டயலாக் : அரசல் புரசல்
1. டூ மாமி-s
மாமி 1 : போன வாரம் லக்ஷ்மி கல்யாணத்துக்கு தாமோதரன் சித்தப்பாவோட ரெண்டு மாப்பிள்ளைங்களும் வந்திருந்தா
மாமி 2 : என்ன சொல்றேள் மாமி, நேக்கு தெரிஞ்சு தாமோதரன் சித்தப்பாவுக்கு ஒரு பொண்ணு, ஒரு பையன். ரெண்டு மாப்பிள்ளைங்க எப்படி இருக்க முடியும்? நமக்கு தெரியாம அவருக்கு இன்னொரு பொண்ணு இருக்காளா என்ன?
மாமி 1 : என்ன மாமி ஊருக்கே தெரிஞ்ச விஷயம் உங்களுக்கு தெரியாதா? அவர் பொண்ணு மூத்தவ, மூணு வருஷத்துக்கு முன்னால ஒரு ஆம்படையான கல்யாணம் பண்ணிண்டா. அவரோட பையன் போன வருஷம்தான் ஒரு அம்பளையோட செட்டில் ஆயிட்டான்.
மாமி 2 : அடக் கண்றாவியே, எல்லாம் கலிகாலம்!
2. பள்ளிக்கூடத்திலிருந்து கோபமாய் வீட்டுக்கு வந்தான் குட்டிப்பையன் விஷ்வேஷ்
விஷ்வேஷின் அம்மா : ஏன்டா கண்ணா மொரப்பா இருக்க?
விஷ்வேஷ் : அதெல்லாம் ஒண்ணுமில்ல, என்னோட ப்ரெண்டு வினோத் என்னை எல்லாத்துலயும் பீட் பண்றான்
விஷ்வேஷின் அப்பா : அதவேற எங்ககிட்ட வந்து சொல்றியா? நீ நல்லா படிச்சா, ப்ராக்டிஸ் பண்ணா, அவன பீட் பண்ணலாம் இல்ல?
விஷ்வேஷ் : நான் எவ்ளோ படிச்சாலும் எனக்கு ரெண்டு அப்பா கிடைப்பாங்களா?
விஷ்வேஷின் அம்மா : என்னடா சொல்ற?
விஷ்வேஷ் : ஆமாம், அவனோட முதல் அப்பா ஸ்கூல்ல வந்து டிராப் பண்றார், ரெண்டாவது அப்பா சாயந்திரம் வந்து கூட்டிட்டு போறார்
விஷ்வேஷின் அம்மா : ஐய்யய்யோ இத கேட்டிங்களா
3. கொக்குவார்ப்பட்டி குழாயடியில் பெண்கள்
பெண் 1 : அடியே இந்த கூத்த கேட்டியா?
பெண் 2 : என்னடி?
பெண் 1 : ஒரே, நாள்ல, கவுண்டரோட பொண்ணும், கணக்கு வாத்தியோட பொண்ணும் காணாம போனாங்களே, நெனவிருக்கா?
பெண் 3 : ஆமாம், அது ஆகி ஒரு வருசம் மேல ஆயிடிச்சி. இன்னும் மர்மமாவே இருக்கு. ரெண்டும் ஜோடிப்புறா ஆட்டம் சுத்திக்கிட்டு இருக்கும். சரியா கவுண்டர் பொண்ணு கல்யாணத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்னால எவன் வந்து அந்த சின்னஞ்சிறுசுகள என்ன பண்ணானோ, ‘பாடி’ கூட கெடைக்கல. ரெண்டு குடும்பமும் தேடாத எடம் இல்ல, வேண்டாத தெய்வமில்ல!
பெண் 1 : அடியே, அதான் இல்ல. நாம சின்னஞ்சிருசுங்கன்னு நெனைக்கறோம், அதுங்க பண்ண காரியத்த கேட்டா, இன்னும் ஒருவருசத்துக்கு தூங்க மாட்ட
பெண் 2 : விஷயத்த சொல்றி
பெண் 1 : அந்த ‘வானவில்லின் வண்ணங்கள்’ னு டிவி ல போடறாங்களே தெரியுமா…
பெண் 3 : அந்த ஆம்பளையும் ஆம்பளையும் குடும்பம் நடத்தற கண்றாவிதானே அதுல காமிக்கிராக. அத யாரு பாக்கறா
பெண் 1 : அதுல பொம்பளையும் பொம்பளையும் குடும்பம் நடத்தரதையும் கூட காமிக்கிறாங்க. நேத்து வந்து நிகழ்ச்சில, இது ரெண்டும் வந்துசிங்க. வந்து, ‘அப்பா அம்மா, நாங்க ஒருத்தர ஒருத்தர் உயிருக்குயிரா காதலிக்கிறோம், எங்களுக்கு வேற வழி தெரில, எங்கள மன்னிச்சி ஏத்துக்கோங்க’ னு அழவுதுங்க
(சிறிது நேரம் மவுனம், முகச்சுளிப்பு)
பெண் 2 : இதுல ஒரு வசதி என்ன தெரியுமா, புருஷன் தொல்லையே இருக்காது
(சுளிப்புடன், சல சல வென சிரிப்பும்)
4. விடலைப் பெண்கள் கமலாவும் விமலாவும்
கமலா : நான் ஒண்னு சொன்ன கோச்சிக்கிவியா?
