சிகண்டிக்கும் சாரதி
ஸ்ரீதர் சதாசிவன்
ஆங்கில மூலம்: தேவதத் பட்நாயக்
English original: Devdutt Pattanaik
Translated and published with the author’s permission. Read English original here.
Image: Devdutt Pattanaik
அது குருக்ஷேத்திரப் போரின் ஒன்பதாவது இரவு.பதினெட்டு நாட்கள் நீண்ட பாரதப் போரின் நட்ட நடு நாள்.போர் முடிவில்லாமல் நீண்டு கொண்டிருந்தது.வெற்றிக்கனி பாண்டவர் கைக்கும் கிட்டாமல் கௌரவர் கைக்கும் கிட்டாமல் நழுவிக்கொண்டிருந்தது.பாண்டவர் சேனையை திரௌபதியின் தமையன் திருஷ்டத்யும்னன் வலிமையோடு வழிநடத்தினாலும், எதிர்பக்கம் கௌரவ சேனையை வழிநடத்துவது பிதாமகர் பீஷ்மராயிற்றே!
“பிதாமகரால் நம்மைத் தோற்கடிக்கமுடியாது..அவருக்கு பாசம் கண்ணை மறைக்கிறது” என்றார்கள் பாண்டவர்கள்.
சிரித்தார் கண்ணபிரான்,”பாசம் இருக்கலாம் ஆனால் உங்களை வெற்றி பெற விடமாட்டார் பீஷ்மர். பீஷ்மரின் அழிவில் தான், தர்மத்திற்கு வெற்றி”.
கங்கை மைந்தரை வெற்றிகொள்வது எளிதல்ல.தந்தையின் வரம் பெற்ற தனயர் அவர்.அவரது முடிவை அவரால் மட்டுமே முடிவு செய்ய முடியும்.
“பிதாமகரைக் கொல்லமுடியாது என்றால் அவரை செயலிழக்கச் செய்ய வேண்டும்” என்றான் கண்ணன்.
யுதிஷ்டிரரின் முகத்தில் கவலையின் நிழல். “என்ன செய்வது? பிதாமகர் ஆயுதம் ஏந்திப் போர் செய்தால், அவரை யாராலும் வீழ்த்த முடியாது.பரசுராமரும் அவரிடம் தோற்றுப்போனார், பாண்டவர்கள் நாங்கள் எம்மாத்திரம்?”
“அப்படியென்றால் பீஷ்மரை நிராயுதபாணியாக்க வேண்டும்”.கண்ணனின் கபட சிரிப்பு பாண்டவர்களுக்குப் புதிதல்ல.
“என்ன சொல்கிறாய் கண்ணா? எதிரியின் முன் ஆயுதத்தை துறப்பாரா பிதாமகர்? இது என்ன நடக்கக் கூடிய காரியமா”?
“எதிரி ஒரு பெண்ணாய் இருந்தால்..”
“பெண்ணா? போர்க்களத்திலா?” வெகுண்டெழுந்தான் அர்ச்சுனன்.
“அது தருமம் அல்ல கிருஷ்ணா” பொறுமையாய் சொன்னார் தருமர்.
“வயது முதிர்ந்தவர்கள் விலகி இளைய தலைமுறைக்கு வழிவிடவேண்டும் என்று சொல்கிறது தர்மம். பீஷ்மர் கேட்டாரா? தன் வாழ்க்கையைத் துறந்து வயது முதிர்ந்த தன் தந்தையை மீண்டும் க்ருகஸ்தராக்கினார் பீஷ்மர்.” இது கண்ணனின் வாதம்.
“அவர் தந்தைக்காக தன் வாழ்க்கையையே துறந்தவர்” -தருமர்.
