நேர்காணல்: இலங்கையை சேர்ந்த ஆர்வலர் ரோசானா ப்ளேமர் கல்டரா
1999 ஆம் ஆண்டு முதல், இலங்கை மற்றும் உலகளவில், மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்களின் உரிமைகளுக்காக போராடிவரும் மனித உரிமை ஆர்வலர் ரோசானா ப்ளேமர் கல்டரா. இவர் இலங்கையின் ஒரே திருனர் மற்றும் மாறுபட்ட பாலீர்ப்பு கொண்ட பெண்களுக்கான நிறுவனமான “வுமன்ஸ் சப்போர்ட் க்ரூப்” (1999) மற்றும் அனைத்து மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்களுக்கான உதவி நிறுவனமான ஈக்வல் கிரவுண்டு (2004) ஆகியவற்றின் நிறுவன உறுப்பினர். இந்த நேர்காணலில் ரோசானா ஓரினம்.நெட்டுடன், இலங்கையை சேர்ந்த மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்களின் முக்கிய பிரச்சனைகள், சவால்கள், போராட்டங்கள் பற்றி தனது கருத்துக்களை பகிர்ந்துகொள்கிறார்.
தற்போது இலங்கையை சேர்ந்த மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்கள் (LGBTIQ) முக்கியமாக கருதும் விஷயங்கள் என்னென்ன?
மாறுபட்ட பாலீர்ப்பை குற்றமற்றதாக்குவது, மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்களை பற்றி சமூதாயத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது, இச்சிருபான்மையினர் மீது நடத்தப்படும் வன்முறைகளுக்கு முடிவு காண்பது ஆகியவை முக்கியாமான, முதலில் கவனிக்கப்படவேண்டிய விஷயங்கள். மேலும் மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்கள் தங்களை தாங்களே புரிந்து, ஏற்றுகொள்ள உதவுவதற்கும் தேவை இருக்கிறது.
பாராளுமன்றம் மூலமாக சட்ட மாற்றம், உரிமைகளை கேட்டு நீதிமன்றத்துக்கு போவது, வோட்டெடுப்பு – இவைகளில் மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்கள், மனித உரிமைகளை பெறுவதற்கான சாத்தியமான வழி என்று எதை நீங்கள் கூறுவீர்கள்?
கண்டிப்பாக முதல் இரண்டு வழிகள். ஆனால் சட்ட மாற்றம் உடனடியாக சமுதாய மாற்றத்தை கொண்டுவராது. மக்களிடம் மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்களை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தி, அதன் மூலம் புரிதலை உண்டாக்கி, அவர்கள் நம்மை ஏற்றுக்கொள்ள செய்ய வேண்டும்.
எத்தகைய சட்ட மாற்றங்களை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?
தன்பாலீர்ப்பை குற்றமற்றதாக்குவது, மற்றும் நம் சமூகத்தினருக்கு சட்ட பாதுகாப்பு ஆகியவற்றிற்காக நாங்கள் போராடி வருகிறோம்.
இலங்கைக்குள் மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்களை பற்றிய விழிப்புணர்வு மற்றும் எற்றுக்கொள்ளப்படுதலில் மாறுபாடுகள் உள்ளனவா?
கண்டிப்பாக. நகர்புற பகுதிகளில் தைரியமாக வெளியே வந்து, தலைநிமிர்ந்து வாழும் மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்களை காண்பீர்கள். கிராமப்புரங்களில் பெரும்பாலும் இவர்கள் மறைந்தே வாழ்கிறார்கள். அதுபோல நகர் மற்றும் கிராமபுரங்கள் இரண்டிலும், ஆண்களை வீட பெண்களுக்கு பிரச்சனைகள் அதிகம். தன்பாலீர்ப்பு மற்றும் இருபாலீர்ப்பு கொண்ட ஆண்கள் எளிதாக வெளியே வரமுடிகிறது. ஆனால் தன்பாலீர்ப்பு மற்றும் இருபாலீர்ப்பு கொண்ட பெண்கள் மற்றும் திருநம்பிகளுக்கான சவால்கள் அதிகம்.
