கவிதை: திருநங்கை தாலாட்டு
கனியினும் கனிந்த வுள்ளம், கனிந்து மெய்யுருகி – கண்கள்
பனிக்கவே நிற்கக்கண்டால், கல்லுமே கரைந்திடாதோ?
இனியுனக்கல்லல் இல்லை, கண்மணி கவலை வேண்டாம்
நனிதிறல் திருனர் முத்தே, செல்வி நீ கண்ணுறங்கு!
பெற்றதாய் தந்தை சுற்றம், விடுத்திட நீயும் செய்த
குற்றமும் ஏதும் உண்டோ – பாவியர் பேதை மாக்கள்
பற்றிடா துன்னை நாங்கள், அன்புடன் அரவணைத்தோம்
பெற்றி யீதெங்கட்கம்மா, தங்கமே கண்ணுறங்கு!
தஞ்சமும் உணவும்கூட தந்திடார் – வாழ்வில் நாமும்
மிஞ்சிட கல்வி தாரார், வேலைதான் தருவரோ காண்;
கெஞ்சியா பிச்சை கொள்வோம்? பாழும் இச்சூழல் மாறும்
அஞ்சிடாதமுதமே நீ, சோர்வற கண்ணுறங்கு!
தாயினும் பரிவு காட்டி , உலகறிவதனை யூட்டி
வேயினும் நல்ல தோளி, உந்தனை காத்து வெந்தே-
மாயினும் சமுதாயத்தை மாற்றுவோம், எமக்கு நீயோர்
சேயுமாய் ஆனாய் செல்வி, நன்கு நீ கண்ணுறங்கு!
அருமையான வார்த்தைகள், ஆழமான கருத்து.
என்ன புலமை! நன்றி ரவி.
மிகவும் அருமையான ஆழமான வரிகள்.. இந்த கவிதை திருநங்கைக்கு பெருமை சேர்ப்பது மட்டுமின்றி, தமிழுக்கும் பெருமை சேர்க்கிறது.
ரவி, என்ன ஒரு கவிதை, என்ன ஒரு ஆழம், என்ன ஒரு கருத்து. அந்த தீ விபத்து நடந்த நாளிலிருந்த்தே, அஞ்சலியாய் ஒரு கவிதை வேண்டும் என என்னியிருதேன். சில வரிகள் கூட எழுதினேன், ஆனால் முடிக்கவில்லை. என் மனதில் பாலை வார்த்தை இந்தக கவிதை கொண்டு. இறந்தவகளில் பலர் குருமார்கள் என கேள்விப்பட்டேன். பெற்ற தாய் கூட வெளியேற்றி கதவடைத்தாலும், அனாதையாய் தவிக்க விடாமல், இந்த அரவாணிகளை அரவணைத்த ஒரு திருநங்கைத் தாயின் குரல் சொர்க்கத்தில் இருந்து கேட்டது போல் இருந்தது.
“…வெந்தே-மாயினும் சமுதாயத்தை மாற்றுவோம், எமக்கு நீயோர்
சேயுமாய் ஆனாய் செல்வி, நன்கு நீ கண்ணுறங்கு”
நன்றி ரவி
Really excellent Mr.Ravi.
Your poem is too good and your language too.
Sasikumar