இந்திய சுதந்திர நாட்டின் பிரஜைகளான நாங்கள் எந்தவொரு சராசரி இந்தியக் குடிமக்களுக்கும் பொருந்தும் சமூக, பொருளாதார உரிமையை (இதுவரைக்கும் தரமறுத்து வந்ததை) இனியாவது தந்து இந்தியா தனது பிழையை திருத்திக்கொள்ள வேண்டுமென்றே கேட்கிறோம். இதற்காக தொடர்ந்து பல வருடங்களாக, எழுத்திலும், செயலிலும் போராடியும் வருகிறோம். சில வாரங்களுக்கு முன்பு கூட கல்வி-வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வேண்டும் என்று நாங்கள் போராடியது தங்களுக்கு தெரிந்திருக்கும்.
அதனை தொடர்ந்து சட்டமன்ற கூட்டத்தொடரில் எமது கோரிக்கைகள் பேசப்பட வேண்டுமென ஆளுங்கட்சி சட்ட மன்ற உறுப்பினர்களை நேரில் சந்திக்க முயன்று அது நடக்காத பட்சத்தில், பிற கட்சியை சார்ந்த சட்ட மன்ற உறுப்பினர்களை நேரில் சந்தித்து எமது கோரிக்கைகளை வைத்தோம். அதன் பயனாக, கடந்த 31.08.2015 திங்கள் அன்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் திருநர்களுக்கான கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாகவும் இலவச வீடுகள் வழங்குவது தொடர்பாகவும் திமுக சட்டமன்ற உறுப்பினர் திருமிகு.லீலாவதி அவர்கள் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த மாண்புமிகு சமூக நலத்துறை அமைச்சர் பா.வளர்மதி அவர்கள், ”இந்தியாவில் முதல்முறையாக தமிழகதில் 40 வயதுக்கு மேற்பட்ட திருநங்கைகளுக்கு மாதம் ரூபாய் 1000 உதவித்தொகை வழங்கிவருகிறது என்றும் தமிழக அரசு 2 திருநங்கைகளுக்கு அரசுவேலை வாய்ப்பு வழங்கியுள்ளது” என்று கூறியுள்ளார்.
40 வயது வரை பாலியல் தொழிலோ/பிச்சையெடுத்தோ வாழ்ந்துவிட்டு பிறகு மாதம் 1000 ரூபாய தருவதற்கு பதிலாக, எங்களுக்குரிய கல்வி வேலைவாய்ப்பினை முறையாகபெற ஆவண செய்து, எமக்கும் சமூக பொருளாதார பாதுகாப்பினை தர வேண்டுமென்பதே எமது கோரிக்கை.. மேலும், ஏதோ இரண்டு திருநங்கைகளுக்கு வழங்கப்பட்ட பணிநிரந்தரமற்ற ஒப்பந்த ஊழியத்தை (அதும், தனிநபர் போராட்டத்தின் பயனால் கிடைத்தது) திரித்து பேசுவது… சலுகைகளோடு ஓய்ந்துவிடுங்கள் உரிமைகளை எதிர்பார்பார்க்காதீர்கள் என சொல்வது போல உள்ளது.
அரசாலும், தொண்டு நிறுவனங்களாலும், கைவிடப்பட்ட நிலையில், பொதுமக்களான உங்களை நாடி வருகிறோம். எமது கோரிக்கை நியாயமானதா? இல்லையா? என்பதை பொதுமக்களிடமும், மாவட்ட ஆட்சியாளரிடமும் ஆகஸ்ட் 3, 2015 முதல் தொடர்-நூதன போராட்டமாக நடத்த உள்ளோம்.
இந்தியா எங்களை குடிமகள்களாக பார்க்காமல் இருக்கலாம், ஆனால் நாங்கள் நிச்சயம் நீங்கள் உங்களின் சகோதரிகளாகளே.. எங்களின் இத்தொடர் போராட்டத்திற்கு பெண்கள் அமைப்புகள், தலித் அமைப்புகள், மாணவர்கள் அமைப்புகள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள், சமூக ஆர்வலர்கள் என அனைவரும் நேரடியாக வந்து ஆதரவு தரவேண்டும்.
மேலும், பன்னாட்டு நிதி ஏதுமின்றி இயங்கும் எமக்கு குறைந்தபட்சம் எமது பயண செலவுகள், உணவு மற்றும் பிற செலவுகளுக்கு வாய்ப்புள்ள தோழமைகள் பொருளாதார உதவி தந்து உதவுமாறு வேண்டி கேட்டுக்கொள்கிறோம்.ஆதரவு தரவிரும்பும் நல்லுள்ளங்கள் உள்பட்டியில் உடனடியாக தொடர்கொள்ளவும்.
நன்றி!!
இங்ஙனம்
Living Smile Vidya
மதிப்பிற்குரிய மங்கை
Glady Angel
இந்திய நாட்டின் பல பகுதிகளிலிருந்து மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்களின் (LGBT) பெற்றோர்களில் சிலர் ஒன்று கூடி, ஐ.பி.சி. பிரிவு 377, ஒருபாலீர்ப்பை குற்றமாக்குவதால், தங்களுக்கும், தங்கள் குழந்தைகளுக்கும் எத்தகைய தீமையை விளைவிக்கிறது என்று விவரித்து மனு ஒன்றை தாக்கல் செய்து இருக்கிறார்கள். உச்ச நீதிமன்றம் பெற்றோர்களின் இந்த மனுவை பரிசீலனைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது.
கண்ணியமான வாழ்க்கைக்கு வழி மறுக்கப்பட்டு, சுயதொழில் செய்து வாழவும் போதுமான ஆதரவுவின்றி எது இருந்தாலும், இல்லையெனிலும் பசிக்கும் வயிற்றிற்க்காக தன் உடலை மூலதனமாகக் கொண்டு பாலியல் தொழில் செய்யும் சகோதரிகளுக்கு சட்டம்-ஒழுங்கு என்னும் போர்வையில் தண்டனைகளை தரும் பொறுப்பான இந்த சுதந்திரத்தால் எங்களுக்கு என்ன பயன்?
ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 20 தேதி திருனர்கள் நினைவு தினம் (Transgender Day of Remembrance) அனுசரிக்கப்படுகிறது. இந்நாள் இயற்கை அல்லாத பிற வழிகளில் உயிரிழந்த நம் திருனர் சகோதர சகோதரிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நாள்.
பிற நாடுகளில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களை போல இந்தியாவில் உள்ள நிறுவனங்களும் பாலின சிறுபான்மையின மக்களை பணிகளில் அமர்த்த ஆர்வம் காட்ட வேண்டும் என்கிறார் ஆயிஷா.