தாய் நாட்டின் துரோகம்!
டிசம்பர் 11, 2013 பல கோடி இந்திய மக்களின் வாழ்க்கையில் மறக்கமுடியாத ஒரு கருப்பு தினம். அன்று இந்திய உச்ச நீதிமன்றம், தில்லி உயர் நீதி மன்றத்தின் 2009 ஆம் ஆண்டு தீர்ப்பை தள்ளி வைத்து, அதன் விளைவாக, ஒருபாலீர்ப்பை சட்டத்தின் பார்வையில் குற்றமாக ஆக்கியது. ஒரு பாலை சேர்ந்த, பதினெட்டு வயதிற்கு மேற்பட்ட இருவரின், பரஸ்பர சம்மதத்துடன், தனிமையில் நடக்கும் பால் சம்மந்தப்பட்ட உறவுகளை, குற்றமாக கருதும் இந்திய சட்டத்தின் 377 பிரிவு, அரசியல் சாசனத்தின் படி செல்லுபடியாகும் என்றும், அதை இந்திய பாராளுமன்றம் விரும்பினால் மாற்றாலாம் என்றும் உச்ச நீதி மன்றம், டிசம்பர் 11 அன்று தீர்ப்பு வழங்கிற்று. ஒரே வரியில், உலகின் மிகப் பெரிய ஜனநாயகமான இந்தியாவின், பல கோடி குடிமக்களை, “சின்னூண்டு சிறுபான்மை” என்று விவரித்த உச்ச நீதிமன்றம், அதே சிறுபான்மையை, பத்து ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை பெறக்கூடிய, குற்றவாளிகளாகவும் அறிவித்தது.
இதை நாங்கள் யாரும் சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை. “நம் அரசியல் சாசனத்தின் அடிப்படைக் கருத்து என்று ஒன்று இருந்தால், அது அனைவரையும் அரவணைத்து போகும் சகோதரத்துவமே” என்று முழங்கி, ஒருபாலீர்ப்பை குற்றமற்றதாக அறிவித்த, தில்லி உயர் நீதி மன்றத்தின் 2009 ஆம் ஆண்டு முற்போக்கான தீர்ப்பிற்கு பிறகு, இதை நாங்கள் சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை. தில்லி உயர் நீதி மன்றத்தின் தீர்ப்பு, உலகமெங்கும், மனித உரிமைகளின் மகத்தான் வெற்றி என்று பாராட்டப் பட்டது. அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர், ஹிலரி கிளின்டன், 2011 ஆம் ஆண்டு மனித உரிமை தினத்தன்று, ஐ.நா. சபையில் ஆற்றிய உரையில், தில்லி உயர் நீதி மன்றத்தின் தீர்ப்பை மேற்கோள் காட்டிப் பேசினார். அது வரையில், இந்தியாவின் பார்வையில் கொஞ்சம் கொஞ்சமாக, வெளிவரத் துவங்கியிருந்த, இந்தியாவின் மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்ட சிறுபான்மையினர், தீர்ப்பிற்கு பிறகு புது உத்வேகமும், உற்சாகமும் பெற்றனர். அவர்களின் இயக்கமும் வலுவடைந்தது. சட்டத்தின் பாதுகாப்புடன், மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்கள் தங்கள் வாழ்க்கைகளை முழுமையாக வாழவும், தங்கள் உரிமைகளுக்காக குரல் கொடுக்கவும், போராடவும், துவங்கினர். இந்தியாவின் பல நகரங்களில், வானவில் பேரணிகள் வருடாந்திர கொண்டாட்டங்களாக வடிவுபெற்றன. உள்ளூர் மற்றும் தேசிய அளவில் மீடியா நிறுவனங்கள், இவர்களின் பிரச்சனைகளை பற்றி பேசவும், எழுதவும் துவங்கின. கூட்டங்கள் நடத்தப் பெற்றன. புத்தகங்கள் எழுதப்பட்டன. திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டன. மாற்றுப் பாலியல் இந்திய, எப்போழுதும் காணாத பொலிவுடன், வெளிவந்து கொண்டிருந்தது. சரித்திரத்தின் பக்கம் திரும்பி விட்டது என்றும், அதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்றும், தோன்றியது என்பதே உண்மை.
