திருநங்கைகளும் ஊடகங்களும்
மனிதனும் ஊடகமும்
மனிதன் பிறந்தது முதல் அவனுடன் பயணித்த பல நிலைகளில் ஒன்றுத்தான் தொடர்புகள். ஒருவரை ஒருவர் உலகில் தொடர்புக்கொள்ள பல வழிகள் காலந்தொட்டே இருந்து வருகிறது. பண்டைய காலத்தில் புறாக்கள் மூலம் தொடர்புக்கொள்ள ஆரம்பித்து நவீன யுகமான தற்பொழுது இணையத்தளம் வரை மனித தொடர்புகள் தொடர்ந்து முன்னேறி போய்க் கொண்டுறிக்கிறது. இத்தகைய தொடர்புகளில் ஊடகத்தின் பங்கும் பாதிப்பும் அதன் தாக்கமும் மக்களிடையே அளவிடமுடியாது. ஊடகம் பல நல்ல நிகழ்வுகளையும் தீய நிகழ்வுகளையும் மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்த தவறியதில்லை. பத்திரிகை, வானொலி,தொலைக்காட்சி, இணையம் என்று பல்வேறு வடிவங்களில் மக்களிடையே ஒரு தொடர்பு கருவியாக ஊடுருவும் ஊடகங்கள் காலப்போக்கில் மக்களின் பழக்கவழக்கங்கள், குணாதிசயம்,பண்பாடு, கலாச்சாரம் போன்றவையை மாற்றக்கூடிய சக்தியாகவும் விளங்கியது. திருநங்கைகள் மீது ஊடகங்களின் தாக்கம் பெரும்பாலும் நேர்மறை மற்றும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் ஒரு காரணியாகவே அமைந்துள்ளது.
திருநங்கை புரிதலில் ஊடகங்களின் பங்களிப்பு
மேற்கத்திய நாடுகளில் ஊடகங்கள் மாற்றுபாலின புரிதலை மக்களிடையே எடுத்துச்சென்று பெரிய மாறுதல்களை உருவாக்கியது. மேற்கத்திய நாடுகளின் பாலியல் புரிதல் வளம்பெறத் தொடங்கியதும் மாற்றுப் பாலினருக்கான அங்கீகாரமும் துளிர்விடத் தொடங்கியது. பெரும்பாலும் பத்திரிக்கை ஊடகங்களில் திருநங்கைகளை பற்றி மக்களிடையே புரிதலுக்கான முயற்சியை மற்ற ஊடகங்களை காட்டிலும் அதிகபடியான பங்கை பத்திரிக்கை மேற்கொண்டு வருகிறது. திருநங்கைகள் பற்றிய செய்திகளை பத்திரிகையில் வெளியிடுவது, அதாவது திருநங்கைகளின் கூட்டமைப்பின் செயல்பாடுகள், பேரணிகள், திருவிழாக்கள்,அழகிப்போட்டிகள், திருநங்கைகளின் பிரச்சனைகள் போன்றவைகளை தாங்கிய நிகழ்வுகள் அவ்வப்போது பத்திரிகையில் காணமுடிக்கிறது. வானொலியில் திருநங்கைகள் பற்றிய நிகழ்சிகளின் பங்கு மிகவும் குறைந்த அளவிலே உள்ளது.
தமிழ் திரைப்படங்களில் திருநங்கைகளின் அவல நிலை
தமிழில் வெளிவந்த பல திரைப்படங்கள் திருநங்கைகளை கேலிக்கான காட்சியாக மட்டுமே பயன்படுத்தி எங்களின் உணர்வுகளை காயப்படுத்தி அன்றுத்தொட்டு தன் கடமையாக சிறப்பாக செய்து வருகிறது. மீசை மழித்து முரட்டு ஆண்களை திருநங்கைகள் போல வேடமிட்டு நடிக்கவைத்து திருநங்கைகளை தோற்றத்தில் கூட அவமானம் படுத்திய இயக்குனர்கள் பலர் உண்டு. நகைச்சுவை என்கிற போர்வையில் அவமான பேச்சுக்கள், இரட்டை அர்த்த ஆபாச வசனங்கள், பாலியல் ரீதியான காட்சி அமைப்புகள் என்று திருநங்கைகளை திரைப்படங்கள் அலங்கோலம் படுத்தின.
