குட்டிக்கதை: இதுல என்ன இருக்கு?
வழக்கமான ஒரு சென்னை காலைப் பொழுது. தாம்பரத்தில் ஒரு கூரியர் கம்பெனி அலுவலகம். மணி எட்டேகால்.கம்பெனியில் வேலை செய்பவர்கள் ஒவ்வொருவராக உள்ளே நுழைந்து கொண்டிருந்தார்கள்.
லக்ஷ்மி வாசலில் இருந்த ரிஜிஸ்டரில் கையெழுத்துப் போட்டுவிட்டு உள்ளே நுழைந்தாள். ஹான்ட்பாக்கை மேஜையில் வைத்துவிட்டு, முகத்தில் படர்ந்திருந்த வியர்வையைக் கர்சீப்பால் துடைத்தாள்.
அவளுக்கு எதிரே இரண்டு தனித்தனி மேஜைகளில் அக்கவுண்டன்ட் பரமசிவமும், ஸ்டெனோ சுசீலாவும் உட்கார்ந்திருந்தார்கள்.
“குட்மார்னிங்” என்று சிரித்தார் பரமசிவம்.
“குட்மார்னிங் மேடம்! எப்படி இருக்கீங்க?” என்று சிரித்தாள் லக்ஷ்மி.
பரமசிவத்துக்குச் சற்றுக் குழப்பம். அதற்குள் புத்தகத்தில் லயித்திருந்த சுசீலா, தலையை நிமிர்த்தி,”ஹலோ! குட்மார்னிங்! நீ வந்தத கவனிக்கலை” என்றாள்.
“அதானாலென்ன பரவாயில்லை சார்” என்றாள் லக்ஷ்மி.
இப்பொழுது சுசீலாவுக்கும் குழப்பம். லக்ஷ்மி, பரமசிவத்திடம் பேசுகிறாள் போலும் என்று எண்ணிக்கொண்டு, தலையாட்டினாள். அதற்குள் உள்ளே நுழைந்தார்கள் ரேஷ்மாவும், சுரேஷும். அவர்கள் இருவரும் லக்ஷ்மியின் வயது. மூவரும் ஒரே டீம். நல்ல நண்பர்கள்.
“ஹே!” என்றபடி எல்லோருக்கும் சல்யுட் அடித்துக்கொண்டே வந்தான் சுரேஷ்.
“ஹலோ மக்களே!” என்று மலர்ச்சியான முகத்துடன் நுழைந்தாள் ரேஷ்மா.
“ஹலோ டா! என்ன ஒரே குஷி!” என்று ரேஷ்மாவைப் பார்த்து கேட்டாள் லக்ஷ்மி.
“நத்திங்!” என்று சிரித்தாள் ரேஷ்மா.
“கதை! எதோ விஷயம் இருக்கு. விடாத கேளு” என்றான் சுரேஷ் இடைமறித்து, லக்ஷ்மியிடம்.
“கேக்கறேன்டி சுரேஷ்! ” என்று பதில் சொன்னாள் லக்ஷ்மி.
“என்ன கேக்கறேன்”டீ”யா? கிண்டலா?” படக்கென்று பதில் சொன்னான் சுரேஷ்.
ஏற்கனவே குழம்பிப் போயிருந்த சுசீலாவிற்கு இதைப் பார்த்ததும் தலைசுத்த ஆரம்பித்தது.
—
அன்று நாள் முழுவதும் லக்ஷ்மி “டா”வை “டீ” என்றும், “சார்”ஐ “மேடம்” என்றும் மாத்தி மாத்திக் கூப்பிடவே, மதியத்திற்குள் எல்லோரும் தளர்ந்து போனார்கள். ஒன்றாக லக்ஷ்மியைச் சூழ்ந்து கொண்டார்கள்.
“இதுல என்ன இருக்கு?” என்று சாதரணாமாய்ச் சிரித்தாள் லக்ஷ்மி. “நான் பால் மாற ஆரம்பிச்சு ஆறு மாசம் ஆகுது. நீங்க எல்லோரும் என் ப்ரெண்ட்ஸ். எனக்கு ஆதரவா இருக்கீங்க தான், அதுக்கு என் மனமார்ந்த நன்றி. ஆனா நான் இதோட ஆயிரம் தடவை உங்ககிட்ட சொல்லியாச்சு. நான் லக்ஷ்மி நாராயணன் இல்லை, லக்ஷ்மி, ஒரு பொண்ணுன்னு. இன்னுமும் நீங்க என்ன வாடா, போடா, தம்பி, சார், மச்சி இப்படித் தான் கூப்பிடறீங்க. கேட்டா, இதுல என்ன இருக்குனு கேக்கறீங்க! ஆண் பால், பெண் பால் மாற்றி ஒருத்தரக் கூப்பிடறது பெரிய விஷயமில்லைனா, நான் கூப்பிட்டா மட்டும் என்ன பிரச்சனை? ஹ்ம்ம்? என்ன சுசீலா சார், கரெக்டுதானே! ”
—
அடுத்த நாள் காலை. லக்ஷ்மி சீட்டிற்கு வந்து அமர்ந்தாள்.
“குட்மார்னிங் லக்ஷ்மி மேடம்” என்று அவளைப் பார்த்துச் சிரித்தார் பரமசிவம் “சார்”.
u touch my heart.