திருநம்பிகள் கருத்துக் குறிப்புகள்: an explainer for policy makers [தமிழ்]
[மொழிபெயர்ப்பு ஸ்வேதா ஸ்ரீ] English version is here.
திருநம்பிகள் கருத்துக் குறிப்புகள்
திருநம்பிகள்/திருநர் அனுபவமுள்ள ஆண்கள் என்பது பெற்றோர்/மருத்துவ வல்லுநர்களால் பிறப்புறுப்பின் அடிப்படையில் பெண்ணாக நியமிக்கப்பட்டவர்கள், ஆனால் அவர்கள் ஆண்களாக அடையாளப் படுத்துபவர்கள்.
இந்திய அளவில், ‘திருநர்’ என்ற சொல், திருநங்கைகள், ஹிஜ்ரா, கின்னர் போன்ற சமூக-கலாச்சார அடையாளங்களைச் சேர்ந்த திருநங்கைகளையே பெரும்பான்மையான சமூகத்தால் குறிக்கப்படுகிறது. இதன் விளைவாக, திருநம்பிகள் அரசு அதிகாரிகள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களால் திருநர்களாக பார்க்கப்படுவதில்லை, இதனால் எங்களை பாதிக்கும் முக்கிய பிரச்சினைகள் புறக்கணிக்கப்படுகிறது.
எங்களைப் போன்ற திருநம்பிகள் எங்கள் அடையாளத்தை வெளிப்படுத்தும் போது பல போராட்டங்களை எதிர்கொள்கின்றனர். நாம் பிறக்கும்போதே பெண் என்ற அடிப்படையிலான ஆணாதிக்கக் கட்டமைப்புகளிலிருந்து ஒடுக்குமுறைகளை சமாளிக்க வேண்டும், அதே போல் திருநம்பிகள் என்ற பாலின அடையாளத்தின் அடிப்படையில் நம் வாழ்நாள் முழுவதும் பாகுபாடு மற்றும் வன்முறைகளை எதிர்கொள்ளவேண்டி உள்ளது. இது எங்கள் நடமாட்டம், பொது இடங்களுக்கான அணுகல், கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம், சிவில் உரிமைகள் (குடும்ப வழி சொத்துரிமை , குழந்தை வளர்ப்பு உரிமைகள்) ஆகியவற்றைக் கட்டுப்படுத்துகிறது, மேலும் எங்கள் பிறப்பு குடும்பங்கள் மற்றும் பிற நிறுவனங்களிலிருந்தும் கூட வன்முறைகளையும் அதிகமாக்குகிறது.
குடும்பம் மற்றும் சமூகத்தினிடம் இருந்து ஆதரவின்மை மற்றும் வன்முறை காரணமாக நாங்கள் வீடற்ற நிலைக்கு தள்ளப்படுகிறோம். மேலும், பொது இடங்கள், கல்வி, வேலை வாய்ப்புகள், சமூகப் பாதுகாப்பு, வீட்டுவசதி, சுகாதாரம் போன்றவற்றை அணுகுவதில் பாகுபாடு மற்றும் வன்முறையை எதிர்கொள்கிறோம். இதனால், எங்களில் பெரும்பாலானோர் தங்கள் வாழ்வாதாரத்திற்காக முறையற்ற சிறிய வேலைகளைச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
வாழ்வதற்கான உரிமை, சமத்துவத்திற்கான உரிமை
நமது இந்திய அரசியலமைப்பின் 14, 15, 19 மற்றும் 21 வது பிரிவுகள் சமத்துவத்திற்கான உரிமை, பாலினத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்டப்படக்கூடாது, இது பாலின அடையாளத்தையும் உள்ளடக்கியது (NALSA தீர்ப்பு மேற்கோள் AIR 2014 SC 1863), சுய வெளிப்பாட்டு உரிமை, வாழ்வுரிமை போன்றவற்றை நமக்கு வழங்கியுள்ளன. நமது பெற்றோர் மற்றும் உடன்பிறந்தவர்கள் நமது பாலின அடையாளத்தை அறிந்து கொள்ளும் தருணத்தில், பாதுகாப்பானயிடமாக இருக்க வேண்டிய குடும்பமே எங்களில் பலருக்கு வன்முறையின் முதல் இடமாக மாறுகிறது. பல நேரங்களில் குடும்பங்களால் திருமணம் செய்து கொள்ள நிர்ப்பந்திக்கப்படுகிறோம், மேலும் மனமாற்ற சிகிச்சை, கற்பழிப்பு உள்ளிட்ட பாலியல் வன்முறை, குடும்பங்கள் மற்றும் சமூகத்தால் குடும்ப வன்முறை போன்றவற்றுக்கு உட்படுத்தப்படுகிறோம். இந்த வன்முறையில் பலர் தப்பிப்பிழைப்பதில்லை: வன்முறையை சமாளிக்க முடியாமல் பல திருநம்பிகள் தற்கொலை செய்து கொண்ட வரலாறு உள்ளது. எனவே திருநம்பிகளாகிய நாங்கள் நமது இந்திய அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பெரும்பாலான உரிமைகளை அணுக முடிவதில்லை.