பல திரைப்படங்களில் பாடல் காட்சிகளில் திருநங்கைகள் போல வேடமிட்ட ஆண்களை காணும் போது முகம் சுளிக்க வைக்கும். போக்கிரி, சிவகாசி, கட்டபொம்மன், துள்ளாத மனமும் துள்ளும், திருடா திருடி, பருத்தி வீரன், கில்லி, உள்ளம் கொள்ளை போகுதே, வேட்டையாடு விளையாடு, சில்லுன்னு ஒரு காதல், ஈரமான ரோஜாவே, லீலை, முரட்டுக்காளை போன்ற திரைப்படங்கள் திருநங்கைகளை கேவலமான முறையில் சித்தரித்துள்ளது. அந்த படங்களில் ஒரு நகைச்சுவை காட்சியிலோ இல்லை பாடல்களிலோ திருநங்கைகளை அவமதிக்கும் செயல்கள் அரங்கேறியுள்ளது. நகைச்சுவை என்கிற பெயரில் எங்களை நீங்கள் இழிவபடுதுவதை நிறுத்துங்கள். வேண்டாம் இனி திருநங்கைகளை அவமானபடுத்தும் வகையில் கேவலமான காட்சிகள் தமிழ் திரைப்படங்களில். தமிழ் திரையுலகமே திருநங்கைகளை இனி கண்ணியமான முறையில் திரைப்படங்களில் காட்டுங்கள். எங்களின் உணர்வுகளோடு உங்கள் வேடிக்கை வேண்டாம். இத்தகைய காட்சிகளை படத்தில் காணும் போது எங்கள் மனம் நோகுகிறது, மிகவும் தர்மசங்கடமான வருத்தமான சூழ்நிலை எங்களுக்கு ஏற்படுகிறது. உங்களுக்கு திருநங்கை போன்ற காட்சி அமைப்புகள் கொண்ட கதாபாத்திரம் வேண்டும் என்றால் திருநங்கைகளையே அந்த கதாபத்திரத்தில் நடிக்க வையுங்கள், எதற்கு அகோரி தோற்றம் உள்ள ஆண்களை திருநங்கைகள் போல வேடமிட்டு நடிக்க வைக்கிறீர்கள்? ஒரு தனிமனிதனையோ, சமூகத்தையோ, இனத்தையோ இழிவாக பேசுவதை சென்சார் அனுமதிக்க கூடாது என்பது விதி. திரைப்படங்களில் மிருகத்தை சித்திரவதை செய்வது கூட அனுமதிக்காத சென்சார் எப்படி ஒரு மனித இனத்தை திருநங்கைகளை இழிவாக பேச, மட்டமாக காட்சி அமைக்க அனுமதிக்கிறார்கள் என்று புரியவில்லை.
தமிழ் திரைப்படங்களில்மேன்மையான போக்கு
சில தமிழ் இயக்குனர்கள் திருநங்கைகளை கண்ணியமான முறையில் அருமையான கதாபாத்திரங்கள் கொடுத்து பெருமைபடுத்தி சிறப்பித்துள்ளனர்.அந்த வரிசையில் சில படங்கள்.
