அறிமுகம்: பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம்
உங்கள் குழந்தை மாறுபட்ட பாலீர்ப்பு கொண்டது என்று தெரிந்துகொண்டீர்கள், இப்பொழுது என்ன செய்வது?
“அப்பா …. எனக்கு பொண்ணுங்க மேல ஈர்ப்பு இல்லை….பசங்க மேல தான் ஈர்ப்பு” – ஒரு மகன்
” எனக்கு பசங்கள பிடிக்கலம்மா …..திருமணம் வேண்டாம்’ – ஒரு மகள்.
பல பெற்றோர்களால் எளிதில் ஜீரணிக்க முடியாத வார்த்தைகள் இவை. தனது குழந்தை மாறுபட்ட பாலீர்ப்பு கொண்டது என்கிற உண்மையை பல பெற்றோர்களால் எளிதில் கையாள முடிவதில்லை… ” கடவுளே! என்ன செய்வது? ” என்று உங்கள் மனம் பதைபதைப்பது இயற்கையே.
உங்கள் கவலையும், குழப்பமும், பதட்டமும் எங்களுக்கு நன்றாக புரிகிறது. உங்களைப் போன்று பல பெற்றோர் இதை எதிர்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அனுமானங்களையும், எண்ணங்களையும், அவர்கள் கடந்து வந்த பாதைகளையும் இந்த கையேட்டில் தொகுத்திருக்கிறோம். உங்கள் குழந்தையின் மாறுபட்ட பாலீர்ப்பை புரிந்து கொள்வதற்கும், உங்கள் இருவருக்கும் இடைவெளி ஏற்படாமல் உங்கள் உறவு நிலைத்து வளர்வதற்கும் இந்த கையேடு ஒரு வழிகாட்டியாக இருக்கும் என்றும் நாங்கள் நம்புகிறோம்.
உலகில் பத்தில் ஒருவர் மாறுபட்ட பாலீர்ப்பு கொண்டவர் என்கிறது ஒரு கணக்கீடு. நான்கில் ஒரு குடும்பம் இதுபோன்ற மாறுபட்ட பாலீர்ப்பு கொண்டவர்களை அங்கத்தினர்களாக கொண்டது என்கிறது இன்னொரு கணக்கீடு. இவற்றால் நீங்கள் அறிந்துகொள்ள வேண்டியது – நீங்கள் தனியே இல்லை. நீங்கள் விரும்பினால், பேசுவதற்கும், உங்கள் உணர்வுகளை பகிர்ந்து கொள்வதற்கும், உங்கள் சந்தேகங்களை தீர்த்துக் கொள்வதற்கும் பல வழிகள் இருக்கின்றன. இணையதளங்கள், புத்தகங்கள், மனநல ஆலோசகர்கள், தொலைபேசி ஆதரவு எண்கள், பிற பெற்றோர்கள் போன்றவை இவற்றில் சில. இன்னொரு விஷயம், நீங்கள் விரும்பினால் குழப்பம் மற்றும் கவலை நிறைந்த இந்த சூழ்நிலையை வெற்றிகரமாக எதிர்கொண்டு, உங்கள் குழந்தையை புரிந்து, அன்பும், பாசமும், அரவணைப்பும் கொண்ட ஒரு ஆரோக்கியமான உறவை அமைத்துக்கொள்ள முடியும். பல பெற்றோர்கள் இதை வெற்றிகரமாக செய்தும் இருக்கிறார்கள்.
ஆனால் இதற்கு சுலபமான குறுக்கு வழி ஒன்றும் இல்லை. கோபம், கவலை, குழப்பம், குற்றவுணர்ச்சி, விரக்தி என்று பல உணர்ச்சிகளோடு போராடிய பிறகே பல பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் மாறுபட்ட பாலீர்ப்பை ஏற்றுக்கொள்கிறார்கள். அதனால் இது போன்ற உணர்ச்சிகள் உங்களுக்கு ஏற்பட்டால் மனம் தளர வேண்டாம். உங்களை நீங்களே வருத்திகொள்ளாதீர்கள். அதேசமயம், “உங்கள் குழந்தைகள் உங்களுக்கு முக்கியம், அவர்களை நீங்கள் நேசிக்கிறீர்கள்” – இதை மனதில் கொண்டு, உங்களை குழந்தையை புரிந்து கொள்ளும் பாதையை நோக்கி உங்கள் பயணத்தை தொடங்குங்கள்.
இது சம்மந்தமாக உங்களக்கு தனிப்பட்ட முறையில் ஏதேனும் உதவி தேவைபட்டால் எங்களை தொடர்புகொள்ளலாம்.
என்னிடம் என் குழந்தை ஏன் இதை சொல்ல வேண்டும்?
சில பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் மாறுபட்ட பாலீர்ப்பை பற்றி தெரியாமலேயே இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்று நினைப்பதுண்டு. மேலும் சிலர் இதை பற்றி அறிவதற்கு முன் தங்கள் குடும்பம் எவ்வளவு சந்தோஷமாக நிம்மதியாக இருந்தது என்றும் எண்ணுவதுண்டு. இப்படி எண்ணும் பொழுது குழந்தையின் மாறுபட்ட பாலீர்ப்பை பற்றி அறியாமல் இருப்பதால் தங்கள் குழந்தைக்கும் தங்களுக்கும் இடையே ஏற்படும் மிக பெரிய இடைவெளியை அவர்கள் கருத்தில் கொள்வதில்லை.
பெற்றோர்களில் சிலர் – பூனை கண்ணை மூடி கொண்டால் பூலோகம் இருட்டு – என்பதுபோல குழந்தையின் குரலை நிராகரிப்பதுண்டு –
“என்னவாது உளறாதே! நீ என்ன பேசறேனு உனக்கே தெரியாது” ( அல்லது )
குழந்தை சொல்வதை காதிலே வாங்காதது போல் இருப்பதுண்டு –
” சரி அத விடு… நைட் டிபன் என்ன வேணும்?” (அல்லது)
குழந்தையை முற்றிலுமாக ஒதுக்குவதுண்டு –
“கெட்டுத்தான் போவேன்னா … நான் என்ன செய்ய முடியும்? எக்கேடும் கேட்டு போ! என்கிட்டே வராத!”.
இவையெல்லாம் பல பெற்றோர்களின் இயற்கையான பதில்கள்.
