மத்திய அரசின் தலைமை அமைச்சரான மாண்புமிகு திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு
மத்திய அரசின் தலைமை அமைச்சரான மாண்புமிகு திரு.நரேந்திர மோடி அவர்களுக்கு,
உலகில் இயங்கும் ஜனநாயக தேசங்கள் எதுவும் இதுவரை மாற்றுப்பாலினத்தோரின் உடல் இயங்கியலையும் அவர்களின் வாழ்வியல் அவலங்களையும் களைய பொறுப்பற்று கிடக்கும் இந்த 21ஆம் நூற்றாண்டிந் துவக்கத்தில்,மாற்றுப்பாலினத்தோராகிய எங்களின் உடல்,வாழ்வியல் அனைத்தையும் கணக்கில் கொண்டு ,எங்கெளுக்கென்று ஒரு தனி மசோதாவை தங்கள் தலைமையிலான அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருப்பதில் மகிழ்வுறுகிறேன்.
அதே நேரத்தில் தங்கள் அரசு இயற்றிட இருக்கிற இந்த மசோதாவோடு தொடர்புடைய ,அதற்கு அடிப்படையாக அமைந்த மூன்று விஷயங்களுடன் மாற்றுபாலினத்தோர் (உரிமைகள் பாதுகாப்பு) மசோதா 2016 யை பொருத்திப்பார்க்கையில் எங்கள் பாலினம் மிக நுண்ணிய முறையில் கொடூரமாக ஏமாற்றப்பட்டதாகவே நான் உணர்கிறேன்,
எங்களுக்கு கல்வி ,வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வேண்டுமென 2013ல் தங்கள் உரிமைகளை வீரியத்தோடு இத்தேசம் முழுவதும் எங்கள் பாலினம் முழங்கியது .தமிழகத்தில் நானும் கூட எம் பாலினத்தினவர்களின் உரிமைகளுக்காக போராடி காவல்துறையால் தாக்கப்பட்டிருக்கிறேன் ,பலமுறை கைதுசெய்யப்பட்டும் இருக்கிறேன் .இரண்டாவதாக எங்கள் சமூகம் அரசிடம் முறையிட்டு அடக்குமுறைக்கு உள்ளாவதை தவிர்க்க உச்சநீதிமன்றத்தை நாடினோம் மக்கள் பிரதிநிதிகள் புரிந்துகொள்ள முடியாத எங்கள் வலியை உச்சநீதிமன்றம் புரிந்துகொண்டு வேலைவாய்ப்பில் ,கல்வியில் முன்னுரிமை உட்பட எங்கள் விடுதலைக்கான சில தீர்வுகளை தீர்ப்பாக 2014 ஏப்ரல் 15 அன்று உரத்து கூறியது.
மூன்றாவதாக நீதிமன்றத்தின் அக்குரலை முழுமையாக உள்வாங்கிய தமிழகத்தைச்சேர்ந்த திரு. திருச்சி சிவா அவர்கள் கல்வி,வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு உட்பட பல்வேறு நல் அம்சங்களை உள்ளடக்கி கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் மாற்றுபாலினத்தோருக்கான தனிநபர் மசோதாவை முன் வைத்தார்.தேசத்தின் முழுமையிலிருந்தும் அங்கு குழுமியிருக்கும் அனைத்து பிரதிநிதிகளால் அம்மசோதா எவ்வித எதிர்ப்பும் இன்றி ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.
மேற்கூறிய இந்த மூன்று விஷயங்களை முழு பூசணியை சோற்றில் மறைப்பது போல மறைத்து விட்டு தங்கள் அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் மூலமாக மாற்றுப்பாலினத்தோர்(உரிமைகள் பாதுகாப்பு) மசோதா 2016 யை மக்களவையில் தாக்கல் செய்துள்ளீர்கள்.
தங்கள் அரசு தாக்கல் செய்துள்ள மசோதாவை முழுமையாக படித்தேன் அதில் எங்கள் சமூகத்தின் இடஒதுக்கீடு கோதிக்கையும் ,உச்சநீதிமன்றத்தின் அக்கறைமிக்க தீர்ப்பும் ,திரு.திருச்சி சிவா அவர்களின் நல்லெண்ண உழைப்பும் முழுமையாக புறக்கணிக்கப்பட்டுறுப்பதை கண்டு ம வெதும்பினேன்.அந்த மசோதாவில் நாங்கள் மானுடமாக மட்டுமே அங்கிகரிக்கப்பட்டுள்ளதை கண்டு நகைக்காமல் என்னால் இருக்க முடியவில்லை .காரணம் உலகில் ஆதிக்கங்களை எதிர்த்து அதிகமாக ரத்தம் சிந்தியதேசம் நம்தேசமாகதான் இருக்கமுடியும்.அத்தகைய ரத்தத்தில் பூத்த “ஜனநாயத்தில்” நாங்கள் மானுடமாக அங்கீகரிக்கப்படவே 69 ஆண்டுகாலம் ஆயிற்று எனில் இன்னும் எங்கள் இடஒதுக்கீடு கோரிக்கையை வென்றிட இன்னும் எத்துனை ஆண்டுகள் ஆகிடுமோ?? அந்த சிந்தனையின் போது என் மன சோகம் சிறு புன்னகையாக முகத்தில் வெளிப்படும் .இந்தப்சிறு சோக புன்னகையை உங்கள் ஆசிற்கு பரிசளிக்கிறேன்..
இந்த மசோதாவை படித்த முடித்தவுடன் அரசியலமைப்பின் தந்தை அண்ணல் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் ஒரு முறை கூறிய வார்த்தைகள் என்னுள் எழுந்தது’கால் உடைந்த குதிரையையும் ஆரோக்கியமான குதிரையையும் ஒன்றாக பந்தயத்தில் கலந்துகொள்ள செய்வது கொடும் அநீதி’என்பார் அவர்.அவரின் வார்த்தைகளையே நான் உங்களுக்கு பரிசளிக்கிறேன். இந்த மசோதாவின் மூலம் அத்தகைய கொடும் அநீதியை எம்பாலினதவர்கு நீங்கள் இழைக்காது இருப்பீர்களாக…
இறுதியாக…
விலங்குகளாக திரியும் எங்களை 21ஆம் நூற்றாண்டின் காலைப்பொழுதில் இயங்கும் உங்கள் ‘ஜனநாயக அரசு’ மனிதர்களாக அங்கீகரித்ததற்கு நன்றி …
மேலும் நாங்கள் கண்ணிய மனிதர்களாகவும் இயங்கிட கல்வி,வேலைவாய்ப்பு,அரசியலில் எங்களுக்கான இடம் பங்கிடப்பட்டால் ,எம் சமூகத்தின் சோகமற்ற முழு புன்னகையை உங்கள் அரசிற்கு பரிசளிக்க நாங்கள் கடமை ப்பட்டுள்ளோம்.எங்களை புன்னகை சிந்த அனுமதியுங்கள் !!மீண்டும் முழக்கமிட வைக்காதீர்கள் .
நன்றி
இப்படிக்கு
தங்கள் உண்மையுள்ள,
கிரேஸ் பானு