கல்வி உரிமை
இலவச மற்றும் கட்டாயக் கல்விக்கான குழந்தைகளின் உரிமைச் சட்டம் அல்லது கல்விக்கான உரிமைச் சட்டம் (RTE) நமது இந்திய அரசியலமைப்பின் 21a பிரிவின் கீழ் இந்தியாவில் 6 வயது முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாயக் கல்வியின் முக்கியத்துவத்தை விவரிக்கிறது. எவ்வாறாயினும், பிறக்கும்போதே பெண்ணாக கருதப்பட்ட சமூக பாலின விதிமுறைகளுக்கு இணங்காத குழந்தைகள், வலுக்கட்டாயமாக ஆண்களுடன் திருமணம் செய்து வைக்கப்படுகிறார்கள், அவர்களில் சிலர் 14 வயதுடையவர்கள்.
நாங்கள் குடும்பங்களின் கட்டாய திருமண முயற்சிகளை எதிர்த்தால் கொடுமை, கற்பழிப்பு, வன்முறை, துஷ்பிரயோகம் மற்றும் மனமாற்ற சிகிச்சைக்கு உட்படுத்தப்படுகிறோம், இது எங்கள் கல்வி வாய்ப்பை தடுக்கிறது மேலும் பள்ளிகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் தள்ளுகிறது.
கல்வி நிறுவனங்களுக்கு அணுகல் உள்ளவர்களும் கூட, தங்களின் பாலின வெளிப்பாடு மற்றும் அடையாளத்தின் காரணமாக வன்முறை, கொடுமை மற்றும் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகிறார்கள். கல்வி நிறுவனங்களில் நடக்கும் இந்த வன்முறைகள் கல்வியை இடைநிற்க செய்கிறது, மேலும் நமது கல்வி வாய்ப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சி வாய்ப்புகளை தடுக்கிறது. மேலும் கிடைமட்ட இடஒதுக்கீடு இல்லாத காரணயத்தீனால் சாதியின் அடிப்படையில் திருநம்பிகளிடையே மேலும் ஒதுக்கப்பட்ட நபர்களின் கல்வி வாய்ப்பை தடுக்கிறது.
வேலை செய்யும் உரிமை
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 16(2) படி குடிமக்களுக்கு பாலின அடிப்படையில் பாகுபாடு காட்டவோ அல்லது வேலை செய்யத் தகுதியற்றவராகவோ கருத முடியாது என்று கூறுகிறது, இது பாலின அடையாளத்தின் அடிப்படையிலும் கூறலாம். தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் 2005 இன் படி, பாதுகாப்பான வேலை சூழலை அரசு ஏற்பாடு செய்ய வேண்டும், ஆனால் உண்மையில் திருநம்பிகள் தங்கள் பாலின அடையாளத்தின் காரணமாக வேலையில் துன்புறுத்தப்படுகிறார்கள்.
பணியிடங்களில் பாரபட்சத்திற்கு எதிரான கொள்கைகள், திருநர் மக்கள் அடங்கிய உள் குழு, தீர்வுக் கொள்கைகள், ஒரு அறை கொண்ட பாலின நடுநிலை கழிவறை ஆகியவை இல்லை. மேலும் தொழிலாளர்களில் திருநம்பிகள் மற்றும் திருநங்கைகளை கணக்கில் எடுத்துக் கொள்ளும் தொழிலாளர் சட்டங்கள் மற்றும் பாலினம்-பிரிவுபடுத்தப்பட்ட புள்ளிவிவரங்கள் எதுவும் இல்லை.
மேலும், கல்வித் தகுதிகள் இல்லாததால், எங்களில் பலர் ஒழுங்கமைக்கப்படாத வேளைகளில் நுழைகிறார்கள், அங்கு திருநம்பிகளுக்கு பாதுகாப்பு இல்லை.