- மதக்கலவரத்தில் உள்ளவர்களை தடுத்துநிறுத்தி உயிரின் மதிப்பையும் உறவின் பெருமையையும் ஒரு திருநங்கை மூலம் கருத்தை பதிவு செய்த பாம்பே படத்தில் திரு.மணிரத்தினம் அவர்கள்
- திருநங்கையின் வலிமையை பெருமையை உணர்த்திய “காஞ்சனா” படத்தில் ராகவ லாரன்ஸ் அவர்கள்
- திருநங்கையின் அன்பையும் பரிவையும் சிறப்பையும் வாழ்வியல் முறையை அழகாக கூறிய”நர்த்தகி” படத்தில் புன்னகை பூ கீதா அவர்கள்
- திருநங்கையின் உணர்வுகள், பாலியல் தடுமாற்ற சூழ்நிலை உணர்த்திய “நவரசா” படத்தில் திரு.சந்தோஷ் சிவன் அவர்கள்
- தங்களை நம்பி வரும் காதல் ஜோடிகளை அரவணைத்து உதவி செய்து உயிரை விடும் திருநங்கையின் தியாகத்தை தெளிவுபடுத்திய “தெனாவட்டு” படத்தில் திரு.கதிர் அவர்கள்
- வீட்டில் இருந்து வெளியேற்றபட்ட திருநங்கை சமுதாயத்தில் முன்னேறி சாதித்த விதத்தை அழகுபடக் கூறிய “கருவறை பூக்கள்” படத்தில் திரு.சேவியர் IPS அவர்கள்
இவர்கள் அனைவருக்கும் திருநங்கைகள் சார்பாக நன்றியை தெரிவிக்கிறேன். திருநங்கைகளை சமமாக உணர்வுகளை உணர்ந்து மதித்து, நல்ல கதாபாத்திரங்கள் கொடுத்து திருநங்கைகளை மேன்மைபடுத்திய அணைத்து இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் திருநங்கைகள் உலகம் நன்றியோடு நினைவில்கொள்ளும்.
- “நர்த்தகி” படத்தில் கல்கி சுப்ரமணியம்
- “தெனாவட்டு” படத்தில் ரேவதி
- “கருவறை பூக்கள்” படத்தில் லிவிங் ஸ்மைல் வித்யா
ஆகிய திருநங்கை சகோதரிகள் திரைப்படங்களில் தங்களுக்கு கொடுத்த கதாபத்திரத்தை அருமையாக திறம்பட செய்தனர். பல்வேறு சமூக காரணங்கள் மற்றும் மிருகங்கள் பாதுகாப்புக்கு குரல் கொடுக்கும் திரை நட்சித்திரங்கள், திருநங்கைகள் பற்றி மக்களிடம் விழிப்புணர்வு குரல் கொடுத்தால் அந்த கருத்து மக்களுக்கு நல்ல விதமான முறையில் சென்று அடையும்.
இணையத்தில் திருநங்கைகள்
இணையத்தில் திருநங்கைகள் பற்றி பரவலான கட்டுரைகள், குறும்படங்கள், படக்காட்சிகள் வலைபதிவிலும், சமூக தளங்களான Facebook, Twitter, Youtube போன்ற தளங்களில் பார்க்கலாம். திருநங்கைகள் பற்றி பல இணையதளங்கள்களில் குறிப்பாக Sahodari.org, Orinam.net திருநங்கை பற்றிய செய்திகளை காணலாம். பல எழுத்தாளர்கள் திருநங்கைகள் பற்றி வலைபதிவிலும் தங்களின் கருத்தையும் ஆதரவையும் இணையம் மூலமும் வெளிபடுத்தியுள்ளனர்.
ஊடகத்துறை தோழர்களே உங்களால் முடியாதது எதுவுமில்லை!
