[கதை] அவளும் நானும்
அவளும் நானும்
ஆண்டுகள் பல கழித்து
அன்றொரு நாள் அவளை மீண்டும் கண்டேன்!
மக்கள் கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தது
அந்தப் பேருந்துநிறுத்தத்தில்.
அத்தகைய கூட்ட நெரிசலிலும் கூட
என் கண்கள் அவளைக் கண்டுப்பிடித்துவிட்டன.
இதில் பெரிதாய் ஆச்சர்யம் ஒன்றும் அல்ல தான்!
ஆம்! அவள் பிம்பம்தனை எங்கனம் என் விழிகள் மறக்கும்?
நான் நேசித்த முதல் பெண் ஆயிற்றே அவள்!!
ஆழ்மனதில் அடிப்படிந்துக்கிடந்த
நினைவுகள் அத்துனையும் ஆர்ப்பரித்துக்கொண்டு மேல் எழும்பின.
பாவம் என்னுள்ளம்!
எதையோ என்னிடம் கதைக்க முன்வர
என் மோட்டார் சைக்கிளோ அதற்கு முட்டுக்கட்டைப் போடுவதுப்போல்
உறுமிக்கொண்டிருந்தது.
நானோ அவளைக் கண்ட மயக்கத்தில்
கணம் மறந்து அங்கேயே நின்று கொண்டிருந்தேன்.
சட்டென்று அவள் விழிகள் என் திசையில் திரும்பின.
திடுக்கிட்டுப்போனேன் ஒரு நொடியில்!
மறுநொடி
அவள் எனை நோக்கி வர கண்டேன்.
வந்ததும் வரிசையாய் கேள்விகள் பல தொடுத்தால்
வழக்கம் போல் என் வார்த்தைகள் அனைத்தும்
அவள் விழிகளுக்குள்ளேயே சிக்கிக்கொண்டன
நெடுநேரம் பேசிவிட்டோம் போலும்
அவள் ஏறவேண்டியே பேருந்து போனதைக்கூட கவணிக்காமல்
பிறகு என்ன! என் ஸ்கூட்டர் எங்கள் இருவரையும் ஏற்றிச்சென்றது அன்று!
குறிப்பு:
– இந்தக் கவிதை சனவரி 29 2023 அன்று நடந்த 64வது QUILT இலக்கிய அமர்வின் போது ஆசிரியரால் வாசிக்கப்பட்டது.
– படம்: திறந்தவெளி செயற்கை நுண்ணறிவு இயங்குதளம் (OpenAI) மூலம் உருவாக்கப்பட்டது.