பகடைக் காய்கள்
அன்றைய இரவை கடந்து செல்வதற்கு மதிவதனி அவ்வளவு முயற்சிகள் எடுத்தாள். எப்படி முயற்சித்தும் நித்திரை மட்டும் அவளுக்கு கைகூட வில்லை. அவளுக்கு மிகவும் பிடித்த சின்மயியின் பாடல்களை ஒலிக்க விட்டுப் பார்க்கிறாள்; அவள் மனதுக்கு நெருக்கமான தமிழ்ரோஜாவை காதலிக்கும் தண்ணீர் தேச கதாநாயகனை நினைத்துப் பார்கிறாள். எங்கெங்கெல்லாம் மனதை மடைமாற்ற முயற்சித்தாலும் இறுதியில் அவனைப் பற்றிய நினைவில் முட்டிக் கொள்கிறாள். அன்று தான் அவர்களது… இல்லை… இல்லை அவளது காதலுக்கு கடைசி அத்தியாயம் எழுதப் பட்டது.
ஒரு இரயில் பயணத்தில் முதலில் அந்நியமாக, பயமுறுத்துபவளாக தெரிந்த அவள் நாளடைவில் அவனுக்கு நெருக்கமானவளாக மாறிப் போனாள். வழக்கமாக அவன் அலுவலகம் செல்லும் அதே மின் தொடர் வண்டியில் தான் அவளும் கைத்தட்டி காசு கேட்க வருவாள். தினசரி நடந்த எதேச்சையான சந்திப்பு, ஒரு நாள் எண்களை மாற்றிக் கொள்ள வைத்தது. பிறகு அன்பிற்காக மட்டுமே ஏங்கிய இருமனங்களை நண்பர்களாக பரிணமிக்க வைத்தது.
வாழ்க்கையில் எந்த ஒரு பிடிப்பும் இல்லாமல், தன்னை பெண்ணாக வாழ உதவிய தன் வளர்ப்பு அன்னைக்கு செய்ய வேண்டிய கடமைகளை மட்டுமே செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு வாழ்ந்து வந்த மதிவதனிக்கு, பிரவினுடன் ஏற்பட்ட நட்பு சற்று புதிதாக இருந்தது.
அந்தப் பக்கம், தனிமை விரும்பியான பிரவினுக்கு, இந்த நட்பு புதிய அனுபவமாக இருந்தது. இதுவரை யாரிடமும் சொல்லாத பல இரகசியங்களை மதிவதனியிடம் சொல்ல ஆரம்பித்தான்; அவளை அளவுக்கதிகமாக அன்பு செய்ய ஆரம்பித்தான். அவனுக்கு இருக்கும் சொற்பமான நெருங்கிய நண்பர்களின் வரிசையில் முதல் இடத்தை மதிவதனிக்கு கொடுத்தான்..
இந்தப் பக்கம், இதுவரை தன்னை அனுபவிக்க, சுரண்ட மட்டுமே நினைத்த ஆண்களின் கூட்டத்திலிருந்து, தன்னுடன் நட்பு மட்டுமே பாரட்ட விரும்பிய ஆண்மகனை நினைத்து, ஒரு வித புதுமையாக இருந்தது மதிவதனிக்கு.
“மதி, இந்த ஒரு சின்ன விசயத்தினால், நம்முடைய நட்பை நான் இழக்க விரும்பவில்லை; என் வாழ்வில் எனக்கு கிடைத்த ஆகச் சிறந்த நட்புனா அது இதுதான்; எனக்கு உன்மேல் எந்த கோபமும் இல்லை, ஆனால் புரிந்து கொள்ள முயற்சி செய்… இந்த நட்புதான் எனக்கு முக்கியம், மற்றவைகளை மறக்க முயற்சி செய்; நீ நினைக்கிற விசயம் எப்போதும் நடக்காது” இந்த வார்த்தைகளை குறைந்தது பத்து முறைகளாவது பிரவீன் மதியிடம் சொல்லியிருப்பான்”
“இல்லை நான் நினைப்பது தவறு; இது நடக்காது; நடக்கவும் கூடாது. ஆனா எனக்கு ஏன் இப்படி திடீரென்று மனது மாறிவிட்டது… ஒருவேளை நான் வீட்டை விட்டு வெளியே வர வரைக்கும் எனக்கு கிடைத்த, இடையில் கிடைக்காமல் போன எனது அப்பாவின் பாசத்தைப் போன்றதொரு பாசத்தையும் அன்பையும் இவன் என்மேல் காட்டியதால் இப்படி எனக்கு தோன்றுகிறதா? என்னவாக வேண்டுமானாலும் இருந்து விட்டு போகட்டும். ஆனால் என்னுடைய இந்த ஆடை மட்டும் நினைவேறக் கூடாது, அது சரியும் இல்லை. ஆனாலும்…’ இதே மாதிரி குறைந்தது இருபது முறைகளாவது மதிவதனி தனக்குத் தானே சொல்லியிருப்பாள்.
