Our Voices The Orinam Blog

என் அக்கா ஒரு லெஸ்பியன்

“ஆம்பளைங்க சொல்றது தான் சட்டம்னு பொதுவா நாம எல்லலரும் பாக்கற ஆணாதிக்கம் உள்ள சூழ்நிலையில தான் நானும் வளர்ந்தேன். அதனால ஒருபாலீர்ப்பு (Homosexuality) ஒரு வக்கரமான விஷயம்னு நினைச்சேன்.” என்று சொல்லும் பரத் பாலனின் அக்கா அனிதா பாலன் ஒரு நங்கை (Lesbian). அனிதா தனது மாறுபட்ட பாலீர்ப்பை (Alternate sexuality) பற்றி முதன் முதலாக வெளியே வந்தது தனது சஹோதரன் பரத்திடம் தான். நங்கை (Lesbian) என்று சொல்வதை வீட, தான் ஒரு இருபாலீர்ப்புள்ள பெண் (ஆண், பெண் இருவரிடமும் ஈர்ப்புள்ள பெண்/ Bisexual) என்று சொன்னால், பரத்திற்கு புரிந்துகொள்வதற்கு எளிதாக இருக்கும் என்று எண்ணி, அவனிடம் அவ்வாறு வெளியே வந்தாள் அனிதா.

பரத் தனது அக்கா அனிதாவுடன்

அப்படியும் அனிதாவின் உணர்வுகளை, அவளது மாறுபட்ட பாலீர்ப்பை புரிந்துகொள்வது பரத்திற்கு எளிதாக இருக்கவில்லை, குழம்பினான் பரத். அனிதாவிற்கு ஏதோ மனநல குறைபாடு என்றும், அவள் மேலைநாட்டு கலாச்சாரத்தின் ஆளுமையால் புரியாமல் சொல்கிறாள் என்றும் முடிவிற்கு வந்தான். அவர்களது குடும்பம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தான் இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு குடி புகுந்திருந்தது.

இது நடந்த பொழுது பரத்திற்கு வயது 19, அனிதாவிற்கு வயது 21. என்ன செய்வதென்று புரியவில்லை பரத்திற்கு. குழப்பம், பயம், தடுமாற்றம். “நமக்கு ஒரு விஷயம் புரியலைனா, அத பத்தி பயம் ஏற்படுது. இது மனித குணம். என் அக்காவுக்கா இப்படினு எனக்கு பெரிய அதிர்ச்சி.” நினைவுகூருகிறான் பரத். பரத் அப்பொழுது கல்லூரியின் முதல் ஆண்டில் இருந்தான். பொருத்தமாக அதேசமயம் பரத்தின் நெருங்கிய நண்பன் ஒருவனும் ஒருபாலீர்ப்புள்ள ஆண் (நம்பி/Gay) என்று அவனிடம் வெளியே வர, அனிதாவிடுமும், அவனது நண்பனிடமும் ஒருபாலீர்ப்பை (Homosexuality) பற்றி மனம் திறந்து பேசினான் பரத். பேசப்பேச அவனுக்கு இருந்த கேள்விகளுக்கு பதில் கிடைத்தது. எந்த விஷயத்தை பற்றி பேச பல இந்திய குடும்பங்கள் தயங்குகின்றனவோ, அதை பற்றி பரத் பேச, கேட்க, பரத்திற்கு தெளிவு பிறந்தது. ஒருபாலீர்ப்பை பற்றி இருந்த பயம் விலகியது.

அதன் பிறகு அனிதா தனது அப்பாவிடம் வெளியே வந்தாள். அவர் அனிதாவை உடனடியாக ஏற்றுக்கொண்டார். அடுத்ததாக அம்மா. அனிதா அவளது அம்மாவிடம் வெளியே வந்தபொழுது பரத் அவளுக்கு துணையாய் இருந்தான். அப்பாவை வீட சற்று பழமைவிரும்பி அம்மா. எல்லோருக்கும் கடினமான கணம் அது. அம்மாவால் அனிதாவின் ஒருபாலீர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியவில்லை, இன்றும் திணறுகிறாள். இது ஏதோ அனிதாவின் வாழ்க்கையில் ஒரு கெட்ட காலம், போக போக சரியாகி விடும் என்பது அம்மாவின் எண்ணம். “அம்மாக்கு அனிதானா உயிர். கூடிய சீக்கிரம் அம்மா அனிதாவை முழு மனசோடு ஏத்துக்குவா! எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு” என்கிறான் பரத்.