ஆனால் உங்கள் குழந்தையின் பாலீர்ப்பு என்பது ஒதுக்கப்படவேண்டிய விஷயம் அல்ல. நீங்கள் அறிந்துகொள்ள வேண்டிய, புரிந்து கொள்ள வேண்டிய விஷயம். அப்படி செய்யாவிடில், உங்கள் குழந்தையை முழுமையாக அறிந்துகொள்ளும் வாய்ப்பை நீங்கள் இழக்கிறீர்கள். “இதெல்லாம் பருவக்கோளாறு , காலப்போக்கில் மாறிவிடும்” என்று அவர்களின் மாறுபட்ட பாலீர்ப்பை ஒதுக்காமல், அவர்கள் சொல்லுவதை கவனத்துடனும், அக்கறையுடனும் கேளுங்கள்.
எப்பொழுது உங்கள் மகன் அல்லது மகள் உங்களிடம் தான் மாறுபட்ட பாலீர்ப்பு கொண்டவன்(வள்) என்று சொல்கிறானோ(ளோ), அப்பொழுது அவர்களுக்கு அதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்பது தான் பெரும்பாலும் உண்மை.
தான் மாறுபட்ட பாலீர்ப்பு கொண்டவன்(வள்) என்பதை அறிந்து, ஏற்றுக்கொள்வது என்பது ஒரு சாதரணமான காரியமே அல்ல. பெற்றோர்களிடம் இதை பற்றி பேசுவது என்பது குழந்தை எடுத்து வைக்கும் மிகப் பெரிய அடி. அதை யோசிக்காமல் எந்த குழந்தையும் எடுப்பதில்லை. மிகுந்த சுய ஆராய்ச்சி மற்றும் மனப் போராட்டதிற்குப் பிறகே குழந்தை உங்களிடம் மனம் திறக்கிறது. அதனால் ” அவர்களுக்கு என்ன தெரியும்..” என்று சந்தேகிக்க வேண்டாம்…..அவர்களுக்கு அவர்களை பற்றி நன்றாகவே தெரியும் என்பது தான் உண்மை.
உங்களிடம் உங்கள் குழந்தைகள் இதை பற்றி மனம் திறப்பது என்பது உங்கள் மேல் கொண்டுள்ள அன்பிற்கும், உங்கள் அன்பு, ஆதரவு, அரவணைப்பு அவர்கள் தேவை என்பதற்குமான அறிகுறி. இப்படி உங்களிடம் மனம் திறப்பது அவர்கள் துணிவை காட்டுகிறது. அதுமட்டுமில்லாமல், ஒரு திறந்த, நேர்மையான, உண்மையான உறவு உங்கள் இருவருக்கிடையே இருக்க வேண்டும் என்கிற விருப்பத்தை காட்டுகிறது.
ஒருவரின் பாலீர்ப்பு எப்படி நிர்ணயிக்கப்படுகிறது? எனது மகனோ/மகளோ மாறுபட்ட பாலீர்ப்புடன் இருப்பதற்கு நான் காரணமா? எனது வளர்ப்பில் குறையா? நான் ஒரு நல்ல தாயாய்/தந்தையாய் இருக்க தவறிவிட்டேனோ?
தன்பாலீர்ப்போ (Homosexuality) அல்லது பால் மாறுதலோ (Trans gender behavior) ஒருவரின் வளர்ப்பு முறையாலோ அல்லது ஒரு சில அனுபவங்களாலோ நிர்ணயிக்கப்படுவதில்லை என்பது ஆய்வுகளால் கண்டறியப்பட்ட உண்மை. உங்களின் அன்புக்குரியவர் மாறுபட்ட பாலீர்ப்பு (Alternate Sexuality) அல்லது பால் அடையாளம் (Gender Identity) கொண்டவராக,
அதாவது நங்கையாகவோ (தன் பாலீர்ப்புள்ள பெண்/ Lesbian ), நம்பியாகவோ (தன் பாலீர்ப்புள்ள ஆண்/ Gay), ஈரர்( இரு பாலீர்ப்புள்ளவர்/ Bisexual), திருநராகவோ (திருநங்கை, திருநம்பி/ MTF/FTM Transgender) இருப்பது யாருடைய தவறும் இல்லை. இது போன்ற குற்றவுணர்ச்சி உங்களுக்கு சிறிதும் தேவையில்லை.
முதல் படி, இதை பற்றி மனம் திறந்து, பேசுங்கள். பேசப்பேச, புரிதல் அதிகமாகும்.
பாலீர்ப்பு எப்படி நிர்ணயிக்கப்படுகிறது? – இதற்கான முடிவான பதில் யாருக்கும் தெரியாது. மனம், உடல், மரபணு, சுற்றுப்புற சூழ்நிலை என்று பல விஷயங்களின் கலவையால் ஒருவரின் பாலீர்ப்பு நிர்ணயிக்கப்படுகிறது என்கிறார்கள் வல்லுனர்கள். பாலீர்ப்பும் பால் அடையாளமும் முக்கால்வாசி பேருக்கு சிறிய வயதிலேயே வடிவுபெறுகிறது. பல ஆய்வுகள் இது பற்றி நடந்துகொண்டிருகின்றன, ஆனால் இதுதான் காரணம் என்கிற முடிவு இன்னமும் எட்டப்படவில்லை.
இப்படி மாறுபட்ட பாலீர்ப்பு கொண்டவராக – நங்கை (தன் பாலீர்ப்புள்ள பெண்), நம்பி (தன் பாலீர்ப்புள்ள ஆண்), ஈரர்( இரு பாலீர்ப்புள்ளவர்) – இருப்பது தவறா?
இல்லை. உலகில் எல்லா கலாச்சாரங்களிலும் ,எல்லா காலங்களிலும் இதுபோன்ற மாறுபட்ட பாலீர்ப்பு கொண்டவர்கள் இருந்திருக்கிறார்கள். தன்பாலீர்ப்பு ஒரு நோயோ அல்லது மனநல குறைவோ இல்லை என்பது நிதர்சனமான உண்மை. American Psychological Association(APA) 1973ஆம் ஆண்டே தன்பாலீர்ப்பு ஒரு மனநோய் அல்ல என்று அறிவித்துவிட்டது. World Health Organization (WHO) 1981ஆம் ஆண்டு தன்பாலீர்ப்பு ஒரு நோயல்ல என்று அறிவித்தது. ஆகையால் மாறுபட்ட பாலீர்ப்பு கொண்டிருப்பதில் எந்த தவறும் இல்லை.
