நர்த்தகி நடராஜ் – இந்தியாவின் முதல் திருநங்கை ”பத்மா” விருது பெறுநர்
பரதநாட்டியக் கலைஞர், முனைவர் ‘திருநங்கை’ நர்த்தகி நடராஜ் அவர்கள் இந்தியாவில் “பத்மஸ்ரீ” விருது பெரும் முதல் திருநங்கை ஆனார். இதைபற்றிய செய்தி இந்திய அரசாங்கத்தால் ஜனவரி 25ஆம் தேதி, 2019 அன்று வெளியிடப்பட்டது. இச்செய்தி ஊடகங்களாலும், நர்த்தகி அவர்களின் ரசிகர்களாலும், சக நாட்டிய கலைஞர்களாலும் பெரும் பாராட்டுக்களையும் வரவேற்பையும் பெற்றுள்ளது.
அவரின் பால் அடையாளத்தினை அவரது குடும்பம் ஏற்காததால் வீட்டை விட்டு வெளியேறும் சூழல் இவருக்கு மிகச் சிறிய வயதிலேயே ஏற்பட்டது. முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு, இவர் ஒரு ஒப்பற்றப் பரதநாட்டிய கலைஞர் மற்றும் ஆசிரியராகி, இந்தியாவின் முதன்மையான விருதுகளில் ஒன்றை பெற்றதின் மூலம் வெற்றியின் சிகரத்தை எட்டியுள்ளார்.
நர்த்தகி அவர்களின் வெற்றிப்பாதை எளிமையானதாக இருக்கவில்லை. ஓர் பரதநாட்டியக் கலைஞராக ஆக வேண்டும் என்ற கனவை நிறைவேற்றுவதே கடினம், அதிலும் பால் மாறுதலை அந்த காலகட்டத்தில் செய்ய முயற்சித்தது மாபாரத செயல். நாட்டிய அரங்கேற்றம் தனது ஆசிரியர் திரு.நாமனூர் ஜெயராமன் தலைமையில் நடந்த பின், நர்த்தகி அவர்கள் நாட்டிய மாமேதை தஞ்சாவூர் திரு.கிட்டப்பா பிள்ளை அவர்களிடமிருந்து, 1985 இல் ஆரம்பித்து 1999 வரை கடும் பயிற்சியினை மேற்கொண்டார். இந்த பெரும் காலகட்டத்தில் “வாத்தியார்” கிட்டப்பா பிள்ளை அவர்களிடம் அன்பும் அடைக்கலமும் பெற்று அவருடனேயே தங்கி மிக அற்புதமான, அரிய ஆடல் உருப்படிகளை இவர் கற்றுக் கொண்டார். இதில் மிக முக்கியமானவை “தஞ்சை நால்வர்” என்று பெருமையுடன் அழைக்கப்படும் திரு.கிட்டப்பா பிள்ளையின் மூதாதையர்கள் இயற்றிய பாடல்கள். இப்பாடல்களை இன்றும் நர்த்தகி நடராஜ் அவர்கள் நடனமாடி புகழ் சேர்க்கிறார். 2000 வது ஆண்டில் சென்னை சென்றடைந்தார்.
சென்னையில் அரங்கேறும் வாய்ப்புக்கள் எண்ணற்ற தடைகளுடன் இருந்தன; ஆனாலும் கலை ஆர்வம் மற்றும் கலைக்காகவே தன் முழு வாழ்க்கையை அர்ப்பணித்தப்படியால், அமைப்பாளர்கள் மற்றும் கலை ஆர்வலர்களின் நெஞ்சங்களை வென்றார். கூடிய விரைவிலேயே சென்னையின் முதன்மையான இயலிசை நாடக்க கூடங்களான “சபாக்களில்” வழக்கமான கலைஞர் ஆனார். டிசம்பர் மாதம் சென்னையில் நடக்கும் “மெட்ராஸ் மியூசிக் சீசன்” என்று சொல்லக்கூடிய மார்கழி இசை நாட்டிய நாடக விழாக்களில் பங்கேற்கக்கூடிய முக்கிய பரதநாட்டியக் கலைஞர் ஆனார்.
2007 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு இவருக்கு “கலைமாமணி” விருதினை அளித்தது. இதைத் தவிர, இந்திய அரசாங்கத்திடமிருந்து 2011 ஆண்டில் “சங்கீத் நாடக் அகாடெமி” விருதையும் பெற்றுள்ளார். (ஓரினம் இவரை அப்பொழுது வாழ்த்தியது. இதைப் பற்றி படிக்க) பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் இவருக்கு 2016ஆம் ஆண்டில் மதிப்புறு முனைவர் பட்டம் (டாக்டர் ஆப் லெட்டர்ஸ்) வழங்கியது. நர்த்தகியும், அவரது உற்றத்தோழி மற்றும் சக நடன கலைஞருமான திருநங்கை சக்தி பாஸ்கர் அவர்களும், இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதுமுள்ள மதிப்புமிக்க அரங்கங்களில் நிகழிச்சிகளை அளித்துளள்னர்.
