[கவிதை] எங்கிருந்தாலும் வாழ்க
அன்று உன் பெயர் யாரோ கூறி
எங்கோ ஒலித்தது..
அப்பப்பா! எனக்கு எங்கெங்கோ வலித்தது..
இன்று அதை நானே கூறிப்பார்க்கிறேன்,
அடடா! எத்தனை அழகான பெயர்ச்சொல் என்று!
அன்று நமக்காக எழுதிய பாடலெல்லாம் கேட்கும்போது,
என் பக்கம் நீ இல்லையே என்ற நெகிழ்வு
மரணம்போல் என்னைத் தின்று கொன்றது..
இன்று பாடல் முடிந்தவுடன், இதுவும் ஒரு நிகழ்வென்று,
வியாழன் தாண்டிய வெள்ளி போல்,
என்னைக் கடந்து சென்றது!
ஆம்! பகிர்ந்துகொண்ட உணர்வுகள்,
சேர்ந்து உண்ட உணவுகள்,
மனமுறுகிய முதல் முத்தம்,
பித்தமேறிய நிமிடங்களின் சத்தம்,
இவையெல்லாம்
அவ்வப்போது எட்டித்தான் பார்க்கிறது.
ஆனால் அன்று அந்த கதவுகளை அடைக்க,
திசையறியாமல் ஓடினேன்..
இன்றோ உரத்த தட்டொலி கேட்டாலும்..
தட்டிக் கொடுத்து உறங்க வைக்கிறேன்!
அன்று நம் புகைப்படம் மாட்டியிருந்த இடமெல்லாம்,
காயத்தின் சாயம் கண்டேன்…
இன்று எனக்கு பிடித்த வரைபடத்தை அங்கே மாட்டிட,
என்னுள் எனக்கான ஈரம் கண்டேன்!
அன்று எனது கண்ணீரின் கரிக்கோல் எழுதியது,
எங்கிருந்தாலும் நீ வாழ்க என்று!
இன்று திறந்த கண்களின் குறிக்கோள் உணர்த்தியது,
எங்கிருந்தாலும் நானும் வாழ்வேன் என்று!
— ஜே