உலகில் முக்கால்வாசி பேர் வலது கை பழக்கம் உள்ளவர்களாக இருந்தாலும் சிலர் இடது கை பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். அதை நாம் தவறு என்று சொல்வோமா? அதைப் போலததான் இதுவும், மிகவும் இயற்கையான விஷயம்.
நமக்கு தெரிந்ததெல்லாம் ஆண் – பெண் இவர்களுக்கிடையே ஏற்படும் ஈர்ப்பு மட்டும் தான். ஆனால் அறிவியல் கண்டறிந்த உண்மை – பாலீர்ப்பு பன்மைபட்டது, இந்த உண்மையை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும்.
தாங்கள் நங்கை-நம்பி-ஈரர்-திருநர் என்பது ஒருவருக்கு எப்படி தெரியும்?
பலருக்கு சிறிய வயதிலிருந்தே தாங்கள் வித்தியாசமானவர்கள் என்பதோ, அல்லது தங்களுக்கு தன் பாலர் மீது ஈர்ப்பு ஏற்படுகிறது என்பதோ அல்லது இரண்டு பாலர் மீதும் ஈர்ப்பு ஏற்படுகிறது என்பதோ தெரிகிறது. திரு நங்கை/திரு நம்பிகளுக்கு தங்கள் பாலின வெளிப்பாடு மற்றவர்களின் எதிர்பார்ப்பு போல் இல்லை என்பதும் சிறிய வயதிலேயே தெரிகிறது. சிலருக்கு வயது வரும் பருவத்தில் இதை பற்றி தெரிகிறது.
ஒருவரின் பாலீர்ப்பை புரிந்துகொள்வது என்பது அவ்வளவு எளிதான காரியமில்லை! அதற்குரிய கால அவகாசம் தேவைப்படுகிறது. பால் உறவு கொண்டால்தான் ஒருவருக்கு அவர்களது பாலீர்ப்பை பற்றி தெரிய வரும் என்றும் அர்த்தமில்லை. பாலீர்ப்பு என்பது ஒருவரின் உணர்வுகளைப் பொறுத்த விஷயம்.ஒரே வரியில் பதில் சொல்ல வேண்டுமானால் – “எப்பொழுது தெரியவேண்டுமோ அப்போது தெரிய வரும்!”
ஆண் -பெண் என்ற இரண்டு பாலர் மீதும் ஈர்ப்பு கொண்டவர்களை இருபாலீர்ப்பாளர்கள் அல்லது ஈரர் என்று அழைக்கிறோம். சிலருக்கு எதிர்பாலர் மேல் அதிக ஈர்ப்பும் தன்பாலர் மேல் சற்று குறைந்த ஈர்ப்பும் இருக்கலாம். அவர்கள் பாலீர்ப்பு அடையாளம் எப்படி இருந்தாலும், உங்கள் குழந்தைகளுக்கு கண்டிப்பாக இதை பற்றி நன்றாக தெரியும்.
சிறு வயதிலேயே தெரியும் என்றால் ஏன் இதைப்பற்றி என்னிடம் சொல்லவில்லை?
பல காரணங்கள் இருக்கலாம். உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும் இருக்கும் உறவு எப்படிப்பட்டது என்பது ஒரு முக்கிய காரணம். பொதுவாக நம் கலாச்சாரத்தில் பால் சம்பந்தப்பட்ட எந்த விஷயமும் பேசக்கூடாத ஒரு விஷயமாக கருதப்படுகிறது. பெரியவர்கள் கூட இதை பற்றி பேசுவதில்லை. குழந்தைகள் எப்படி பேசுவார்கள்? உங்கள் மகனுக்கு ஒரு பெண் மீதோ அல்லது உங்கள் மகளுக்கு ஒரு ஆண் மீதோ சிறியவயதில் பாலீர்ப்பு ஏற்படுகிறது என்று வைத்து கொள்வோம்…இது உலகில் பொதுவாக காணப்படுகிற ஒரு சாதரணமான விஷயம். இதை உங்களிடம் அதை அவர்கள் சொல்வார்களா? கஷ்டம் தானே? அப்படியிருக்க தன் பாலர் மீதுள்ள ஈர்ப்பை மட்டும் எப்படி சொல்லுவார்கள் என்று எதிர்பார்க்க முடியும்?
எனது மகனிடம் பெண்மையான குணம் அல்லது நடத்தை எதுவும் தெரிவதில்லை , அவன் எப்படி நம்பியாக ( தன்பாலீர்ப்புள்ள ஆண் ) இருக்க முடியும்? (அல்லது) என் மகளுக்கு பெண்கள் மீது தான் ஈர்ப்பு, அதோடு மட்டுமில்லாமல் சற்றே ஆண்மையுடன் தோன்றுகிறாள் , ஆண் உடைகளையே விரும்புகிறாள், இது ஏன்?
ஒருவர் தன் பாலை (Sex) பற்றி எப்படி உணர்கிறார், அடையாளம் காண்கிறார் என்பது அவரது பாலுணர்வு அடையாளம் (Sexual Identity).
ஒருவர் தன் பாலை எப்படி வெளிப்படுத்துகிறார் என்பது அவரது பாலுணர்வு நடத்தை (நடை, உடை, பாவனை) (Sexual Behavior).
பாலீர்ப்பு (Sexuality) என்பது பால் சம்மந்தப்பட்ட ஈர்ப்பு (Sexual Attraction).
உங்கள் மகனுக்கு தன்பாலீர்ப்பு இருக்கிறது என்பதற்காக அவரது பாலுணர்வு நடத்தை பெண்மை நிறைந்ததாக இருக்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. சிலர் அப்படி இருப்பார்கள் , சிலர் சிறிதும் பெண்மை இல்லாமல் பிற ஆண்களை போலவும் இருப்பார்கள்.
உங்கள் மகள் ஆண் உடையை விரும்பி அணிவதால், தன்பாலீர்ப்புள்ள எல்லா பெண்களும் அப்படி இருப்பார்கள் என்பதும் உறுதியில்லை .
பாலீர்ப்பிற்கும் பாலுணர்வு நடத்தைக்கும் எப்பொழுதும் தொடர்பு இருக்க வேண்டும் என்பது அவசியம் அல்ல.
மாறுபட்ட பாலீர்ப்பு கொண்டவர்கள் வானவில்லின் வண்ணங்களை போல் பல வகையில் பன்மைப்பட்டு விளங்குகிறார்கள்.
எனது அன்புக்குரியவர் மாறுபட்ட பாலீர்ப்பு உள்ளவரோ என்று எனக்கு சந்தேகமாக உள்ளது. இது பற்றி நானாக அவரிடம் பேசலாமா அல்லது அவராக சொல்லும் வரை காத்திருப்பதா?
நல்ல கேள்வி. நீங்களாக இதைப் பற்றி பேசுவது என்பது எல்லா நேரத்திலும் சரியான வழி அல்ல. உங்கள் சந்தேகம் தவறானதாக கூட இருக்கலாம். அந்த நபரை தவிர வேறு யாருக்கும் அவரது பாலீர்ப்பை பற்றித் தெரிய சாத்தியம் இல்லை. உங்களிடம் உங்கள் அன்புக்குரியவர் மனம் திறந்து தங்கள் பாலீர்ப்பு போன்ற அந்தரங்கமான அதே சமயம் கடினமான விஷயங்களை பேசக்கூடிய சூழலை உருவாக்குங்கள். மாறுபட்ட பாலீர்ப்பு கொண்டவர்களின் பிரச்சனைகள், போராட்டங்கள் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.
இது போன்ற விஷயங்களில் நாட்டம் காட்டி, உங்கள் அன்புக்குரியவரிடம் பேசுங்கள். இப்படி செய்வதன் மூலம் நீங்கள் ஒரு நண்பராக, நல்ல ஆதரவாளராக தென்படுவீர்கள், அதனால் உங்கள் அன்புக்குரியவர் உங்களிடம் மனம் திறப்பது எளிதாகும்.
என் மகன்/மகள் அமெரிக்கா அல்லது வெளிநாடு சென்றதால் நம்பியாக மாறிவிட்டானா?
பாலீர்ப்புக்கும் வெளிநாடுகளுக்கு செல்வதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. பாலீர்ப்பு என்பது முக்கால்வாசி பேருக்கு சிறுவயதிலேயே வடிவு பெறுகிறது. மனம், உடல், மரபணு, சுற்றுப்புற சூழ்நிலை என்று பல விஷயங்களின் கலவையால் ஒருவரின் பாலீர்ப்பு நிர்ணயிக்கபடுகிறது என்கிறார்கள் வல்லுனர்கள். உங்கள் மகனோ அல்லது மகளோ வெளிநாட்டிற்கு சென்ற பிறகு உங்களிடம் இந்த விஷயத்தை பற்றி பேசினால் அதன் மூலம் நீங்கள் “வெளிநாட்டிற்கு போய் கெட்டுபோய் விட்டான்(ள்)” என்ற முடிவிற்கு வரக்கூடாது. இதற்கு பல காரணங்கள் இருக்கலாம்:
1)உங்கள் மகனோ அல்லது மகளோ அப்பொழுதுதான் உங்களிடம் இதைப்பற்றி பேசக்கூடிய மனப்பக்குவத்தை அடைந்திருக்கலாம்
2)வேலை, படிப்பு இவற்றிற்காக வெளிநாடு சென்றபிறகு அவர்களுக்கு தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரித்திருக்கலாம்.
3)அமெரிக்கா உள்பட பல மேலை நாடுகளில் மாறு பட்ட பாலீர்ப்பு உடையவர்களையும் சமமாக நடத்த வேண்டும் என்ற போராட்டங்கள் வலிமை பெற்றிருக்கின்றன. இதனால் உங்கள் மகன் அல்லது மகள் தங்களைப் பற்றிய தாழ்வுமனப்பான்மையை உதறித்தள்ளி ஊக்கம் பெற்றிருக்கலாம்.
இப்படி பல. இவையெல்லாம் நல்ல விஷயங்கள்…நீங்கள் சந்தோஷப்படவேண்டிய விஷயங்கள். இன்னொன்றையும் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் … “கெட்டுத் தான் போக வேண்டும்” என்றால் உங்கள் மகனோ/மகளோ ஏன் எதிர்பாலில் உள்ள ஒருவருடன் பாலுறவு கொள்ளக்கூடாது? அதுதானே உலகில் பலர் செய்யும் விஷயம்? பிரச்சனையற்றதும் கூட! இவற்றை மனதில் கொண்டு பார்த்தால் வெளிநாடு சென்றதால் கெட்டுப்போனார்கள் என்பது உண்மை அல்ல என்பதை அறியலாம்.
ஒரு மருத்துவரையோ அல்லது மன நல ஆலோசகரையோ சந்தித்தால் இதற்கு ஒரு வழி கிடைக்குமா?
உங்கள் குழந்தையின் பாலீர்ப்பை மாற்ற வேண்டும் என்ற நோக்கோடு ஒரு மருத்துவரையோ, மன நல ஆலோசகரையோ பார்த்து பேசலாம் என்று நீங்கள் எண்ணினால் அதில் எந்த பிரயோஜனமும் இல்லை. தன்பாலீர்ப்போ (Homosexuality) மற்றும் இருபாலீர்ப்பு (Bisexuality) இவை ஒருவர் விரும்பி தேர்வு செய்யும் விஷயம் அல்ல. இது இயற்கையாக ஏற்படும் ஒரு விஷயம்.
பாலீர்ப்பு மாற்றக்கூடிய சிகிச்சைகள் ஆதாரம் அற்றவை. உண்மை என்னவெனில் இது போன்ற பாலீர்ப்பு மாற்றும் சிகிச்சைகள் மனத்தளர்ச்சி, பாலியல் கோளாறுகள் போன்ற மிகவும் ஆபத்தான பின்விளைகளை ஏற்படுத்தும். பெரும்பாலான மருத்துவர்கள் தற்பாலீர்ப்பை நோயாகக் கருதுவதில்லை. ஒரு சில மருத்துவர்கள் அறிவியல் ரீதியான காரணங்களுக்குப் புறம்பாக அவர்களின் மத நம்பிக்கை போன்ற பிற தாக்கங்களினால் இவ்வகை சிகிச்சைகளை உபயோகப்படுத்துகிறார்கள். இது அறிவியலுக்குப் புறம்பானது. மனிதர்களின் பாலீர்ப்பு பலதரப்பட்டது. சுற்றுப்புற சூழல், மற்றும் உடலியல் கூறுகள் கலந்த இனம்கூற முடியாத காரணங்களால் ஏற்படும் இந்த மாறுபட்ட பாலீர்ப்புக்குத் தேவை மனித நேயமும், அன்பும் தான்.