தென்னிந்தியாவின் ஒரு சிறிய நகரில் பிறந்து வளர்ந்த எனக்கு, ஒருபாலீர்ப்பு என்ற வார்த்தையை கூட இருபத்தி ஐந்து வயது வரையில் கேட்டறியாத எனக்கு, இந்த முன்னேற்றம், ஒரு நம்ப முடியாத நிகழ்வு என்றால் அது மிகையாகாது. பல ஆண்டுகள் மனப் போராட்டத்திற்கு பிறகு, ஒரு வழியாக துணிச்சலை வரவழைத்துக் கொண்டு, என் பெற்றோர்களிடம் நான் ஒருபாலீர்ப்பாளன் என்பதை, சில வருடங்களுக்கு முன்பு தான் சொல்லியிருந்தேன். திருமணத்திற்கான நிர்பந்தத்தை நிராகரித்து, மனம் விரும்பிய காதலை கண்டு, மகிழ்ச்சியுடன், மன நிறைவுடன், நேர்மையாக வாழத் துவங்கி இருந்தேன். அவமானமும், குற்ற உணர்வும் நிறைந்த என் இளமை பருவம், ஒரு மறந்து போன கடந்த காலமாக மாறியிருந்தது. எனது அடையாளத்திற்கு ஒரு யோகியத்தையும், எனது இருப்பிற்கு ஒரு உறுதியையும், தந்திருந்தது தில்லி உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பு.
உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பு வரவிருந்த நாளென்று, நான் ஒரு சிறிய கொண்டாத்தையே திட்டமிட்டிருந்தேன். டிசம்பர் 11 ஆன்று, இந்திய நேரம், காலை பத்தரை மணிக்கு, நான் தற்பொழுது வசிக்கும் நியூ ஜெர்சியில், நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு, தீர்ப்பு வரவிருந்தது. தீர்ப்பின் பூரிப்பில் இரவு முழுவதும் குத்திக் கொண்டிருப்பேன், தூக்கம் இருக்காது, அதானால் அடுத்த நாள் பணிக்கு வரமுடியாது என்று என் பாஸிடம் சொல்லி, விடுப்பும் பெற்றிருந்தேன். தீர்ப்பை கொண்டாட இனிப்புகளும் தயாராக வாங்கி வைத்திருந்தேன். பல்வேறு நகரங்களில் வசிக்கும் என் நண்பர்கள் எல்லோரும் ஒன்றாக ஆன்லைனில் தீர்ப்பின் அறிவிப்பை சேர்ந்து பார்க்கவும் திட்டமிட்டிருந்தோம். இந்தியாவிலிருக்கும் என் நண்பர்களும், குடும்பத்தினரும், உலகெங்கிலும் இருக்கும் மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்களும், அவர்களது ஆதரவாளர்களும், அவரவர் இடங்களில், ஆன்லைனில், தொலைக்காட்சிகள், வானொலிகள், என்று பல வழிகளில் இணைந்து, இந்தியாவின் சரித்திரத்தில் மறக்கமுடியாத ஒரு பெரிய நிகழ்வான இந்தத் தீர்ப்பை, ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தார்கள்.
