ஒரு தாயின் பதில் – சமுதாயத்தை எதிர்கொள்வது, உறவினர்களை சமாளிப்பது பற்றி
பல ஆண்டுகள் கடந்துவிட்ட என் குடும்ப வாழ்க்கையில், “என் குடும்பம்” என்கிற அமைப்பை தனியாக இயங்க வைப்பது ஒரு பெரிய போராட்டமாகத்தான் இருந்தது. உற்றார் உறவினர்களை முக்கியமாக கருதவேண்டும் ஆனால் அதேசமயம் எனது குடும்ப விஷயங்களில் அவர்களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் தரவோ, அல்லது எங்கள் முடிவுகளை அவர்கள் எடுக்கவோ நான் அனுமதிக்க கூடாது என்பது என் எண்ணம் . இது அவ்வளவு எளிதாக நடக்கவும் இல்லை.
மேல் நடுத்தரவர்க்கத்தை சேர்ந்த, நகரத்தில் வசிக்கும் ஒரு இல்லத்தரசியாக நான் இருப்பதால் என்னவோ என்னால் இதை சாதிக்க முடிந்தது,அதவும் பல பல வருட முயற்சிக்கு பிறகு. இப்பொழுது நான் கவலை படும் விஷயங்கள் எல்லாம் – என் கணவர், என் குழந்தைகள், அவர்கள் சந்தோசம் , பல வருட சுயபேரத்திற்கு பிறகு, என் சந்தோஷம், அவ்வளவுதான். உற்றார் உறவினரின் எண்ணங்கள் இனிமேல் என்னை பாதிக்க போவதில்லை. நான் பட்டதெல்லாம் போதும். என்னை பாதிக்கும் விஷயங்கள் என்பதை நான் வெகுவாக குறைத்துக்கொண்டேன்.அதில் முக்கியமானது – என் குழந்தைகளின் சந்தோசம்.
கல்யாணமாகி ஆறு வருடம் காத்திருந்து நான் தாயானேன். அந்த ஆறு வருடமும் என் குழந்தைகளை எப்படியெல்லாம் வளர்க்க வேண்டும் என்று ஒவ்வொரு வினாடியும் திட்டமிட்டிருக்கிறேன், அதை என்னால் முடிந்தவரை வெற்றிகரமாக நிறைவேற்றியும் இருக்கிறேன். இன்று அவர்கள் என்னை “அம்மா” என்று அழைப்பது எனக்கு மகிழ்ச்சியையும் பெருமையையும் கொடுக்கிறது. அவர்களால் அவர்கள் நண்பர்களும் என்னை “அம்மா” என்று அழைக்கிறார்கள், அது என் குழந்தைகள் எனக்கு தந்த பரிசு.
இந்த சமுதாயத்திற்கு நல்ல பொறுப்பான குழந்தைகளை நான் கொடுத்து இருக்கிறேன். நாலு பேர் என்ன நினைத்தாலும் எனக்கு அதை பற்றி கவலை இல்லை.. நான் என்றும் என் குழந்தைகளுக்கு ஆதரவாக இருப்பேன். என் குழந்தைகளிடம் நான் எதிர்பார்ப்பது அவர்களின் அன்பை மட்டும் தான்.
-ஜானகி வாசுதேவன்