– வெல்லூர் கிறித்தவ மருத்துவ கல்லூரியின் பேராசிரியர் ஜேகப், இந்து நாளிதழில் (July 26 2009)
உங்கள் குழந்தையின் இந்த மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் அதன் உணர்வுகளை புரிந்து கொள்ள, உங்கள் குழந்தையுடன் மனம் விட்டு பேச, அதனுடன் ஒரு நல்ல ஆரோக்கியமான உறவை அமைத்துக்கொள்ள, பல சமயங்களில் ஒரு மன நல ஆலோசகரை (Counsellor) சந்தித்து பேசுவது பயனுள்ளதாக இருக்கும். இப்படி செய்வதால், இந்த வித்தியாசத்தால் தனியே தவித்துகொண்டிருக்கும் உங்கள் குழந்தைக்கும் நீங்கள் உதவியாக இருக்க முடியும். மன நல ஆலோசகர்கள் எல்லோரும் உங்கள் தேவையான ரகசியத்தன்மையை மதித்து, உங்களுக்கு வேண்டிய ஆலோசனையை தருவார்கள். இப்படிப்பட்ட ஆலோசகர்களை பற்றிய விவரம் அறிய இந்த கையேட்டின் கடைசிப் பிரிவை பார்க்கவும்.
நங்கை மற்றும் நம்பிகள் தங்கள் பாலீர்ப்பை மாற்றிக்கொள்ள முடியுமா?
முடியாது. இதற்காக மேற்கொள்ளப்படும் மருத்துவ முறைகள் மிகவும் ஆபத்தானவை, அங்கீகரிக்க படாதவை மற்றும் அறிவியல் பூர்வமற்றவை. பாலீர்ப்பை மாற்ற முடியும் என்று கூறுபவர்கள் எந்த அறிவியல் மற்றும் அனுபவ ஆதாரமும் இல்லாமல் இப்படி கூறுகிறார்கள்.
இதற்கு முக்கிய காரணம், அவர்களுக்கு அறியாமையாலோ அல்லது வேறு காரணங்களாலோ ஏற்படும் பயம் அல்லது இதன் மேல் இருக்கும் தனிப்பட்ட வெறுப்பும்,
கசப்புமே காரணம். மாறுபட்ட பாலீர்ப்பு கொண்டவர்கள் மாற தேவை இல்லை, அவர்கள் மேல் நாம் காட்டும் வெறுப்பும், வேற்றுமையும் தான் மாற வேண்டும். American Psychological Association(APA) நடத்திய ஆய்வுகளில் இது போன்ற பாலீர்ப்பை மாற்றும் முறைகள் ஆதாரமற்றவை என்பது தெரியவந்துள்ளது. மேலும் இது போன்ற முறைகள் நன்மையை விட அதீதமான தீமைகளையே (தாழ்வு மனப்பான்மை, மன உளைச்சல், தற்கொலைக்கான எண்ணம் ) விளைவிக்கும் என்கிறது American Psychological Association(APA).
திருமணம் செய்து கொண்டால் இது மாறக்கூடுமோ?
திருமணம் என்பது எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு அல்ல.நங்கை மற்றும் நம்பிகள் குடும்பத்தினருக்காக எதிர்பாலாரை திருமணம் செய்து் கொள்வதால் அது மற்றோருவர் வாழ்வை வீணடிக்கிறது. குறிப்பாக தமது பாலீர்ப்பை உணர்ந்தவர்கள் பலர் பெற்றோர்களுக்காகவோ, அல்லது சமூக நிர்பந்தத்திற்காகவோ திருமணம் செய்துக்கொண்டு வாழ்க்கை முழுவதும் அவதிப்படுகிறார்கள்.
மேலும் நமது கலாச்சாரத்தில் திருமணம் என்பது இரண்டு நபர்களை மட்டுமல்லாது இரண்டு குடும்பங்களை பாதிக்கிற விஷயம். தேவையில்லாமல் உங்கள் மகன்/மகள், அவரது துணை, இரண்டு குடும்பங்கள் என்று எல்லோருடைய வாழ்க்கையையும் குழப்பத்திலும் கவலையிலும் ஆழ்த்த வேண்டாமே! கட்டாயத் திருமணத்தாலோ அல்லது உங்களுக்குத் தெரிந்த மந்திரவாதியிடம் கொண்டு செல்வதாலோ அல்லது ஜோசியரிடம் கூட்டிப் போவதாலோ உங்கள் குழந்தை மாறப்போவதில்லை. மாறவும் தேவையில்லை.
ஈரர் அல்லது இருபாலீர்ப்பாளர் (Bisexuals) யார்?
ஈரர் / இருபாலீர்ப்பாளர் என்றால் ஆண் , பெண் இருவரின் மீதும் பாலீர்ப்பு ஏற்படக்கூடிய ஒருவர் (ஒரே சமயத்தில் அல்ல).ஆயினும் பலருக்கு சூழ்நிலை காரணமாகவோ அல்லது வேறு பல காரணங்களாலோ அவர்களின் பாலீர்ப்பிற்கேற்ப பாலியல் நடத்தை (Sexual Behaviour) மேற்கொள்ள முடிவதில்லை. அதனால் ஈரர் என்றால் ஆண் , பெண் என்ற பாகுபாடின்று ஈர்ப்பு ஏற்படும் தன்மை உடையவர் எனலாம். இது நடவடிக்கையைக் குறித்த சொல் என்று சிலர் கூறுவர். சிலர் இதை ஒருவர் தம்மை அடையாளம் காட்ட பயன்படுத்தக் கூடிய சொல் என்றும் சொல்லலாம். இவர்களில் சிலருக்கு ஒரு பாலரின் மீது அதிக ஈர்ப்பு இருக்கலாம். சிலருக்கு ஒரே அளவாக இருக்கலாம். இது காலத்திற்கேற்ப மாறவும் கூடும்.