“தன் தந்தைக்காக, தன் சுயநலத்திற்காக உலக தர்மத்திற்கு மாறாக நடந்தவர் பீஷ்மர். பீஷ்மரின் பிரம்மசர்ய சபதம் தான் இன்று இந்த குருக்ஷேத்திரத்திற்கே மூலகாரணம். பீஷ்மரை வீழ்த்த வேண்டும்.அதற்காக சூழ்ச்சி செய்தாலும் அது தவறல்ல”.அழுத்தம் திருத்தமாகச் சொன்னான் தேவகி மைந்தன்.”பீஷ்மரை நிராயுதபாணியாக்க வேண்டும். அதை செய்யக்கூடியது யார் என்று யோசிப்போம்”
“புரிகிறது கண்ணா, ஆனால் போர்க்களத்தில் ஒரு பெண்ணா?”
“பெண் இல்லை எனில் பரவாயில்லை. ஆனால் அவன் ஆணாக இருக்கக்கூடாது”
“அப்படியென்றால் சிகண்டி தான் சரி” என்றான் திருஷ்டத்யும்னன்.”பெண்ணாகப் பிறந்தவன் அவன்.என் தந்தை திரௌபத ராஜனின் ஜேஷ்டன். அவன் பிறந்த சமயம் முனிவர்கள் எல்லாம் – சிகண்டி ஒரு நாள் ஆணாக மாறுவான் என்று என் தந்தையிடம் சொன்னார்கள். பிறப்பிலே பெண்ணாக இருந்தாலும் ஒரு ஆண்மகனைப் போல் அவனை வளர்த்தார் என் தந்தை. வாள் பயிற்சியும், வில் பயிற்சியும் பெற்றவன் அவன்.தக்க வயதில் அவனுக்குத் திருமணமும் நடந்தது. அவனது மனைவி தஷர்ணா நாட்டு அரசன் ஹிரண்யவர்ணனின் புதல்வி. முதலிரவில் தன் கணவன் ஒரு பெண் என்று அறிந்து அதிர்ச்சி அடைந்தாள். என் தந்தை, சிகண்டி ஒரு நாள் ஆணாக மாறுவான் என்று முனிவர்கள் சொன்னதை சொல்லி விளக்கினார். அவளோ அதை ஏற்கவில்லை. கதறி அழுதவாறே அவள் தந்தையிடம் ஓடினாள். கோபமுற்ற ஹிரண்யவர்ணன் திரௌபத நாட்டின் மேல் படையெடுத்தான். இதையெல்லாம் பார்த்து மனமுடைந்தான் சிகண்டி.நடப்பதற்கெல்லாம் நாமே காரணம் என்று விரக்தி அடைந்து தற்கொலை செய்துக் கொள்ளும் எண்ணத்தோடு காட்டிற்குப் போனான்.அப்பொழுது அவன்முன் ஸ்துநகர்ணன் என்ற யக்ஷன் தோன்றினான். சிகண்டியின் கதையைக் கேட்டு மனம் இரங்கிய அந்த யக்ஷன் அவனது ஆண்மையை சிகண்டிக்கு ஒரு நாள் இரவலாகத் தந்தான். யக்ஷனின் ஆண்மையோடு நாட்டிற்குத் திரும்பிய சிகண்டி தாசியோடு உறவு கொண்டு தான் ஒரு ஆண்மகன் என்று ஹிரண்யவர்ணனுக்கு நிரூபித்தான். அவன் மனைவியும் திரௌபத நாட்டிற்குத் திரும்பினாள். அதே சமயம் நடந்ததையெல்லாம் அறிந்த யக்ஷராஜன் குபேரன் கோபமுற்றான். இரவலாய்க் கொடுத்த ஆண்மை சிகண்டி உயிருடன் இருக்கும் வரை உனக்குக் கிடையாது- என்று ஸ்துனகர்ணனை சபித்தான். இதன் விளைவாக ஒரு நாள் இரவலாகக் கிடைத்த ஆண்மை இன்றுவரை சிகண்டியிடம் இருக்கிறது. இப்பொழுது சொல் கண்ணா, பெண்ணாக பெண் உறுப்புக்களுடன் பிறந்ததால் அவள் பெண்ணா இல்லை பின்பு யக்ஷனின் ஆண்மையைப் பெற்றதால் அவன் ஆணா?” என்று முடித்தான் திருஷ்டத்யும்னன்.