அதன் பிறகு வந்தது தீர்ப்பு. அடிவயிற்றை அதிர வைத்த அந்த தீர்ப்பு. “கீழ் நீதி மன்றத்தின் தீர்ப்பை தள்ளி வைத்து, சட்டப்பிரிவு 377, அரசியல் சாசனப்படி செல்லுபடியாகும் என்று உச்ச நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது,” என்று தொலைக்காட்சியில், அந்த செய்தி அறிவிப்பாளர் சொன்னபொழுது, என் இதயத் துடிப்பே நின்று போனது. அந்த நொடியில் நான் எப்படி உணர்ந்தேன் என்பதை விவரிக்க வேண்டுமானால், எனக்கு மிக நெருங்கிய ஒருவர் இறந்து போனால், இல்லை, கொலை செய்யப்பட்டிருந்தால் எப்படியிருக்குமோ, அப்படி இருந்தது என்றுதான் விவரிக்க வேண்டும். அதிர்ச்சியில் மனமுடைந்த நான், கதறிக் கதறி அழத் துடங்கினேன். நள்ளிரவில், எனது இல்ல வரவேற்ப்பரையில், தனிமையில் இருந்ததால், என்னால் மனம் விட்டு அழ முடிந்தது. இந்தியாவில் இருக்கும் எனது மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்ட நண்பர்கள் என்ன செய்து கொண்டிருப்பார்கள் என்று ஒரு நொடி யோசித்தேன்.
இந்தியாவிலிருக்கும் எனது நண்பர் கவின், தனது வலைப்பதிவில் இதை வலியோடு விவரிக்கிறார்: “தெரிந்தவர்கள், தெரியாதவர்கள், நண்பர்கள், என்று எல்லோரிடமும் ஒரேமாதிரியான கதைகளைத் தான் கேட்கிறேன்: தீர்ப்பு வந்த நேரத்தில், அலுவகங்களில் இருந்தவர்கள், பொங்கி வந்த அழுகையை அடக்க முடியாமல், அவசர அவசரமாக ஓய்வு அறைகளுக்கு ஓடிய கதைகள், தங்கள் சோகம் பிறருக்கு தெரிந்து விடக் கூடாது என்று தங்கள் இருக்கைகளிலிருந்து நகராமல் ஒளிந்த கதைகள், உடன் பணி செய்பவர்களுக்கு முன்னால் உடைந்து அழுதுவிடுவோமோ என்ற பயத்தில் அலுவலக சந்திப்புகளை தவிர்த்த கதைகள், என்று எங்கு பார்த்தாலும், எல்லோரிடமிருந்தும், சோகம் நிறைந்த கதைகள். இப்படி நொருங்கிப் போனவர்கள் பச்சிளங்குழந்தைகள் அல்ல, எதையும் எதிர்த்து போராட துணிவும், திண்ணமும் கொண்ட, வயது வந்த பெரியவர்கள்.”
தீர்ப்பு, இந்தியாவிலிருக்கும் எனது மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்ட நண்பர்களின் வாழ்வில், எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்ப்படுத்தும் என்பதை உணர, எனக்கு சில நொடிகளே பிடித்தன. சில நிமிடங்களில், இந்தியாவின் பல கோடி குடிமக்கள், குற்றவாளிகள் என்று அறிவிக்கப் பட்டிருந்தார்கள். அவர்களது சுதந்திரம், கண்ணியம், வாழ்கை இவற்றை இந்தியாவின் உச்ச நீதி மன்றம், இரக்கமில்லாமல் உருக்குலைத்திருந்தது. அதுவரையில் உரிமைகளுக்காக போராடிய பலாயிரக்கணக்கான போராளிகள், தங்கள் தாய்நாட்டிலேயே பாதுகாப்பற்ற சுழலுக்குத் தள்ளப் பட்டிருந்தார்கள். 153 ஆண்டுகள் பழமையான, அதுவரையில் பரிசீலிக்கப் படாத, ஒரு தப்பான சட்டம், அன்று இந்தியாவின், மிக உயர்ந்த நீதி மன்றத்தால் பரிசீலிக்கப் பட்டு, அரசியல் சாசனப்படி செல்லுபடியாகும் என்ற முத்திரையையும் பெற்றிருந்தது. வெறுப்பிற்கும், அநீதிக்கும், இதை வீட வேறு என்ன ஊக்கம் வேண்டும்? ஊழல் நிறைந்த இந்தியாவின் போலீஸ் துறை, இந்த சட்டப் பிரிவை, மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்ட மக்களை துன்புறுத்தவும், பயமுறுத்தவும், பணம்பரிக்கவும், எப்படி ஓர் ஆயுதமாக பயபடுத்தி வந்திருக்கிறது என்பதை, இதோ இந்த பதிவில் காணலாம்.