பாலீர்ப்பு பன்மைபட்டது, ஆனால் நமக்கு தெரிந்ததெல்லாம் ஆண்-பெண் இவர்களுக்கிடையே ஏற்படும் பால் ஈர்ப்பு மட்டுமே(எதிர் பாலீர்ப்பு ). பல ஆண்டுகள் நடத்திய விரிவான ஆய்விற்கு பிறகு, கின்சி மனிதனின் பாலீர்ப்பை எண் பூஜியதிலிருந்து எண் ஆறு வரை அவரது அளவுகோலில் மதிப்பிட்டு வகைப்படுத்தினார். அளவுகோலில், பெரும்பாலும் காணப்படும் ஆண்-பெண்ணிற்கிடையே ஏற்படும் எதிர் பால் ஈர்ப்பு எண் பூஜியத்திலும் ,
ஆண்-ஆண் அல்லது பெண்-பெண் இவர்களுக்கிடையே ஏற்படும் தன் பால் ஈர்ப்பு எண் ஆறிலும் இடம்பெறுகிறது. இதில் சுவாரசியமான கண்டுபிடிப்பு என்னவென்றால் பூஜியத்திற்கும் ஆறிற்கும் நடுவிலேயும் பல ஆண்கள் மற்றும் பெண்கள் இருக்கிறார்கள் என்பது தான். இவர்களை தான் ஈரர் / இருபாலீர்ப்பாளர் என்று அழைக்கிறோம்.
உங்கள் மகன் அல்லது மகள் தான் ஈரர் என்று சொன்னால் உடனே நீங்கள் எந்த முடிவிற்கும் வர தேவையில்லை. ஈரர் என்று சொன்னதால் உடனே ஆண் பெண் என்று எல்லோருடனுடன் உறவு கொள்ள போகிறார்கள் என்று அர்த்தம் இல்லை. இரண்டு பாலர் மீதும் தனக்கு ஈர்ப்பு இருக்கிறது என்பதை அவர்கள் உணர்கிறார்கள் மற்றும் உங்களிடம் அதை பகிர்ந்து கொள்கிறார்கள், அவ்வளவே. எதிர் பால் மீது ஈர்ப்பு இருக்கிறது என்பதற்காக திருமணத்திற்கு வற்புறுத்த வேண்டாம், பல சமயங்களில் இது பிரச்சனைகளுக்கே வழி வகுக்கிறது. உங்கள் மகள் அல்லது மகளே கால போக்கில் சரியான துணையை தேர்ந்தெடுப்பார்கள்.
என்னால் இதை ஏற்றுக்கொள்ளமுடிகிறது, ஆனால் ஊர் உலகம் என்ன சொல்லும்? சொந்தபந்தத்திடம் என்ன சொல்வது?
உங்கள் மகனோ மகளோ உங்களிடம் வெளியே வந்தார்கள் என்பதற்காக ஊர் உலகத்திடமும் தங்களது பாலீர்ப்பை பற்றி சொல்லபோகிறார்கள் என்று அர்த்தம் இல்லை. உங்கள் மகன்/மகளிடம் இதை பற்றி மனம் விட்டு பேசுங்கள். அவர் என்ன நினைக்கிறார், நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று தெரிந்துகொள்ளுங்கள். யாரிடம் என்ன சொல்வது என்பது நீங்கள் இருவரும் எடுக்க வேண்டிய முடிவு. தேவைப்பட்டால் ஒரு Counsellorஐ சந்தித்துப் பேசுங்கள்,பல சமயம் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
உங்கள் உறவினர்கள் திருமணத்தைப் பற்றி கேட்டால், “என் மகன்/மகளுக்கு திருமணத்தில் நாட்டம் இல்லை” என்று சொல்லிவிடலாம். நீங்கள் இதில் புரிந்துகொள்ள வேண்டிய ஒரு விஷயம்…. தன்பாலீர்ப்பு உடைய உங்கள் மகன்/மகள் பல வருடங்களாக இந்த விஷயத்தை பற்றி யாரிடமும் பேசமுடியாமல் தவித்திருப்பார்கள். தான் யார் என்ற உண்மையை மறைத்து வைப்பது என்பது ஒரு சாதாரணமான காரியம் இல்லை.அது அவர்களுக்கு பெரிய மனஅழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இந்த போராட்டத்தால் தளர்ந்து ஓய்ந்து போகும் சிலர் இனிமேல் யாரிடமும் பொய் சொல்ல போவதில்லை , மறைக்க போவதில்லை என்ற முடிவை எடுக்கலாம்.
உங்கள் மகன் அல்லது மகள் அப்படி ஒரு முடிவை எடுத்தால் ஆதரிக்கவேண்டியது உங்கள் கடமையாகிறது. மேலும் இந்தியாவிலும் மற்றும் உலகில் பல நாடுகளிலும் மாறு பட்ட பாலீர்ப்பு உடையவர்களையும் சமமாக நடத்தவேண்டும் என்ற போராட்டங்கள் வலிவு பெற்று வருகின்றன . இந்தியாவில் 2009 ஜூலை வரை தன்பாலீர்ப்பாளராக இருப்பது ஒரு குற்றமாக இருந்தது, இனிமேல் அது இல்லை. ஜூலை 2, 2009 அன்று தில்லி உயர்நீதிமன்றம் நாஸ் பவுண்டேஷன் ஐ.பி.சி 377 ஐ எதிர்த்து தொடுத்திருந்த வழக்கில் “வயதுவந்த இருவரின் விருப்பதுடன் நடக்கும் பால் சமந்தப்பட்ட உறவு குற்றமல்ல” என்று தீர்ப்பு வழங்கியுள்ளது .
மாறு பட்ட பாலீர்ப்பு உடையவர்களை பற்றிய வெகுஜனங்களின் பார்வையும் எண்ணமும் மாறி வருகிறது.
சரி, திருமணம், குழந்தைகள், குடும்பம் இதெல்லாம் வேண்டாமா? கடைசி காலத்தில் அவர்களை யார் கவனித்து கொள்வார்கள்?
