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். தற்போது நடைமுறையில் இருக்கும் கல்விச் சான்றிதழில் பெயர் மாற்றத்திற்கு அறுவை சிகிச்சை சான்று கேட்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும், ஏனெனில் இது NALSA தீர்ப்புக்கு முரணானது.
- LGBTIQA+ மற்றும் பாலின அடையாளங்களுடன் ஒத்துப்போகாத குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் பிரச்சினைகள் குறித்து கல்வி நிறுவனங்களின் ஊழியர்களுக்கு (கற்பிக்கும் மற்றும் கற்பிக்காத) பயிற்சி அளிக்க வேண்டும், மேலும் சுஷ்மா vs போலீஸ் கமிஷனர் வழக்கு உத்தரவின்படி, பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டங்களைப் பயன்படுத்த வேண்டும். உணர்திறன் பயிற்சியின் மூலம் 100,000 பேர் உணரப்பட்டதாக மெட்ராஸ் உயர் நீதிமன்றத்திற்கு அறிக்கைகள் கூறினாலும், உண்மையில் இது போன்ற உணர்திறன் பயிற்சிகள் நடைபெறவில்லை என்பதை பதிவு செய்ய விரும்புகிறோம்.
- சுய அறிவிப்பு மற்றும் இணைந்து வாழ்வதன் மூலம் அங்கீகரிக்கப்பட்ட பாரம்பரியம் சாராத குடும்பங்கள் கொண்ட பெரியவர்களுக்கு குடும்ப அட்டை இருக்க வேண்டும்.
- மாநிலம், மெட்ரிக், சர்வதேசம், மாண்டிசோரி மற்றும் மத்திய வாரியங்கள் முழுவதும் உள்ள ஆசிரியர்களுக்கு உணர்திறன் பயிற்சி நடத்துவதற்காக 2021 இல் உருவாக்கப்பட்ட NCERT ஆசிரியர்களின் பயிற்சிப் பாடத்திட்டத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
- தற்கொலை முயற்சிகள் மற்றும் தற்கொலைகள் உட்பட LGBTIQA+ நபர்கள் எதிர்கொள்ளும் மனநலப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும். தமிழ்நாடு மாநில மனநல ஆணையத்தால் உருவாக்கப்பட்ட LGBTIQA+ உள்ளடக்கிய மனநலக் கொள்கை இன்னும் செயல்படுத்தப்படவில்லை..
- மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட சொற்களஞ்சியத்தைப் பயன்படுத்தி, LGBTIQA+ சிக்கல்களை ஊடகங்கள் செய்தியாக்க வேண்டும்; மேலும் சமூக ஊடக சேனல்களில் வெறுப்பு பேச்சுக்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
- LGBTIQA+ மக்களுக்கு நட்பான பணியிட கொள்கைகள் மற்றும் நடைமுறைகளை உறுதி செய்வதில் தனியார் துறையின் ஆதரவு வேண்டும் மற்றும் CSR செயல்பாடுகள் மூலம் LGBTIQA+ சமூக முன்னேற்பாடுகள் வேண்டும்.
- பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்களில் உள்ள கழிவறைகள், தங்கும் விடுதிகள் மற்றும் பிற வசதிகள் ஆண் மற்றும் பெண் அடையாளங்களுக்கு கூடுதலாக பாலின-நடுநிலை அடையாளங்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். மக்கள் தங்கள் பாலின அடையாளங்களுடன் ஒத்துப்போகும் வசதிகளைப் பயன்படுத்த சுதந்திரம் இருக்க வேண்டும்.
- LGBTIQA+ உள்ளடக்கிய பாடத்திட்டங்கள் சட்டம், உளவியல், சமூகப் பணி, நர்சிங் மற்றும் பிற துறைகளில் விரிவுபடுத்தப்பட வேண்டும்.
- அரசாங்கத்தால் நடத்தப்படும் காப்பகங்கள் குடும்ப வன்முறையிலிருந்து தப்பி வரும் தன்பாலீர்ப்பு மற்றும் இருபாலீர்ப்பு பெண்களையும் உள்ளடக்கியதாக உருவாக்கப்பட வேண்டும் என்றும், கரிமா கிரேஹ் (திருநர் காப்பகங்கள்) அனைத்து LGBTIQA நபர்களையும் உள்ளடக்கியதாக உருவாக்கப்பட வேண்டும் என்றும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
- திருநர் மக்கள் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டம் 2019 – Transgender Persons (Protection of Rights) Act 2019 – இன் படி ஆண், பெண் அல்லது திருநர் என அடையாள அட்டைகளை வழங்குவதற்கான நடைமுறைகள் மற்றும் 2020 இன் இறுதி விதிகளின்படி பைனரி (சட்டத்தின் பிரிவு 7 இன் கீழ்) அறுவை சிகிச்சை அல்லது உடல் பரிசோதனை தேவையில்லை என்பது குறித்து மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.
- பாலினம், பாலியல்பு, வர்க்கம், சாதி, உடல்திறன், இனம், மதம் மற்றும் பிற காரணிகளின் அடிப்படையில், நாடு முழுவதும் மற்றும் உலகளவில் சமூக அநீதியை முடிவுக்குக் கொண்டுவர போராடுபவர்களுக்கு நாங்கள் எங்கள் ஒற்றுமையை விரிவுபடுத்துகிறோம்.
நாங்கள்: தமிழ்நாடு வானவில் கூட்டணி என்பது LGBTIQA+ நபர்கள் மற்றும் தோழமையர்களின் முறையான மற்றும் முறைசாரா குழுக்களின் வலையமைப்பாகும், இது சுயமரியாதை வானவில் பேரணி மற்றும் அதற்கு தொடர்புடைய நிகழ்வுகளை ஆண்டுதோறும் ஏற்பாடு செய்கிறது.
தொடர்புகள் : ஜெயா: +91 98418 65423, சிவா 9840699776, ஸ்ரீஜித் 8248590974