தங்களது அன்றாட வாழ்க்கையிலோ, நண்பர்கள் மற்றும் உடன் வேலை செய்பவர்கள் வட்டாரத்திலோ, குடும்பத்திலோ, மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்களை (Lesbians, Gays, Bisexuals, Transgenders (LGBT) ) சந்தித்திராதவர்களிடமிருந்து தான், பாலியல் சிறுபான்மையினர் மீது வெறுப்பு அதிகம் வெளிப்படுகிறது. நமக்கு தெரிந்தவர்களில் யாராவது மாறுபட்ட பாலீர்ப்போ அல்லது பாலடையாளம் கொண்டவர்களாகவோ இருந்தால் அப்படி வெறுப்பை உமிழ்வது கடினம். இது தான் பரத்தின் நம்பிக்கைக்கு ஆதாரம். “கொஞ்சம் உங்க மனச திறந்து, அவங்க என்ன சொல்றாங்கன்னு கேளுங்க. ரொம்ப ஒன்னும் கஷ்டம் இல்லை” என்று சிரிக்கிறான் பரத். மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்களின் நண்பர்கள், கூடப்பிறந்தவர்கள் மற்றும் இதர குடும்பத்தினர்கள் எல்லோரம் அவர்களது உரிமைகளுக்காக குரல் கொடுக்க வேண்டும், போராட வேண்டும் என்பது பரத்தின் கருத்து. “நம்ம குடும்பத்துக்காக நாமதான் குரல் கொடுக்கணும். அப்படித்தான் மக்களுக்கு புரியவைக்க முடியம்” என்கிறான் பரத்.

பரத் பாலன் மற்றும் அனிதா பாலன்

மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்களுக்கு சமஉரிமைகள் வழகுவது, பாரம்பரிய குடும்ப நெறிகளுக்கு புறம்பானது என்பது பலரின் வாதம். பரத் இதை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. “பாலியல் சிறுபான்மையினரையும் சமமா, ஒண்ணா நடத்தறதை வீட எதுங்க “குடும்பநெறி”? அவங்களை வெறுக்கறதும், ஒதுக்கறதும் தானா? அவங்களை குற்றவாளிங்களா நடத்தாம சமமா நடத்தனும். எல்லோருக்கும் இருக்கற அடிப்படி மனித உரிமைகள அவங்களுக்கும் குடுக்கனும். கல்யாணம், குழந்தைகள தத்து எடுத்துக்கறது எல்லாம்.” நாளை அனிதா தான் விரும்பிய பெண்ணை வாழ்க்கை துணையாய் தேர்ந்தெடுத்தால், அவளுக்கு பரத்தின் ஆதரவு கட்டாயம் உண்டு.

அனிதா, பெரும்பாலும் காணப்படும் எதிர்பாலீர்ப்புடன் (ஆண், பெண் ஈர்ப்பு/Heterosexuality) இருந்தால் பரத்திற்கோ அவனது குடும்பத்திற்கோ இவ்வளவு பிரச்சனை இல்லை. ஏதாவது மாயம் மந்திரம் மூலம் அனிதாவை அப்படி மாற்ற முடியும் என்றால் செய்வாயா என்று பரத்திடம் கேட்டபொழுது, “கண்டிப்பா மாட்டேன். ஒருத்தரோட பாலீர்ப்பு அவங்களுக்கு இயற்கையா அமைஞ்ச விஷயம், அவங்க அடிப்படை அடையாளத்துல ஒண்னு. அதை யாராலையும், எதுவாலையும் மாத்த முடியாதுங்கறது தான் உண்மை. அப்புறம் இந்த மாதிரி மாயம், மந்திரம், மருந்துனு பேசறதால மக்களுக்கு இந்த சிறுபான்மையினர் மேல இருக்கற பயமும், சந்தேகமும், வெறுப்பும் இன்னுமும் அதிகமாகும். ஒரு உதாரணத்துக்கு சொல்றேனே, நாங்க இப்போ அமெரிக்கால இருக்கோம். என் அக்காவ வெள்ளைகாரியா மாத்தினா இங்க இருக்கறது ஈ.சீனு சொன்னா, எப்படி நான் முடியாது, அவ எப்படி இருக்களோ அதுவே நல்லது, அவ என் அக்கானு சொல்வேனோ அதுபோலத்தான். என் அக்கா ஒரு லெஸ்பியன், ஒரு நங்கை. அந்த உண்மையை அவளை நான் மனப்பூர்வமா ஏத்துக்கறேன். அவளுக்கு என் அன்பும் ஆதரவும் என்னிக்கும் உண்டு.” என்று முடித்தான் பரத்.

Comments

8 Comments. Add your own »

Comment Guidelines: Your email address will not displayed. Your comment may be held up for moderation. Language that is deemed unsuitable for decent discussion will be expunged. Avoid pasting raw URLs or large quotations from elsewhere. The opinions expressed here are those of the respective individuals. We reserve the right to take down irrelevant and improper comments without any notice.