உங்களுக்கு ஏற்படும் இந்த கவலை நியாயமானது , எல்லா பெற்றோர்களுக்கும் ஏற்படக்கூடியது. திருமணம் செய்து வைக்கவேண்டும் என்று ஏன் நினைக்கிறீர்கள்? உங்கள் மகன் அல்லது மகள் சந்தோஷமாகவும் நிறைவுடனும் வாழ வேண்டும் என்பது உங்கள் விருப்பம், எண்ணம். சரி….உங்கள் மகன் அல்லது மகள் அப்படி நினைக்கிறார்களா? அவர்களுக்கு திருமணம் சந்தோஷத்தையும் நிம்மதியையும் தருமா? இது அவர்கள் வாழ்க்கை, அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது தானே முக்கியம்?
எல்லோரும் திருமணம் செய்துகொள்வதில்லை. திருமணம் செய்துகொள்ளும் அனைவரும் குழந்தைகள் பெற்றுக்கொள்வதில்லை. குழ்ந்தை பெற்றுக்கொள்ளும் அனைவரும் கடைசி காலத்தில் குழந்தைகளின் ஆதரவோடு இருப்பதில்லை….இதெல்லாம் வாழ்க்கையின் உண்மைகள்.
நங்கை, நம்பி, ஈரர், திருநர் பலர் தங்களுக்கு என்று ஒரு துணையை தேர்ந்தெடுத்து சந்தோஷமாகவும் மனநிறைவுடனும் வாழத்தான் செய்கிறார்கள். குடும்பத்திலோ, சமூகத்திலோ இதற்கு அங்கீகாரம் கிடைப்பதில்லை என்பது வருத்தமான விஷயம் தான். உலகில் சில நாடுகளில் இவர்களுக்கு திருமணம், குழந்தைகளை தத்தெடுப்பது போன்ற உரிமைகளை வழங்கும் சட்டங்கள் உள்ளன. மேலும் பல நாடுகளில் இந்த உரிமைகளை வழங்க வேண்டும் என்ற குரல் ஓங்கி கொண்டிருக்கிறது. இந்தியாவிலும் காலப்போக்கில் இது போன்ற மாற்றங்கள் வரலாம். அதனால் எதிர் பாலருடன் திருமணத்திற்கு உங்கள் மகன் அல்லது மகளை கட்டாயப்படுத்தாதீர்கள். உங்களால் முடிந்தவரை அவர்களை புரிந்துகொள்ளவும், ஆதரிக்கவும் முயற்சி செய்யுங்கள்.
ஒரு ஆணும்-ஆணும் அல்லது பெண்ணும் பெண்ணும் எப்படி உறவுகொள்கிறார்கள்? இது எப்படி சாத்தியம்? நினைத்தாலே அருவெறுப்பாக இருக்கிறதே?
ஆணும்-ஆணும் அல்லது பெண்ணும்-பெண்ணும் பாலுணர்வு கொள்வதில் பல விதங்கள் உள்ளன. இணையத்தில் தேடினால் இதை பற்றிய விவரங்கள் கிடைக்கும் அல்லது ஒரு Counsellor அல்லது பால் மருத்துவரை சந்தித்து பேசலாம்.
சில குறிப்புகள்:
1) இதில் அருவெறுப்புப்பட எதுவும் இல்லை.பல சமயம் அருவெறுப்பு என்பது சரியான புரிதல் இல்லாததால் ஏற்படுகிறது.
2) எதிர்பாலீர்ப்பு உள்ள திருமணமான உங்களது மகன் அல்லது மகள் அவர்களது வாழ்க்கைதுணையுடன் எப்படி உறவு கொள்கிறார்கள் என்பது பற்றி நீங்கள் யோசிப்பீர்களா? அவர்களை போல் தான் தன்பாலீர்ப்புடைய உங்களது மகன் அல்லது மகள். பால் உறவு என்பது மிகவும் அந்தரங்கமான விஷயம், உங்களால் முடிந்தால் பாதுகாப்பான முறையில் பால் உறவு மேற்கொள்ளுவது மற்றும் ஆணுறைகளை பயன்படுத்துவது இது போன்ற விஷயங்களை பற்றி பேசலாம்.
3) தன்பாலீர்ப்பு உடைய உங்கள் மகன் அல்லது மகளோ – தன் பாலர் மீது அவர்களுக்கு காதல் என்றால்,அது வெறும் காமம் மட்டும் இல்லை.அது காதல், பாசம், அன்பு, பகிர்ந்து கொள்ளுதல், புரிந்து கொள்ளுதல், விட்டுக்கொடுத்தல் என்று பல உணர்வுகளின் கலவை.
4) தன்பாலீர்ப்பு உடைய உங்கள் மகனையோ அல்லது மகளையோ வெறும் உடல் இச்சை கொண்டவர்களாக மட்டும் பார்க்காதீர்கள். உங்களுக்கும் உங்கள் வாழ்க்கை துணைக்கும் இருக்கும் உறவு வெறும் பாலுணர்வு சம்பந்தப்பட்டதா? அது போலதான் தன்பாலீர்ப்பாளர்களும்.
இதனால் என் குழந்தைக்கு ஹெச். ஐ. வீ / எய்ட்ஸ் வருமா?
ஹெச். ஐ. வீ / எய்ட்ஸ் பாதுகாப்பற்ற முறையில் உறவு கொள்வதால் பரவும் நோய். இதற்கு எதிர்பாலீர்ப்பாளர், தன்பாலீர்ப்பாளர்,இருபாலீர்பாளர், திருநர் என்ற வேறுபாடு கிடையாது, யாருக்கு வேண்டுமானாலும் இந்த நோய் பரவலாம்.
தன்பாலீர்ப்பாலராய் இருப்பதால் எய்ட்ஸ் நோய் வரும் என்பது அபத்தமான ஒரு அனுமானம். உங்களுக்கு இதை பற்றிய கவலை இருந்தால் பாதுகாப்பு, கவனம் இவற்றை பற்றி மனம் திறந்து உங்கள் குழந்தையிடம் பேசலாம். உங்கள் குழந்தையின் பாலீர்ப்பு எதுவானாலும் சரி, இது பேசவேண்டிய விஷயம்.
இது நம் இந்திய கலாச்சாரத்திற்கு எதிரானதே?