ஒருபாலீர்ப்பு குற்றம் இல்லை, என்ற தில்லி உயர் நீதி மன்றத்தின் 2009 ஆம் ஆண்டு தீர்ப்பு, இந்தியா முழுவதும் அமுலில் இருந்தாலும், அதை சிறிதும் கருத்தில் கொள்ளாமல், இதோ சில மாதங்களுக்கு
முன்பு, கர்நாடகா போலீஸ் துறை, அந்த மாநிலத்தில் உள்ள ஒரு சிறிய ஊரில், பிரிவு 377 ஐ காரணம் காட்டி, ரெய்டு நடத்தி, 14 ஆண்களை கைது செய்தது. சிறு நகரங்களில் இது போல “இயற்கைக்கு மாறாக உறவு கொண்ட” குற்றத்திற்காக, 377 பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டால், அதுவே அவர்களின் வாழ்க்கையை சீரழிக்கப் போதுமானது. குற்றத்தை நிரூபிக்க வேண்டியது கூட அவசியம் இல்லை. இந்த அவமானத்தை சந்திப்பதும், ஊரில் இருப்பவர்களின் வெறுப்பை சமாளிப்பதும், எளிதான காரியம் இல்லை என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஊரை விட்டு ஓடிப் போவதை தவிர, இவர்களுக்கு வேறு வழி கிடையாது என்பது தான் வேதனையான உண்மை. இப்பொழுது உச்ச நீதி மன்றம், 377 சட்டப் பிரிவை நிலைநிறுத்திய பிறகு, சமூகத்தின் பல அங்கங்களில் இருந்தும், அமைப்புகளில் இருந்தும், மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்ட மக்களை, மீண்டும் இருட்டிற்கு தள்ளும் முயற்ச்சிகள் புத்துணர்வுடன் நடைபெறும் என்பதும், எல்லோராலும் இந்த நிர்பந்தங்களை எதிர்க்க முடியாது என்பதும், வருத்தத்திற்கு உரிய விஷயங்கள்.
உலகில் பிற நாடுகளில் நடப்பதை போல, இந்தியாவிலும், பால், ஜாதி, மதம், வர்க்கம் என்று பலவகையான அநீதிகள் நடக்கத்தான் செய்கின்றன. ஆனால் இவைகளுக்கு நம் நாட்டின் மிக உயர்ந்த நீதி மன்றத்தின் ஆதரவு கிடையாது. இந்த தீர்ப்பிற்கு பிறகு, மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்ட மக்களின் மீது நடைபெறும் அநீதிகளுக்கு, நம் உச்ச நீதி மன்றத்தின் ஆதரவு உண்டு!
என் கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்து, மனதை சிறிது தேற்றிக் கொண்டு, இந்தியாவிலிருக்கும் என் தாயை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். அம்மா சொன்னாள்: “நீ இந்தியாவுக்கு வராதப்பா! எங்க இருக்கையோ அங்கேயே நல்ல இரு.”
நம்மவர்களாலேயே நம் சுதந்திரம் பறிக்கப் பட்டதும், நாட்டிற்கு திரும்பாதே என்று பெற்றதாய் சொல்லிக் கேட்டதும் தான், என் வாழ்க்கையிலேயே நான் அனுபவித்த மிகப் பெரிய வலி!
Sorry for the English reply. I felt the same when I happened to read this thread. I haven’t come out yet to my family and my friends’ circle. I thought of coming out after that Supreme court’s judgement. But all went in vain. I don’t know whether when I’ll live as myself.