Our Voices The Orinam Blog

உயிருடன் ஒரு சிரிப்பு

அன்று மதியம் மூன்று மணிக்கே வேலையில் மனம் செல்லாததால் களைப்புற்று அப்பார்ட்மெண்ட்டிற்கு திரும்பினாள் சரளா. மனம் ஏனோ தீபிகாவைப் பற்றியே நினைத்தது. ஒரு உருவம் இல்லாமலேயே தன்னை அழ வைத்துக்கொண்டு இருந்த தன் உணர்வுகள் இப்பொழது தீபிகாவின் உருவத்தில் தன்னை சித்ரவதை, இல்லை, இல்லை, மனம் அதை ரசிக்கும் பொழது, அது கிடைக்காத வேதனையில் தான் மருகுவதை உணர்ந்தாள். கெளச்சில் சரிந்த சரளா தன் மனபாரம் குறைய என்ன செய்வது என தெரியாமல் அழ ஆரம்பித்தாள்.
 

சிறகடித்து பறக்கும் பட்டாம்பூச்சி என மற்றவர்களால் வர்ணிக்கப் படும் பருவத்தில் தான் மட்டும் முள் சிறகில் இருந்த பட்டாம்பூச்சியாய், அழகாக பறக்க முடியாமல், மனம் சக மாணவிகளிடம் தோழமையுடன் பழக முடியாமல்… தொந்திரவு, ஆம், அதை தொந்திரவு என்றுதான் முதலில் விலக்க முற்பட்டாள். முடியாமல் போகவே சோர்ந்து போய், படிப்பில் தன் கவனத்தைத் திருப்பினாள். அவள் பெற்றோர் பெருமையுடன் பேசும்படி மாநிலத்திலேயே முதல் இடத்தில் ப்ளஸ் டூ பாஸ் செய்து மேலே மேலே படித்து இதோ டாக்டர் சரளாவாக நாஸாவில் வேலை செய்கிறாள். கல்யாணம் என்று அவளது பெற்றோர்களும் நச்சரித்துக் கொண்டுதான் இருக்கின்றனர். இப்பொழது அவர்களுக்கு அது பெரிய கவலையாகவே மாறி விட்டது. மனம் கசந்து பேசஆரம்பித்து உள்ளார்கள். அவர்களை வேதனைப் படுத்துகிறோமே என்ற கவலை ஒரு பக்கமும், தான் யார் என்பதை எப்படி சொல்வது என்ற அச்சமும் சரளாவை வாட்டி வதைத்துக் கொண்டு இருக்கிறது. வெளி உலகத்திற்காக சிரித்தாலும் அவளுக்கே அதில் உயிர் இல்லாதது தெரியும். எல்லாவற்றையும் நினைத்துத்தான் அழதாள்.
 

தீபிகா வரும் சத்தம் கேட்டது. தன்னை சரளா சுதாரித்துக் கொள்வதற்குள் அவள் உள்ளே நுழைந்து விட்டாள். அவளது முகத்தைப் பார்த்ததுமே, “அழுகிறாயா, என்ன?” என்று கேட்டவள், கவலையுடன் அருகில் வந்து அமர்ந்தாள்.
 

இந்த நிலையிலும் பாழாய்ப் போன மனம் அவள் கூர்மையான மூக்கையும் துருதுருப்பான கண்களையும் கவனிக்கத் தவறவில்லை. சரளாவிடம் இருந்து எந்த பதிலும் வராமல் போகவே, மெதுவாக, “என்னிடம் சொல்லலாம் என்றால் சொல், சரள்” என்றாள்.
 

அவ்வளவுதான். அப்படியே உடைந்து போய்  விட்டாள். எப்படி இவளிடம் நான் கூறுவேன் என்று மனதிற்குள் போராட்டமே நடத்தினாள். தீபிகாவைப் பொறுத்தவரை, சரளா கலகலப்பாக பழகும் பெண் இல்லை என்றாலும் இப்படி காரணம் இல்லாமல் அழும் சாதாரண பெண் அல்ல. ஏதோ கவலை இவளை வாட்டுகிறது என்று உணர்ந்தவள், அவள் முகத்தைத்தன் கைகளில் ஏந்தி, “எதுவானாலும் சொல் சரள்” என்றாள்.
 