கண்ணனுக்குப் புரியாத புதிரா? அவன் அறியாத விஷயமா? எல்லாம் தெரிந்தவன் யசோதை மைந்தன்.
பிறப்பிலே பெண் , வளர்ப்பிலே ஆண்.. விந்தையான இந்த சிகண்டி இன்று பீஷ்மரைப் பற்றிப் பேசும்போது குறிப்பிடப்படுவதும் காலத்தின் கட்டாயமே. இந்த சிகண்டி முன் ஜன்மத்தில் பீஷ்மரால் கைவிடப்பட்டு தற்கொலை செய்து கொண்ட இராஜகுமாரி அம்பா. அம்பாவையும் அவளது இரண்டு சகோதரிகளையும் தன் தம்பி விசித்ரவீரியனுக்கு (விந்தையான, விசித்திரமான ஆண்மை உடையவன் என்ற பொருள் கொண்ட பெயர்) மணம் முடிக்கக் கடத்தி வந்தார் பீஷ்மர். அம்பாவோ வேறு ஒரு இராஜகுமாரனைக் காதலித்தாள். பீஷ்மரிடம் அதை சொல்லி மன்றாடினாள். மறுசொல் சொல்லாமல் மரியாதையோடு அவளைத் திருப்பி அனுப்பி வைத்தார் பீஷ்மர். “மாற்றான் கடத்திய மங்கை எனக்கு மனைவியாக முடியாது” என்று அவளை நிராகரித்தான் காதலன். மீண்டும் பீஷ்மரிட்ம் திரும்பினாள் அம்பா. விசித்திரவீரியனுக்கும் அவளை ஏற்க மனமில்லை. பீஷ்மரும் கைவிரித்தார்
“பிரம்மச்சாரியாய் இருப்பேன் என்று சபதமெடுத்த நீ என்னை எப்படிக் கடத்தி வரலாம்?” என்று அடம்பிடித்தாள் அம்பா. போக்கிடம் இல்லாமல் திகைத்த அம்பா பரசுராமரிடம் சரண் புகுந்தாள். க்ஷத்திரியரான பீஷ்மரைக் கொல்லுமாறு வேண்டினாள். ஆனால் பரசுராமரோ பீஷ்மரிடம் தோற்றுப் போனார். வேறு வழியில்லாமல் சிவபெருமானை நோக்கித் தவம் இருந்தாள் அம்பா.
மனம் இரங்கிய மகேசனிடம் அவள் வேண்டியது இது, “பீஷ்மரின் சாவிற்கு நான் தான் காரணமாக இருக்க வேண்டும்”.
“உனது அடுத்த ஜன்மத்தில் அது நிறைவேறும்” என்று வரம் கொடுத்தார் நீலகண்டன்.
பீஷ்மரை பழிவாங்கத் துடித்த அம்பா, உடனே அடுத்த ஜன்மம் எடுக்கத் துடித்தாள், தீயிலே குதித்துத் தன்னை மாய்த்துக் கொண்டாள்.
“சிகண்டி என் ரதத்தில் ஏறி போர்க்களத்திற்கு வரட்டும் அர்ச்சுனா.. நீ அவன் பின்னால் நில்” என்று முடிவாய்ச் சொன்னார் கண்ணபிரான்.
பத்தாம் நாள் பொழுது விடிந்தது. போர்க்களத்தை நோக்கிக் கண்ணனின் தேர் நகர்ந்தது. கண்ணனின் தேரில் ஆணுமற்ற பெண்ணுமற்ற அல்லது ஆணாகவும் பெண்ணாகவும் தோன்றிய விந்தையான சிகண்டி. சிகண்டிக்குப் பின்னால் அர்ச்சுனன்.
“பெண்ணையா போர்க்களத்திற்குக் கொண்டுவந்தாய்? இது அதர்மம், நான் போர் செய்ய மாட்டேன்”, இறைந்தார் பீஷ்மர்.