நாட்டின் தலைவிதியை வரலாற்றை மாற்றும் சக்திகள் நீங்கள். மக்களிடையே அணைத்து தகவல்களையும் ஆராய்ந்து அலசி நடுநிலையாக உண்மையாக செய்திகளை கொண்டுச் சேர்க்கும் பணி உங்களுடையது. ஊடகத்தின் உதவிகள் இல்லாமல் எந்த ஒரு வெற்றியும் இன்றைய காலச்சுழ்நிலையில் அடைவது கடினம். ஒடுக்கப்பட்ட எங்களின் சமுதாயத்திற்கு அதரவாக குரல் கொடுங்கள், மக்களிடம் திருநங்கைகள் பற்றிய விழிப்புணர்வு புரிதலை ஏற்படுத்த முற்படுங்கள். திருநங்கைகள் பற்றிய எதிர்மறையான எண்ணங்கள் கொண்ட மனிதர்களின் மனதை மாற்ற, திருநங்கைகள் பற்றி மூட நம்பிக்கை அகல, அறிவு கண்ணை திறந்திட உங்களின் செயல்களால் ஊடகம் மூலமாக மாற்றம் ஏற்படுத்தமுடியும்.
ஊடகத்தில் திருநங்கைகளுக்கு வாய்ப்புக்கொடுங்கள்
மேற்கத்திய நாடுகளில் திருநங்கைகளின் நிகழ்ச்சி, பங்களிப்பு அதிகஅளவில் உள்ளது. இந்தியாவில் ஹிந்தி மொழிகளில் வரும் ஊடகங்களில் கூட கணிசமான திருநங்கைகளின் பங்களிப்பு உள்ளது. சகோதிரி கல்கி சுப்ரமணியம் அவர்கள் “சகோதிரி” என்கிற பத்திரிக்கை நடத்தி சிறப்பாக செயல்புரிந்து பத்திரிகை ஆசிரியாராக தன் திறமையை நிரூபிக்க செய்தார். ரோஸ் வெங்கடேசன் தொலைகாட்சி மற்றும் வானொலியில் தன் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார். விஜய் தொலைகாட்சியில் வெளிவந்த “இப்படிக்கு ரோஸ்” கலைஞர் தொலைகாட்சியில் “இது ரோஸ் நேரம்” மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.”ரோசுடன் பேசுங்கள்” என்ற நிகழ்ச்சி மூலம் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆகவும் திகழ்ந்தார். சமீபத்தில் “Chennai In and Out Magazine” ஆசிரியர் திரு விஜயகுமார் அவர்கள் எனக்கு அவருடைய பத்திரிகையில் எழுத வாய்ப்புக்கொடுத்தார். “விடியலை தேடி திருநங்கைகள்” என்கிற தலைப்பில் நான் எழுதினேன். நல்ல வரவேற்ப்பு கிடைத்தது. திறமையான திருநங்கைகளுக்கு வாய்ப்பும் கொடுங்கள் எங்களுக்கு எதிரான ஒடுக்குமுறைக்கு குரலும் கொடுங்கள் ஊடக தோழர்களே!
உங்களின் கருத்தும் விமர்சனமும் வரவேற்கிறேன்.
ஆசிரியர் குறிப்பு:
இந்தக் கட்டுரை ஆயிஷாவின் வலைபதிவில் பிரசூரமானது. அவரது அனுமதியுடன் இங்கே பிரசூரிக்கப்பட்டுள்ளது.
Ayesha Farook அக்காவின் கருத்துக்கள் ஆரோக்கியமானவைகள்… திருநங்கைகளுக்கு நீங்கள் எடுத்துக்காட்டு….கண்ணியமாக உங்கள் பாதையில் வருவோம் தோழி…
The world over women were suppressed for a long time and now they were liberated to some extent… So the value chain of liberation will slowly move up and Thirunangaigal will also be benefited. If talents are there, chance is given, they can also perform well. So we should work on increasing their talents and knowledge.
AKKA MIGAVUM ARUMAI YAANA PATHIVU UNGALUKKAGA ENDRUM UNGALUDAN ENAINTHU ERUKKUM UNGAL ANBU THAMBI
I agree with my dear sister Ayeshya . so all media`s please help our community to get acceptance in the society. very thankful for Ayesha to take such a valuable step for our transgender community. Sheyal.
Vanakkam unkalathu inthapathivu kattayam avasiam thirunangaigal mellum nalla panigalai seithu manithargalai mathiungal thayavuseithu