வயது 14
செம்புழுதியை ஆவியாய்க் கொப்பளிக்கும்
மைதானத்தின் யாருங்காணா ஓரத்தில்
வேப்ப மரத்தின் கீழ்
மறைவாய்
ஒற்றைக் காலை ஒடுக்கிக் காத்திருந்தேன்.
காய்ந்த சரகுகள் சரசரக்க
வெள்ளைச் சட்டையில் தொப்பலாய் ஓடி வநதவன்
காற்றுபுகா நெருக்கமாய் எனதருகில் ஒடுங்கினான்.
இருவரின் பார்வைகள்
கண்களை மட்டும் தவிர்த்து
அங்குமிங்கும் ஊசலாடியது.
சில நிமிடங்கள்
பொய்க் கதைகளை
பொருத்தமில்லாமல் அங்கலாய்த்ததை
உதவியற்று கேட்டவன்
நகக்கீறல்களால் அடிமரத்தில்
தன் பொறுமையை சிராய்த்துக் கொண்டிருந்தான்.
உள்ளும் வெளியும் கொதிப்புத் தாளாமல்
வாயில் எஞ்சிய ஈரத்தை, அவன்
நெஞ்சு துடிக்கும் வேகத்திற்குத்
தாளமாய், விழுங்கிக் கொண்டருந்தேன்.
காக்கி அரைக் காற்சட்டையின் கீழ்
தோல் விறைத்த அவன் தொடைகள்
தகிப்பில் நீர்வார்ப்பதை
நெருடலாய் பார்த்துக் கொண்டிருந்த என்னை
நிமிர்த்தி
தவிப்பில் உலர்ந்த உதடுகளால்
சுருக்கங்களைக் கவ்வி வறண்டிருக்கும்
எனதுதடுகளை இமைப்பொழுதில்
உராய்ந்து விட்டு ஓடினான்.
முதல் முத்தம்.
பள்ளியே ஒன்றுசேர்ந்து
அந்தரங்கமாய் சிறப்புப் பரிசொன்று
அளித்ததாக எண்ணி பூரித்து நின்றேன்.
This is beautiful! Thanks Mukesh.
romba rasithu ealuthiya kavithai yarukkuthan pidikkathu chellam