மெதுவாகச் சொன்னார் கிருஷ்ணர், “பெண்ணின் உறுப்புக்களோடு பிறந்ததால் நீங்கள் சிகண்டியைப் பெண்ணாகப் பார்க்கிறீர்கள். மனதால் அவள் அம்பாவாய் இருப்பதால் அவள் உங்களுக்குப் பெண். சிகண்டியின் தந்தை அவனை ஆணாக வளர்த்ததால் நான் அவனை ஆணாகப் பார்க்கிறேன்.யக்ஷனின் ஆண்மையைப் பெற்று அவன் மனைவியோடு உறவு கொண்டதால் அவன் எனக்கு ஆண். யார் சொல்வது சரி? ”
“நான் சொல்வது”
“எப்பொழுது தான் நீங்கள் தவறு செய்து இருக்கிறீர்கள்? வயது முதிர்ந்த தந்தைக்கு விவாகம் செய்து வைத்ததும் சரி, உங்கள் தம்பிக்காக மூன்று பெண்களைக் கடத்தி வந்ததும் சரி. தலைமுறை தலைமுறையாக உட்கார்ந்துக் கொண்டு நான் சொல்வது தான் சரி என்று அழுத்துவதும் சரி.உங்களைப் பொறுத்தவரையில் நீங்கள் சொல்வது தான் நியாயம். நீங்கள் செய்வது தான் தர்மம், இல்லையா?”
“…”
“சிகண்டி ஒரு பெண். உங்களுடன் போர்புரிய தகுதியற்றவள். அது உங்கள் வாதம். சிகண்டியின் வாதம் அல்ல. அவன் உங்களுடன் போர் புரிய விரும்புகிறான்.
“முடியாது. ஒரு பெண்ணுடன் போர் புரிய மாட்டேன்.” என்று மறுத்த பீஷ்மர், சிகண்டியை நேராகப் பார்க்காமல் ஆயுதங்களைத் துறந்தார்.
“வில்லை எடு சிகண்டி! அம்பைப் பாய்ச்சு பீஷ்மர் மேல். அர்ச்சுனா நீயும் தான். தலையிலிருந்து கால்வரை அம்புகளைப் பாய்ச்சி இந்த கிழமரத்தை சாய்” ஆணையிட்டார் கிருஷ்ணன்.
“என் தந்தையைப் போன்றவர் பிதாமகர். என் பாட்டனார்” பதறினான் அர்ச்சுனன்.
“இந்தப் போர் தந்தையையும் , மகனையும் பற்றியதல்ல. ஏன் ஆண் பெண் பற்றியது கூட அல்ல இந்த குருக்ஷேத்திரம், இது தர்மத்தைப் பற்றியது. தர்மம் கருணையைப் பற்றியது. கருணை எல்லாரையும் ஏற்றுக்கொள்வதிலும் சேர்த்துக் கொள்வதிலும் வெளிப்படுகிறது.இப்பொழுது கூட சிகண்டியின் உணர்வுகளை பீஷ்மர் ஏற்றுக் கொள்ளவில்லை. அவரது வாதம் தான் சரி, அவர் சொல்வது தான் நியாயம் என்கிறார். இந்தப் பழமை வாதத்திற்கு முற்றுப்புள்ளி வை. தொடு பாணத்தை”
வில்லை எடுத்து அம்பைத் தொடுத்தான் பார்த்தன். நூற்றுக்கணககான அம்புகள் பீஷ்மர் உடலைத் துளைத்தன. வேரறுந்த மரமாய் பூமியில் சரிந்தார் பிதாமகர் பீஷ்மர். பீஷ்மரை பூமி ஏற்கவில்லை. சராசரி மனிதனை விட பலதலைமுறைகள் வாழ்ந்து பூமியின் பாரத்தை பாதித்ததால் பூமி மாதா அவரை ஏற்கவில்லையாம். பிள்ளைகளைப் பெற்று தன் ஆன்றோரின் வம்சத்தை வளர்க்காததால் வானமும் அவரை நிராகரித்ததாம். அர்ச்சுனனின் அம்புப் படிக்கையில் அயர்ந்தார் பீஷ்மர்.