நிச்சயம் இல்லை. ஆங்கிலேயர் ஆட்சியினால் நமக்குக் கிடைத்த பலவற்றில் ஒன்று தான் இந்த மாறுபட்ட பாலீர்ப்பு குறித்த பயம் மற்றும் வெறுப்பு, மற்றும் இன்று நீதிமன்றத்தினால் தகர்த்தெறியப்பட்ட 377ஆம் சட்டப் பிரிவு! காஜுராகோவையும் காமசூத்ராவையும் உலகிற்குத் தந்த நாடு இந்தியா.பாலுணர்வு, பாலியல் குறித்த பலதரப்பட்ட செய்திகள் நம் நாட்டு வரலாற்றிலும், இதிகாச புராணங்களிலும் காணப்படுகின்றன.
இந்திய சமுதாயம் பிற சமுதாயங்களை விட சில இடங்களில் வித்தியாசப் படுகிறது. ஆண்-பெண் என்ற பொதுவான எதிர்பாலீர்ப்புக்கே இங்கேயும் முக்கியத்துவம். ஆனால் மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளம் கொண்டவர்களை அடியோடு ஒதுக்கவுமில்லை, ஒடுக்கவுமில்லை.
இன்று இந்திய கலாச்சாரத்தின் காவலர்கள் என்று பறைசாற்றிக்கொள்ளும் பலர் சிகண்டியின் கதையையோ பாங்கக்ஷ்வன ராஜனின் கதையையோ கேட்டதில்லை. அல்லது எதிர்பாராமல் கர்ப்பமுற்று, பிள்ளைப்பேறு பெற்ற யுவனஷ்வ ராஜனைப்பற்றியும் படித்ததில்லை. நமது இதிகாசக் கதைகளில் சொல்லப்பட்ட இரண்டு ராணிகள் காதலித்து எலும்பில்லாத பிள்ளையைப் பெற்ற கதையும் அவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. (இந்திய புராணங்களில் ஆணின் விந்து தான் எலும்புகளை உண்டாக்குகிறது என்பது ஒரு அனுமானம்).
ஸ்ரீ ஹரி மோகினியாக அவதாரம் எடுத்து சிவன் மேல் காதல் கொண்ட கதையும் அவர்களுக்கு மறந்து போயிருக்கும்.ஒவ்வொரு பிரம்மோற்ஸவத்திலும் திருப்பதி வேங்கடேசன் பெண்ணின் உடை அணிந்து மோகினியாயய் அருள்பாலிப்பதையும் தெளிவாக ஒதுக்குவது என்று நம் கலாச்சாரக் காவலர்கள் முடிவு செய்து விட்டார்கள்.
விருந்தாவனத்தில் சிவபெருமான் பால்காரியாக உருமாறி கிருஷ்ணருடன் ராசலீலை ஆடியதும் அவர்களுக்குத் தெரியவேண்டாம். ராதையின் மேல் கொண்ட காதலால் ஸ்ரீஹரி நத்துவாரகையில் ஸ்ரீநாத் என்ற பெயரில் ஸ்த்ரீ வேடம் அணிவதும் அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல. அது மட்டுமா குஜராத்
மாநிலத்தில் உள்ள திருநங்கையர்களின் கடவுளான பகுசர்ஜீயும் , நம் தமிழகத்தில் அருள் பாலிக்கும் கூத்தாண்டவரும் அவர்களுக்கு வேண்டாம்.– Dr.தேவதத் பட்டநாயக் (கலாச்சார மற்றும் இந்திய புராண அறிஞர் , எழுத்தாளர், மற்றும் மருத்துவர்).
என் குழந்தைக்கு நான் எப்படி உதவலாம்?
உங்கள் குழந்தையை கவனித்து கொள்வது பெற்றோராகிய உங்கள் கடமை. உங்கள் குழந்தைக்கு உங்கள் அன்பு, ஆதரவு மற்று உதவி கட்டாயம் தேவை. பெற்றோரின் இடத்தை வேறு யாராலும் நிரப்ப முடியாது. இந்த கையேட்டை படிக்க துவங்கியது அந்த பயணத்தில் ஒரு முதல் அடி. மெல்ல மாறுப்பட்ட பாலீர்ப்பை பற்றிய தகவல்களை அறிய தொடங்குங்கள். இணையம், புத்தகங்கள், பிற பெறோர்கள், மன நல ஆலோசகர்கள் என்று இதற்கு பல வழிகள் இருக்கின்றன.
மேலும் மாறுபட்ட பாலீர்ப்பு என்பது ஒரு மறைக்கப்படவேண்டிய, வெட்கப்பட வேண்டிய விஷயம் இல்லை என்பதை தெளிவாக மனதில் வாங்கி கொள்ளுங்கள், இது மிகவும் முக்கியம். உங்கள் குழந்தையிடம் மனம் விட்டு பேசுங்கள், அப்பொழுதுதான் அது உங்களிடம் என்ன எதிர்பார்க்கிறது என்பது தெரியும்.
உங்கள் குழந்தையின் வாழ்க்கை நன்றாக அமைய வேண்டும் என்றால், சமுதாயத்தில் அதற்கு கிடைக்கவேண்டிய மதிப்பும் மரியாதையும் கிடைக்க வேண்டும் என்றால், உங்களை போன்ற பெற்றோர்கள் மாறுபட்ட பாலீர்பை பற்றி அறிந்து மற்றும் புரிந்து கொள்ள வேண்டும். பின்பு மெதுவாக இதை பற்றி சமூகத்தில் இருக்கும் தவறான கண்ணோட்டத்தை களைய உங்களால் ஆன முயற்சிகளை செய்ய வேண்டும்! செய்வீர்கள் என்று நம்புகிறோம். வாழ்த்துக்கள்!
என்னால் என் குழந்தையை ஏற்றுக்கொள்ள முடியுமா?
கண்டிப்பாக முடியும். மாறுப்பட்ட பாலீர்ப்பை பற்றிய உங்கள் அறியாமை விலக விலக, உங்கள் புரிதல் அதிகரிக்க உங்கள் குழந்தைக்கு இருப்பது ஒரு சிறிய வித்தியாசமே என்பது தெளிவாகும். பின்பு நீங்கள் முழு மனதோடு உங்கள் குழந்தையை ஏற்றுக் கொள்வீர்கள். பல பெற்றோர்கள் இதை செய்து இருக்கிறார்கள்.
மூலம்: pflag.org
(c) ஓரினம். எங்கள் காப்புரிமை கொள்கையை படிக்கவும்