கவிதை: நானும் என் வலியும்
– பெசிமோன்
நிறைமாத கர்ப்பிணி போல்,
உருண்டு திரண்ட
கார்மேகம் போல்,
எப்போது வெளி வரலாம்
என்ற கேள்வியுடன்
கண்ணில் திரண்டு
நிற்கிறது கண்ணீர்
உள்ளிருக்கும் நெருப்பால்
புகைந்து புகைந்து
புகைக் கக்கும்
எரிமலைப் போல்
உன் நினைவுகளால் புகைகிறது
என் மனம்
நான்கு சுவர்களால் ஆன
சிறைக்குள்
அடைபட்டுப் போன
சிறைக் கிளிப் போல
“நீ” “நீ” “நீ” “நீ” என்ற
நான்குச் சுவர்களுக்குள்
அடைப் பட்டுக் கிடக்கிறது
என் எண்ண ஓட்டங்கள்
பத்து மாதம் கருவாய்ச் சுமந்து
தாலாட்டிச் சீராட்டி
வளர்க்கும் கனவுடன்
நோன்பிருந்து, தவமிருந்து
பெற்றடுக்கும் நாளை
எண்ணி எண்ணி கனாக் காண்கையில்
எமனாய் வந்த குறைப்பிரசவம் போல்,
பிரசவ வேதனையை விட
உச்ச கட்ட வேதனையுடன்
உன்னை இழந்த
மனவலியுடன் உடல்வலியும்
இணைய
மௌனமாய் அழுகிறேன் நான்
அழகாய் உருவானது கனவு,
உன் கைக்கோர்த்து பிடித்தப்படி நடக்க,
உன் தோள் சாய,
உன் மடியில் தூங்க,
உன் மார்பின் வெப்பம் கொள்ள,
உன் உயிரில் என்னை கலக்க,
கருவாய் உன்னை என் நெஞ்சில் சுமக்க,
அத்தனை கனவும்
கனவாகவே ஆனது இன்று,
கோபுரத்தில் நின்ற நான்
இன்று படு பாதாளத்தில்,
மனம் நிறைய அழுகை இருந்தும்
உடல் நிறைய ரணங்கள் இருந்தும்
வாய் விட்டு அழ இயலாமல்
மௌனமாய் கண்ணீர் விடுகிறேன்
அழுகைக்கு இல்லாத ஒரு சக்தி
மௌனமாய்
நான் விடும் கண்ணீருக்கு உண்டு
என்ற நம்பிக்கையில்
திரும்பி பார்கிறேன்,
பின்னால் தெரிவது
உன் நினைவுகளும்,
என் வலிகளும்,
நானும் தான்
About the author: Bessimon is an engineering graduate. He works in the hospitality industry because he prefers dealing with people to dealing with machine languages. He is gay and resides in Chennai.
அருமையான வரிகள் உங்களது எழுத்து பனி தொடறட்டும் …
mikka nantri .. 🙂
This is very emotional…..I am bisexual and happy to read an LGBTQ+ Kavidhai In My Proud Indian Language Tamil❤A Big Thank You.