காவல்துறை மற்றும் பிற ஆயுதப் படைகளுக்கான ஆட்சேர்ப்புகளில், திருநம்பிகள் மற்றும் பிறப்பால் ஆண்கள் வெவ்வேறு உடலியல்/உடல் திறன்களைக் கொண்டுள்ளனர் என்ற உண்மையைக் கருத்தில் கொள்ளாமல் உடல் பரிசோதனைகளில் பிறப்பால் ஆண்களின் தரத்திற்கு எதிராக போட்டியிட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இத்தகைய தரநிலைகள் திருநம்பிகள் பொது வேலைவாய்ப்பை அணுகுவதற்கான நியாயமான மற்றும் சமமான வாய்ப்புகளைப் பெறுவதை தடுக்கிறது.
ஆரோக்கியத்திற்கான உரிமை
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 21வது பிரிவு, அடிப்படை வாழ்க்கை உரிமை, தனிப்பட்ட சுதந்திரம் மற்றும் ஆரோக்கியத்திற்கான உரிமையை உறுதி செய்கிறது. கட்டுரைகள் 38,39,42,43 மற்றும் 47 ஆகியவை மாநில அரசுக்கு ஆரோக்கியத்திற்கான உரிமையை திறம்பட செயல்படுத்துவதை உறுதி செய்வதற்காக கடமையை அளிக்கின்றன.
திருநம்பிகளுக்கு மகப்பேறு மருத்துவர்கள், உட்சுரப்பியல் நிபுணர்கள், தோல் மருத்துவர்கள் போன்ற பல சிறப்பு நிபுணர்கள் தேவை. பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார (SRH) சேவைகளை அணுக வேண்டிய திருநம்பிகள், பால் மற்றும் பாலினம் ஆகியவற்றுக்கு இடையேயான அடிப்படை வேறுபாட்டைப் புரிந்து கொள்ளாத மகப்பேறு மருத்துவ நிபுணர்களிடம் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர், மேலும் ஆண்-அடையாளம் மற்றும் ஆண்மையை வெளிப்படுத்தும் நபருக்கு கருப்பை நீக்கம் எவ்வாறு தேவைப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ளத் தவறிவிடுகின்றனர். , மேலும் மாதவிடாய் பிரச்சனைகள், கருப்பை, கர்ப்பப்பை வாய் மற்றும்/அல்லது மார்பக புற்றுநோய் ஏற்படும் அபாயம், கரு பாதுகாப்பு, மகப்பேறியல் அல்லது மருத்துவம் மூலம் கர்ப்பம் களையும் சேவைகள் பற்றிய புரிதலும் இல்லை.
கூடுதல் பாரமாக, பாலின இணக்கமின்மை/டிஸ்ஃபோரியா கடிதம் வழங்க மருத்துவ நிபுணர்களால் உடல் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறோம். இந்த உடல் பரிசோதனைகள் தேவையற்றவை, மேலும் நமது உடல் ரீதியாக தனியுரிமை மற்றும் சுயநிர்ணய உரிமையை மீறுகின்றன.
ஹார்மோன்கள், அறுவை சிகிச்சைகள் மற்றும் பாலினத்தை உறுதிப்படுத்தும் நடைமுறைகளை அணுகுவதில் சிரமங்களை எதிர்கொள்கிறோம். ஹார்மோன் சிகிச்சை, அறுவை சிகிச்சைகள் மற்றும் பொது சுகாதாரத்தை அணுகுவதில் மருத்துவ அலட்சியம், புறக்கணிப்பு, நிபுணத்துவமின்மை மற்றும் அறியாமை போன்ற சிக்கல்களை எதிர்கொள்கிறோம். இதனால் பல திருநர் மக்கள் தங்கள் உயிரைக் கூட இழந்துள்ளனர்.
சமூக உறுப்பினர்கள், சேவை வழங்குநர்கள் (சுகாதாரம், கல்வி, வாழ்வாதாரம், சட்டம்) மற்றும் கொள்கை வல்லுநர்கள், திருநம்பிகளுக்கான குறிப்பிட்ட சிக்கல்கள் மற்றும் பிற சிக்கல்களைப் புரிந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
கொள்கை மேம்பாட்டிற்கான ஆலோசனைகளில் பல்வேறு சமூகப் பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்பட வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம்.