 1. எப்படி இந்த தளத்திற்கு வந்தேன் என்றே தெரியவில்லை, ஆயினும் என் கருத்தை சொல்ல விரும்புகிறேன். ஓரினஈர்ப்பு எவ்விதம் ஏற்படுகிறது என்பது புரியாத விஷயம். மேலும் ஒரு பெண்ணிடம் ஆணுக்கு கிடைக்கும் இன்பம், அல்லது ஒரு ஆணுக்கு பெண்ணிடம் கிடைக்கும் இன்பம்போல் இது அமையாது என்றே நினைக்கிறேன்.

  1. இருக்கலாம் அவரவர் விருப்பத்திக்கு மாறாக
   ஒன்னும் செய்ய இயலாது

 2. காசி – உங்கள் கருத்ததை தெரிவித்ததற்கு நன்றி.
  1) ஒருபாலீர்ப்பு என்பது வெறும் (உடல்) இன்பமோ அலது களவியோ பொறுத்த விஷயம் மட்டுமல்ல. அன்பு, பாசம், காதல் என்று ஆண்-பெண் உறவை போன்று எல்லா பரிணாமங்களும் கொண்ட உறவு இது.
  2) மேலும் ஒருபாலீர்ப்பு ஆண்-பெண் உறவை போன்று இன்பமாக இருக்காது என்று உங்களால் எப்படி கூற முடியும்? என்ன அடிப்படை?

 3. orinacherkkai sari thappu yenbathu vivathathirkuriyathaga yirukkalam anal nam manathirkku piduthulla poluthu matroruvarukku yidainchalillatha poluthu yen araichu seyya vendum

 4. மாறி வரும் கலாச்சரத்தில் இது குற்றம் இல்லை.
  ஆனால் இயற்கைக்கு முரனானது.
  நம் படைப்பின் முதல் நோக்கம் இனபெருக்கம் என்பதை உனர வேண்டும்

  1. உங்கள் கருத்தை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. இனப்பெருக்கம் தான் நம் படைப்பின் முதல் நோக்கம் என்றால், மலட்டுத் தன்மையுடன் ஆண்களும், பெண்களும் ஏன் பிறக்கிறார்கள்? அப்படி பிறப்பவர்களுக்கு காதலிக்கவோ, கல்யாணம் செய்து கொள்ளவோ, குடும்பம் என்று ஒன்றை ஏற்ப்படுத்திக் கொண்டு சந்தோஷமாக வாழவோ, உரிமை கிடையாது என்று நாம் சொல்லமுடியுமா? எல்லோரும் அவர்கள் விருப்பம்போல சந்தோஷாமாக வாழ வழி வகுக்க வேண்டியது நம் சமுதாயத்தின் கடமை. மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்களால் யாருக்கும் எந்த தொந்தரவும் கிடையாது, அவர்களை ஒதுக்கி, வெறுத்து, வேற்றுமைபடுத்துவதன் மூலம் நாம் அடைவது என்ன?

 5. Hi friends,
  is a great thing that being a Man i got married ofcourse i have son.I didnt feel like that i am gay,bisexual from my child hood.but i woulike to know about these LGBT i wouldlike to participate and support them.because from 2005 onwards i met TG people while i am travelling discussed with them regarding their life style.plese inform me any mmetings or pride will be in march 2013
  thanks,
  prem……………

  1. சரியா சொன்னீங்க….. நான் பெண்ணுடலில் வசிக்கும் ஆண்… என்னை கல்லூரி காலத்தில் ஒருதலையாக காதலித்த தோழி தற்போது அவளது கணவனிடம் அனுபவிக்காத உணராத அந்த அந்தரங்க சுகத்தை உணர்வை என்னிடம்தான் உணர்ந்ததாக கூறுகிறாள்.. இப்பொழுது கூறுங்கள் எப்படி ஒரு பெண் ஆணிடம் உணராத இன்ப சுகத்தை என்னிடம் உணர முடிந்தது.. காரணம் காதல் மட்டுமே… என்னிடம் இணையும் போதும், என்னை நினைக்கும் போதும் மட்டுமே அவள் உயிர் பெறுவதாக கூறுகிறாள்.. இதை ஏற்றுக்கொள்ள முடிகிறதா… ஆனால் எனக்கு ஒரு வாழ்க்கை துணையாக ஒரு பெண்ணை தேடி நான் தவிக்கிறேன்.. ஒரு வழி கூறுங்கள் ப்ளீஸ்… காதலுக்காக எனக்கு ஒரு துணை வேண்டும்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *