டயலாக்: செய்திகள் வாசிப்பது அறியாமை
“இலங்கை கடற்படை தாக்குதலுக்கு மூன்று தமிழ் மீனவர்கள் பலி.”
அடையாரில் உள்ள தனது அடுக்குமாடி குடியிருப்பின் வரவேற்பு அறையில் உட்கார்ந்து, சுவரில் ஒட்டியிருந்த பிளாஸ்மா டி.வீயில் சன் செய்திகள் பார்த்துக் கொண்டிருந்த இருபத்தி ஏழு வயது ப்ரீத்தி, சலித்துக் கொண்டாள்: “இந்த காலத்துல எவ்வளவோ ஜாப் ஆபர்ச்சூனிடிஸ் இருக்கு. யாரு இவங்கள ஸ்ரீலங்கா பார்டர்ல போய் மீன் பிடிக்கச் சொன்னா?”
***
“தில்லியில் நள்ளிரவில் இளம்பெண் கற்பழித்துக் கொலை செய்யப்பட்டார்.”
அன்றைய பேப்பரில் செய்தி படித்த இப்ராகிம் ராவுத்தர் மனைவியிடம் தனது வருத்தத்தை பகிர்ந்து கொண்டார்: “அல்லா! என்ன கொடுமை. இது தேவையா? இந்த காலத்து பொண்ணுங்கள என்ன சொல்றது. இருட்டின பிறகு ரோட்டுல திரிவானேன்?”
***
“சிகாகோ விமான நிலையத்தில் பயண இடைவேளையில் தொழுகை நடத்திய முஸ்லீம் முதியவர் மூன்று வாலிபர்களால் தாக்ப்பட்டார்.”
நியூ யார்க் நகரத்தில் உள்ள செல்சி ஏரியாவில், ஒரு ரெஸ்டாரென்டில் தனது பாய்ப்ரெண்டுடன் உணவருந்திக் கொண்டிருந்த ஷ்யாம், தனது ப்ளாக்பெரியில் செய்தி படித்தவாறே சொன்னான்: “அனதர் ஹேட் க்ரைம். அப்படி ஏர்போர்ட்டுல ப்ரே பண்ணலேனா என்ன இந்த ஆளுக்கு? வயசு காலத்துல வெட்டி வீராப்பு.”
***
ப்ரீத்தியின் பிளாஸ்மா டி.வீயில் இப்பொழுது செய்தி மாறியிருந்தது.
“மின்சார ரயிலில் பிச்சையெடுத்த திருநங்கைகள் கைது.”
அவளுடன் சேர்ந்து டி.வீ பார்த்துக் கொண்டிருந்த அவளது அம்மா முனங்கினாள்: “என்ன கருமம் இது. யாரு இதுகள ட்ரெயின்ல பிச்சை எடுக்கச் சொன்னா? சரியான தொந்தரவு இதுகளோட.”
***