இலங்கையின் ஊடகங்கள் மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்கள் பற்றிய செய்திகளை எவ்வாறு கையாளுகிறது?
சிலசமயம் நல்ல முறையில், சிலசமயம் மிக மோசமாக. தனித்தனி ஊடகத்தை பொறுத்து இது மாறுபடுகிறது. நாங்கள் பார்த்த வரையில், சிங்கள ஊடகங்கள் எங்களை மிகவும் மோசமான முறையில் சித்தரிக்கின்றன. ஆங்கில ஊடகங்கள் சிலசமயம் நல்ல முறையில் எங்களை பற்றிய செய்திகளை வெளியிடுகிறது என்று சந்தோஷப்பட்டால், உடனே ஒரு மோசமான சித்தரிப்பு தென்படுகிறது. தமிழ் ஊடகங்கள் எங்களை பற்றிய செய்திகளை வெளியுடுவதே இல்லை. பெரும்பாலும் புறக்கணித்து விடுகிறார்கள். ஒருபுறம் அது வேதனையை தந்தாலும், குறைந்தபட்சம் எங்களை மோசமான முறையில் சித்தரிக்காமல் இருக்கிறார்களே என்பதில் ஒரு நிம்மதி!
மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்கள் மத்தியில் குறிப்பிட்ட பாலினம், இனம், மதம், மொழியை சார்ந்தவர்களின் பிரச்சனைகள் பிறரை வீட அதிகமாக, கடுமையாக இருக்கிறதா?
எல்லா இடங்களை போல, இங்கேயும் இஸ்லாம் சமூகத்தினர் மத்தியில் பாலீர்ப்பு, பாலடையாளம் போன்ற விஷயங்களை பற்றி கடுமையான, பழமையான கருத்துகளை காணமுடிகிறது. அதே நேரத்தில் இஸ்லாம் சமுகத்தில் எங்களுக்கு பல சகாக்கள் இருக்கிறார்கள் என்பதை குறிப்பிட வேண்டும். அதேபோல சிங்கள சமூகத்தை வீட தமிழ் சமூகத்தில் எதிர்ப்பு அதிகம். ஆனால் நாங்கள் இவர்களுடன் பழகி, பேசி, எங்களை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த முயலும்பொழுது பலர் எங்களை புரிந்து, எற்றுக்கொண்டு, ஆதரிப்பதையும் காண்கிறோம்.
இலங்கையில் நங்கை(Lesbian) மற்றும் ஈரர்(Bisexual) பெண்களுக்கான பிரச்சனைகள் என்ன?
பெரும்பாலும் இவர்கள் மறைந்தே வாழ்கிறார்கள். ஆண்களுடன் கட்டாய கல்யாணம், குடும்பத்தினர் வன்முறை, குடும்பத்தால் சுதந்திரங்கள் மறுக்கப்பட்டு கட்டுப்படுத்தப்படுவது, சமுதாயத்தில் சிறுமைப்படுத்தப்பட்டு புறக்கணிக்கப்படுவது, ஆண்களிடமிருந்து வரவேற்க்கப்படாத பாலியல் நடத்தை, மன மற்றும் உடல் ரீதியான கொடுமைகள் என்று பல. இவர்களிடையே தற்கொலைகளும் அதிகம். இவர்கள் குடும்பங்கள் இது போன்ற பெண்களை தங்கள் பெண் துணைகளுடன் சேரவிடாமல் தடுப்பதும், வலுக்கட்டாயமாக இவர்களை பிரிப்பதும், ஆண்களுடன் திருமண வாழ்க்கையில் தள்ளுவதும், இவர்களை தற்கொலை செய்ய தூண்டுகிறது.
திருநம்பிகளின் (FTM) கதி என்ன?
பெரிதாக வித்தியாசமில்லை. இவர்களும் மறைந்தே வாழ்கிறார்கள். இவர்கள் சமுதாயத்தில் கிண்டல், கேலி, ஒத்துக்கப்படுதல் போன்ற கொடுமைகளுக்கு ஆளாகுகிறார்கள். சிலசமயம் இவை வன்முறையாகவும் உருவெடுக்கிறது.
இதுபோன்ற பிரச்சனைகளை சந்திக்கும் தனிமனிதர்களுக்கு எத்தகைய உதவிமுறைகள் உள்ளன?
ஈக்வுல் கிரவுண்டு நிறுவனம் மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்களுக்காக அவசர உதவி எண், மற்றும் பிரச்சனைகளில் உதவ தனியாக ஒரு குழு போன்றவற்றை உருவாக்கி நடத்திவருகிறது. நாங்கள் இவர்களின் பிரச்சனைகளை ஆராய்ந்து, இவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குகிறோம்.
தனிமனிதர்களின் பிரச்சனைகளில் உதவ உங்கள் நிறுவனத்துக்கு என்ன தேவை?
நிதி! ஒரு தனி நிறுவனத்தால் என்ன செய்யமுடியுமோ அதை நாங்கள் செய்கிறோம். முக்கால்வாசி நேரங்களில் போதிய நிதி இல்லாதது தான் எங்களது பெரிய பிரச்சனை.
இலங்கையில் ஒரு பால் உறவு (Same-sex relationship) பற்றிய சட்ட நிலை என்ன?
இலங்கையின் சட்டப்பிரிவின் 365A படி நங்கை(Lesbian) மற்றும் நம்பிகள்(Gays) குற்றவாளிகள்.
ஈக்வல் கிரவுண்டு நிறுவனம் சுனாமி போன்ற இயற்க்கை சீற்றங்களின் பொழுது, மக்களுக்கு தேவையான உதவிகளை செய்திருக்கிறது. இதுபோன்ற பொதுவான பிரச்சனைகளில் நீங்கள் பங்குகொள்வதால், பொது மக்கள் மத்தியில் உங்களை பற்றிய மனமாற்றம் ஏற்ப்படுவதை பார்த்திருகிரீர்களா?
சில சமயங்களில். இன்றும் பலர் சுனாமி நேரத்தில் எங்கள் நிறுவம் செய்த உதவிகளை அன்புடன் நினைவு கூறுகிறார்கள். அதை வீட, கண்டிப்புடன், ஒழுக்கமான முறையில் எங்கள் நிறுவனத்தின் செயல்பாடு இருப்பது தான், மக்களை கவர்கிறது என்றால் அது மிகையாகாது.
மற்ற நாடுகள் உங்களுடன் எப்படி ஒத்துழைக்க முடியும் என்று நினைகிறீர்கள்? உதாரணமாக இந்தியா போன்ற தென்னாசிய நாடுகள் இலங்கையில் உள்ள மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்களின் மனித உரிமை போராட்டத்திற்கு எப்படி உதவலாம்?
இந்த பிராந்தியத்தை சேர்ந்த நாடுங்கள் அனைத்தும் ஒன்றாக இணைந்து மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்களுக்கான உரிமைகளுக்காக உழைக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஒரு நாட்டில் மாற்றங்கள், முன்னேற்றங்கள் நிகழ்ந்தால் அது மற்ற நாடுகளிலும் எதிரொலிக்கிறது, மனமாற்றத்தை ஏற்ப்படுத்துகிறது. மக்களை சிந்திக்க, விவாதிக்க தூண்டுகிறது. “இந்தியா, பாகிஸ்தான்,நேபால் போன்ற நாடுகளில் நடப்பது, நம் நாட்டில் ஏன் நடக்கக்கூடாது?” என்று மக்கள் பேச துவங்குகிறார்கள். இன்னும் நம் நாடுகள் இணைந்து செயல்பட, மேலும் பல வழிமுறைகளை நாம் உருவாக்க வேண்டும் என்றும் நான் கருதுகிறேன்.