அன்றைக்கு, பிரவீன் தனக்கு பதவி உயர்வு கிடைத்தற்கு, மதிவதனிக்கு, அவளுக்கு மிகவும் பிடித்த, ஒரு சைனிஸ் உணவகத்தில் விருந்து கொடுத்தான். விருந்தின் போது முதன் முறையாக மதிவதனி தயக்கத்தை உடைத்து, பிரவீனிடம் தன் காதலைச் சொன்னாள்.
அவள் சொன்னதை அவன் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஏதோ தன்னிடம் விளையாடுகிறாள் என்று எண்ணிக் கொண்டான். ஆனால் அதற்குப் பின் வந்த நாட்களில் மதிவதனியிடம் தென்பட்ட மாற்றங்கள் பிரவீனை சற்றே கலங்க வைத்தது. எந்தக் காரணத்தைக் கொண்டும் அவளோடு ஏற்பட்ட நட்பில் மட்டும் விரிசலை உண்டாக்கி விடக் கூடாது என்று முயற்சித்தான். ஏற்கனவே பால்மாற்றத்தால் அவள் மனதில் உண்டாகி இருக்கும் பல மன வடுக்களின் எண்ணிக்கையில் ஒன்றை அதிகரித்து விடக் கூடாது என்ற எண்ணத்தில் முடிந்தளவுக்கு அவளுக்கு இதமாக புரிய வைக்க முயற்சித்தான். தான் ஒரு தன்பால் ஈர்ப்பாளன் என தெரிந்தும் அவள் ஏன் என்னிடம் இப்படி நடந்துக் கொள்ள முயற்சிக்கிறாள் என சில சமயம் கவலையும் கொண்டான். பெண்ணாக மாறியிருக்கும் அவளை தன்னால் காதலிக்கவே முடியாது என்பது ஒருபக்கம் இருந்தாலும், மதிவதனியுடன் உள்ள நட்பையே அவன் பெரிதாக எண்ணுகிறான். நட்பைத் தாண்டி எதையும் அவனால் சிந்திக்க முடியவில்லை. ஒவ்வொரு முறையும் அவள் தனது காதலை அவனிடம் நிரூபிக்க முயலும் போதும், அதை நட்பின் அடையாளமாக, நட்பின் உன்னதமாக மாற்றுவதில் வெற்றிப் பெற்றிருந்தான்.
இந்த மதிவதனியின் ஒரு மனது இவ்வாறு புலம்புகிறது,”எனக்கு தெரிகிறது, அவனால் என்னை காதலிக்க முடியாது, ஒருவேளை நான் மறுபடியும் ஆணாக மாறினால், அவன் என்னை ஏற்றுக் கொள்வானோ…. இல்லை இல்லை அது என்னால் முடியாது; இந்த பெண்மை தான் நான். என் அறிவுக்கு தெளிவாக தெரிகிறது, அவன் எனக்கானவன் இல்லையென்று. இருந்தும் ஒரு நப்பாசை, எனக்கு அவன் கிடைத்து விட மாட்டானா என்று. ஏதாவது ஓர் அதிசயம் நிகழ்ந்து விடாதா என்ற தீரா ஏக்கம் என்னுள் எப்போதும் இருக்கிறது.”
இன்னொரு மனதோ, “நான் ஏன் அவனைச் சந்தித்தேன்? அவன் ஏன் இடையில் கிடைக்காமல் போன என் தந்தையின் அன்பை என் மேல் செலுத்த வேண்டும்? என்னைச் சுரண்டவும், காயப் படுத்தவும் மட்டுமே செய்த ஆண் வர்க்கத்தையே நான் வெறுத்த சமயத்தில், அதே ஆண் வர்க்கத்தில் இருந்து மட்டும் வந்த இவன் மட்டும் ஏன் என்மேல் இத்தணைப் பாசத்தை பொழிய வேண்டும்? அவன் சொல்கிறான் , இதை வெறும் நட்பென்று. ஆனால் என்னால் அப்படி நினைக்க முடியவில்லையே! அவன் எனக்கு வேண்டும். அவன் மட்டும் தான் எனக்கு வேண்டும்” என்று ஒரு பக்கம் முரண்டு பிடித்தது. இருதலை கொள்ளி எறும்பாய் தவித்த மதிவதனி இதிலிருந்து விடுதலை அடைய முயற்சித்தாள்.