இப்பொழுது நர்த்தகி பல மாணவர்களுக்கு பரதநாட்டியம் கற்றுக் கொடுக்கிறார், முக்கியமாக திருநங்கைகள் மற்றும் மாற்றுப்பால்/மாற்றுப்பாலீர்ப்பு அடையாளங்களைக் கொண்டவர்களுக்கும் பயிற்சி அளிக்கிறார். 2018 ஆம் ஆண்டில் அவரது கலைப் பயணம் பதினோராம்-வகுப்பு தமிழ்ப் பாடப் புத்தகத்தில் ஒரு பாடமாக இடம் பெற்றுள்ளது.
நர்த்தகி அவர்களின் நாட்டிய கச்சேரிகளில் அவர் “நாயிகா பாவம்” என்று சொல்லக்கூடிய, தன்னை தலைவியாக பாவித்துக்கொண்டு காதல் வசப்பட்டு தலைவனைப் பற்றி பாடும் பாடல்கள், பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்களின் மனங்களை கவர்ந்திருக்கிறிது. அவரது நாட்டியத்தை அவர் சமூகத்துடன் தொடர்பு வைத்துக்கொள்ள உபயோகப்படுத்தி, பெரும் அளவில் பாமர மக்களளுக்குக் கூட நாட்டிய ஆர்வத்தினை புகுத்தி உள்ளார். இதன் மூலம் பரதநாட்டியத்தை உலகளாவிய கலையாக்கி, மொழி மற்றும் கலாச்சார எல்லைகளை மீறச் செய்திருக்கிறார் நர்த்தகி.
தனது பால் அடையாளம் அவரின் கலை மேல் கொண்ட தாக்கத்தைப் பற்றி நர்த்தகி அதிகம் கூறியுள்ளார். “தி ஐந்து” பத்திரிகையில் 2011 ஆம் ஆண்டு அவர் ஒரு பேட்டியளித்ததில், “நான் அடையாளத்துக்கு ஆடினேன், பிழைப்புக்காக ஆடினேன்…இப்பொழுது நான் எனது ஆன்மாவிற்காக ஆடுகிறேன். பரதக்கலை என்னைத் தனது கருப்பையில் வைத்து ஈன்றெடுத்து நர்த்தகி நடராஜாக மறுபிறவி அளித்துள்ளது” என்று கூறினார்.
தமிழ் இலக்கியம் மேல் பேரார்வம் கொண்ட இவர், இவரது பால் அடையாளத்தைப் பற்றி மேற்கொண்ட தேடலில் அதை நாடினார். தமிழ் மொழி மற்றும் இலக்கியத்தின் மேல் அவர் கொண்ட நேசம் அவரது நாட்டிய நிகழ்ச்சிகளில் இனிதே காண முடிகிறது. தமிழ் இலக்கியத்தில் மூன்றாம் பால் அதனின் சரித்திரத்தை கூர்ந்தாராய்ச்சி மேற்கொண்டிருக்கிறார்.
2012 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு சிறிய காணொளியை நாம் இங்கு காண்போம். இது சிவபெருமான் மேல் காதல் கொண்ட தலைவி அவரது லீலைகளை வர்ணிக்கிறாற்போல் அமைந்த ஒரு நாட்டிய உருப்படி
நர்த்தகி திருநர் ஏற்புக்காக வெகு காலமாக குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார். 2017 ஆம் ஆண்டு, “டெட் எக்ஸ் டாக்” என்று சொல்லக்கூடிய சுயவாழ்க்கை அனுபவங்களைப் பகிர்ந்துக்கொள்ளக்கூடிய ஒரு பேச்சு நிகழ்ச்சியில், நர்த்தகி மற்றும் சக்தி கல்வி கூடங்களில் சந்தித்த ஒதுக்குதல்கள் மற்றும் ஒரு ரயில் பயணத்தில் சக யாத்திரிகள் அவரை அலட்சியப்படுத்தியபோது அவர் எப்படி அதை அணுகினார் போன்ற சம்பவங்களைப் பற்றி பேசுகிறார் நர்த்தகி.
நர்த்தகியின் வாழ்க்கைப்பயணம் நிச்சயமாக பல நபர்களை ஊக்குவிக்கிறது. குறிப்பாக சமூக ஒடுக்குதல்களை உடைத்து, தடைகளை வென்று வாழ்க்கையில் தேர்ச்சி பெற உதவுகின்றது. ஓரினம் நர்த்தகி நடராஜ் அவர்கள் “பத்மஸ்ரீ ” விருது பெற்றமைக்கு புகழுரை அளிக்கிறது. மென்மேலும் பல சாதனைகளை புரிந்து பெருமை சேர்க்க அன்பார்ந்த வாழ்த்துக்களை தெரிவிக்கிறது.
Acknowledgements: Thanks to Srinivas for translating this piece from Maddy’s original, and to to Subha for editorial input.