திருநர் மசோதா 2019: தமிழ்நாட்டில் எதிர்ப்பு
டிசம்பர் 3, 2019 அன்று, சென்னை சேப்பாக்கத்தில் இருக்கும் பத்திரிக்கையாளர்கள் மன்றத்தில் நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பின்வரும் அறிக்கை வெளியிடப் பட்டது.
குடியரசு தலைவருக்கு கடிதம் அனுப்பும் போராட்டத்துடன் நடந்த இந்த சந்திப்பில், திருநர் மசோதாவை தற்போது இருக்கும் வரைவிலேயே ஏற்றுக்கொள்ள அனுமதிக்கக் கூடாது என குடியரசு தலைவருக்கு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் வாயிலாக வேண்டுகோள் விடுக்கப் பட்டது.
செய்திக்குறிப்பின் ஆங்கில மொழிபெயர்ப்புக்கு இங்கே கிளிக் செய்க.
திருநர் சமூக உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், மற்றும் தமிழ்நாடு ரெயின்போ கூட்டணியின் உறுப்பினர்கள், எல்.ஜி.பீ.டி.கியூ + குழுக்கள், கூட்டு மற்றும் தனிநபர்களின் குழுக்கள் இணைந்து மாநிலங்களவையில் திருநர் மசோதா நிறைவேற்றப்பட்டதில் எங்கள் ஆழ்ந்த அதிருப்தியை வெளிப்படுத்தும் அறிக்கை பின்வருமாறு:
நவம்பர் 26, 2019 அன்று மாநிலங்களவை நிறைவேற்றிய இந்த மசோதா, இந்திய உச்சநீதிமன்றத்தின் 2014 ஆம் ஆண்டின் நல்சா தீர்ப்பிற்கும், அரசியலமைப்பின் கட்டுரைகளான பிரிவு 21 (வாழ்க்கை மற்றும் சுதந்திரத்திற்கான உரிமை), பிரிவு 19 (1 அ) (பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்திற்கான உரிமை) ஆகிய பிரிவுகளுக்கும் எதிராக அமைந்துள்ளது.
- திருநர் மசோதா 2019, பிரதானமாக, சுயநிர்ணய கொள்கையில் NALSA தீர்ப்பிற்கு முற்றிலும் எதிராக அமைந்துள்ளது. தணிக்கைக் குழு முறை தவிர்க்கப்பட்டுள்ள போதிலும், திருநர்களின் அடையாளத்தை வழங்குவது மற்றும் விண்ணப்பத்தை மறுக்கும் அதிகாரங்கள் மாவட்ட நீதிபதி ஒப்புதலின் அடிப்படையில் அமைந்துள்ளது. கூடுதலாக, ஒரு திருநர் ஆண் அல்லது பெண் என அடையாளம் காண, அறுவை சிகிச்சைக்கான ஆதாரம் தேவைப்படுகிறது. இது NALSA தீர்ப்பிற்கு முரணானது.
- திருநருக்கான( வயது வந்தவர்கள் உட்பட) முதன்மை பராமரிப்பாளர் இரத்த சொந்தமாக இருக்க வேண்டும் என்றும், அல்லது அதற்கு ஒரே மாற்று அரசாங்கத்தால் வழங்கப்பட்ட புனர்வாழ்வு மையங்கள் மட்டும் தான் என்று வரையறை செய்யப்பட்டுள்ளது. இதில் இரண்டு சிக்கல்கள் உள்ளன. ஒன்று, குடும்பம் பெரும்பாலும் திருநருக்கு எதிரான வன்முறையின் பிராதான தளமாகும். மேலும் முதன்மை பராமரிப்பாளராக பிறந்த குடும்பம் தான் சரியானது என்ற வாதம் குறுகளானது. இரண்டாவதாக, திருநர்களுக்கு முறையான உரிமைகள் உள்ள மாற்று குடும்ப கட்டமைப்புகளை மசோதா முற்றிலும் புறக்கணிக்கிறது. பல நூற்றாண்டுகளாக திருநருக்கு தங்குமிடம் மற்றும் ஆதரவை வழங்கிய பாரம்பரிய ஜமாஅத் அமைப்பு இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. மற்ற எடுத்துக்காட்டுகள் நெருங்கிய கூட்டாளர்கள், நண்பர்கள் போன்றவர்களாக இருக்கலாம்.
- திருநருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றில் இடஒதுக்கீடு பற்றி மசோதாவில் குறிப்பிடப்படவில்லை. இது நல்சா தீர்ப்பை முற்றிலும் மீறுவதாகும்.
- திருநருக்கு எதிரான தாக்குதல் மற்றும் பிற மோசமான குற்றங்களுக்கான தண்டனை அதிகபட்சம் இரண்டு ஆண்டுகள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது . இது பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் ஒப்பிடுகையில் திருநர் தாழ்ந்த குடிமக்களாக கருதுகிறது. திருநர்களுக்கு எதிரான குற்றங்களும் மிகவும் கடுமையான தண்டனைக்குரியவை. கூடுதலாக, திருநர்களுக்கு எதிரான குற்றங்களில் இருந்து பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்கும், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதற்கும், களங்கம் மற்றும் பாகுபாடு பற்றிய தெளிவான செயல்பாட்டு வரையறைகள் தேவை. எஸ்சி / எஸ்டி வன்கொடுமை தடுப்பு தடுப்புச்சட்டத்தை மையமாக கொண்டு திருநர் மற்றும் இடையிலங்க (இன்டர்செக்ஸ்) நபர்களுக்கு எதிரான அட்டூழியங்களைத் தடுப்பதற்கான ஒரு சட்டம் வழிவகுக்க வேண்டியது மிகவும் அவசியமான ஒன்று.
- இந்த மசோதா திருநர் மற்றும் இடையிலங்க நபர்களின் (இன்டர்செக்ஸை) அடையாளங்களைக் குழப்புகிறது. மசோதாவின் இந்தி மொழிபெயர்ப்பு, இடையிலங்க (இன்டர்செக்ஸ்) என்று பொருள்படும் “உபயலிங்கி” என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறது. இன்டர்செக்ஸ் நபர்களுக்கான உரிமைகள் மசோதாவில் சேர்க்கப்பட வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தும் அதே நேரத்தில், திருநர்கள் மற்றும் இடையிலங்க நபர்கள் (இன்டர்செக்ஸுடன்) ஆகியோருக்கான அடையாளங்களை முறையே வரையறுக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம். பெரும்பாலான திருநர்களுக்கு பாலியல் வளர்ச்சியில் (டி.எஸ்.டி) வேறுபாடுகள் இல்லை.
- ஆண் பாலினம், பெண் பாலினம் அல்லது அந்த இரு பிரிவுக்கும் வெளியே அடையாளம் காண தனிநபர்களின் உரிமைகளை அங்கீகரிக்கும் திருநர்களின் அடையாள அட்டைகள், கேரளாவில் உள்ள நடைமுறையைப் போலவே, அனைத்து மாநிலங்களிலும் வழங்கப்பட வேண்டும். திருநங்கை, திருநம்பி மற்றும் மூன்றாம் பாலின நபர்களை உள்ளடக்கியதாக இந்த அடையாள அட்டைகள் இருக்க வேண்டும்.
- குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டத்தில் (2005) திருநங்கைகளை ‘பெண்கள்’ என்ற எல்லைக்குள் கொண்டுவர வேண்டும். இது தில்லி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் அக்டோபர் (2019) தீர்ப்பால் மீண்டும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.திருநங்கைளுக்கும், திருநம்பிளுக்கும் இலவச பாலின உறுதிப்படுத்தல் அறுவை சிகிச்சைகள் மற்றும் (ஊக்கிகள்) ஹார்மோன் சிகிச்சைகள் நாடு முழுவதும் கிடைக்கப்பெற வேண்டும்.
திருநர் மசோதா 2019இல் மேற்கூறிய மாற்றங்கள் இணைக்கப்படும் வரை, இந்த மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் வழங்கப்படக்கூடாது என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.