இந்த எண்ணச் சுழற்சி பல நாட்களுக்குத் தொடர்ந்தது. ஒவ்வொரு முறையும் மதிவதனி தனது ஆசையை பிரவீனிடம் சொல்லும் போதும், பிரவீன் பொறுமையாக அவளுக்கு புரிய வைக்க முயற்சித்தான். ” மதி, இந்த மாதிரி ஈர்ப்பு ஏற்படுவதில் தவறே இல்லை; என்னிடம் இருக்கும் ஏதோ ஒரு விசயம், உன்னை என் மேல் காதல் வைத்துள்ளது. அது மிகவும் இயற்கையானது, இதில் உன் மேல் எந்த தவறும் இல்லை. தன்மேல் அதிகளவு பாசம் காட்டும் நபர்கள் மேல் காதல் ஏற்படுவது மிகவும் இயல்பான ஒன்று.. ஆனால் ஒன்றைப் புரிந்து கொள், ஒருவேளை நீ மறுபடியும் ஆணாக மாறி வந்தாலும் என்னால் உன்னை காதலிக்க முடியாது. ஏனென்றால் நீ என் தோழி. உன்னுடன் ஏற்பட்ட இந்த நட்பு தான் என் வாழ்வில் எனக்கு கிடைத்த ஆகச் சிறந்த பொக்கிசம். அதை எக்காரணத்தைக் கொண்டும் இழக்க விரும்பவில்லை. இந்த காதல் என்ற ஒரு விசயம் மட்டும் இல்லையென்றால் நாம் வாழ்நாள் முழுவதும் நண்பர்களாக இருக்கலாமே! இதைக் கடந்து வா! இந்த காதலை மறுபடியும் நட்பாக புதுப்பிக்க முயற்சி செய். உன் தோழன் எப்போதும் உன்னுடனே இருக்கிறேன்” என்பது போன்ற பல இலட்சம் வார்த்தைகளால் மதிவதனியின் மனதை மாற்ற முயற்சித்தான். ஏனென்றால் முன்னரே சொல்லியது போல் பிரவீன் கண்டடைந்த அற்புத நட்பு இது.
நட்பா, காதலா என்று நடந்த போராட்டத்திற்கு ஒரு முடிவுரை எழுத மதிவதனி முடிவு செய்தாள். அன்று அவனை முதன்முதலில் சந்தித்த தாம்பரம் இரயில் நிலையத்திற்கு வரச் சொன்னாள். அவனும் வந்தான்…
இதோ பார், பிரவீன் எனக்கு புரிகிறது, உன்னால் என்னை காதலிக்க முடியாதென்று. இருந்தும் கடைசியாக கேட்கிறேன். நீ என்னை காதலிக்க ஏதேனும் வாய்ப்புள்ளதா?…
மதிவதனி, இதற்கு முன்னரே சொன்ன பதில் தான். நீ என் தோழி, இதைத் தாண்டி என்னால் சிந்திக்க இயலாது. ஆனால் உன்னோடு என் வாழ்நாள் முழுவதும் தொடரும் ஒரு அன்பையே விரும்……
போதும் பிரவீன்.நீ விரும்புவது நிகழாது. நான் உன்னை காதலிக்க முடியாது- அது உன்னை மேலும் காயப் படுத்தும். அதே நேரம்….
நான் உன்னை இனிமேலும் நண்பனாக நினைக்க வாய்ப்பில்லை; அப்படி செய்தால் அது நான் என் மனதிற்கு செய்த துரோகம் ஆகிவிடும்..
நான் ஒரு முடிவு எடுத்திருக்கிறேன்.. இது சில காலம் காயப்படுத்தும். இனிமேல் நாம் சந்திக்கப் போவதில்லை. இதுவே நமது இறுதிச் சந்திப்பு. உன்னை, உன் மேல் கொண்ட காதலை மறக்க இதைத் தவிர வேறு வழி எனக்கு தெரியவில்லை. என்னோடு எக்காரணத்தைக் கொண்டும் மீண்டும் தொடர்பு வைத்துக் கொள்ள முயற்சிக்காதே…. என்னை மன்னித்து விடு…
மதிவதனி, நான் உன்னை விட்டு விலகிச் சென்றால் தான் நீ அமைதியடைவாய் என்றால் விலகிச் செல்கிறேன். ஆனால் என்னருமை தோழியே, என்றாவது ஒரு நாள் நான் நட்பு பழகிய நமது நட்புகாலம் உனக்கு ஞாபகம் வந்தால், அந்தக் காலத்திற்குள் மீண்டும் செல்ல நினைத்தால், உன் தோழன் நான் அப்போது தயாராக இருப்பேன், என்று கூறிய பிரவீன், தரைநோக்கியிருந்த அவளது வாயிலிருந்து சொல் வருமுன்னே படிக்கட்டுகளில் ஏறி மக்கள் கூட்டத்தில் கரைய ஆரம்பித்திருந்தான்.
அன்றைய இரவில் கர்ணமும் மன்மதனும் தாங்கள் ஆடிய சூதாட்டத்தில், பகடைக் காய்களான பிரவீனுக்கும் மதிவதனிக்கும் ஓர் இடைவெளி விட்டிருந்தனர்.
- இந்த சிறுகதையை முதன்முதலில் பிரான்சிஸ் ஓரினம் ஏற்பாடு செய்த நவம்பர் 24 2019 ‘குயில்ட்’ நிகழ்ச்சியில் படித்தார்
- Image credits: 2 Dice symbol by Steaphan Greene, Wikimedia Commons. 2008. Licensed under the Creative Commons Attribution-Share Alike 3.0 Unported license.