விமலா : சும்மா சொல்டி
கமலா: நேத்து உங்க அண்ணன காந்தி பூங்காவில பாத்தேன்
விமலா: அடச்ச அவளோதானா, அவன் எப்பயும் அங்கதாண்டி போய் சைட் அடிப்பான்
கமலா: அது இல்லடி, அவன சின்னியோட பாத்தேன்
விமலா: இருக்கும். அவனுக ரெண்டு பேரும் இப்ப ஒரே கிளாஸ்ல தான் இருக்காங்க
கமலா : ஐயோ அத நான் எப்படி சொல்லுவேன், உங்க அண்ணன் சின்னிய கிஸ் பண்ணிட்டு இருந்தாண்டி
விமலா : அப்படியா? என் அண்ணனுக்கு அறிவே இல்ல, சின்னி ஒரு நம்பி (gay), அவன போய் கிஸ் பண்ணானா?
கமலா: உனக்குதாண்டி அறிவே இல்ல, சரியான tubelightu, உங்க அண்ணன் சின்னிய கிஸ் பண்றான்னா
விமலா : ஐயோ, அப்பா என் அண்ணனும்
5. மறுபடியும் மாமி-s (can’t resist them)
மாமி 1 : நம்ம கோகிலாவுக்கு வந்த கதிய கேட்டியா?
மாமி 2 : என்ன மாமி சொல்றேள், நம்ம வட்டாரத்துலேயே, பாரின் போய் நிறைய பணம் பண்ணது அந்த மாமியோட பையன் முகுந்த் தான். அவங்களுக்கு என்ன பிரச்சனை இருக்க முடியும்? அதோட மாமியும் வருஷா வருஷம் அமெரிக்கா போயிட்டு வராளே…
மாமி 1 : பணம் மட்டுமா மாமி வாழ்க்கை, இன்னும் எத்தனை இருக்கு? அவா பையனுக்கு வயசு முப்பத்தி ஆறு கை நிறைய சம்பாதிக்கிறான், பாரின்ல பெரிய வேலைல இருக்கான். அவன் இன்னும் கல்யாணம் பண்ணிக்கலன்னா எதோ வில்லங்கம் இருக்கோன்னோ
மாமி 2 : ஒரு வேளை அங்கேயே ஏதாவது வெள்ளக்காரிய கட்டிண்டானோ என்னவோ
மாமி 2 : ஒரு வேளை அங்கேயே ஏதாவது வெள்ளக்காரிய கட்டிண்டானோ என்னவோ மாமியும், அவ பையனும், இந்த வெள்ளைக்காரனும் வடபழனி கோவில் ல எதோ பாமிலி மாதிரி வளம் வந்தத பாத்தேனே.
மாமி 2 : அது அவன் ப்ரெண்டாஆ இருக்கும். இந்தியாவ பாக்க வந்து இருப்பான்
மாமி 1 : ப்ரெண்டா இருந்தா, ரெண்டு பெரும் வெள்ளை வேட்டி சட்டையோட மாமி கால்ல விழறா, மாமியும் அட்சதை போட்டு நீங்க ரெண்டு பெரும் பிரியமா என்னைக்கும் சந்தோஷமா இருக்கணும்னு வாழ்தரான்னா பாத்துக்கோங்களேன், கழுத்துல மாலையும் தாலியும் தான் இல்ல
மாமி 2 : ஈஷ்வரா
இன்றுதான் இந்த தளம் என் கண்ணில் பட்டது.
இப்படி ஒரு உலகம் இருக்கிறதா என ஆச்சரியமாக இருக்கிறது.
இதுதான் இயல்பான உறவு, இது இயல்பற்ற பாலுறவு என வரையறுக்க நாம் யார்?
ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு விதம்.
அதுபோல, உறவிலும் இது ஒரு ரகம்
நமக்குப் பிடித்ததை நாம் செய்வோம்,
மற்றவர்களுக்குப் பிடித்ததை அவர்கள் செய்யட்டும்.