பீஷ்மர் சரிந்ததும் பாரதப் போர் பாண்டவர்களுக்கு சாதகமாய்த் திரும்பியது.அன்றிலிருந்து ஒன்பதாவது நாள் கௌரவர்கள் தோற்கடிக்கப் பட்டனர். தர்மம் வென்றது.
சிகண்டி பாரதப் போரின் போக்கை பாண்டவர்க்குச் சாதகமாய் மாற்றினான் என்பதில் யாருக்கும் ஐய்யமிருக்க முடியாது. கண்ணனின் முக்கியமான சதுரங்க காய் சிகண்டி. கண்ணபிரான் சிகண்டியை உபயோகப் படுத்தினார் என்று சிலர் சொல்லலாம். ஏற்ற தருணத்தில் சிகண்டியை உபயோகமுள்ளவனாக மாற்றினார் என்று பக்தர்கள் சொல்லுவார்கள். மகாபாரத கதையை சொல்லும்போது பெரும்பாலும் சிகண்டியின் கதை உதாசீனப்படுத்தப்படுகிறது, அல்லது நுணுக்கங்களுக்குப் போகாமல் மேலோட்டமாய் சொல்லப்படுகிறது. ஸ்துனகர்ணனின் கதையோ தேவையில்லாத கிளைக்கதையாக கருதப்படுகிறது.
சிகண்டி மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்ட அனைவரையும் உருவகப்படுத்துகிறான். நம்பி (தன்பாலீர்ப்பு கொண்ட ஆண்/Gay), நங்கை (தன்பாலீர்ப்பு கொண்ட பெண் /Lesbian), இருபாலீர்ப்புள்ளவர்கள் (Bisexual), திருனர்கள் (திருநங்கையர்கள், திருநம்பிகள் / Transgender) என்று எல்லோரையும் உருவகப்படுத்தும் ஒரு இதிகாச அடையாளம் சிகண்டி. இப்படி மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்ட சிறுபான்மையினரைப் போல் சிகண்டியின் கதையும் யாருக்கும் தெரியாமல் மறைந்திருக்கிறது. மகரிஷி வியாசரோ சிகண்டியின் கதையை சொல்ல அருமையான, தக்க தருணத்தை தேர்ந்தெடுத்தார். ஆரம்பத்திற்கும் முடிவிற்கும் நடுவில் – பதினெட்டு நாள் குருக்ஷேத்திரத்தின் ஒன்பதாம் நாள் இரவில். இது தற்செயலாக அமைந்த விஷயமல்ல. இங்கேயும் இல்லாமல் அங்கேயும் இல்லாமல் நடுவில் இருக்கும் விஷயங்களைப் பேச நடுவான நாள், வியாசரின் சாதுரியத்திற்கு ஒரு உதாரணம். இப்படித்தான் ஆன்றோர்கள் மாறுபட்ட பாலுணர்வுக்குக் குரல் கொடுத்தார்கள்.
சிகண்டி இன்று நம்மை சங்கடப்படுத்துகிறான். தன் ஆண்மையை தானமாகக் கொடுத்த யக்ஷன் ஸ்துனகர்ணன் நம்மை இன்று பயமுறுத்துகிறான். ஆனால் சிகண்டியோ அல்லது ஸ்துனகர்ணனோ வியாசரையும் கிருஷ்ணரையும் சங்கடப்படுத்தவில்லை. இருவரும் அவனைத் தங்கள் கதைகளில் சேர்த்துக் கொண்டார்கள். பின்பு வந்த புதிய எழுத்தாளர்கள் சிகண்டியை ஒதுக்கினார்கள்.
மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்களின் கதையும் இன்று இதுவே. கடவுளின் உலகில் மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்களுக்கும் ஒரு இடம் இருந்தது. ஆனால் மனித சமுதாயத்தில் அல்ல. இன்றைய சமுதாயம் அவர்களை ஒதுக்குகிறது, ஒடுக்குகிறது, எள்ளி நகையாடுகிறது, ஏளனப்படுத்துகிறது. அவர்கள் இயற்கைக்கு முரணானவர்கள், மனநோயாளிகள் என்று முத்திரை குத்துகிறது. 377 போன்ற சட்டங்களைப் போட்டு அழுத்துகிறது. அவர்கள் காதல் மாறுபட்டது என்ற ஒரே காரணத்திற்காக அவர்களை காமக்கொடூரர்கள், கண்ணியமற்றவர்கள் என்று வர்ணிக்கிறது.
இந்திய சமுதாயம் மற்ற சமுதாயங்களை விட சில இடங்களில் வித்தியாசப் படுகிறது. ஆண்-பெண் என்ற பொதுவான எதிர்பாலீர்ப்புக்கே இங்கேயும் முக்கியத்துவம். ஆனால் மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்களை அடியோடு ஒதுக்கவும் இல்லை, ஒடுக்கவுமில்லை. அதனால் தான் சரியான தருணத்தில் சிகண்டியின் கதை வெளிப்படுகிறது. அதனால் தான் பாங்கக்ஷ்வன ராஜனின் கதையும் பீஷ்மரால் அம்புப்படுக்கையிலிருந்து பாண்டவர்களுக்குச் சொல்லப்படுகிறது.
யுதிஷ்டிரர் கேட்கிறார் – “பாட்டனாரே, காமத்தில் திளைக்கும்போது யாருக்கு சுகம் அதிகம் – ஆணுக்கா? பெண்ணுக்கா? யாராய் இருப்பதில் சுகம் – தாயா? தந்தையா?”
பீஷ்மர் சொன்னார் “இந்த கேள்விக்கு விடை தெரிந்த ஒரே ஒருவன் பாங்கக்ஷ்வன ராஜன்.அவனால் மட்டும்தான் ஆணாகவும் பெண்ணாகவும் இருக்கமுடிந்தது. பேரரசன் பாங்கக்ஷ்வனனுக்குப் பல மனைவிகள் இருந்தார்கள், பல பிள்ளைகளும் இருந்தன. பாங்கக்ஷ்வன ராஜன் இந்திரனின் சாபத்தால் பெண்ணாக மாறினான். பின்பு ஒரு ஆண்மகனை மணந்து பிள்ளைகளையும் பெற்றான். அவன் ஒருவனே தாயாகவும் தந்தையாகவும் இருந்தவன். ஆணாகவும் பெண்ணாகவும் வாழ்ந்தவன்”.
இது போன்ற கதைகள் உலகின் மற்ற இதிகாசங்களில் பெரும்பாலும் காணப்படுவதில்லை.ஆனால் இந்திய இதிகாசங்களிலும் கலாச்சாரத்திலும் இதற்கு இடம் உண்டு. இன்று இந்திய கலாச்சாரத்தின் காவலர்கள் என்று பறைசாற்றிக்கொள்ளும் பலர் சிகண்டியின் கதையையோ பாங்கக்ஷ்வன ராஜனின் கதையையோ கேட்டதில்லை. அல்லது எதிர்பாராமல் கர்ப்பமுற்று, பிள்ளைப்பேறு பெற்ற யுவனஷ்வ ராஜனைப்பற்றியும் படித்ததில்லை. நமது இதிகாசக் கதைகளில் சொல்லப்பட்ட இரண்டு ராணிகள் காதலித்து எலும்பில்லாத பிள்ளையைப் பெற்ற கதையும் அவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. (இந்திய புராணங்களில் ஆணின் விந்து தான் எலும்புகளை உண்டாக்குகிறது என்பது ஒரு அனுமானம்). ஸ்ரீ ஹரி மோகினியாக அவதாரம் எடுத்து சிவன் மேல் காதல் கொண்ட கதையும் அவர்களுக்கு மறந்து போயிருக்கும்.ஒவ்வொரு பிரம்மோற்ஸவத்திலும் திருப்பதி வேங்கடேசன் பெண்ணின் உடை அணிந்து மோகினியாயய் அருள்பாலிப்பதையும் தெளிவாக ஒதுக்குவது என்று நம் கலாச்சாரக் காவலர்கள் முடிவு செய்து விட்டார்கள்.