அதற்குமேல் பொறுக்க முடியாமல்போன சரளா, “தீபி, நான் சொல்வதைக் கேட்டால் இப்படி நீ என் பக்கத்தில் இருப்பாயோ, மாட்டாயோ, தெரியாது. ஆனாலும் சொல்லத்தான் போகிறேன். நான் பெண் என்றாலும் என் மனம் ஏனோ பெண்ணிடமே காதல் உணர்வு தோன்றுகிறது.” என்றவள், தொடரலாமா வேண்டாமா என்று யோசித்து, நிமிர்ந்து தீபிக்காவின் முகத்தைப் பார்க்கவே கூசி, மெள்ள நிமிர்ந்தாள்.ஆனால் அதில் எந்தவித மாற்றமும் இல்லாத்ததால், சற்று  தைரியம் அடைந்து, மேலே கூற ஆரம்பித்தாள். “உன்னைப் பார்த்த முதல்  இத்தனை வருடங்களாக கட்டுப்பாட்டிற்குள் அழது கொண்டு இருந்த என் மனம் அடக்க முடியாமல் என்னை தொந்திரவு செய்கிறது. என்னை மனித்துவிடு. என்னால் உன்னிடம் வெறும் தோழியாக பழக முடியவில்லை” என்றவள், வழிந்தோடும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள். நான் வெளியே இடம் பார்த்துக் கொள்கிறேன் என்பாளா, என்று பயந்து, எதுவானாலும் எதிர்கொண்டுதான் ஆக வேண்டும் என்று தீர்மானித்தவளாய், அவள் முடிவை சொல்லட்டும் என மொளனமாக தலை குனிந்து இருந்தாள். சற்று நேரம் கழித்தும் பதில் வராமல் போகவே, நிமிர்ந்த சரளா அதிர்ந்தாள். அவள் கண்களிலும் மாலை, மாலையாக கண்ணீர்.
 

பதறிப்போனவளை இதமாக அணைத்த தீபிகா, “சரள், உன்னிடம் எப்படி கூறுவது என்று நான் தவித்துக் கொண்டு இருந்ததைத்தான் நீ இப்பொழுது கூறினாய். உண்மையில் என் பாரமும் குறைத்து விட்டாய்” என்று திணறி,  திணறிக் கூறி முடித்தாள். இதை சற்றும் எதிர்பார்க்காத சரளா, ஒரு நிமிடம் ஸ்தம்பித்து விட்டாற்போல் மகிழ்ச்சியில் என்ன செய்வது என்றே தெரியாமல் இருந்தாள்.
தன் நிலை அடைந்து அவளை நிமிர்ந்துப் பார்த்தாள். இருவர் கண்களிலும் ஆனந்தக் கண்ணீர்.
 

பிறகு இருவரும் எவ்வளவு வேதனைகளை தேவை இல்லாமலே பட்டு இருக்கிறோம் என்று உணர்ந்தார்கள். இப்பொழுதும் அவர்களுக்கு எதிர்ப்புகள் வரும். அவர்கள் பெற்றோர் இதை புரிந்து கொள்வார்களா, மாட்டார்களா?, உலகம் இதை அங்கீகரிக்குமா என பல கேள்விகள் இருந்தாலும், அதை எல்லாம் மறந்து, பத்து வயதில் சிரித்த அதே ஆனந்த சிரிப்பை இத்தனை வருடங்களுக்கு வாய் விட்டு, மனம் விட்டு சிரித்தனர்.
 

அந்த சிரிப்பில் உயிர் இருந்தது.

Comments

2 Comments. Add your own »

Comment Guidelines: Your email address will not displayed. Your comment may be held up for moderation. Language that is deemed unsuitable for decent discussion will be expunged. Avoid pasting raw URLs or large quotations from elsewhere. The opinions expressed here are those of the respective individuals. We reserve the right to take down irrelevant and improper comments without any notice.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *