[poem] பாலுணர்வு
நிலத்தின் அடியில் புதைந்து கிடக்கும் கனிமம் போலக் கிடந்தது பாலுணர்வு, ஒரு ஓரத்தில்.. மிச்சமில்லாமல் வெளிவரக் காத்திருந்தது, காதலெனும் சுரங்கப்பணி காலத்தில்..
நிலா வெளிச்சத்தில் பிறக்கும் ஏக்கங்கள் போல், அதைத் தட்டி எழுப்பியது அவள் பிறைமுகம்.. Shhh! உறங்கியே கிடக்கட்டும் அமைதியாக இரு என்றது இந்தச் சமூகம்..
உயிரோ, ஆசைக்கும் அச்சத்திற்கும் இடையே பெரியதோர் ஊஞ்சல் கட்டி ஆடியது..
மறுபிறவி எடுக்க பாறையில் மோதிக்கொள்ளும் கழுகின் ஊக்கத்தைத் தேடியது..
புதிய பாதைகளில் ஆவலுடன் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியிலும் தன்னுரிமையின் மாட்சி கூடியது..
வழிபோக்குத் தோழர்களின் கைகளைப் பற்றி, அகப்போரை முடித்துக்கொண்டது.. போர்க்களத்தில் சிதறிக்கிடந்த சுயத்துண்டுகளை அள்ளிக்கொண்டு, இன்று அந்த நாலுபேர் களத்தில் அடையாளம் என்னும் வேர்கொண்டு நின்றது!
— ஜே