விருந்தாவனத்தில் சிவபெருமான் பால்காரியாக உருமாறி கிருஷ்ணருடன் ராசலீலை ஆடியதும் அவர்களுக்குத் தெரியவேண்டாம். ராதையின் மேல் கொண்ட காதலால் ஸ்ரீஹரி நத்துவாரகையில் ஸ்ரீநாத் என்ற பெயரில் ஸ்த்ரீ வேடம் அணிவதும் அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல. அது மட்டுமா குஜராத் மாநிலத்தில் உள்ள திருநங்கையர்களின் கடவுளான பகுசர்ஜீயும் , நம் தமிழகத்தில் அருள் பாலிக்கும் கூத்தாண்டவரும் அவர்களுக்கு வேண்டாம்.
பெண் வேஷம் தரிக்கும் நம் இந்துமதக் கடவுள்களை மேலை நாட்டு கலாச்சாரம் எப்பொழுதும் ஒரு வக்கிரமான, ரசனையற்ற, குதர்க்கமான விஷயமாகப் பார்க்கிறது. ஆங்கிலேயர்கள் நம்மை ஆண்ட காலங்களில் நமது இந்த கலாச்சாரத்தை ஏளனப்படுத்தியதாலோ என்னவோ இன்று நமக்கு இந்தக் கதைகள் தர்மசங்கடத்தை ஏற்படுத்துகின்றன. நமது கலாச்சாரமே நமக்கு மறைக்கப்படக்கூடிய, மறுக்கப்படக் கூடிய விஷயமாய் தெரிகிறது.மேலை நாட்டு கலாச்சாரமயமாகல், இன்று நம் படுக்கையறைப் பழக்கங்களை மாற்றவில்லை, நமது கலாச்சாரத்தையும், இதிகாசங்களையும் நாமே வெட்கி ஒதுக்கும் நிலைக்கு நம்மை கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது.
இன்று இந்த மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்ட சிறுபான்மையினர், இந்திய அரசியல் சாசனத்தாலும் சாதிக்க முடியாத ஒன்றை சாதித்திருக்கிறார்கள். காவி உடை அணிந்த யோகிகளும், வெள்ளை உடை அணிந்த கிறித்துவ பாதிரியார்களும், முஸ்லீம் குருமார்களும் இன்று ஒரு அணியில் நிற்கிறார்கள். இவர்கள் இந்திய கலாச்சாரத்தின் காவலர்கள் என்று தங்களை அறிவித்துக் கொண்டு, தன்பாலீர்ப்பு கொண்டவர்களை மீண்டும் ஒரு முறை இந்திய கலாச்சாரத்திலிருந்து ஒதுக்கவும், மறைக்கவும் பார்க்கிறார்கள். இவர்கள் பீஷ்மரின் பிரம்மசரியத்தைப் போற்றுவார்கள். இவர்களால் முடிந்தால் சிகண்டியை வலுக்கட்டாயமாக மனநோய் மருத்துவமனைக்கு இழுத்துச் சென்று, யக்ஷன் தந்த ஆண்மையைத் துறந்தால் தான் விடுவேன் என்று துன்புறுத்தியிருப்பார்கள். சிகண்டி திக்கித் திணற அவன் பாலுணர்வையும் மாற்றினால் தான் ஆயிற்று என்று கட்டாயப்படுத்தி இருப்பார்கள்.
கிருஷ்ணர் அப்படி அல்ல. சிகண்டி எப்படி இருந்தானோ/இருந்தாளோ அப்படியே தன் மனத்திலும் ரதத்திலும் இடம் அளிப்பார் ஸ்ரீ கிருஷ்ணர்.
சிகண்டிக்கும் சாரதி, ஸ்ரீ பார்த்தசாரதி!
nice story,
sikindi full story added ur site.
god krishna equal to all people.love.,
people understand krishna lilai .